Read in : English

Share the Article

அரசுத்திட்டம் என்று ஆகப்பெரிய கீர்த்திபெற்ற உழவர்ச்சந்தையைப் புதுப்பிக்கும் கொள்கையைப் பலப்படுத்தும் இலட்சியத்தோடு இந்த நடப்பாண்டில் 50 உழவர்ச்சந்தைகள் புதுப்பிக்கப்படும் என்று சமீபத்திய பட்ஜெட் அமர்வின்போது தமிழக அரசு உற்சாகமானதோர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி உறவை ஏற்படுத்தும் இந்த விற்பனை தலங்கள் இனி ஏராளமாக உருவாக்கப்படும் என்பது அரசின் இலக்காகியிருக்கிறது. நல்லது!

ஒருகிலோ பீன்ஸ் ரூ. 150-யைத் தாண்டிவிட்டது; இறகு அவரை ரூ. 140-யைத் தொட்டுவிட்டது. தக்காளி விலை ரூ.100-க்கு உயர்ந்துவிட்டது; பருவகால மாங்காய்கள் ரூ.100-யைத் தாண்டிப் போய்விட்டது. இந்தச் சூழ்நிலையில் விலைகளை ஸ்திரப்படுத்தவும், இடைத்தரகர்களை நீக்கவும் அரசின் தலையீடு அவசர அவசரமாக அவசியமாகி விட்டது. அரசுத்திட்டம் வேறெதையும் சீர்படுத்துவதை விட மிகவும் எளிதானது உழவர்ச்சந்தையை மேம்படுத்துவது. அது ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் அரசுத்திட்டம்; நல்ல கட்டமைப்பில் இயங்குகிறது. அங்கே சராசரியான மொத்த கொள்முதல் விலையை விட 20 சதவீதம் அதிகமான விலையும், சில்லறை விலைகளை விட 15 சதவீதம் குறைவான விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. விலைநிர்ணயம் செய்வது விவசாயி பிரதிநிதிகளும், அதிகாரிகளும் அடங்கிய ஒரு குழுதான். வாஸ்தவத்தில், சந்தைப் போக்குகளுக்கு ஏற்றவாறு, நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கும் குறைவாகவே விற்பதற்கு விவசாயிகள் தயாராகவே இருக்கிறார்கள். அதே சமயம் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் தாறுமாறுமான விலைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன என்று தகவல்களும் வருகின்றன.

காய்கறிகளின் விலையேற்றம் தொடர்ந்து தலைப்புச் செய்தியாகி விட்டபோதிலும், சென்னை உட்பட பல முக்கியமமன நகர்ப்புறப் பகுதிகளில் உழவர்ச்சந்தைகளை மேம்படுத்தி மீளுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற பேச்சே இல்லை. காலங்காலமாகக் காய்கறிகளை வாங்கி விற்கும் டியூசிஎஸ் போன்ற கூட்டுறவுச் சங்கங்களின் தலையீடும் இப்போதும் இல்லை. பொதுவினியோக அமைப்பு மூலம் காய்கறிகளை விற்கலாம். ஆனால் அந்தச் சாத்தியமும் யோசிக்கப்படவே இல்லை.

வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மார்ச் மாதம் தன்னுடைய பட்ஜெட் கொள்கைக் குறிப்பில் நடப்பு நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் 50 உழவர்ச்சந்தைகள் புதுப்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதுவொரு நீண்டகால நடவடிக்கை. இதை விரிவாக்கம் செய்ய வேண்டும். காய்கறிகளுக்கும் தானியங்களுக்கும் பழங்களுக்கும் தேவை அதிகமாக இருக்கும் எல்லா நகர்ப்புறங்களும் இதன்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக மாநகரவாசிகளுக்கு இந்த உடனடியான தீர்வு தேவைப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே எரிபொருள் விலையுயர்வு எல்லாப் பொருட்களின் விலைகளையும் உச்சத்திற்குக் கொண்டு போய்விட்டது.

ஒருகிலோ பீன்ஸ் ரூ. 150; இறகு அவரை ரூ. 140; தக்காளி ரூ.100; மாங்காய் ரூ.100-யைத் தாண்டிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் விலைகளை ஸ்திரப்படுத்தவும், இடைத்தரகர்களை நீக்கவும் அரசின் தலையீடு அவசியம்

வலிதரும் எரிபொருள் விலைகள்
கோவிட்-19 உச்சத்தில் இருந்தபோது 2020-ல் மார்ச் 25 அன்று நாடுமுழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72.28 என்று ஒன்றிய அரசின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வுப் பிரிவு பதிவு செய்திருக்கிறது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 11 வரை இந்தவிலை ரூ.90-க்குக் கீழேதான் இருந்தது. அந்த ஆண்டு ஜூன் 2 அன்று அது ரூ.100-யைக் கடந்தது. ஆகஸ்டு 14-ல் ரூ.99.47-க்குச் சரிந்தது. காந்தி ஜெயந்திக்கு ஒருநாள் கழித்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-யைக் கடந்தது. அப்படியே உயர்ந்து உயர்ந்து அது ரூ.110.85-யைத் தொட்டது. கலால்வரி குறைந்தபின்பு பெட்ரோல் விலையும் குறைந்திருக்கிறது.

வேளாண் விளைபொருட்களை தென்தமிழகம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளிலிருந்து போக்குவரத்து மூலம் கொண்டுசெல்ல அதிமுக்கியமாகத் தேவைப்படுவது டீசல். ஊரடங்குத் தேதியில் டீசல் லிட்டருக்கு ரூ.65.71 என்ற விலையில் விற்கப்பட்டது. 2021, ஜூன் 1 அன்று அது ரூ.90.12-க்கு உயர்ந்தது. அந்த ஆண்டு அக்டோபர் 22-ல் அது உச்சம் தொட்டது ரூ.100.25 ஆக. ரூ.100-க்கு மேலான நிலையிலே டீசல்விலை இருந்தது, 2022 மே 22 வரை. கலால் வரி குறைக்கப்பட்டவுடன் டீசல் விலை லிட்டருக்கு ரூ 94.24-க்குச் சரிந்திருக்கிறது.

அதிகவிலைக் கொள்ளையைத் தடுத்தல்
இன்று அதிகாரப்பூர்வமாக 180 உழவர்ச்சந்தைகள் இருக்கின்றன; அவற்றில் சில பெரிய மாநகரங்களில் மத்திய பகுதிகளில் இயங்குகின்றன. கோயம்புத்தூரில் ஆர்.எஸ். புரத்தில் ஒன்று இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை உழவர்ச்சந்தை என்னும் அரசுத்திட்டம் குன்றத்தூர், பல்லாவரம், நங்கநல்லூர், குரோம்பேட்டை போன்ற புறநகர்ப் பகுதிகளுக்குத் தள்ளப்பட்டு விட்டது.

நெருக்கடிக் காலங்களில் இந்தச் சந்தைகளை மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்த அரசுத்திட்டம் மேனாள் முதல்வர் மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 1999-ல் உருவானது. அப்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசு உதவியுடன் அரசுப் பேருந்துகளில் சந்தைக்குக் கொண்டுவந்து விற்றுவிட்டு மீண்டும் அதே அரசுப் பேருந்துகளில் வீடு திரும்பினார்கள். அதைப்போன்றதோர் அரசுத்திட்டம் தற்காலத்து காய்கறி விலையேற்ற நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், இடைத்தரகர்களாலும், நிதிமுதலைகளாலும் தாறுமாறாய் உயர்ந்துவிட்ட விலைகளைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும். கோயம்பேட்டில் உருவாக்கிய மொத்தவிலைச் சந்தை காய்கறிகளையும் பழங்களையும் சகாய விலைகளில் கிடைக்கச்செய்ய உதவவில்லை.

அரசுத்திட்டம் வடிவமைத்த அசல் ஏற்பாட்டின்படி, உழவர்ச்சந்தையிலிருக்கும் கடைகள் குலுக்கலில் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டன. ஆனால் இன்று சந்தையில் அதிகமான இடம் இருப்பதால், கடைகளை ஒதுக்கும் வழிமுறைகள் நிறையவே உள்ளன. ரோஸ்டர் சிஸ்டத்தைப் பயன்படுத்தி ஏராளனமான விவசாயிகளுக்கு விற்பதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கலாம். புதிய இடங்களைத் தெரிவு செய்யலாம். ஆனால் 2011-ல் அஇஅதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் உழவர்ச்சந்தை என்னும் கருத்தாக்கம் – அரசுத்திட்டம் – முற்றிலும் சரிந்து போகாவிட்டாலும் வீழ்ச்சியடைந்திருக்கிறது, தற்போது திமுக ஆட்சி உருவாகும்வரை.

 வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மார்ச் மாதம் தன்னுடைய  பட்ஜெட் கொள்கைக் குறிப்பில் நடப்பு நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் 50 உழவர்ச்சந்தைகள் புதுப்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்

புதிய இடங்கள் தயார்
மாகரங்களின் மத்தியில் வேளாண் விளைபொருட்களுக்கான கோடைச் சந்தைகளைத் திறக்கப் புத்தம்புதிதான இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு மாநிலஅரசு மிகவும் சிரமப்படத் தேவையில்லை. சென்னையில் இருக்கவே இருக்கிறது அரசுப்பள்ளிகள்; கல்வியாண்டு முடிந்தபின் மூடப்பட்டிருக்கின்றன அந்தப் பள்ளிகள். அவற்றில் இருக்கும் பெரிய மைதானங்கள் கோடைக்கால உழவர்ச்சந்தைகள் அமைக்கச் சரியாக இருக்கும். இந்த விசயத்தில் தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நெருக்கடிக்காலச் சமாளிப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போதிருக்கும் 180 உழவர்ச்சந்தைகளில்கூட காய்கறி விலைகள் பற்றிய தகவல்கள், அரசு வாக்களித்தது போல, இணையத்தில் ஏற்றப்படவில்லை. விலைகள் இணையத்தில் தரப்பட்டிருந்தால், நுகர்வோர்களுக்கு ஒப்பீட்டு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

உழவர்ச்சந்தைகளின் பட்டியல் பின்னே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியில் கிடைக்கிறது: https://www.agrimark.tn.gov.in/index.php/Infra/us

இந்த இணையதளத்தில் ஒவ்வொரு சந்தையிலும் விற்கப்படும் விளைபொருட்களின் விலைகளும், மற்ற விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படவில்லை

உழவர்ச்சந்தை என்னும் அரசுத்திட்டம் கொண்டிருக்கும் கருத்தாக்கம் இதுதான்: விவசாயிகளை நேரடியாக மாநகரங்களுக்கு வரவழைத்து நேரடியாக தங்கள் விளைபொருட்களை நுகர்வோர்களிடம் விற்கும் திறனை அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த அடிப்படைக் கருத்தாக்கத்தை மேலும் செழுமைப்படுத்த வேண்டியது அவசியம். உழவர்ச்சந்தை திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததைவிட தற்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் கட்டமைப்புகளும் மிக அதிகமாகவே வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஏராளமான விரிவான சாலைகளும், சரக்குகளின் பாரத்தைத் தாங்கும் திறனும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதனால் வேளாண் விளைபொருட்களை அரசு ஆதரவோடோ அல்லது கூட்டுமுயற்சியிலோ ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குக் கொண்டுபோக முடியும்.

காய்கறிகளின் விடாப்பிடியான விலையேற்றம் மக்களுக்கு ஊட்டச்சத்தை மறுக்கும் அளவுக்கு பெரும்பாரமாகி விட்டது. உணவு விடுதிகளையும், ஒப்பந்த உணவுகளையும் சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் கொடுக்கும் விலைகள் அதிகம்; ஊட்டச்சத்து அளவும் சரிந்துபோனது. இந்த விலையேற்றத்தால் மற்ற முக்கிய செலவுகளையும் மக்கள் குறைக்க வேண்டியிருக்கிறது. சந்தைகள் தோற்றுப்போவதைச் சும்மா வேடிக்கைப் பார்ப்பதைவிட்டு பிரச்சினையின் ஆணிவேரைக் களைய அரசு முயல வேண்டும். அதற்கு உழவர்ச்சந்தை என்னும் அரசுத் திட்டம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் உழவர்ச்சந்தைக் கட்டமைப்பைப் பலப்படுத்தினால் மக்களை உயரும் விலைவாசியிலிருந்து காப்பாற்றிவிடலாம்.


Share the Article

Read in : English