Read in : English

Share the Article

தமிழர் வாழ்வோடு ஒன்றிணைந்தது பனைமரம். நிலத்தடி நீரை சேமிப்பதில் முதன்மை மதிப்பு பெற்றுள்ளது. பனைமரம் முளைத்து முதிர்ச்சியடைய, 15 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறது. இளம்பனை, வடலி என அழைக்கப்படுகிறது. பனையில் பழம், கற்கண்டு, நுங்கு, கருப்பட்டி என, முழுமையான உணவுப் பயன்கள் உள்ளன. பனையின் தாயகம் ஆப்பிரிக்க நிலப்பகுதி. என்றாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆசியாவில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மக்கள் பண்பாட்டுடன் இணைந்துள்ளது.

இந்தியாவில், 8 கோடி பனை மரங்கள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் உள்ளது. அதில் பெரும் பான்மை தமிழகத்தில் உள்ளது. தமிழக அரசின் மாநில அதிகாரப்பூர்வ மரமாக உள்ளது. இதை பாதுகாக்கும் வகையில் ஒர் உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். பனை மரங்கள் பல்கிப் பெருக தமிழக அரசும் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இப்போதைய நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறாமல், தமிழகத்தில் பனை மரத்தை வெட்ட முடியாது.

பனை மரத்தை வளர்க்கும் விதமாகவும் திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் வேளாண் சார்ந்த வளத்தை பெற்றுள்ளது பனை.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நிலப்பரப்பில் பனைமரம் சூழல் சார்ந்து மக்களுடன் மிகவும் இணக்கமாக உள்ளது. பெரும் சக்தியாக பண்பாட்டுடன் கலந்துள்ளது. இதற்கு காரணம், அது தரும் அளவற்ற பயன்கள்தான். உணவு பொருட்கள், அன்றாடம் தேவையான புழங்கு பொருட்கள், தீங்கற்ற சூழலியல் இணக்கம் என அதன் சார்பு மக்களைக் கவர்ந்துள்ளது. பதநீர், கருப்பட்டி, கயிறு, நார், ஓலை என அதன் பொருளியல் மதிப்பை தனியாக பட்டியலிட்டு மதிப்பிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் தன்னெழுச்சியாக ஏற்பட்ட அலையில், பனை மரத்தின் பயன்பாடு மீண்டும் துளிர்த்து வருகிறது. அதை விரும்பும் இளைஞர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

எளிய மக்கள் வரலாற்றுடன் தொடர்ந்து பயணித்து வரும் பனை மரத்தின் பயன்பாடு, இடைக்காலத்தில் வீழ்ச்சியடைந்தது. சூழல் சீர்கேடுகளே இதற்கு காரணமாக அமைந்திருந்தன. அன்றாட புழங்கு பொருட்களில் அது வகித்த இடத்தை பிளாஸ்டிக் பொருட்கள் பிடித்துக் கொண்டன. இதனால் பனைப் பொருட்களின் உற்பத்தியும் பயன்பாடும் தேய்ந்து வந்தது. அது சார்ந்து வாழ்ந்த மக்கள் நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலை அதிக காலம் நீடிக்கவில்லை.

தமிழகத்தில் தன்னெழுச்சியாக ஏற்பட்ட அலையில், பனை மரத்தின் பயன்பாடு மீண்டும் துளிர்த்து வருகிறது. அதை விரும்பும் இளைஞர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசின் ஆதரவும் கிடைத்துள்ளதால் மேலும் நிலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், பனை சார்ந்த விழிப்புணர்வை பல இயக்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. தனி நபர்களும் இந்த முயற்சியில் முன்னிலை வகிக்கின்றனர். அந்த வகையில், கிறிஸ்தவ மத போதகரும், பனை சார்ந்த செயல்பாட்டாளருமான காட்சன் சாமுவேலின் பணி மிக முக்கியமானது. பனை தொடர்பாக அவரது விழிப்புணர்வு பயணங்கள், சூழலை மேம்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன. பல கட்டங்களாக பல இடங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கிலோ மீட்டர் பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாக, மும்பை முதல், கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, இலங்கை முழுதும், பனை பண்பாட்டைத் தேடி மேற்கொண்ட பயணம் பல உண்மைகளை வெளிப்படுத்தியது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பனை பண்பாட்டைத் தேடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயணங்கள் செய்துள்ளார். அவற்றை உரிய வகையில் ஆவணப்படுத்தியுள்ளார்.

அவற்றின் தொடர்ச்சியாக மே 1ஆம் தேதி மும்பையிலிருந்து பனை விழிப்புணர்வு பயணம் ஒன்றை துவக்கியுள்ளார் காட்சன். அது, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் என இந்தியாவில் பல மாநிலங்களை உள்ளடக்கியுள்ளது. கிட்டத்தட்ட, 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய இருக்கிறார்.

மே 1ஆம் தேதி மும்பையிலிருந்து பனை விழிப்புணர்வு பயணம் ஒன்றை துவக்கியுள்ளார் காட்சன். அது, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் என இந்தியாவில் பல மாநிலங்களை உள்ளடக்கியுள்ளது.  

உணவு, சூழலியல், வாழ்வியல் என தேடலுடன், பனை பயணம் நடந்து வருகிறது. இந்த வார துவக்கத்தில் பயண இடம், ஓடிசா மாநிலம் புவனேஸ்வரம்.
இந்தப் பண்பாட்டு பயணத்தின் ஊடே, ‘இன்மதி.காம்’ இணைய இதழுக்கு அனுபவங்களை உற்சாக பகிர்ந்து கொண்டார். அவருடன் நடத்திய உரையாடல் விவரம்:

கேள்வி: உங்கள் பயண நோக்கம் குறித்து…

காட்சன் சாமுவேல்: இன்றைய சூழலில் பனை மரங்களின் நிலை குறித்த தேடலுடன் என் பயணம் அமைந்துள்ளது. பனைமரத்தை சார்ந்து வாழும் தொழிலாளர் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாசாரம் பனைமரம் மீதான நம்பிக்கை குறித்து ஆராய்ச்சி செய்கிறேன். வளர்ச்சி போக்கில் அது குறித்து எழுதி வருகிறேன்.

கேள்வி: பனை மரம் சார்ந்து பல நம்பிக்கைள் தமிழகத்தில் நிலவுகிறதே…

காட்சன்: பனைமரம், குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கானது என்ற கருத்து, தென் தமிழகத்தில் நிலவுகிறது. என் பயண அனுபவம் பொதுப்புத்தி சார்ந்த இந்த மனப்பான்மையை தகர்க்கும் வகையில் உள்ளது. இனம், மொழி தாண்டி, பல்வேறு இன மக்கள் பனையை முதன்மையாக கொண்டு வாழ்வதை காண்கிறேன்.

கேள்வி: இந்தப் பயணம் எப்படி அமைந்துள்ளது…

காட்சன்: பனைமரம் சார்ந்து இயங்கும் கலைஞர்கள், தொழிலாளர்கள், பனைமரத்தை காக்க விரும்பும் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களைச் சந்தித்துத் தரவுகளைச் சேகரிக்கும் விதமாக இந்தப் பயணம் உள்ளது. பனை தொடர்பான பண்பாட்டுத் தொடர்ச்சியை பல பகுதி மக்களிடம் இருப்பதை கண்டேன். ஒப்புமைகளையும் காண்கிறேன். ஒடிசா மாநிலத்தில், வழிபாடு சார்ந்து பனை பயன்பாட்டை காணும் வாய்ப்பு கிடைத்தது. தென் தமிழகத்தில் ‘அய்யா வழி’ வழிபாடு போல், ஒடிசாவிலும் தனித்தன்மை வாய்ந்த ஒரு வழிபாட்டு மரபை பார்த்தேன். அதில் குருக்கள், பனைப்பொருட்களுக்கு வழங்கும் முக்கியத்துவம் வியக்க வைக்கிறது. பல வேறு இன மக்களும் என் பயணத்தை வரவேற்று உற்சாகப்படுத்துகின்றனர்.

இவ்வாறு மகிழ்ச்சி தெரிவித்த காட்சன், பனை ஓலையில் தொப்பி, கைப்பை, அங்க வஸ்திரம் என தோற்றத்தை பனை சார்ந்தே அமைத்துள்ளதைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். பயணத்தில் சேகரிக்கும் தகவல்களை ஆய்வு செய்து, மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கையாக வைக்க உள்ளார். இந்தப் பயணம், பண்பாட்டு ரீதியாக புதிய புரிதலை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.


Share the Article

Read in : English