Read in : English

Share the Article

அம்பேத்கர் மோடி ஒப்பீட்டுச் சர்ச்சை அங்கொன்றும் இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மீண்டும் இளையராஜா திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இப்போது அவர் சர்ச்சைக்குரிய கருத்தெதையும் சொல்லவில்லை. மிகவும் பாந்தமான ஓர் இசையமைப்பாளராக, ஒரு கலைஞராக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். உலகப் படங்கள் போல் தமிழில் ஏன் படங்கள் வருவதில்லை எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இயக்குநர் சாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் அக்கா குருவி என்னும் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பிலான வீடியோ ஒன்றில்தான் இளையராஜா பேசியிருக்கிறார்.

இயக்குநர் சாமியை நமக்கு நன்குத் தெரியும். அவரது உயிர், மிருகம், சிந்து சமவெளி ஆகிய படங்களின் வழியே அறிமுகமான சாமி அக்கா குருவி படம் வழியே புதியதொரு பரிணாமம் எடுத்திருக்கிறார். இதுவரை எடுத்த படங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுவது போல் இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

தமிழ்நாட்டில் உலகப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தைப் பார்த்திருப்பார்கள். அண்ணன் தங்கை இருவர். அவர்களிடம் இருப்பதோ ஒரே ஒரு ஜோடி ஷூ. அவர்கள் இருவரும் அதை வைத்துச் சமாளிக்கிறார்கள். இந்தப் பிரச்சினையால் அவர்கள் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களைக் காட்சிப்படுத்தியிருந்த படம் இது. 1999இல் வெளியான அந்தப் படத்தின் மறு ஆக்கமாக வெளிவர இருக்கிறது இந்த அக்கா குருவி.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் வண்ணதாசன் எழுத்து மாதிரியான ஒரு படம்தான். கொச்சை மொழியில் சொல்ல வேண்டுமென்றால் நெஞ்சை நக்கும் படம்தான். நாகரிக மொழியில் சொன்னால் ’ஃபீல் குட் மூவி’ எனலாம். ஆனால், அந்த அளவுகூடத் தமிழில் படங்கள் வெளிவந்துள்ளனவா என்று யோசிக்கும்போது, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் சொர்க்கம் அளவுக்கு உன்னதமான தோற்றம் கொண்டுவிடுகிறது.

  குழந்தைத்தனமான படங்கள் தமிழில் தொகைதொகையாக உண்டு. எல்லாப் பெரிய இயக்குநர்களும் அப்படியான படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கான படங்கள் உள்ளனவா என்று கேட்டால் கனத்த மௌனத்தைத்தான் நம்மால் பதிலாகத் தரமுடியும்

பொதுவாக, நமக்குச் சொர்க்கம் என்றால் ஒரு உருவகம் உள்ளது. எல்லா இனிமைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் சொர்க்கம் என்பதுதான் நமது கற்பனை. ஆனால், சொர்க்கம் என்பதே ஒரு உடோபியாதானே? தமிழில் குழந்தைப் படங்கள் என்பவையும் அப்படியொரு உடோபியாதான். குழந்தைத்தனமான படங்கள் தமிழில் தொகைதொகையாக உண்டு. எல்லாப் பெரிய இயக்குநர்களும் அப்படியான படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கான படங்கள் உள்ளனவா என்று கேட்டால் கனத்த மௌனத்தைத்தான் நம்மால் பதிலாகத் தரமுடியும். பெரிய இயக்குநர்கள் பலர் குழந்தைகளுக்கான படங்களை உருவாக்கியுள்ளார்கள். அவை குழந்தைத்தனமானவையாகவே அமைந்துவிட்டதைத் தமிழின் கெடுவாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

எண்பதுகளில் மைடியர் குட்டிச்சாத்தான் என்றொரு படம் வந்தது. உண்மையில் அது மலையாளப்படம். கேரளத்தில் வெற்றிபெற்ற படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். படத்தை வெளியிட்டவர் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கேயார். 1984ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது. அநேகமாக எண்பதுகளின் குழந்தைகள் யாருமே அந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு படம் தமிழ்நாட்டில் பட்டித்தொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டது.

அந்தப் படத்தின் மிகப் பெரிய ஈர்ப்புக்குரிய அம்சமாக இருந்தது முப்பரிமாணம் தான். 3டி கண்ணாடி போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்த அனுபவத்துக்காகவே அந்தப்படத்தை எல்லாரும் பார்த்து ரசித்தார்கள். அதைத் தொடர்ந்து பல முப்பரிமாணப் படங்கள் வெளிவந்தன. ஆனால், மை டியர் குட்டிச்சாத்தான் மட்டும்தான் வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இந்தப் படத்துக்கு இசையமைத்த இளையராஜாதான் இப்போது வரப் போகும் அக்கா குருவி படத்துக்கும் இசையமைக்கிறார். இடையில் சுமார் 38 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. ஆனால், குழந்தைப் படங்களுக்கான ஓர் இசையமைப்பாளர்கூடப் புதிதாக வந்திருக்கவில்லை.

தமிழில் வெளியான அஞ்சலி படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதிக அளவில் குழந்தைகள் நடித்த படம் அது. ஆனால், அதைக் குழந்தைகள் பார்க்க முடியுமா? அதன் உள்ளடக்கம் குழந்தைகளுக்கு உகந்ததா? மணிரத்னம் போன்ற இயக்குநர்களே இப்படித்தான் இருக்கிறார்கள். நடிகை லட்சுமி இயக்கிய மழலைப் பட்டாளம் குழந்தைகளுக்கான படம் தான். ஆனால், அது யுவர்ஸ் மை அண்ட் அவர்ஸ் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்த ஆங்கிலப் படம் குடும்ப நகைச்சுவைப் பிரிவில் அடங்கக் கூடிய படம். நடிகர் ரஜினி காந்த் நடித்த ராஜா சின்ன ரோஜா 1988-ல் வந்தது. அந்தப் படத்தில்தான் முதன்முதலில் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படம் போதைப் பொருள் பயன்பாடு பற்றிப் பேசியது.

எண்பதுகளில் மைடியர் குட்டிச்சாத்தான் என்றொரு படம் வந்தது. உண்மையில் அது மலையாளப்படம். கேரளத்தில் வெற்றிபெற்ற படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள்.அந்தப் படத்தின் மிகப் பெரிய ஈர்ப்புக்குரிய அம்சமாக இருந்தது முப்பரிமாணம்தான். 3டி கண்ணாடி போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்த அனுபவத்துக்காகவே அந்தப்படத்தை எல்லாரும் பார்த்து ரசித்தார்கள்.

ஒரு நூறாண்டைக் கடந்துவிட்ட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் குழந்தைகளுக்கான ஒரு பத்துப் படத்தைப் பட்டியலிடச் சொன்னால்கூட திணறிப் போய்விடுவோம். தமிழ்த் திரைப்படங்களில் பெண்களை மையப்படுத்தியவையே இன்னும் ஒழுங்காக வரவில்லை எனும்போது, குழந்தைகளுக்கான படங்கள் வருவது அவ்வளவு எளிதன்று. விஜய், ரஜினி காந்த் நடித்த படங்களைக் குடும்பம் குடும்பமாகப் போய் கண்டு களித்துவருவதில் தமிழ் ரசிகர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இரட்டை அர்த்த வசனங்களும் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளையும்கூடக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம். ஆகவே, குழந்தைகளுக்கான படங்களுக்காகக் குழந்தைகள் காத்திருந்தால் அவர்கள் ஔவையாராகிவிடுவார்கள்; அதுதான் நிலைமை.

அண்மைக் காலம் வரை ஒரு படம்கூட வரவில்லை. கடந்த ஆண்டுகளில் வெளியான தங்க மீன்கள், பசங்க, காக்கா முட்டை, கேடி கருப்புத் துரை போன்ற படங்கள் குழந்தைகளை மையப்படுத்தி வெளியாயின. அவற்றைக் குழந்தைகளுக்கான படங்கள் என்று சொல்வது ஒரு வகையான அறியாமையே. அதிலும் கோலிசோடா என ஒரு படம் வந்தது. அதையெல்லாம் குழந்தைகள் பார்த்தால் குழந்தைகளின் நிலைமை என்னாவது? ஆனால், அந்த இயக்குநரிடம் இதைச் சொல்ல முடியுமா?

அதன் இரண்டாம் பாகம் வேறு எடுத்திருக்கிறார். குட்டி என ஒரு படம் வந்தது. தனுஷ் நடித்த படத்தை நினைத்துக்கொள்ளாதீர்கள். இது 2001இல் வெளியானது. ஜானகி விஸ்வநாதன் இயக்கியது. சிறந்த முதல் படம் என்னும் பிரிவில் அவருக்குத் தேசிய விருதுகூடக் கிடைத்தது. குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையைப் பேசிய படம் இது. இந்தப் படத்துக்கும் இசை இளையராஜாதான்.

இந்தியாவின் தேசிய விருதுப் பிரிவில் சிறந்த குழந்தைகள் படத்துக்கும் விருது வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் ஒரே ஒரு முறைதான் தமிழ்ப் படமொன்று விருது பெற்றிருக்கிறது. அந்தப் படம் காக்கா முட்டை. ஆனால், அந்தப் படத்தைக் குழந்தைகளுக்கான படம் என்று சொல்லிவிட முடியுமா? குழந்தைகளை வைத்துப் பெரியவர்களுக்கான விஷயங்களைப் பேசிய படம் அது.

தமிழில் குழந்தைகளுக்கான படங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் முயன்று வருகிறார்கள். ஆனால், குழந்தைப் படங்கள் என்ற வகைக்குள் அந்தப் படங்கள் வருமா என்பதுதான் சந்தேகம். குழந்தைகள் படம் என்றால் அவை குழந்தைகளுக்காக உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளின் கற்பனை வளத்தைப் பெருக்க வேண்டும். சமூகம் பற்றிய தெளிவான தோற்றத்தை அந்தப் படங்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். நல்ல எண்ணங்களை, வாழ்க்கை பற்றிய நம்பிக்கைகளை அந்தப் படங்கள் ஊட்ட வேண்டும். இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்குள் தமிழ்க் குழந்தைப் படங்கள் அடங்குமா?

உலகத்தில் மிக மோசமான குழந்தைப் படங்கள் வெளியான மொழிகளில் ஒன்றாகத்தான் தமிழ் இருக்கும். ஒரு சிறு உதாரணத்தைப் பார்ப்போம். இந்தியாவின் தேசிய விருதுப் பிரிவில் சிறந்த குழந்தைகள் படத்துக்கும் விருது வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் ஒரேஒரு முறைதான் தமிழ்ப் படமொன்று விருது பெற்றிருக்கிறது. அந்தப் படம் காக்கா முட்டை. ஆனால், அந்தப் படத்தைக் குழந்தைகளுக்கான படம் என்று சொல்லிவிட முடியுமா?

குழந்தைகளை வைத்துப் பெரியவர்களுக்கான விஷயங்களைப் பேசிய படம் அது. இதுதான் தமிழின் நிலைமை. இப்படியான பட்டியலுக்குள் அடங்காமல் அக்கா குருவி தனித்துவமான படமாக இருக்குமா? இருந்தால் நல்லது. ஆனால், சாமியின் முந்தைய படங்களைப் பார்த்திருந்த அனுபவம் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


Share the Article

Read in : English