Read in : English

Share the Article

தமிழ்நாட்டில் இராமநாத மாவட்டத்தில் தொலைதூரக் கிராமமான மேலரும்பூரில் ஒரு வயற்காட்டில் நீண்டநாட்களாகவே சீண்டுவார் யாருமின்றி சீரழிந்துக் கிடந்தன சிற்பங்கள் சில. அவை சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் மற்றும் இறுதியும் 24-ஆவதுமான தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்கள். பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்தச் சிற்பங்களின் சிறப்புகளைப் புரிந்துகொண்ட முத்துசுவாமி என்னும் முதியவர் அந்தச் சிலைகளை மீட்டெடுத்து சிரத்தையுடன் பூஜை புனஸ்காரங்களைச் செய்ய ஆரம்பித்தார். பின்பு 2020-ல் அவற்றிற்குச் சிறியதொரு கோயில் கட்ட ஆரம்பித்தார். சிலைகளுக்கான புனிதஇடத்தை உள்ளூர் மக்கள் உதவியுடன் கட்டிமுடித்த அவரால் தரை வேலையையும், வழிப்பாதையையும் முடிக்க முடியவில்லை. காரணம், கரோனா காலத்துத் தடைகளும், நிதிப் பற்றாக்குறையும்தான்.

தீர்த்தங்கரர்களின் ஆதிகாலச் சிலைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் வி. வேதாச்சலம் மதுரை சமணப் பாரம்பரிய நிலையத்தின் செயலர் ஆனந்தராஜிடம் தெரிவித்தார். பின் இருவரும் மேலரும்பூருக்குச் சென்றனர், சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு. சிலைகளுக்கான புனிதஇடம் தயாரான போதும், சிலைகளை வைப்பதற்கு பீடங்கள் கட்டும் வேலையும், நடைபாதைகள் உருவாக்கும் வேலையும் இன்னும் இதைப்போன்ற முக்கிய பணிகளும் முடிக்கப்படாமல் பாக்கியிருந்தன. அகிம்சா நடைப்பயண உறுப்பினர்களின் உதவியை ஆனந்தராஜ் நாடினார் (தமிழ்நாடு முழுவதும் புறக்கணிக்கப்பட்ட சமணச் சிலைகளையும், நினைவுச்சின்னங்களையும் மீட்டெடுக்க, ஒவ்வொரு மாதமும் தொலைதூரக் கிராமங்களுக்குச் செல்ல சமணசமய அறிஞர்களும், செயற்பாட்டாளர்களும் 2014-ல் தொடங்கியதுதான் இந்த அகிம்சா நடைப்பயணம் என்னும் இயக்கம்). மீதியிருந்த வேலைகளும் இரண்டொரு மாதங்களில் முடிந்தன.

மேலே இருந்து கடிகார திசையில்: சடங்கின் போது முத்துசுவாமி (வலது); சிலைகளின் பிரதிஷ்டை நிகழ்வு; புதிய வழிபாட்டுத் தலத்தில் இருக்கும் சமணச் சிலைகள். சிறியது மகாவீரர் சிலை; பெரியது ரிஷபநாதர் சிலை

என்றாலும் சிலைகளின் பிரதிஷ்டையும், வழிப்பாட்டுத் தலத்தின் திறப்புவிழாவும் சமீபத்தில்தான் தனித்துவமானதொரு முறையில் நடைபெற்றன. சமணசமயத்தின் உயிர்மூச்சுக் கொள்கையான அகிம்சையைப் பற்றி மக்களுக்கோர் விழிப்புணர்வை உண்டாக்கவும், தொன்மை வாய்ந்த தீர்த்தங்கரர் சிலைகளின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மேலரும்பூர் கிராமத்திலே 79-ஆவது அகிம்சா நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டிலிருக்கும் சமண ஸ்தலங்களின் சரித்திர, கலாச்சார முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெரும்பங்கு வகித்ததால் 2014-ல் தொடங்கிய இந்த நடைப்பயணம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

விழாவுக்குக் கிராமத்தினர்கள் அழைக்கப்பட்டனர். மகாவீரர் வாழ்க்கைச் சரிதத்தையும், சமணசமயத்தின் முக்கிய சித்தாந்தங்களையும் விளக்கும் சிறு தமிழ்ப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன, குறிப்பாக மாணவர்களுக்கு. அகிம்சா நடைப்பயணத்தை வழிநடத்திச் சென்ற மூத்த பாரம்பரியச் செயற்பாட்டாளர்கள் ஆதிகாலச் சிலைகளைப் பேணிக் காக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினர்.

சிலைகளை மீட்டெடுத்துப் பேணிக் காத்ததில் பெரும்பங்காற்றிய முத்துசுவாமியும், மற்றும் சில மூத்த குடிமக்களும் கெளரவப்படுத்தப் பட்டனர். விழா கிராமத்தினரின் கண்களைத் திறந்து வைத்தது. இதுவரை தொன்மையான சமணச்சிலைகள் பற்றி அறியாமையில் இருந்து விட்டோமே என்று அவர்கள் வருத்தப்பட்டனர்.

தீர்த்தங்கரர்களின் ஆதிகாலச் சிலைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் வி. வேதாச்சலம் மதுரை சமணப் பாரம்பரிய நிலையத்தின் செயலர் ஆனந்தராஜிடம் தெரிவித்தார். பின் இருவரும் மேலரும்பூருக்குச் சென்றனர், சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு.

ஒன்றரை அடி உயரமுள்ள மகாவீரர் சிலையும், மூன்றரை அடி உயரமுள்ள ரிஷபநாதர் சிலையும் நீண்ட காலமாகத் திறந்தவெளியில் கிடந்திருந்த போதும், அவை சேதாரமாகவில்லை என்று நிபுணர்கள் ஆச்சரியத்துடன் பகிர்ந்தார்கள்.

சமண வேதங்களில் சொல்லப்பட்ட மரபார்ந்த முறைப்படி, ஒரு மூத்த சமணப் பண்டிதரின் கண்காணிப்பில் வழிப்பாட்டுத்தலத்தின் திறப்புவிழாவும் பின்பு தீர்த்தங்கரர் சிலைகளின் பிரதிஷ்டையும் நிகழ்ந்தேறின. சமணத்தின் ஐம்பெரும் சபதங்களான அகிம்சை, சத்தியம், பிரம்மச்சர்யம், அஸ்தேயம் (திருடாமை), அபரிகிரஹா (பொருள் பற்றின்மை) ஆகியவை கிராமத்தினர்க்கு விளக்கப்பட்டன. பின்பு நடைபெற்ற எளிய விருந்தில் கிராமத்தினரும், அகிம்சா நடைப்பயண உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மதிய உணவிற்குப் பின்னர், அகிம்சா நடைப்பயண உறுப்பினர்கள் அந்தப் பகுதியில் புறக்கணிக்கப்பட்டிருந்த மற்ற சமண ஸ்தலங்களுக்குச் சென்றனர்.

கிளம்பும் முன்பு, தினமும் சிலைகளுக்குப் பூஜை செய்யுமாறு அவர்கள் முத்துசுவாமியைக் கேட்டுக்கொண்டனர். அப்படியே செய்வதாக அவரும் சம்மதித்தார்.


Share the Article

Read in : English