Read in : English

Share the Article

சுற்றுச்சூழல் செயற்பாட்டுக் குறியீட்டில் (ஈபிஐ) இந்தாண்டு இந்தியாவின் ராங்க் அதிரடியாக வீழ்ச்சியடைந்து 180-க்கு சரிந்துவிட்டது. ஒன்றிய அரசிற்கு இது கோபத்தை ஏற்படுத்தி மறுதலிப்பை வெளியிட வைத்தது. அந்த அறிக்கையை விமர்சித்து அரசு பிரயோகப்படுத்திய சொற்றொடர்களில் ’ஆதாரமற்ற புனைவுகள்,’ ‘ஊகங்கள்,’ ‘ விஞ்ஞானரீதியில் அல்லாத முறைகள்’ ஆகியவையும் அடங்கும்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுப் பூமி விஞ்ஞானத் தகவல் கட்டமைப்பு மையம், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கையின் யேல் மையம் ஆகியவற்றால் தொகுத்து வழங்குவதுதான் இந்த சுற்றுச்சூழல்  செயற்பாட்டுக் குறியீடு (ஈபிஐ).

பருவநிலை மாற்றம் என்னும் பிரச்சினையில் இந்தியாவில் செயற்பாடு பல்வேறு அரங்குகளில் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. வாஸ்தவம்தான்.  முக்கியமாக சூரியவொளி, காற்று எரிபொருள் விரிவாக்கத்தில் அதன் செயற்பாடு பெரிதாகப் புகழப்பட்டிருக்கிறது. ஆனாலும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைவைப் பாதிக்காதவாறு அதன் வளர்ச்சியை இந்தியா முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. 2022-ஆம் ஆண்டின் ஈபிஐ சொல்வதுபோல, 2050-ஆம் ஆண்டுக்கான பசுமைஇல்ல வாயுக்களின் வெளிப்பாடுகள் இலக்கில் பின்தங்கியிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, ரஷ்யா,  சீனா ஆகிய நாடுகள் அடங்கிய   நான்குதேசப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறுகிறது. மிச்சப்படும் பசுமைஇல்ல வாயுக்களில் 50 சதவீதப்பங்களிப்பை அந்த நான்கு நாடுகள் ஒட்டுமொத்தமாக தரக்கூடும்.

பருவநிலை பிரச்சினையை எதிர்கொள்ளும் இந்தியாவின் செயற்பாடு சிக்கலில் மாட்டியிருக்கிறது. ஒருபக்கம், எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு குறைவான வாயு வெளிப்பாட்டுத் தொழில்நுட்பங்களை கையாள வேண்டிய நிர்ப்பந்தம். மறுபக்கம், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளை இனிவரும் தசாப்தங்களில் முழுக்கப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் புதிய  பருவநிலை தொழில்நுட்பங்களுக்கு மெல்லத்தான் மாற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் மாசுப்படுத்தும் நிலக்கரி உட்பட பல்வேறு தொழில் துறைகள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, இந்தியாவின் ஈபிஐ ராங்க் கொஞ்சந்தான் அதிகமாக இருந்தது; அதாவது 168-ஆவது ராங்க். பல்லுயிரி பாதுகாப்பு, வெவ்வேறான சுற்றுச்சூழல் அமைப்புகளில் சிலவற்றையாவது பாதுகாக்கப்பட்ட ஏரியாக்களாக ஒதுக்கி வைத்தல், உலகத்தில் அசாதாரணமான தாவர, விலங்கினங்களைப் பாதுகாத்தல், வளிமண்டத்தை, குறிப்பாக, நுண்மையான துகள் பொருட்களை மேம்படுத்தல் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய குறியீடுகளில் இந்தியா மோசமாகச் செயல்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.

2022-ஆம் ஆண்டின் ஈபிஐ சொல்வதுபோல, 2050-ஆம் ஆண்டுக்கான பசுமைஇல்ல வாயுக்களின் வெளிப்பாடுகள் இலக்கில் பின்தங்கியிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

சரித்திரப்பூர்வமாகப் பார்த்தால், பசுமைஇல்ல வாயுக்களின் வெளிப்பாடுகளுக்கு இந்தியா பொறுப்பு அல்லதான். இந்தியாவில் நிலவும் தனிநபர் கரியமில வாயு வெளிப்பாட்டுக் கணக்கை ஈபிஐ குறியீடுகள் மதிப்பீட்டில் கொண்டுவரவில்லை என்று இந்தியா புகாரளிக்கிறது. என்றாலும்  முழுமையான பசுமைஇல்ல வாயுக்களின் வெளிப்பாடுகளின் அதீதமான பொருண்மை இந்தியா சந்திக்கும் புரியாதவொரு புதிர். பூமியைச் சூடாக்கிக் கொண்டிருக்கும் வாயுக்கள் உலகம் முழுக்கப் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அநீதியாக மதிப்பிடப்பட்டிருக்கிறோம் என்று இந்தியா புலம்புவதைப் போன்றவோர் உணர்வு சிறிய நாடுகளுக்கு இல்லை. ஏனெனில் அவை இன்று மிகவும் ஆபத்தான நிலையிலேதான் இருக்கின்றன. இனிவரும் தசாப்தங்களில் காணாமல் போய்விடக்கூடிய அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றன பல சின்னஞ்சிறிய தீவுத்தேசங்கள்.

காடுவளர்ப்பிலும், சதுப்புநிலப் பாதுகாப்பிலும் இந்தியா எடுத்திருக்கும்  நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் ஈபிஐ-யின் மதிப்பீட்டில் இடம்பெறவில்லை என்று இந்தியா முன்வைக்கும் வாதங்களில் ஒன்று. புதைப்படிமம் அல்லாத எரிபொருள்களை அடிப்படையாகக் கொண்ட மின்சார உற்பத்தியில் இந்தியா 40 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது என்பது அதன் இன்னொரு வாதம். ஆனாலும் இந்த வாதங்கள் எடுபடவில்லை. காரணம் அவற்றில் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன.

வெறும் தாவரக்கூட்டம் காடு அல்ல
காடுவளர்ப்பு விசயத்தில் இந்தியா வைக்கும் வாதம் தவறானது. இயற்கையி்யல் ஆராய்ச்சியாளர் எம். டி. மதுசூதன் இந்தாண்டு ஆரம்பத்தில் தனது டிவிட்டர் கணக்கில் சொன்னது போல, அரசு பெரிதாக நம்பும் இந்திய நாட்டின் காடுபற்றிய அறிக்கை நிலப்பகுதிகளில் இருக்கும் வெறும் மரங்களின் தொகுதியைக் கூட காடு என்றே சொல்கிறது. பொள்ளாச்சியின்  தென்னந்தோப்புகள், இலட்சத்தீவுகளின் பனைமரத்தோப்புகள், டில்லியின் விஐபி குடியிருப்புகள், சின்னச்சிறிய நகர்ப்புறச் சோலைகள், கட்ச் பகுதியிலிருக்கும் கருவேல மரக்கூட்டம் – இவையெல்லாம் காடுகள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. காடு என்பதன் வரையறை விரிவாக்கப் பட்டிருக்கிறது; ஒரு ஹெக்டேர் நிலத்தில் பத்து சதவீதம் மரங்களைக் கொண்டிருந்தால் அது காடு என்று அழைக்கப்படுகிறது. இப்படியான  தாராளமயமான மதிப்பீடுகள் ’காட்டில்’ நுழைந்துவிட்டன.

தேசிய காடுகளில் கார்பனைச் சேமித்துவைப்பதற்கான கட்டணமாக ஐ. நா. அமைப்பிடம் இந்தியா நிதி கேட்டபோது காடுவளர்ப்பு விசயத்திலிருக்கும்  வெளிப்படையான தன்மை சம்பந்தமாக அது பல கடுமையான கேள்விகளை எதிர்கொண்டது. இந்தியாவின் பசுமைச் செயற்பாடுகள் கிட்டத்தட்ட முழுக்க பயிர்நிலத்தில்தான் மையம் கொண்டிருக்கின்றன; காட்டின் பங்களிப்பு மிகவும் கம்மியாகத்தான் இருந்தது என்று ’நேச்சர் சஸ்டெயினெபிலிட்டி’ 2019-ல் தெரிவித்தது.

இந்தியாவில் சதுப்புநிலங்களின் ஆரோக்கியத்தைப் பார்ப்போம். ராம்சார் கன்வென்ஷன் படி நிறைய சதுப்புநிலங்கள் (தற்போது 49; இலக்கு 75) பட்டியலிடப்பட்டிருக்கின்றன என்று இந்தியா பெருமையுடன் கூறுகிறது. ஆனால் இந்த ஈரநிலங்கள் பெரும்பாலும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. மார்ச்சில் ஒன்றிய துணைமந்திரி அஷ்வினி குமார் செளபெய் மாநிலங்களவையில் சதுப்புநிலங்கள் பற்றி பின்வருமாறு சொன்னார்: நாடெங்கும் நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், மீளுருவாக்கம் செய்யவும், மேன்மைப்படுத்தவும், பாதுகாக்கவும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தாலும், வளர்ச்சி செயற்பாடுகளும் மனிதர்களின் அழுத்தங்களும் நீர்நிலைகளைப் பாதிக்கின்றன.

இனிவரும் தசாப்தங்களில் காணாமல் போய்விடக்கூடிய அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றன பல சின்னஞ்சிறிய தீவுத்தேசங்கள்.  

நாட்டிலிருக்கும் சதுப்புநிலங்களின் வீழ்ச்சி பற்றிய தரவுகளை அரசு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறதா என்று பாராளுமன்ற உறுப்பினர் எல். ஹனுமந்தையா கேள்வி எழுப்பினார். பலன்தரும் பலமான அரசு நடவடிக்கை என்பது ஈபிஐ-யின் தரஅளவுகோல்களில் ஒன்று. இந்த விசயத்தில் இந்தியாவின் தரமதிப்பீடு வெறும் 18.9 தான்; பூட்டானின் தரமதிப்பீடு 42.5.

வளிமண்டலத் தரம் என்னும் புதிர்
வளிமண்டலத் தரத்தில் இந்தியாவின் நிலை மோசமென்று ஈபிஐ சொல்கிறது. ஆனால் வளிமண்டலக் கண்காணிப்பு நிலையங்கள் நாட்டில் எத்தனை இருக்கின்றன என்று அரசு சொல்வதில்லை. மாறாக அந்த நிலையங்களை அமைப்பதற்குத் தேவைப்படும் அளவுகோல்களையே அது எடுத்துரைக்கிறது. மீண்டும் அமைச்சர் செளபெய் சொன்னதைக் கேட்போம். இந்தாண்டு ஆரம்பத்தில் மக்களவையில் அவர் பின்வருமாறு சொன்னார்: “வளிமண்டலத் தரத்தை அவதானிக்கும் நிலையங்களை அமைப்பதற்கு குறிப்பிட்ட பகுதியின் மக்கள்தொகை ஓர் அளவுகோலாகப் பயன்படுகிறது. மேலும் அந்தப் பகுதியின் வளங்கள், இடத்தின் மொத்த அளவு, மாறுபடும் மாசுக்களின் குவிப்பு போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களும் வளிமண்டலத் தர நிலையத்தை அமைக்கும் முன்பு ஆராயப்படுகின்றன.”

இந்தியாவில் 378 மாநகரங்களில் 880 வளிமண்டலக் கண்காணிப்பு நிலையங்கள் இருக்கின்றன.

ஒரு வளிமண்டலக் கண்காணிப்பு நிலையம் அமைப்பதற்கான அளவுகோல்கள் பின்வருமாறு: 50 இலட்சத்திற்கும் மேலான மக்கள்தொகை கொண்ட ஒரு மாநகரத்திற்கு நான்கு கையால் இயங்கும் நிலையங்களும், 12 தொடர்க்கண்காணிப்பு நிலையங்களும் முன்மொழியப்படுகின்றன. மக்கள் தொகை குறைவான மாநகரங்களுக்கு இந்த எண்ணிக்கை நான்கிலிருந்து (சிறிய நகரங்களுக்கு) எட்டுவரை (10 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையிலான மக்கள்தொகை) செல்கிறது.

இந்த விசயத்தில் இந்தியாவின் தீவிர இலட்சியமற்ற தன்மை அசாதாரணமாக இருக்கிறது. படுமோசமாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பொருளாதார இயக்கமும் அதீதமான மோட்டார்மயமான போக்கும் அதன் காரணங்கள். தரவுகள் இன்மையும் அதன் விளைவான நிச்சயமற்ற தன்மையும் இந்தியாவைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள். இதுதான் ஒன்றிய அரசு ஈபிஐ-க்குத் தந்த பதிலடி.

சென்னையின் வளி அளவீடுகள்
தேசிய வழிகாட்டுதல்கள் படி, 10 மைக்ரோமீட்டரும் அதற்கும் குறைவான சுற்றளவு கொண்ட வளிமண்டல நுண்துகள்களையும், 2.5 மைக்ரோமீட்டரும் அதற்கும் குறைவான சுற்றளவு கொண்ட நுண்துகள்களையும் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு, சல்ஃபர் ஆக்சைடு ஆகியவற்றையும் ஆய்வு செய்யும் இலக்கோடு ஐஐடி-மெட்ராஸ் பேராசிரியர் எஸ். எம். ஷிவா நாகேந்திரா மாசுக்களின் மூலப்பகுப்பு ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறார். அதன்மூலம் சென்னையின் வளிமண்டலத் தரம் அளக்கப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட அந்த இலக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 18 இடங்களில் இரண்டு பருவங்களில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

100 சதுப்புநிலங்களை ஐந்தாண்டுக்குள் புதுப்பிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அறிவித்திருக்கிறது. 

2021-ஆம் ஆண்டுக்கான தரவுகள் இருக்கின்றன. இரண்டாவது நிலை தரவுகளைச் சேகரித்து அவற்றை ஆராய்ச்சி செய்வது இறுதி அறிக்கையைத் தயாரிக்க உதவும். சென்னை மாநகராட்சிக்காகவும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்காகவும் செய்யப்படும் இந்த ஆய்வு சென்னையின் தாங்குசக்தியை மதிப்பீடு செய்யும்.

இயற்கை சரித்திரம் மற்றும் பறவையியல் சலீம் அலி மையம் முன்னுரிமை கொடுத்திருக்கும் 141 ஈரநிலங்களில் 100 சதுப்புநிலங்களை ஐந்தாண்டுக்குள் புதுப்பிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அறிவித்திருக்கிறது. இது இந்தியா தனது மதிப்பை பல்வேறு அளவுகோல்களின்படி உயர்த்திக் கொள்ள உதவும். அடுத்த ஐந்தாண்டிற்குள் காடு, சதுப்புநிலம், வளிமண்டலத் தரம் ஆகியவற்றுக்கான திட்டங்களை முழுமூச்சுடன் நிறைவேற்றினால் உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் நிச்சயமாக உயரும். மேலும் சென்னை போன்ற மாநகரங்களில், கணிக்க முடியாத பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளத்தைக் குறைக்கவும் முடியும், ஆனால் சதுப்புநிலங்களை ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து  மீட்டெடுப்பதிலும், இடம்பெயரக்கூடிய அவர்களுக்கு மாற்று வீடுகள் கொடுப்பதிலும் திமுக அரசிற்கு இருக்கும் பணி அவ்வளவு எளிதானது அல்ல!

விரைந்து செயல்படுமா அரசு?


Share the Article

Read in : English