Read in : English

Share the Article

பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்போது, வீட்டில் முகத் தீக்காயங்களுக்கு ஆளான நிவேதா (27) இரண்டரை ஆண்டுகள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, தன்னம்பிக்கையுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ படித்து, பின்னர் லேட்டரல் என்ட்ரி மூலம் பிஇ படித்து முடித்துள்ளார். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தபோதிலும்கூட அதில் சேராமல், தீக்காயம் அடைந்த மற்றவர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பணியைச் செய்வதற்காக, அவர் மருத்துவ சிகிச்சை பெற்ற கோவை கங்கா மருத்துவமனையிலேயே நிர்வாக இயக்குநரின் செக்ரட்டரியாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

நிவேதாவின் சொந்த ஊர் தேனி. தச்சுத் தொழிலாளரான அப்பா கண்ணன், உடுமலைப்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். அம்மா லட்சுமி வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் படித்த நிவேதா, மூன்றாம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை தேனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார். அப்போது பாட்டி லட்சுமி வீட்டில் தங்கிப் படித்தார். பள்ளியில் படிக்கும்போது மாவட்ட அளவிலான ஹை ஜம்ப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். 2011இல் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 426 மதிப்பெண்கள் பெற்றார். அதையடுத்து பெரியகுளத்தில் உள்ள தங்கமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படித்தார். Ðபாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்போதே, விடுமுறையில் உடுமலைப்பேட்டையில் இருந்தபோது, வீட்டில் தீக்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை கங்கா மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு இலவசச் சிகிச்சை அளிப்பதற்கான ஹோப் ஆப்டர் ஸ்கீம் என்ற திட்டத்தை 2012இல் தொடக்கி வைத்த திரைப்பட நடிகர் சூர்யாவுடன், அங்கு முதலாவது நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிவேதா.

சிறு நெருப்பால் கருகிவிட இருந்த வாழ்வை தனது தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் மீட்டெடுத்த நிவேதா தனது கதையை நம்மிடம் கூறினார்:

தீக்காயங்களுக்கு ஆளான நான் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். பின்னர், மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான செலவுகளுக்காக எனது பாட்டி வீட்டை விற்க வேண்டி வந்தது. கொஞ்ச காலம் கழித்து, மேலும் பணம் இல்லாத சூழ்நிலையில், அரசு மருத்துமனையில் மீண்டும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டேன்.

தீ விபத்தினால் பாதிக்கபட்டவர்களுக்காக இலவச சிகிச்சை வழங்குவதற்கான ‘Hope After Fire Scheme’ என்ற திட்டம் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அதனை 2012இல் சூர்யா அண்ணன் தொடங்கி வைத்தார். நான் தான் அதன் முதல் பேஷண்ட். அந்தத் திட்டத்தின் கீழ் அங்கு எனக்கு இலவசமாகச் சிகிச்சை அளித்தார்கள். அங்கு ஏழு முறை எனக்கு கரெட்டிவ் சர்ஜரி நடந்தது.

அந்தக் காலகட்டத்தில் வீட்டில் இருந்த ஆடுகளைப் பகலில் மேய்ப்பேன். படித்த பாடங்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் சொல்லித் தருவேன். இப்படியே இரண்டரை ஆண்டுகள் கழிந்துவிட்டது. வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

எப்படியாவது படிக்க வேண்டும் என்று நினைத்தேன். உடல் நிலையும் ஓரளவு தேறி இருந்தது. எனது நிலைமை குறித்து விளக்கி படிக்க உதவி கோரி அகரம் பவுண்டேஷனுக்குக் கடிதம் எழுதினேன். 2014ஆம் ஆண்டில் சென்னையில் அப்போலோ பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ படிக்க அகரம் ஏற்பாடு செய்தது. தங்குமிடம், உணவு உள்பட அனைத்துச் செலவுகளையும் அகரமே பார்த்துக் கொண்டது.

டிப்ளமோ படிப்பில் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று பாலிடெக்னிக் கல்லூரியிலே முதலாவதாக வந்தேன். அப்போது கேம்பஸ் இன்டர்வியூக்காக சில நிறுவனங்கள் எங்களது பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்தன. ஆனால், கல்லூரியிலே முதல் ரேங்க் எடுத்திருந்தும் என்னை அவர்கள் வேலைக்கு எடுக்கவில்லை.  

கங்கா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். ராஜசபாபதியுடன் நிவேதா.

தீக்காய சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு தேறிய பிறகு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தாலும்கூட, கல்லூரியில் யாருடனும் அவ்வளவாகப் பேச மாட்டேன். விடுதியில் தனியே இருப்பேன். அப்போது அந்த மாதிரியான தயக்க மனநிலை இருந்தது. சில ஆண்டுகள் படிப்பை விட்டுவிட்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பதால், படிக்க கஷ்டமாக இருந்தது. ஒரு பாடத்தை மீண்டும்மீண்டும் படித்தால்தான் எனக்குப் புரியும். அதனால் படிப்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தினேன். படிக்கும் காலத்தில் இடையிடையே மருத்துவ சிகிச்சைக்காக விடுமுறையில் செல்வதற்கு கல்லூரியில் ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். கல்லூரியில் சக மாணவிகளும் என் மீது அன்புகாட்டி ஆதரவாக இருந்தார்கள். எனது தீக்காயங்கள் எனது வளர்ச்சிக்கு எந்த வகையிலும் தடையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால், பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நான், கல்லூரியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஓவியப் போட்டிகளும் கலந்து கொண்டேன். சில போட்டிகளில் பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.

டிப்ளமோ படிப்பில் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று பாலிடெக்னிக் கல்லூரியிலே முதலாவதாக வந்தேன். அப்போது கேம்பஸ் இன்டர்வியூக்காக சில நிறுவனங்கள் எங்களது பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்தன. ஆனால், கல்லூரியிலே முதல் ரேங்க் எடுத்திருந்தும் என்னை அவர்கள் வேலைக்கு எடுக்கவில்லை. எனது முகத்தோற்றம்தான் அதற்குக் காரணமா என்பதும் தெரியவில்லை. ஆனால், எப்படியும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். லேட்டரல் என்ட்ரி மூலம் பிஇ படிக்க வேண்டும் என்று அகரம் ஃபவுண்டேஷனில் உள்ளவர்களிடம் தெரிவித்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு வேறு ஒரு பிரச்சினையும் வந்தது. பிளஸ் டூ முடித்த எனது தங்கை நித்யாவும் கல்லூரியில் படிப்பதற்காக, உதவி கோரி அகரம் பவுண்டேஷனுக்கு விண்ணப்பித்திருந்தார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் உதவி கிடைக்கும். தங்கைக்காக விட்டுக்கொடு என்று வீட்டில் உள்ளவர்கள் என்னிடம் சொன்னார்கள். இதற்கிடையே, பிஇ படிக்க அகரம் பவுண்டேஷன் என்னை தேர்வு செய்துவிட்டது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மாற்றம் எஜுக்கேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், மாணவர்களுக்குப் படிக்க உதவி செய்கிறது என்பதை அறிந்து, அந்த அமைப்பைத் தொடர்பு கொண்டேன். எனது தங்கை, சென்னையில் அக்னி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பிஇ படிப்பில் சேர்ந்து படிக்க வைக்க அவர்•கள் உதவ முன்வந்தார்கள். அதனால், நானும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அதேநேரத்தில் எனது தங்கையும் படிக்க முடிந்தது. அவர் பிஇ படித்து முடித்துவிட்டு தற்போது வேலை பார்க்கிறாள்.

அதையடுத்து, எனது தம்பி அருணுக்கு, குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத்தது. அவனது படிப்புச் செலவுக்கும் நான் முயற்சி செய்து, கோல்டன் ஹார்ட் ஃபவுண்டேஷன் படிக்க உதவி கிடைத்தது. அவன் தற்போது பிஇ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான்.

என்னை மாதிரி தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதனால் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைத்த வேலையில் சேரவில்லை.  

அகரம் உதவியுடன், எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்த நான், 2020இல் பிஇ படிப்பைப் படித்து முடித்தேன். கல்லூரியில் படிக்கும்போது தில்லியில் நடைபெற்ற Smart India Hackathon போட்டியில் எங்களது அணி வெற்றி பெற்றது. மெஷின் லேர்னிங் மூலம் மார்பகப் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான எங்களது திட்டத்துக்காக அந்தப் பரிசு எங்களுக்குக் கிடைத்தது. பிஇ படிப்பில் 76 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். வீடாட் சாப்ட்வேர் சொல்யூஷன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

என்னை மாதிரி தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதனால் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைத்த வேலையில் சேரவில்லை. அதனால், நான் சிகிச்சை பெற்ற கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சேருவதற்கு ஆர்வமாக இருந்தேன். எனது விருப்பத்தைச் சொன்னதும் எனக்கு உடனே வேலைக்கு வரச் சொன்னார் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் எஸ். ராஜசபாபதி. இப்போது நான் அவரது செக்ரட்டிரியாக பணிபுரிகிறேன்.

முகத்தில் தீக்காயங்கள் உள்ளவர்கள் வெளியே வர யோசிக்க வேண்டியதில்லை. எதையோ நினைத்துக் கொண்டு வீட்டில் முடங்கிவிடக்கூடாது. தன்னம்பிக்கையோடு தங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்ய வேண்டும்.  

கங்கா மருத்துவமனைக்கு 2020இல் வந்திருந்த திரைப்பட நடிகர் கார்த்தியுடன் அங்கு பணிபுரிந்து வந்த நிவேதா.

2012இல் சூர்யா அண்ணா வந்து இந்த ஹோப் ஆப்டர் ஃபயர் ஸ்கீம் திட்டத்தைத் தொடங்கி after வைத்தபோது, அங்கு சிகிச்சை பெற்ற நான், 2020இல் அதே மருத்துவமனையின் 10ஆம் ஆண்டு விழாவுக்கு கார்த்தி அண்ணா வந்தபோது அந்த மருத்துவமனையில் எம்.டி.யின் செயலாளராக வேலைபார்க்கிறேன்.

முகத்தில் தீக்காயங்கள் உள்ளவர்கள் வெளியே வர யோசிக்க வேண்டியதில்லை. எதையோ நினைத்துக் கொண்டு வீட்டில் முடங்கிவிடக்கூடாது. தன்னம்பிக்கையோடு தங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்ய வேண்டும். முகத்தில் தீக்காயம் பட்டவர்கள் வீட்டிலேயே முடங்கிவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் மெழுகுவர்த்தி என்ற கங்கா மருத்துவமனை சார்பில் எடுக்கப்பட்ட குறும்படத்தில் எனது பங்கும் உண்டு. சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருந்தால் இதைவிட கூடுதலாக ஊதியம் கிடைத்திருக்கலாம். எனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறது. அது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

சிறுபிராயத்திலிருந்து இப்போது வரை என் மீது அன்பு செலுத்தி எனது வளர்ச்சியில் தீவிர அக்கறை கொண்டவர் எனது பாட்டி. தன்னம்பிக்கையோடு எனது வாழ்க்கை உருவாகக் காரணமாக இருந்த எனது குடும்பத்தினருக்கும் அகரம் ஃபவுண்டேஷனுக்கும் கங்கா மருத்துவமனைக்கும் நான் என்றும் நன்றியுடன் கடமைப்பட்டுளேன் என்கிறார் நிவேதா.

அவளுடைய பயணத்தை இங்கே காணுங்கள்

 


Share the Article

Read in : English