Read in : English

Share the Article

’எனக்கு அசோக்கும் ஒண்ணுதான், கவுதமும் ஒண்ணுதான்.. நான் ரெண்டு குடும்பத்தையும் வேற வேறயா பார்க்கலை…’ மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ (1988) படத்தில் விஜயகுமார் பேசும் வசனம் இது. இரண்டு மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகளை மட்டுமல்ல, இரண்டு மனைவிகளையுமே ஒரே மாதிரியாகத் தான் நேசிப்பதாகச் சொல்லியிருப்பார். ஒவ்வொரு முறையும் அப்படம் பார்க்கும்போது, ‘ஒரே நேரத்துல ரெண்டு பேரை எப்படி ஒருத்தரால ஒரே மாதிரி காதலிக்க முடியும்’ என்று தோன்றும். நமக்குத் தோன்றியது விக்னேஷ் சிவனுக்கும் தோன்றியிருக்க வேண்டும். என்ன, அந்த அரதப்பழசான ஐடியாவை அவர் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று படமாகக் கொண்டுவந்து விட்டார். ஆனால், ‘அக்னி நட்சத்திர’த்தில் வந்தமாதிரி அழுத்தமாக அதற்கொரு நியாயம் கற்பிக்க வேண்டுமே, அதை அவர் செய்தாரா இல்லையா என்ற நியாயமான ஒரு கேள்வியே இப்படத்தை முழுமையாகப் பார்க்கத் தூண்டுகிறது.

ராம்போவின் முன்கதையும் அவரது காதல்களும்..!

’ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹோந்திரன்’ எனும் பெயரைச் சுருக்கி ராம்போ என்ற பெயரில் ஓலா ஓட்டுநராகவும் நைட் கிளப் பவுன்சராகவும் உலா வருகிறார் விஜய் சேதுபதி. அவரது பாத்திரத்தின் பெயரை மட்டுமல்ல, அதன் முன்கதையையும் சகித்துக்கொண்டால் மேற்கொண்டு முழுப்படத்தையும் பார்க்க நீங்கள் தகுதியாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ராம்போவின் தாய் தந்தை எவ்வாறு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்? அவரது அத்தைக்கும் சித்தப்பாக்களுக்கும் ஏன் திருமணம் ஆகாமல் இருக்கிறது? ராம்போ தன்னைத் துரதிர்ஷ்டசாலியாக நினைப்பதற்குக் காரணம் என்ன என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு முதல் பத்து நிமிடங்களில் பதில் தந்துவிடுகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இப்படிப்பட்ட ராம்போ வளர்ந்து பெரியவரானால் எல்லாரையும் கண்டு ஒதுங்கித்தானே இருப்பார். அப்போது, அவருக்கு ஒரு பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் அது சரிதானே.

அதேபோல, ஒரேநேரத்தில் இரண்டு பெண்கள் அவர் மீது காதலைப் பொழிந்தால் அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானே என்று பல லாஜிக்குகளை திரைக்கதையில் அடுக்குகிறார்.

ராம்போவிடம் ஒரேநேரத்தில் கதீஜா (சமந்தா), கண்மணி (நயன்தாரா) என்ற இரண்டு பெண்கள் காதலைத் தெரிவிக்குமாறு செய்கிறார். ’அட் எ டைம்ல ரெண்டு லவ்வா.. டூ டுட்டூடூ’ என்று பார்வையாளர்கள் மனதில் காமம் எட்டிப் பார்க்குமே! இந்த கேள்விக்குப் பதில் சொல்லும்விதமாக, ‘உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு வேற எந்த ஆசையும் இல்ல. உங்களை பார்த்தா மட்டும் போதும்.. பார்த்துக்கிட்டிருந்தாலே போதும்’ என்று ‘சிவாஜி’ பட ரஜினி ரேஞ்சில் பழகத் துடிக்கிறார் ராம்போ.

கடுப்பு தலைக்கேறி இரண்டு பெண்களும் அவரைப் பந்தாடுவதற்குப் பதிலாக பங்கு போட்டுக்கொள்ளத் துடிக்கின்றனர். அது சரிவராது என்று ரொம்ப ‘லேட்டாக’ (?!) புரிந்தபிறகு இரண்டு பேரும் என்ன செய்தனர் என்பதுதான் மீதமுள்ள திரைக்கதை.

முழுக்கதையையும் கேட்டவுடனேயே விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மூவர் மட்டுமே பிரதான வேடங்களில் நடித்திருப்பதாகத் தோன்றும். படமும் அப்படியே இருக்கிறது. மூவரும் வரும் காட்சிகள் போக மீதமுள்ளவற்றில் பிரபு, கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி, மாறன், திலீப் சுப்பராயன் உட்பட ஒரு டஜன் கலைஞர்கள் திரையில் தோன்றுகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூட சமந்தாவின் பாய்ப்ரெண்டாக வந்து வி.சே.விடம் அடி வாங்குகிறார்.

’நானும் ரவுடிதான்’ போல ஒவ்வொரு பாத்திரம் வரும்போதும் சிரிக்கும்படி செய்திருந்தால், ‘காத்துவாக்குல ரெண்டு காதல் பண்றதுல என்ன தப்பு’ என்று ஏற்றுக்கொள்ளலாம். மாறாக, கிளைமேக்ஸை ஒட்டிய 20 நிமிடங்களில் சிரிப்பதற்காக மெனக்கெட்டு சுமார் 2 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

’ஒருவனுக்கு ஒருத்தி’ பண்பாட்டை மீறலாமா?

ஆணோ, பெண்ணோ, அவர்களது இணையர் ஒருவராக இருக்க வேண்டுமென்ற நியதி (’ஒருமுறைதான் காதல்வரும் தமிழர் பண்பாடு’ என்ற சினிமா பாட்டுகூட உண்டே!) கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ் மண்ணில் வலுப்பெற்றிருக்கிறது. குறிப்பாக,

மில்லினியம் கொண்டாட்டத்திற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு ’ஒரு கணவர் இரண்டு மனைவிகள்’ என்ற கலாசாரம் ரொம்பவும் அந்நியமானது. விவாகரத்துகளும் மறுமணமும் வெகு சகஜமாகிவிட்ட போதிலும், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற சிந்தனை வேரூன்றிவிட்டது. இதனாலேயே, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருப்பது ஆணாதிக்கச் சிந்தனையாக நோக்கப்படுகிறது.

மிகச்சில பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்திருந்தாலும் கூட, அவர்கள் தங்கள் முன்னாள் கணவரைச் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்திருப்பார்கள் என்பதே உண்மை. இந்த வித்தியாசம்தான், ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மைய இழையை விமர்சனக் கணைகளால் துளைத்தெடுக்கக் காரணமாக இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்காகவே, ’நாயகன் தன்னை துரதிர்ஷ்டம் துரத்துவதாக கருதுகிறார்’ என்று ’கதை’ சொல்கிறார் இயக்குனர். அதனால், ஒரேநேரத்தில் இரண்டு பெண்களின் காதலை ஏற்றுக்கொண்டதாகக் காரணமும் சொல்கிறார்.

ஆனாலும், இருவரது காதலையும் அவர் மனதளவில் நெருக்கமாக உணரும் தருணங்களை காட்சிப்படுத்த தவறியிருக்கிறார். அம்மாவின் வார்த்தைகள், துரதிர்ஷ்டம் மறைந்து போதல், அந்தந்த கணத்தில் வாழ்தல் என்று பல விஷயங்களை ‘தத்துவார்த்தமாக’ சொல்ல முயற்சித்தாலும் கூட, எதுவுமே இரண்டு பேரை ஒரே நேரத்தில் நாயகன் காதலிப்பதை நியாயப்படுத்தவில்லை. இதற்கு ரெட்டைவால் குருவி, வீரா, அக்னி நட்சத்திரம் போன்ற படங்களே தேவலை! அதற்கு முந்தைய தலைமுறையில் ‘தேனும் பாலும்’ போன்ற படங்கள் எவ்வளவோ பரவாயில்லை.

ஒரு பாடல்.. இரண்டு நாயகிகள்..!

ஒரே பாடலில் நாயகன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாயகிகளோடு நடனமாடுவது இந்தியா முழுக்கவுள்ள அனைத்து மொழி திரைப்படங்களிலும் உள்ள ஒர் அம்சம். இது ஆணாதிக்க மனப்பான்மை என்ற எண்ணம் வலுப்பெற்றபிறகு, இக்காட்சியமைப்புகள் குறைந்து போனது. ஆனால், தெலுங்கு திரைப்படங்களில் இப்போதும் இது போன்ற பாடல்கள் உண்டு. அங்கு மாமியாரோடும் மகளோடும் ஒரேநேரத்தில் நாயகன் குத்தாட்டம் போடுவார். தமிழிலும் கூட ‘தெனாலி’யில் ஜோதிகாவுடனும் அவரது அண்ணன் மனைவியாக வரும் தேவயானியுடனும் கமல் ‘டான்ஸ்’ ஆடியிருப்பார். இது போன்ற காட்சியமைப்புகள் ’இது எல்லாமே ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக’ என்ற ஒற்றை வரிப்பதிலில் அனைத்து விமர்சனங்களையும் அடக்கிவிடும்.

மேலே சொன்ன ‘க்ளிஷே’வை சகட்டுமேனிக்கு கிண்டலடித்து ‘ஸ்பூப்’ செய்திருந்தால், ‘கா.ரெ.காதலை’ பெண்கள் கொண்டாடியிருப்பார்கள். அதுதான், இப்படத்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

அப்புறம் வேறு என்ன இருக்கிறது? எஸ்.ஆர்.கதிரும் விஜய் கார்த்திக் கண்ணனும் சேர்ந்து சமந்தாவையும் நயன்தாராவையும் அழகாக காட்டியிருக்கின்றனர். அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் துள்ளலையும் வேறு இரண்டு பாடல்கள் அமைதியையும் இறைக்கின்றன. ’நாயகத்தன்மை அற்ற நாயகத்தன்மை’ எனும் பார்முலாவில் கலக்கும் வி.சே. கூட ஒரேநேரத்தில் சமந்தாவிடமும் நயனிடமும் தன் காதலை மாறி மாறிச் சொல்கிறார். இருவரையும் ஒரேநேரத்தில் கல்யாணம் செய்வதாகக் கூறுகிறார். சில இடங்களில் கைத்தட்டல்கள் கேட்டாலும், பல இடங்களை வெறுமையாக கடக்க வேண்டியிருக்கிறது.

ஒரு ’சர்ச்சை’ பார்சல்!

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் காதலும் இல்லை, நகைச்சுவையும் இல்லை என்றான பிறகு வேறு என்ன இருக்கிறது என்று பார்த்தால், ஒரு சர்ச்சையை மட்டும் ஒளித்து வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

ஹிஜாப் சர்ச்சை விஸ்வரூபமெடுத்த சூழலில் கதீஜா பேகம் எனும் பாத்திரத்தில் மிக கவர்ச்சியாகச் சமந்தாவை நடிக்க வைத்திருக்கிறார். பர்தா அணிவது சம்பந்தமான சிறு விஷயம் கூட திரையில் தென்படாமல் கவனமாக தவிர்த்திருக்கிறார். விஜய் சேதுபதியின் ராம்போ பாத்திரத்தை எடுத்துக்கொண்டால், அவரது தாய் பெயர் ரினா கைஃப் என்று இருக்கிறது. ராம்போவின் அத்தை இதயகலா (கலா மாஸ்டர்) ஒரு பாதிரியாரை கரம் பிடிப்பதாக கதை நீள்கிறது. வெறுமனே மதரீதியான சில அம்சங்களை கிண்டலடித்தால் அவை ‘ஒன்லைனர்கள்’ என்றளவில் நிறைவு பெற்றுவிடும்.

ஆனால், பலதாரமணத்தை ஆதரிக்கும் ஒரு கதையை எடுத்துக்கொண்டு, நவீன யுகத்தில் அதனை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கருத்தும் சொல்லிவிட்டு, அதில் இத்தகைய அம்சங்களை நிறைத்திருப்பதுதான் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்குகிறது. தற்போதைய சூழலில் இப்படியொரு கருத்தாக்கம் கண்டிப்பாகத் தேவையா?

தேடித் தேடி இத்தனை விஷயங்களை எடுத்து ஒரு படத்துல பொதிச்சு வச்சவங்க, ‘இப்படியொரு கதாபாத்திரமும் கதையும் இருக்கக்கூடுங்கற’ மாதிரி கொஞ்சம் நம்பும் வகையில் திரைக்கதையையும் அமைத்திருக்கலாம். அவ்வாறு நிகழாததால், காத்துவாக்குல இப்படத்தையும் கடக்க வேண்டியிருக்கிறது..!


Share the Article

Read in : English