Read in : English

Share the Article

பல்நோக்கு மருத்துவமனைகள் பெருகியுள்ள தற்காலச் சூழலில் பெரும் பணம் செலவிடும் திறனுள்ளவர்களால் மட்டுமே மருத்துவச் சேவை பெறமுடியும் என்பது இன்றைய நிலை. நவீன மருத்துவம் பரவலான பின்பு, 50ஆண்டுகளுக்கு முன் அதைச் சேவையாகச் செய்தவர்களுக்கு, இந்த நவீன வணிக உலக மாற்றம் பெரும் அதிர்ச்சி தரலாம்.

எனினும் பணங்கொழிக்கும் பெரும் தொழிலான மருத்துவத்தைச் சேவையாகச் செய்பவர், மகப்பேறு மருத்துவத்தில் புகழ்பெற்ற டாக்டர் ரூபி சாமுவேல். எந்தவித நிபந்தனையுமின்றி மக்களுக்கு நேரங்காலம் பார்க்காமல் சேவையாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், கவனம் சிதறாமல் அர்ப்பணிப்புடன் முதியோர் மருத்துவத்தை கருத்தூன்றிச் செய்கிறார்.

தற்போது நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் வசித்து வரும் ரூபி சாமுவேல், கிட்டத்தட்ட 50 ஆண்டு மருத்துவச் சேவையில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் கற்றதையும் பெற்றதையும் ‘இன்மதி.காம்’ இணைய இதழுடன் பகிர்ந்துக்கொண்டார்.

பின்வருபவை அவருடன் நடத்திய உரையாடல்.

கேள்வி: உங்கள் குடும்ப பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்.

ரூபி சாமுவேல்: மிகவும் பின்தங்கிய கிராமப்பகுதியில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தேன். கிராமங்களில் சேவையாற்றிய இரட்சணிய சேனை என்ற சேவை நிறுவனத்தில் சேர்ந்து என் பணியைத் தொடங்கினேன்.

தற்போது நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் வசித்து வரும் ரூபி சாமுவேல் கிட்டத்தட்ட 50 ஆண்டுகால மருத்துவச் சேவையில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் கற்றதையும் பெற்றதையும் இன்மதியுடன் பகிர்ந்து கொண்டார்.

கேள்வி: மருத்துவக் கல்வியை எப்படி பெற்றீர்கள்?

ரூபி சாமுவேல்: பள்ளி அளவிலே கல்வியில் சிறப்பிடம் பெற்றிருந்ததால், அந்த நிறுவனமே, வேலுார் மருத்துவக் கல்லூரியில் என்னைச் சேர்த்தது. கிராமப்புறங்களில் சேவை செய்யும் நோக்கத்தில்தான் அங்கு சேர்க்கப்பட்டேன். அதை மனதில் கொண்டே மருத்துவக் கல்வியை மனம் உவந்து கற்றேன். மகப்பேறு மருத்துவத்தில் சிறப்புப்பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

கல்வியில் நான் காட்டிய ஆர்வத்தைக் கண்டு என்னை மேற்படிப்புக்கு அனுப்ப நிறுவனம் முன்வந்தது. ஆனால் பலருக்கு அது உவப்பானதாக இல்லை. பல தடைகள் ஏற்பட்டன. வேறு வழியின்றி படிப்பை முடித்து, சேவைப் பணிக்குத் திரும்பினேன். இரட்சணிய சேனை நிறுவனம் நாகர்கோவிலில் நடத்திய காதரீன் பூத் பொது மருத்துவமனையில் பணி ஏற்றேன்.

கேள்வி: ஆரம்பக் கட்டத்தில் அனுபவம் எப்படி இருந்தது.

ரூபி சாமுவேல்: நான் பணி ஏற்றது 1970ம் ஆண்டுகளில்… மருத்துவமனை என்ற கருத்து உருப்பெற்றிருக்கவில்லை. கிராமங்களில் மிகக்குறைவாக இருந்தது. கிராம மக்களுக்கு மருத்துவச் சேவையை எப்படிப் பெறுவது என்பது கூட தெரியாது. குறைந்த கட்டமைப்பு வசதியுடன் மிகச் சில மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் இயங்கின.
மருத்துவம் ஓர் அடிப்படை தேவை என்ற கருத்தே உருவாகியிருக்கவில்லை. அப்படி ஓர் காலத்தில்தான் நான் இந்தச் சேவையை ஏற்றேன்.

துவக்கத்தில், மூன்று மாதம் மருந்தகம், மூன்று மாதம் புற நோயாளிகள் பிரிவு, மூன்று மாதம், அறுவைச் சிகிச்சை மையம் என்று முறை வைத்து பயிற்சி பெற்றேன். அங்கு ஐரோப்பிய மருத்துவர்கள் பணிபுரிந்தனர். அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருந்தனர். அவர்கள் நோயாளிகளை கவனிப்பதைக் கூர்ந்து அவதானிப்பேன்.

நோய் என்பது மிகவும் கொடியது. வேதனையுடன் வருவோருக்கு உரிய தீர்வு கொடுக்க வேண்டும். அதை செய்ய முடியுமா என்று சிந்திப்பேன். மூத்த மருத்துவர்களின் அணுகுமுறையைக் கூர்ந்து நோக்குவேன். உயிர்களை பேணும் கலை எளிதானது அல்ல என்பதை உணர்ந்து, நிதானமாகத்தான் சேவையில் செயல்பட்டேன்.

இறைவன் திருவடியில் மனம் வைத்துச் செயல்களில் இறங்கினேன். என் தயக்கம் மெல்ல மெல்ல மறைந்து நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தேன்.

அந்தக் காலத்தில் பெரும்பாலும் பெண்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை. பெரும்பாலும் அந்தந்தப் பகுதியில் பாரம்பரிய மருத்துவ அறிவு பெற்றிருந்தவர் அல்லது வீட்டிலிருந்த முதிர்ந்த பெண் ஆலோசனை உதவியால் வீடுகளில் பிரசவம் நடந்தது.  ஆனால் அது முழுமையாக இருக்காது. இதனால், தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது.

கேள்வி: முதல் நோயாளிக்குச் சிகிச்சை கொடுத்த நினைவு இருக்கிறதா?

ரூபி சாமுவேல்: நினைவில் இல்லை. ஆனால் தயக்கத்துடன் எதிர்கொண்டது நினைவில் பதிந்துள்ளது. இன்றும் மிகக் கவனமாக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குணப்படுத்த முயல்கிறேன். எந்த நிலையிலும் அலட்சியம் கொள்வதில்லை.

கேள்வி: அந்தக் காலத்தில் மகப்பேறு மருத்துவம் எப்படி இருந்தது?

ரூபி சாமுவேல்: அந்தக் காலத்தில் பெரும்பாலும் பெண்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை. தற்போது உள்ளது போல், பாதுகாப்பான நடைமுறைகளும் அப்போது இல்லை. கருவுற்றதில் இருந்து தொடரும் மருத்துவ கவனிப்பு போன்ற நடைமுறைகள் எல்லாம் கிடையாது. பெரும்பாலும் அந்தந்தப் பகுதியில் பாரம்பரிய மருத்துவ அறிவு பெற்றிருந்தவர் அல்லது வீட்டிலிருந்த முதிர்ந்த பெண் ஆலோசனை உதவியால் வீடுகளில் பிரசவம் நடந்தது. ஆனால் அது முழுமையாக இருக்காது. இதனால், தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது.

நிலைமை மோசமாகும் வரை வீட்டில் வைத்திருந்து அபாயகரமான நிலையில் மருத்துவனைக்கு அழைத்து வருவோரும் உண்டு. அந்த நிலையில், நிதானம் தவறாமல், கவனமாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். அழைத்து வரும் பெண்களுக்குப் பனிக்குடம் உடைந்திருக்கும். அது உயிருக்கு ஆபத்தான நிலை. மூத்த மருத்துவர் ஆலோசனை பெற்று, உரிய சிகிச்சையை தாமதமின்றி அளிக்க வேண்டும். இப்படித்தான் போராடியிருக்கிறேன்.

மக்கள் பாரம்பரியமாகக் கொண்டிருந்த நம்பிக்கையை மாற்றுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. மிகவும் சிரமத்துடன்தான் சேவை அளிக்க வேண்டியிருந்தது.

கேள்வி: மருத்துவப் பணிக்காக நேரம் ஒதுக்கியிருந்தீர்களா?

ரூபி சாமுவேல்: இது சேவைப் பணி… நேரம் காலம் ஒதுக்கி செய்ய முடியாது. எப்போதும் தயார்நிலையில் இருப்பேன். சில நாட்கள், இரவில், ஐந்துக்கும் மேற்பட்டவருக்கு பிரசவம் பார்க்க வேண்டியிருக்கும். பணியை முடித்து அதிகாலை படுக்கைக்குச் செல்வேன். அப்போது மற்றொரு நோயாளி உயிருக்குப் போராடுவதாக தகவல் வரும். நான் சலிப்பு கொண்டதே இல்லை. மனம் ஊன்றி இந்தச் சேவையைச் செய்ய வந்துள்ளேன்.

கேள்வி: வீட்டில் நடக்கும் பிரசவங்களில் என்ன மாதிரி சிக்கல்கள் வரும்?

ரூபி சாமுவேல்: கிராமங்களில் பாரம்பரிய மருத்துவ அறிவு முழுமை என்று கூற முடியாது. அறைகுறைகள் அதிகம். தாய் வயிற்றில் சிசு தலை திரும்பாமை, பனிக்குடம் உடைதல், பிறந்த குழந்தைக்கு நஞ்சுக்கொடி அறுப்பதில் தேர்ச்சியின்மை போன்றவற்றால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாடும் பல பெண்களின் உயிரை குடித்துள்ளது.

கேள்வி: எத்தனை பிரசவம் பார்த்திருப்பீர்கள்?

ரூபி சாமுவேல்: கணக்கு வைத்திருக்கவில்லை. கணக்கு வைப்பது என் வேலையுமல்ல. ஐரோப்பிய மருத்துவர் ஒருவர் ஒருமுறை இதுகுறித்து கேட்டார். இதே பதிலைத்தான் சொன்னேன். பல மருத்துவர்கள் எண்ணிக்கையைக் கணக்கு வைத்து பெரும் கொண்டாட்டம் நடத்துவதை அறிவேன். நான் சேவைக்கு வந்துள்ளேன். ஒரு நாளைக்கு, 10 பேருக்கு கூட பிரசவம் பார்ப்பேன். அதை கணக்கு வைத்திருக்க வேண்டியதில்லை. உயிர்களை காப்பதே முக்கிய பணி.

 தொடக்கத்தில் இருந்தே சம்பளம் என்று எதையும் பெற்றுக் கொண்டதில்லை. தங்குவதற்கு இடம் உண்டு. உண்ண உணவு கிடைக்கும். என் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறிதளவு பணம் கிடைக்கும். இதுவே என் பணியை சிறப்புற நிறைவேற்றப் போதுமானதாகக் கருதுகிறேன். கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை மிகவும் பின் தங்கிய பகுதியில் வாழும் சிறுவர், சிறுமியர் படிப்பு மேம்பாட்டுக்குச் செலவிடுகிறேன்

கேள்வி: சேவைக்கு ஏதாவது கவுரவம் கிடைத்துள்ளதா.

ரூபி சாமுவேல்: சேவைக்கு வெகுமதியை ஏதிர்பாக்க முடியுமா… தொடக்கத்தில் இருந்தே சம்பளம் என்று எதையும் பெற்றுக் கொண்டதில்லை. தங்குவதற்கு இடம் உண்டு. உண்ண உணவு கிடைக்கும். என் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிதளவு பணம் கிடைக்கும். இதுவே என் பணியை சிறப்புற நிறைவேற்ற போதுமானதாகக் கருதுகிறேன்.
கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை மிகவும் பின் தங்கிய பகுதியில் வாழும் சிறுவர், சிறுமியர் படிப்பு மேம்பாட்டுக்குச் செலவிடுகிறேன்.

கேள்வி: ஓய்வு பெற்ற பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ரூபி சாமுவேல்: மருத்துவச் சேவைக்கு ஓய்வு என்பது இல்லை. முதுமை அடைந்துள்ளேன். அதனால் முன்போல், வேகமாகப் பணிகளை செய்ய முடியவில்லை என்பது தான் குறை. இப்போதும், முதியோர் மருத்துவத்தில் கவனம் செலுத்துகிறேன். சிறிய ஓய்வூதியம் கிடைக்கிறது. அதில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறேன். என் பெற்றோருக்குச் சொந்தமான இடத்தில் என் தங்கை ஒரு வீடு கட்டியுள்ளார். அவரது குடும்பத்துடன் வசிக்கிறேன். பெரிய தேவைகள் எதுவும் இல்லை. மிக அமைதியாக வாழ்கிறேன்.


Share the Article

Read in : English