Read in : English

Share the Article

நரேந்திர மோடி தமிழக வாக்காளர்களின் ஆதரவைப் பெறாமல் போயிருக்கலாம், பாஜக கடுமையான முயற்சிகள் செய்தபோதும். ஆனால் மோடி தேசிய அரசியலில் வளர்ந்து சிம்மாசனம் ஏறியதில் தனிப்பட்ட முறையில் சில தமிழர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. எதிர்கால பாஜகவின் முகமாக அவர் தோன்றிய காட்சி 2008-ல் சென்னையில்தான் நிகழ்ந்தது. மே 26, 2022 அன்று சென்னைக்கு விஜயம் செய்யும்போது இது அவரது ஞாபகத்திற்கு வரக்கூடும்.

அந்தக் காலத்தில் எல்.கே.அத்வானியின் பலமான பதாகைதான் பறந்து கொண்டிருந்தது. அதனால் தேசிய அளவில் அந்த நிழலைவிட்டு மோடியால் வெளிவரமுடியவில்லை. மேலும் மோடியின் மீது 2002-ஆம் ஆண்டில் கோரத்தாண்டவமாடிய குஜராத் கலவரங்களின் கறை வேறு ஒட்டிக் கொண்டிருந்தது. ஆனால் பாஜக தொண்டர்களும், சங் பரிவார் செயற்பாட்டாளர்களும் மோடியின் மீது பெரியதோர் அனுதாபமும், அளவில்லாத அபிமானமும் கொண்டிருந்தனர் என்று ‘ஆர்எஸ்எஸ்: ஓர் உள்ளார்ந்த பார்வை’ என்ற தங்கள் புத்தகத்தில் அறிஞர்கள் வால்டர் ஆண்டர்சனும், ஸ்ரீதர் டாம்லேயும் சொல்கிறார்கள்.

2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றபின்பு, 6,000-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசிய சுற்றுப்பயணம் செய்தனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு பிரிவான சங் பரிவாரையும், 30-க்கும் மேலான அதன் கிளைகளையும் ஆட்டிப்படைக்கும் ஆகப்பெரும் சக்திகொண்டவர்கள் இந்தப் பிரச்சாரகர்கள்.

விழாவில் பேசிய சோ. ராமசுவாமி, மோடிக்கு பிரதமராகக்கூடிய அளவுக்குச் சரக்கு இருக்கிறது என்பதைச் சூசகமாகத் தெரிவித்தார். அப்போது மோடியின் பேச்சை மொழிபெயர்த்தவர் எஸ். குருமூர்த்தி.

தங்களுடன் தோளோடு தோளாகப் பணிபுரிந்திருந்த மோடியை ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர்கள் உட்பட பலரும் தவறாகச் சித்தரித்து அநியாயமான முறையில் நடத்தப்பட்டார் என்று பிரச்சாரகர்கள் கருத்துச் சொன்னார்கள். இந்த எதிர்வினையின் அடிப்படையில்தான், 2014 தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஆர்எஸ்எஸ் ஆதரித்தது. இது சங் பரிவார்க்கு வாழ்வா, சாவு என்பதான தீர்மானம் என்று ஆண்டர்சனும், டாம்லேயும் சொல்கிறார்கள்.

2009 மக்களவைத் தேர்தலுக்கு ஈராண்டுகளுக்கு முன்பாக குஜராத் வாக்காளர்கள் மத்தியில் தன்செல்வாக்கை மோடி நிரூபித்திருந்தார். 2002 கலவரங்களுக்குப் பின்பு அப்போது அவர் இரண்டாவது தடவையாக அங்கே ஆட்சியில் இருந்தார்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழாவிற்கு அதன் ஆசிரியரான சோ. ராமசுவாமி மோடியை அழைத்திருந்தார். அன்று விழாவிற்கு முன்பாக, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் மதியஉணவு சந்திப்பு நிகழ்ந்தது. விழாவில் பேசிய சோ, மோடிக்கு பிரதமராகக்கூடிய அளவுக்குச் சரக்கு இருக்கிறது என்பதைச் சூசகமாகத் தெரிவித்தார். அப்போது மோடியின் பேச்சை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மொழிபெயர்த்தவர், அவருக்கருகே உட்கார்ந்திருந்த பத்தியெழுத்தாளரும், கணக்குத் தணிக்கையாளரும் ஆர்எஸ்எஸ் செயல்வீரருமான எஸ். குருமூர்த்தியாவார்.

சோவின் பாஜக சார்பு நிலைப்பாடு இயல்பானதே என்று சொல்கிறார் ’அறம்’ இணைய இதழின் ஆசிரியரும், துக்ளக்கின் மேனாள் பணியாளருமான சாவித்ரி கண்ணன். 1970-களிலிருந்து சோவின் கருத்தியியலும், நோக்கமும் ஆர்எஸ்எஸ் இலட்சியத்தை மேம்படுத்தவும், முன்னெடுத்துச் செல்லவும் பயன்பட்டன. உதாரணமாக, ஜனதா காலத்தில், கட்சியையும், அரசையும் குழப்பியடித்த இரட்டை உறுப்பினர் உரிமை பிரச்சினையின் கடுமையை ஒத்துக்கொள்ள சோ மறுத்தார். அதுவோர் கிளைக்கதை என்று கேலி செய்தார் அவர். அதன்மூலம் அவரது சித்தாந்தச் சார்பு வெளிப்பட்டது என்கிறார் சாவித்ரி கண்ணன். மண்டல் பிரச்சினை சோவை பாஜகவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்க வைத்தது என்று அவர் சொல்கிறார்.

2002 குஜராத் கலவரங்களில் மோடி குற்றமற்றவர் என்று அறிக்கை தந்த  விசேசப் புலன்விசாரணைக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன் என்னும் பணிஓய்வு பெற்ற தமிழ்நாட்டு ஐபிஎஸ் அதிகாரி.

2-ஜி அலைக்கற்றை ஊழலும், நிலக்கரி ஊழலும் மன்மோகன் சிங் அரசை அலைக்கழித்தன. அப்போது அன்னா ஹசாரே ஊழலெதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார். அரசாங்கத்தில் கொள்கை முடங்கிப்போனது என்று ஊடகங்கள் விலாவாரியாக விசனத்துடன் பேசத் தொடங்கின. அப்போதுதான் தேசிய அரசியலில் ஒரு மாற்றாக மோடியின் தலைமைப்பண்பு அவரை அடையாளங்காட்டியது. அதனால் அவரையே முன்னிறுத்தியது பாஜக.

துக்ளக் விழாவிற்கு நான்காண்டுகள் கழித்து, இன்னொரு தமிழரின் மூலம் மோடிக்கு ஆகப்பெரும் ஊக்கமும் ஆக்கமும் கிட்டின. 2002 குஜராத் கலவரங்களில் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அவர் குற்றமற்றவர் என்றும் சுத்தமான அறிக்கை ஒன்றை கொடுத்தது ஒரு விசேசப் புலன்விசாரணைக் குழு. உச்ச நீதிமன்றம் கட்டமைத்திருந்த அந்தக் குழுவின் தலைவர் ஒரு தமிழர்; ஆர்.கே.ராகவன் என்னும் பணிஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி. அவரது குழு சமர்ப்பித்த அறிக்கை மோடியைக் குற்றம் சொல்ல முடியாது என்றும், கலவரங்களைக் கட்டுப்படுத்தும் திறமை அவரிடம் இல்லை எனச் சொல்லவும் முடியாது என்றும் தெளிவாகச் சொன்னது. அதுதான் 2014-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது பாஜகவிற்கு வலிமையானதோர் பரப்புரை ஆயுதமானது.

ராகவன் தமிழ்நாட்டில் நீண்டகாலம் காவல் அதிகாரியாகப் பணியாற்றியவர். மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட களத்தில் சிக்கிய ஹரிபாபுவின் கேமராவைக் கைப்பற்றினார் ராகவன். அது அவரது தொழில் வாழ்க்கையில் அவருக்கு ஏற்றம்தந்த பிரபல நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று. ஏனெனில் அந்தக் கேமாராவில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களின் படங்கள் இருந்தன. அவைதான் இந்த வழக்கில் நிறைய வெளிச்சம் தந்த படங்கள்.


Share the Article

Read in : English