Read in : English

Share the Article

இயற்கை விவசாயம் என்ற நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில், ‘நஞ்சற்றது’ என, தரச்சான்று ஏதுமின்றி, பேச்சளவில் நம்பிக்கையூட்டி ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடக்கிறது. இயற்கை விவசாயம் சார்ந்து பொருட்களை விற்கும் தரச்சான்று பெற்ற ஆரோக்கியம் ஆர்கானிக் புட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆறுமுகசாமியுடன், இயற்கை விவசாயம் சார்ந்த ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனை சந்தையில் நிலவரம் பற்றி, ‘இன்மதி.காம்’ இணைய இதழ் நடத்திய உரையாடலின் (முதல் பகுதியை இங்கே படியுங்கள்இறுதி பகுதி:

கேள்வி: இயற்கை விவசாயம் செய்யும் ஒரு உற்பத்தியாளர், பொருட்களை விற்பனை செய்வதற்கான நடைமுறை என்ன?
ஆறுமுகசாமி: இந்திய அரசு, என்டிஓபி (NPOP) எனப்படும் நேஷனல் புரோகிராம் பார் ஆர்கானிக் புரடக்சன் National programme for Organic Production என்ற அமைப்பின் பரிந்துரை மூலம் அபிடா APEDA வாயிலாக (Agricultural & Processed Food Products Export Development Authority) ஆர்கானிக் பொருட்களுக்கு தரச் சான்றிதழ் வழங்க, முகமை அமைப்புகளுக்கு (Certifying agencies) அனுமதி அளித்துள்ளது.
இயற்கை வேளாண் பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய, யூஎஸ்டிஏ USDA (United States Dept of Agriculture) என்ற அமைப்பின் என்ஓபி NOP (National Organic Program) மூலம் தரச் சான்றிதழ் பெற வேண்டும். இந்தியாவில், ECOCERT, INDOCERT, Bureau Veritas, OneCert, SGS Organic, ISCOP, IMO Control, Control Union, Vedic Organic, FoodCert, NOCA, Lacon Quality போன்ற அமைப்புகள் மற்றும் தமிழக அரசின் TNOCD மூலமும் உற்பத்தியாளர்கள் தரச்சான்று பெறலாம்.

சான்று பெற்ற ஆர்கானிக் பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை, அபிடா நிறுவனத்தின் கீழ் இயக்கும், டிரேஸ்நெட் என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். உள்ளூரில் கிராம நிர்வாக அதிகாரி பராமரிக்கும் சிட்டா அடங்கலிலும் அந்த மகசூல் விவரம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆரோக்கியம் ஆர்கானிக் புட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆறுமுகசாமி

கேள்வி: இந்த நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை என்ன?
ஆறுமுகசாமி: இயற்கை விவசாயம் முறையில் விளைவிக்க விரும்புவோர் மேற்குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நிறுவனத்தில் பதிவு செய்து, நிலத்தில் மூன்று ஆண்டுகள் எந்தவொரு ரசாயன இடுபொருட்களையும் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்ய வேண்டும். அதன்பின் விளைபொருட்களை ஆய்வு செய்து, எம்.ஆர்.எல்., எனப்படும் Maximum Residue Limits- கீழ் ரசாயனம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் இயற்கை விளைபொருளுக்கு உரிய தரச்சான்று கிடைக்கும். இல்லாவிடில் மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு சான்று பெற்ற ஆர்கானிக் பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை, அபிடா நிறுவனத்தின் கீழ் இயக்கும், டிரேஸ்நெட் என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். உள்ளூரில் கிராம நிர்வாக அதிகாரி பராமரிக்கும் சிட்டா அடங்கலிலும் அந்த மகசூல் விவரம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதாவது, இயற்கை விவசாயம் செய்ய பதிவு செய்யப்பட்ட நிலத்தில் ஒரு உத்தேச மகசூல் நிர்ணயிக்கப்படும். அதாவது ஒரு ஏக்கர் ஆர்கானிக் முறையில் நெல் பயிரிட பதிவு செய்திருந்தால் நடவு செய்த தேதி முதல் தோராய அறுவடை நாள் மற்றும் உத்தேச மகசூல் போன்ற விவரங்கள், TraceNet இணையத்தில் பதிவு செய்யப்படும்.

அந்த பண்ணையில் குறிப்பிட்ட பயிரை அறுவடை செய்து, இன்னாருக்கு, இத்தனை டன், இன்ன வாகனம் மூலம் அனுப்பப்பட்டது என, Transfer Certificate (TC) தரப்பட்டால் மட்டுமே, அது ஆர்கானிக் விளைபொருளாக ஏற்கப்படும். ஒரு ஏக்கருக்கு சான்றிதழ் பெற்று, 500 டன் விளைபொருளை உற்பத்தி செய்ததாகக் காட்ட முடியாது. விற்கப்படும் பொருள், ஆர்கானிக் என்று பிரிமியம் விலை கோரும் பட்சத்தில் டிரேஸ் நெட் இணையதளம் வழியாக அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தலாம். இப்படி கடும் சோதனைகளைத் தாண்டிதான், சந்தையில் ஆர்கானிக் பொருட்களை விற்க முடியும்.

கேள்வி: நகரில் பல இடங்களில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்களை விற்கும் ஆர்கானிக் கடைகள் மற்றும் இயற்கை அங்காடிகளை காண முடிகிறது. உண்மையில் இந்த கடைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளதா? 100 சதவீதம் ஆர்கானிக் என்ற பெயரில் பொருட்கள் நகர்புறங்களில் விற்கப்படுகிறதே?
ஆறுமுகசாமி: பெரும்பாலான கடைகள் அப்படித்தான் உள்ளன. ஒரு ஏசி அறையை வாடகைக்கு பிடித்து, கீற்றுக்கொட்டகை வேய்ந்து, ‘ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாத ஆர்கானிக் பொருள்’ என்ற போர்வையில் பொருட்கள் விற்பனை நடக்கிறது. நகர்ப்புற விவரமறியாத நுகர்வோரின் ஈகோவை தீர்க்க போலியாக விற்கப்படும் பொருட்கள் அவை. ஓர் ஆர்கானிக் விற்பனை கடையில் எத்தகைய சான்றிதழ் இருக்கிறது, அங்கு விற்கும் பொருள் எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது என விசாரித்தால் உண்மை தெரிந்து விடும்.

நேச்சுரல் என்ற போர்வையில் விற்கப்படும் பொருட்களுக்கும் இயற்கை விவசாய பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது, காட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருள் என்று வேண்டுமானால் விளம்பரம் செய்து விற்கலாம்.  

கேள்வி: நேச்சுரல் என்ற பெயரில் விற்கப்படும் பொருட்கள் பற்றி?
ஆறுமுகசாமி: பதிவு செய்யப்பட்ட ஆர்கானிக் பொருட்கள் விற்பனை கடையில், ஆர்கானிக் தரச்சான்று பெற்ற பொருட்களை மட்டுமே விற்க முடியும். தரச்சான்று பெற்ற பொருட்களின் லேபிலில் என்ன தகவல் இருக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் உள்ளன. அந்த விதிக்கு உட்பட்டுதான் விளம்பரங்களை செய்ய முடியும். எண்ணியதை எல்லாம் அச்சிட முடியாது.

நேச்சுரல் என்ற போர்வையில் விற்கப்படும் பொருட்களுக்கும் இயற்கை விவசாய பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது, காட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருள் என்று வேண்டுமானால் விளம்பரம் செய்து விற்கலாம். ஆர்கானிக் பொருட்கள் என்ற வகைமையில் இது வராது. அவற்றை எத்னிக் உணவு, பாரம்பரிய உணவு என்று வேண்டுமானால் விற்கலாம்.

கேள்வி: அப்படியானால், குறைந்த அளவில் தரமாக உற்பத்தி செய்யும் ஒரு விவசாயி, பொருட்களை, முறையான சந்தையில் விற்க முடியாத நிலை ஏற்படுமல்லவா?
ஆறுமுகசாமி: உற்பத்தி செய்யும் விவசாயி, தரமான பொருளை அதே இடத்தில் விற்பனை செய்வதில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால், ஆர்கானிக் என்ற முத்திரையுடன் நகர்ப்புற கடைகளில் விற்க முயலும் போதுதான் தரச்சான்று பிரச்னை ஏற்படும். நகர்ப்புற நுகர்வோர், ஒரு பொருளின் தரத்தை அதன் தரச்சான்றை வைத்தே மதிப்பிட முடியும். நேரடியாக உற்பத்தியாளரின் செயல்முறையை கண்காணிக்க முடியாது. எனவே, ஆர்கானிக் கடைகளை, தரச்சான்றுபடி முறைப்படுத்துவது மிகவும் அவசியம்.

கேள்வி: அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் விற்கும் ஆர்கானிக் பொருட்களுக்கு இதே தரச்சான்று நடைமுறை போதுமானதா? வேறு வரையறை உள்ளதா?
ஆறுமுகசாமி: இந்தியாவில் விற்கப்படும் இயற்கை விவசாய விளை பொருட்களில், ஐந்து சதவீதம் வரை ரசாயனம் கலந்திருக்கலாம் என தரச்சான்று அனுமதிக்கிறது. ஆனால், அமெரிக்காவில், எந்த ரசாயன கலப்பும் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு விற்கப்படும் ஆர்கானிக் பொருட்களில், மாட்டு சாணம், கோமியம் போன்றவை, அறுவடைக்கு, 40 நாட்களுக்கு முன் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே ஏற்கப்படும். அதற்கு பின் பயன்படுத்தியிருந்தால் ஏற்க மறுத்துவிடுவர். சாணம், கோமியம் போன்றவற்றில் விரும்பத்தகாத வாயுக்கள் இருப்பதால், கேடு விளைவிக்கும் என கணித்துள்ளனர். எனவே, அது போன்ற உணவுப் பொருட்களை நிராகரித்து விடுவர்.

கேள்வி: தமிழகத்தில் பெரும்பாலும், சாணம், கோமியம் போன்ற இடு பொருட்களை பயன்படுத்திதானே இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது?
ஆறுமுகசாமி: இங்குள்ள சிறுஉற்பத்தியாளர்கள், உணர்வு மயமானவர்கள். முன்னோர் ஒன்றும் முட்டாளல்ல என்பது போல் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பவர்கள். உற்பத்தியில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஏற்பதில்லை. நுகர்வோர் உரிமை பற்றி எதுவும் அவர்களுக்கு தெரியாது. அதை புரிய வைப்பதும் கடினம். காலமாற்றம், விதிகளை பின்பற்றி வாழ வேண்டும் என்ற நெருக்கடியும், உணவுப்பொருட்களின் மீது நம்பகத்தன்மையும் ஏற்படுத்தக்கூடும்.


Share the Article

Read in : English