Read in : English

Share the Article

20-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடக உலகிலும், திரைப்பட உலகிலும் மிகப் பெரிய நடிகராகத் திகழ்ந்தவர் எம்.ஆர். ராதா என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் (14.4.1907 – 17.9.1979). நடிகவேள் என்று பெரியார் ஈ.வெ.ராமசாமியால் அழைக்கப்பட்ட எம்.ஆர்.ராதாவின் 125-ஆவது பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் தேதி மௌனமாகக் கடந்து போனது.

அசாத்திய நடிப்புத் திறனும், கரகரப்பான குரலேற்ற இறக்கங்களும், தீர்க்கமான பார்வையும், தடாலடியான கருத்துச்செறிவு வசனங்களும், மிக வித்தியாசமான உடல்மொழியும் அவரைத் தனித்துவமான நடிகராகக் காட்டின. பஞ்ச் டைலாக்குகளின் தந்தை என்றே ராதாவைக் கூறலாம். சாட்டையடி வசனங்களும் ஊசிகுத்துவது போன்ற வார்த்தைகளும் அவரது நிஜமான ஆளுமையை அப்படியே திரையில் பிரதிபலித்தன. “போடா என்னமோ கடவுள் செக்ரட்டரி மாதிரியே பேசுவான்.” “அயோக்கியனெல்லாம் வெளிய இருக்கான்; யோக்கியனெல்லாம் ஜெயில்ல இருக்கான்.” ”ஆனா, ஆவன்னா கண்டுபிடிச்சவன் எந்த காலேஜிலடா போய்ப்படிச்சான்.” “சந்திரனையும் குருவையும் இன்னக்கி ஒருநாள் லீவு போடச்சொல்லுங்க.” இப்படி அவர் அதிரடியாய்ச் சொன்ன சின்ன சின்ன வார்த்தைகளுக்குள் ஒளிந்துகிடந்தவை சமூக சீர்திருத்தச் சித்தாந்தமேதான்.

அசாத்திய நடிப்புத் திறனும், கரகரப்பான குரலேற்ற இறக்கங்களும், தீர்க்கமான பார்வையும், தடாலடியான கருத்துச்செறிவு வசனங்களும், மிக வித்தியாசமான உடல்மொழியும் அவரைத் தனித்துவமான நடிகராகக் காட்டின.

நடிப்புலக மேதை எனக் கொண்டாடப்படும் சிவாஜிகணேசனேகூட நடிப்பில் முதலிடம் எம்.ஆர்.ராதாவுக்குத்தான்; அடுத்து டி.எஸ். பாலையா; மூன்றாவது இடத்தில்தான் தான் வருவதாக ஒருமுறை கூறியிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் பால் முனியோடு ராதாவை அறிஞர் அண்ணா ஒப்பிடுவார். எல்லோராலும் அதிகம் நேசிக்கப்பட்டவரும், அதிகம் அஞ்சப்பட்டவரும் அதிகமான சர்ச்சைக்கு ஆளானவரும் ராதாதான்.

திராவிட இயக்கம் உருவாக்கிய கலைஞர்கள் என்று ஒரு நீண்ட பட்டாளமே உண்டு அந்தக் காலத்தில். திமுகவின் ஐம்பெரும் ஸ்தாபகர்களில் ஒருவரான சி.என். அண்ணாத்துரை அந்தப் படைக்கு முதல்வர்; மூத்தவர். அவருக்கு அடுத்து கலைஞர் கருணாநிதி, கே. ஆர். ராமசாமி, டி.வி. நாராயணசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன், என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்), சிவாஜி கணேசன் (பின்பு காங்கிரஸோடு இணைந்துகொண்டார்). இந்தப் பட்டியலில் தனிச்சிறப்பான இடம் ராதாவுக்கு உண்டு.

பெரியார் ஈ.வே. ராமசாமியின் தலைமையிலான திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணாத்துரை திமுகவை உருவாக்கியபின்பு, ராதா பெரியாரின் தொண்டனாகவே தன்னை தக்கவைத்துக் கொண்டார். ஒரே திராவிடச் சிந்தனையின் ஆதிக்கத்திலிருந்த இரண்டு கலைஞர்கள் மோதிக்கொண்டு துப்பாக்கிச் சூடுவரை சென்றது காலத்தின் நகைமுரண்.

ஒருவர் (எம்ஜிஆர்) திரைப்படங்களில் ஒழுக்கம், பண்பாடு, தாய்மீது பக்தி, மது அருந்தாமை, புகைப்பிடிக்காமை போன்ற வழமையான விழுமியங்களை ஒரே நேர்கோட்டில் தூக்கிப்பிடித்தவர்; அதனாலே தாய்மார்கள் உட்பட பெரிய ரசிகர் பட்டாளத்தையே அவர் வசீகரித்திருந்தார்; வசப்படுத்தியிருந்தார்.

அதற்கு நேர்மாறாக ஆன்டி-சென்டிமென்ட்டுகளை அள்ளித்தெளித்து சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைச் சாடிய ராதாவுக்கும் பெரியதோர் ரசிகர் பட்டாளம் இருந்தது. 1967 ஜனவரி 12-ஆம் தேதி எம்ஜிஆரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறைசென்று திரும்பிய பின்னர் எழுபதுகளில்தான் ராதாவின் சினிமா மார்கெட் சரிந்தது.

ஆனாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் ராதா; சமரசம் செய்துகொள்ளுதல் அவரது நடை உடை பாணியில், பேச்சில் இல்லை. உண்மைகள் பெரும்பாலும் கசக்கும்; விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் கசப்பான உண்மைகளை முகத்தில் அடித்தாற்போல சொன்னதால் கரடுமுரடான, வில்லத்தனமான படிமம் அவருக்கு திரையிலும் வாய்த்தது; வாழ்விலும் வாய்த்தது.

எம்ஜிஆர் எம்.ஆர். ராதா மோதலும் அப்படித்தான். நிஜத்தில் நிகழ்ந்தது திரையில் எதிரொலித்தது. ”ஏழைகள் வாழ்வில் இனி சூரியோதயம்தான்,” என்று எம்ஜிஆர் வசனம் பேச (படம்: தொழிலாளி: 1964) படப்பிடிப்புத் தளத்தில் அதற்கு ஆட்சேபம் தெரிவித்த எம்.ஆர் ராதா, “உன் கட்சி சின்னத்தை சினிமாவுக்குள்ள கொண்டுவராதே,” என்று உரக்கச் சொன்ன வார்த்தைகளில் மூன்று ஆண்டு கழித்து வெடிக்க இருந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கான விதை தூவப்பட்டது.

திமுக வளர்ந்து வந்த நேரம் அது. பெரியாருக்குப் பிடிக்காத அரசியல் போக்கு அது; அதனாலே அவரின் சீடரான ராதாவுக்கும் அது பிடிக்கவில்லை. அதனால்தான் நிகழ்ந்தது அந்தப் படப்பிடிப்புச் சர்ச்சை.

கதாநாயக வழிபாடு கலாச்சாரத்தைச் சீரழிக்கும் என்பதைப் புரிந்துகொண்ட ராதா தன்கருத்தை ஆணித்தரமாக பல இடங்களில் பேசியிருக்கிறார்; திரைப்படங்களில் குறிப்பாக உணர்த்தியும் இருக்கிறார். “எதுக்கெடுத்தாலும் ஜனங்க கைத்தட்டுவாங்க போல,” என்று அவர் ஒருபடத்தில் வசனம் பேசினார் (தாயைக் காத்த தனயன்:1962).

ராலும் அதிகம் நேசிக்கப்பட்டவரும், அதிகம் அஞ்சப்பட்டவரும் அதிகமான சர்ச்சைக்கு ஆளானவரும் ராதாதான்.

திரைப்படக் கலைஞன் “பஞ்சமாபாதகத்தில் பார்ட்னர்” என்று ”நடிகவேள் எம் ஆர் ராதா: சிறைச்சாலைச் சிந்தனைகள்” என்ற எழுத்தாளர் விந்தன் எழுதிய புத்தகத்தில் அவர் கூறியிருக்கிறார். 1971இ-ல் விந்தன், ராதாவிடம் எடுத்த நேர்காணல்கள் தினமணிக்கதிரில் தொடராகவும், பின்னர் அவை தொகுக்கப்பட்டுப் புத்தகமாகவும் வெளிவந்தது.

“சினிமா பாரு; சந்தோசப்படு; வீட்டுக்குப் போனதும் மறந்திடு. ஏன் சினிமாக்காரர்களைக் கட்டி அழுவுறீங்க. அதுக்குப் பதிலா எழுத்தாளர்களை, அறிஞர்களை; பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்,” என்று ஒரு மேடையில் கூறிய ராதா “வருமானவரி கட்டாம ஏமாத்துறதில நான் உட்பட எல்லா சினிமாக்காரங்களும் மோசடிக்காரங்கதான்,” என்பதையும் பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார். உண்மைதான் அவர் பேசியது; ஆனால் பலருக்கு அது பிடிக்காமல் போனதற்குக் காரணம் சமூக ஆஷாடபூதித்தனம்.

நல்லவன்-கெட்டவன்; கதாநாயகன்-வில்லன், தர்மவான்-அதர்மவாதி என்ற இருகோட்டு முரண்பாட்டுப் படிமத்திலே கவனமாக உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் எம்ஜிஆர்-எம்.ஆர்.ஆர் என்ற ஸ்தூல வடிவங்கள் அந்த அரூப படிமத்தின் அவதாரங்கள். நல்லவன் என்றும் நன்மை என்றும் காலங்காலமாகப் போலித்தனமாகப் போற்றிப் புகழ்ந்து அதை கலாச்சார அறநெறி விழுமியங்களின் கட்டமைப்பாக்கியது சமூகம். ஆனால் அதில் ஒளிந்துகிடந்த போலித்தனத்தை, பித்தலாட்டத்தைக் கெட்டவன் என்ற பட்டத்துடன் உரித்துக்காட்டினார் ராதா.

இந்த இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். “அம்மா, நீங்க நூறுவயசுவரை என்கூட இருப்பீங்க,” என்று அழுதுகொண்டே மரணப்படுக்கையில் கிடக்கும் தாயிடம் எம்ஜியார் பேசிய வசனம் தாய்மார்களை அழவைத்து அவரை நேசிக்க வைத்தது (காவல்காரன்: 1967).

“என்ன இது! சாக்குமாதிரி புடவையைச் சுத்திக்கிட்டு. ஒரு கவுன் போட்டு வரக்கூடாது,” என்று ராதா தாயிடம் கோபத்தோடு பேசும் வசனம் (ரத்தக்கண்ணீர்:1954) நிச்சயமாகப் பெண்களைக் கோபப்பட வைத்திருக்கும்.

ஆனால் எம்ஜிஆர் பெண்மையைப் போற்றும்விதமாக உருக்கமாக வசனம் பேசி முடித்த ஒருசில நிமிடங்களிலே கதாநாயகி காட்சிப்பொருளாகி காதல் பாட்டுப்பாடுவார், அரைகுறை ஆடைகளுடன்.

தாயிடம் ராதா பேசிய வசனத்தில் ஒளிந்திருப்பது ஒரு பெண் விடுதலை சித்தாந்தம்: ஏன் சிரமம்தரும் புடவையைப் பெண்கள் அணியவேண்டும்? எளிய சிரமமில்லாத ஆடைகள் (கவுன் போன்று) போதாதா? என்று பெரியார் சொன்னதின் எதிரொலி அந்த வசனம்.

மேலும் தாயை, மனைவியை மதிக்காமல் அன்பில்லாத வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டால் இப்படித்தான் தொழுநோயாளி ஆவான் என்ற ஓர் உண்மையான அறத்தை வெற்று வார்த்தைகளில் உபந்நியாசம் செய்யாமல் வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய மோகனாக நடித்திருந்தார் ராதா. ரத்தக்கண்ணீர் என்ற புகழ்பெற்ற தனது ’மேக்னம் ஓபஸ்’ படத்தில் ராதா இறுதியில் தன் மனைவியை தன் நண்பனுக்கே மணம்செய்து வைப்பார். நிஜமான திராவிடவியல் சித்தாந்தத்தின் ஒருபகுதியான மறுமணக்கொள்கை படுவீரியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. மறுமணம் என்பது அப்படி ஒன்றும் ஆச்சரியமூட்டும் விசயம் இல்லையே என்று இன்றைய சமூகவலைத்தள சமூகம் கேட்கலாம். மறுமணம் என்றாலே எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடித்த சனாதனவாதிகள் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

திரைப்படங்களை விட நாடகம் போடுவதிலேதான் ராதாவுக்கு ஆர்வம் அதிகம். ஏழுவயதில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த தனது வீட்டிலிருந்து ஓடிப்போன ராதாவை முதன்முதலில் நாடகத்தில் நுழைத்தது ஜெகந்நாத ஐயரின் நாடக சபாதான். பிற்காலத்தில் பிராமண எதிர்ப்புக்கொள்கை கொண்டிருந்த ஓர் இயக்கத்தில் இணைந்து செயலாற்றப் போகின்ற ஒரு கலைஞனுக்கு வாழ்வளித்தது ஒரு பிராமணர் என்பது ஒரு நகைமுரண்தான்.

பிற்காலத்தில் அவர் சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பட்டது ஒன்றும் ஆச்சரியமில்லை. திராவிட புதுமலர்ச்சி நாடக சபாவின் மூலம் ராதா திருவாரூர் தங்கராசு எழுதிய ரத்தக்கண்ணீர், கலைஞர் எழுதிய போர்வாள் மற்றும் பல நாடகங்களை அரங்கேற்றினார்.

நாகப்பட்டினத்தில் அவர் நடத்திய விமலா அல்லது விதவையின் கண்ணீர் நாடகம் சனாதனவாதிகளின் பெருங்கோபத்துக்கு ஆளானது. அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிபதி கணேச ஐயர் நாடகத்தை நேரில் வந்து பார்த்தார். விதவை மறுமணம் என்பது திராவிடச் சித்தாந்தமாக இருக்கலாம்; ஆனால் அது மனிதாபினம் என்று தீர்ப்பெழுதினார் நீதிபதி. நாடகம் தடை செய்யப்படவில்லை.

ராதாவின் கீமாயணம் போன்ற நாடகங்கள் இந்து மதத்தினரைப் புண்படுத்தியது என்னமோ உண்மைதான். ஆனால் இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவையை ஆதிசங்கர், ராமானுஜர் உணர்ந்ததைத்தான் ராதா கரடுமுரடான, கரகரப்பான குரலில் முழங்கினார்.

திராவிட இயக்கச் சிந்தனைகள் ஆரம்பத்தில் சமூக மறுமலர்ச்சி உருவாக்க விளைந்தவை. ராதாவின் நாடகத்தை உட்கார இடமின்றி தரையில் அமர்ந்து பார்த்து ரசித்தார்கள் பெரியார், அண்ணா, ஈவிகே சம்பத் ஆகியோர். “நாங்கள் 100 மாநாடுகள் நடத்தி மக்களை சிந்திக்க வைப்பதை ராதா ஒரே நாடகத்தில் சாதித்து விடுகிறார்,” என்று புகழாரம் சூட்டினார் அண்ணா.

ராதாவின் அசாத்திய நடிப்புத் திறமைக்கு நடிப்பு மேதை சிவாஜி கணேசன் ஓர் அஞ்சலியின் போது சூட்டிய புகழாரம் இது: ”ஒரு ஃப்ரேமில் என்முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால் நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை அவர் காலிசெய்து விடுவார்.”


Share the Article

Read in : English