Read in : English

Share the Article

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு (1712 1752), போப்பாண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். சாமானிய மக்களிலிருந்து புனிதரான முதல் இந்தியர் இவர்தான்.

வாடிகனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தமிழைப் பெருமைபடுத்தினர் என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டிவிட்டர்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் செஞ்சி மஸ்தான்தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புனிதர் பட்டம் பெற்றுள்ளதைக் கொண்டாடும் வகையில் வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் ஜூன் 5ஆம் தேதி விழா நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாறு மற்றும் பொதுவாக கன்னியாகுமரி மற்றும் தெற்கு கேரளத்தில் முத்திபேறுபெற்ற தேவசகாயம்  பிள்ளை ஒரு பிரபலமான பெயர். அவர் மறைசாட்சியாக கொல்லப்பட்ட ஆரல்வாய்மொழியாகட்டும் அல்லது அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள புனித பிரான்சிஸ் சேவியர் கதீட்ரலாகட்டும், அவரது வேண்டுதலுக்காக தினந்தோறும் குவியும் பக்தர் கூட்டம் ஏராளம்.

கத்தோலிக்க திருச்சபை நவம்பர் 9ஆம் அன்று முத்திப்பேறுபெற்ற தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டத்தை அறிவித்தது. 15.5.2022 அன்று அவர் புனிதராக போப்பாண்டரவரால் அறிவிக்கப்படுவார். இறைமக்கள் எனப்படும் சாமான்யர்களில் இருந்து புனிதராகும் முதல் இந்தியர் அவர்.

தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் என்பது கோட்டாறு மற்றும் அதை சுற்றி உள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கை. தமிழ்நாடு ஆயர் பேரவையும், இந்திய கத்தோலிக்க ஆயர்களின் அவையும் தேவசகாயம் பிள்லைக்குப் புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்பதற்காக 2004ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடமான வாடிகனுக்கு விண்ணப்பித்தன.

அந்த விண்ணப்பத்தை ஏற்று தேவசகாயம் பிள்ளை 2012ஆம் ஆண்டு முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தது. இப்பொழுது வந்துள்ள புனிதர் பட்டம் அறிவிப்பு அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு மகிழ்வான செய்தியென்றே சொல்லலாம்.

தேவசகாயம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தில் 1712ஆம் ஆண்டு பிறந்தார். நாயர் குடும்பத்தில் பிறந்த அவர் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. அவரது குடும்பம் அரண்மனையில் செல்வாக்கான ஒன்று, எனவே விரைவில் அரண்மனையில் பணியமர்த்தப்பட்டார். 1745இல் நீலகண்ட பிள்ளை கிறிஸ்தவ (கத்தோலிக்க) மதத்துக்கு மாறினார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் எருமை மாட்டில் ஏற்றப்பட்டு கசையடியோடு நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டுசென்று அவமானப்படுத்தப்பட்டு ஆரல்வாய்மொழிக்கு இழுத்துவரப்பட்ட அவர், அங்கு சுட்டுக்கொல்லப்பட்டார்.

பேராசிரியர் மற்றும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர் அ.கா. பெருமாள்

அவரது புனிதர் பட்டத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த போதே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எதிர்ப்புகளும் எழுந்தன. குறிப்பாக சில இந்து அமைப்புகள் தேவசகாயம் வாழ்ந்த திருவிதாங்கூர் நாட்டில் சமய காழ்ப்புணர்ச்சி இல்லை என்றும் அவர் மறைசாட்சியாவதற்கான சந்தர்ப்பங்கள் எப்படி வந்தன என்றும் சந்தேகங்களையும் எழுப்பின. இந்த எதிர்ப்புகள் காலப்போக்கில் நீர்த்து போனாலும், உண்மையில் அந்தக் கால திருவிதாங்கூரில் சமயக் கொடுமைகள் நடந்தனவா? மாற்று மதத்தினர் கொடுமைப்படுத்தபட்டார்களா? கிறிஸ்தவ சமயம் திருவிதாங்கூருக்கு ஒன்றும் புதிய சமயம் அல்ல.

இந்த எதிர்ப்புகள் காலப்போக்கில் நீர்த்து போனாலும், உண்மையில் அந்தக் கால திருவிதாங்கூரில் சமயக் கொடுமைகள் நடந்தனவா? மாற்று மதத்தினர் கொடுமைப்படுத்தபட்டார்களா? கிறிஸ்தவ சமயம் திருவிதாங்கூருக்கு ஒன்றும் புதிய சமயம் அல்ல.

சிரியன் கிறிஸ்தவர்கள் கிபி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து அங்கு வாழ்ந்து வருகிறார்கள். யூதக் குடியிருப்புகளும் உண்டு. ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் வருவதற்கு முன்பே கிறிஸ்தவம் தமிழகத்துக்கு வந்து விட்டது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மீன்பிடி பரவர் சமூகம் 1532ஆம் ஆண்டு வாக்கிலேயே கிறிஸ்தவ சமயத்தை தழுவினார்கள். புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்காக மறைப்பணி ஆற்றிய வரலாறு உண்டு.

இவ்வாறு உள்ள சூழ்நிலையில், தேவசகாயம் பிள்ளையை அவமானப்படுத்திக் கொலை செய்யத் தூண்டியது எது? கொலை செய்யப்படும் முன்பு மூன்று ஆண்டுகள் அவர் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார். உண்மையில் தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதுதான் அவரது கொடூரமான மரணத்துக்குக் காரணமா?

வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு எனும் புத்தகம் எழுதிய பேராசிரியர் மற்றும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன்னுடைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

கேள்வி: தேவசகாயம் பிள்ளை வரலாறை எழுத உங்களைத் தூண்டியது எது?

அ.கா. பெருமாள்: நான் அவர் மறைசாட்சியான ஆரல்வாய்மொழியில் பேராசியராக பணிபுரிந்தேன். நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் நான்தான். மாணவர்களோடு அந்த பகுதியில் பல வேலைகளை செய்து கொண்டிருந்தபோது அங்கிருக்கும் மக்களோடு பேசவும் பழகவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தேன். 1975களில் தொடங்கிய புத்தக வேலையை என்னால் 2004இல்தான் பதிப்பிக்க முடிந்தது.

கேள்வி: இந்தப் புத்தகம் எழுத நீங்கள் எதையெல்லாம் ஆய்வு செய்தீர்கள்?

அ.கா. பெருமாள்: வரலாற்று பூர்வகமாக நிறைய விவரங்கள் இல்லை. கல்வெட்டுகளோ அல்லது ஆவணங்களோ கிடைக்கப்பெறவில்லை. ஆனால் அவரை பற்றிய குறிப்புகள் நாட்டுப்புறப் பாடல்களில் குவிந்து கிடக்கிறது. போர்த்துகீசிய மற்றும் தமிழக நாடகக்கூறுகளை உள்ளடக்கிய வாசகப்பா எனும் நாடக வடிவத்தில் தேவசகாயம் வாழ்க்கை பாடப்படுகிறது.

அவரை பற்றி 1852ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் உள்ள ஏசு சபை பணியாளர்கள் எழுதிய புத்தகம் ஒன்று கொடைக்கானல் செண்பகனூர் ஆவணக் காப்பகத்தில் உள்ளது. நான் அதையும் படித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டேன்.

கேள்வி: தற்பொழுது மதமாற்றம் ஒரு அபாயகரமான விவாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. தேவசகாயம் வாழ்ந்த திருவிதாங்கூரில் மதமாற்றத்தை பற்றிய அணுகுமுறை இப்படித்தான் இருந்ததா?

அ.கா. பெருமாள்: இதைப்பற்றி எனக்கு பல சந்தேகங்கள் உண்டு. மதமாற்றம் ஒரு தண்டனைக்குரிய குற்றமாக இருக்கவில்லை. ஏற்கனவே கிறிஸ்தவமதம் அங்கே இருந்தது. சிரியன் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். கிறிஸ்தவத்தை தங்கள் மதமாகக்கொண்ட ஐரோப்பியர்கள் திருவிதாங்கூரில் வாழ்ந்தார்கள்.தேவாலயங்களும் இருந்தன.

கேள்வி: அரண்மனையிலும் சமூகத்திலும் முக்கிய இடத்தில் இருந்த தேவசகாயம் மதம் மாற வேண்டியதன் காரணம் என்னவாக இருந்திருக்கக்கூடும்?

அ.கா. பெருமாள்: தேவசகாயம், அரண்மனை பணியில் இருந்த போது அங்கு மற்றொரு முக்கியமான அலுவலரும் இருந்தார்.

அவர்தான் டச்சு கேப்டனான யூஸ்டேசியஸ் டே லென்னாய். குளச்சல் போரில் தோற்றபின் அரசரால் மன்னிக்கப்பட்டு அரண்மனை பணியில் அமர்த்தப்பட்டார். திருவிதாங்கூர் படைகளின் தலைவர் அவர். அவருடன் அறிமுகமான பின், இருவரும் நல்ல நண்பர்களானார்கள். கத்தோலிக்கரான லென்னாய் தேவசகாயத்துக்கு அதாவது நீலகண்ட பிள்ளைக்கு தன்னுடைய மதத்தை அறிமுகப் படுத்தினார்.

அந்த சமயம் சில சொந்த பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்த தேவசகாயத்துக்கு இந்தப் புதிய மதம் மிகவும் ஆறுதலாக இருந்ததாக தெரிகிறது. எனவே திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

கேள்வி: மதமாற்றம் குற்றமாக இல்லாதபோது எதற்காக தேவசகாயம் கொடுமைப்படுத்தப்பட்டார்?

அ.கா. பெருமாள்: கத்தோலிக்க சமயம் ஏற்றத்தாழ்வில்லா ஒரு சமூகத்தை அவருக்கு போதித்தது. ஆனால் அவர் வாழ்ந்த சமூக மரபுகள் வேறு. அன்றைய கேரள சாதிக் கட்டமைப்புக்கு பெயர்போனது.

அரண்மனையில் தேவசகாயம் ராணுவ விவகாரங்களையும் கவனித்து வந்தார். திருவிதாங்கூர் ராணுவத்தில் அனைத்து சமூகத்தவரும் இருந்தனர். வீரர்களுக்கு ஒரே இடத்தில் உணவு பரிமாறியதாக ஒரு குற்றசாட்டும் அவர் மீது உண்டு. அன்றைய சமூகத்தில் இது மிகப்பெரிய குற்றம்.

எல்லா உயர்சாதி அலுவலர்களின் எதிர்ப்பை அவர் ஒட்டுமொத்தமாகச் சம்பாதித்து கொண்டார் என்றே சொல்லலாம். அவர்கள் இவர் மீது தேசத்துரோக குற்றசாட்டை சாற்றினார்கள்.

கேள்வி: நீங்கள் இதை இவ்வளவு உறுதியாக எப்படி கூறுகிறீர்கள்?

அ.கா. பெருமாள்: தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட தேவசகாயம் பற்றி எந்தக் குற்றச்சாட்டும் ஆவணங்களில் இல்லை. திருவிதாங்கூர் ஆவணங்களில் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு குறிப்பு அவர் மீது உள்ள குற்றப்பத்திரிக்கை. தேக்கு மரம் திருடியதாகக் குற்றச்சாட்டு. ஒரு அரண்மனை அலுவலரைக் கொல்ல அந்தக் காரணம் மட்டும் போதுமா? அவரது வரலாறை எழுதிய வகையில் திருச்சபையில் சாட்சி சொல்ல அழைத்தார்கள்.

நான் அங்கேயும் இதைத்தான் பதிவு செய்தேன். சமூக சமத்துவத்தைக் கொண்டுவர முயன்றதால்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதே எனது கருத்து.

கேள்வி: மரணதண்டனை விதிக்கப்பட்ட அவரை ஆரல்வாய்மொழி வரை கொண்டுவந்தது எதற்காக?

அ.கா. பெருமாள்: அந்நாட்களில் ஆரல்வாய்மொழி திருவிதாங்கூரின் எல்லை. அவரது மரண தண்டனையை பற்றி அரசர் மார்த்தாண்ட வர்மா அறிந்திருந்தாரா என்ற சந்தேகமும் உண்டு. அப்பொழுதெல்லாம் நம்பூதிரிகளைக் கொல்ல மாட்டார்கள் நாடு மட்டுமே கடத்துவார்கள்.

ஆனால் தேவசகாயம் ஒரு நாயர். வழக்கமான தண்டனை தூக்கில் இடுவது. நாடு கடத்துவதும் திட்டமாக இருந்திருக்கலாம். தண்டனைகளை உறுதி செய்யும் அதிகாரம் சாதாரண அலுவலர்களுக்கே இருந்த காலம் அது.

பிடிக்காத ஒருவரை மொத்தமாக ஒழித்துக்கட்ட உயர்சாதி அலுவலர்கள் செய்த சதியாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஆவணக் குறிப்புகள் இல்லாமல் இதில் ஒரு முடிவுக்கு வருவது சிரமம்.

கேள்வி: தேவசகாயத்தின் புனிதர் பட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பு என்னவாயிற்று?

அ.கா. பெருமாள்: அது நிறைய நாள் நீடிக்கவில்லை. பிள்ளை என்ற சாதியின் பெயரால் அவரை வெள்ளாளர் என கருதிய நாடார் இனத்தவருக்குக் கொஞ்சம் மனவருத்தம் இருந்தது. அவர் நாயர் என தெரியவந்தவுடன் அதுவும் மறைந்து விட்டது.

கேள்வி: அவரால் நடைபெறுகிறது என்று கூறப்படும் அற்புதங்களை பற்றி தங்கள் கருத்து என்ன?

அ.கா. பெருமாள்: அது முழுக்க முழுக்க ஒருவருடைய நம்பிக்கை சார்ந்த விஷயம். அதை பற்றிக் கருத்து கூற எனக்கு உரிமை இல்லை. அவரிடம் வேண்டினால் வியாதிகள் குணமாவதாக மக்கள் நம்புகிறார்கள்.

பசுமாட்டை துன்பப்படுத்தும் உண்ணிகள் தொந்தரவு மறையும் என்பது இங்குள்ள விவசாய மக்களின் நம்பிக்கை, இந்துக்கள் உட்பட.

கேள்வி: தேவசகாயத்தின் புனிதர் பட்டத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அ.கா. பெருமாள்: இந்தியாவில் இருந்து புனிதராக அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய மிஷனரிகள். இந்தியர்களில்கூட குருவானவர்களும் கன்னியாஸ்திரிகளும் மட்டுமே உண்டு.

இறைமக்கள் எனப்படும் சாமான்யர்களில் இருந்து புனிதராகும் முதல் இந்தியர் அவர்.புனிதர் பட்டம் கிடைத்தால் அவரை வேண்டிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு ஒரு தேவாலயம் கட்ட முடியும். அவரது புனிதர் பட்டம் என்பது உள்ளூர் மக்களின் நெடுநாளைய கனவென்றே கூறலாம்.


Share the Article

Read in : English