Read in : English

Share the Article

’வி’ என்ற ஆங்கில எழுத்து திரையில் தோன்றியதுமே பெருத்த ஆரவாரம். அதனைத் தொடர்ந்து வரும் கிராபிக்ஸ் காட்சிகளில் ‘தளபதி விஜய்’ என்ற எழுத்துகள் ஒளிரும்போது அரங்கம் அதிர்கிறது. அதன்பின், அதிரடியான காட்சியொன்றில் விஜய்யின் அறிமுகம் இருக்குமென்று நகம் கடித்துக்கொண்டு உட்கார்ந்தால், பறந்தோடும் பலூனைப் பிடித்து ஒரு காஷ்மீர் சிறுமியின் கையில் கொடுத்தவாறே ’பியூட்டி’யாக அறிமுகமாகிறார் விஜய். தங்கள் எதிர்பார்ப்பு பொய்த்தாலும் ரசிகர்கள் கைத்தட்டி ஓயும்போது ‘ஆக்‌ஷன்’ சீக்வென்ஸ் ஆரம்பமாகிறது. அப்புறமென்ன, மறுபடியும் விசில்கள், கத்தல்கள் என்று சாதாரண தியேட்டர் கூட விழாக்கோலம் பூண்டு விடுகிறது.

இதுவரை வந்த விஜய் படங்களுக்கும் இதே போன்றதொரு வரவேற்பே கிடைத்திருக்கிறது. ஆனால், ‘பீஸ்ட்’டில் ‘டாக்டர்’ தந்த இயக்குநர் நெல்சனுடன் இணைந்திருக்கிறார் விஜய். இந்த காம்பினேஷன் இதுவரை வந்த விஜய் படங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறதா என்று கேட்டால் பெருமளவு மேலும் கீழுமாக, சிறிதளவு இடமும் வலமுமாக தலையாட்ட வேண்டியிருக்கிறது. முன்னதற்கு காரணம் விஜய் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் வடிவமைப்பு; பின்னதற்கு காரணம் படத்தின் வழக்கமான கதையமைப்பு.

கோலமாவு கோகிலா, டாக்டர் இரண்டிலும் நாயகன் அல்லது நாயகி தரப்பு கடத்தலில் இறங்கும்; அதன் முடிவு வில்லன் தரப்பை நெருங்குவதாக இருக்கும். இதிலும் கிட்டத்தட்ட அப்படித்தான் என்றாலும், முதலில் கடத்தலில் இறங்குகிறது வில்லன் தரப்பு. அதாகப்பட்டது, ட்ரெய்லரில் காட்டியபடியே ஒரு வணிக வளாகத்தைக் கைப்பற்றி அங்கிருப்பவர்களைப் பணயக் கைதிகளாக ஆக்குகிறது.

நெல்சன் திலீப்குமார்(Photo Credit: Nelson Dilipkumar Twitter page)

சந்தர்ப்பவசமாக அவ்விடத்தில் நாயகனும் நாயகியும் இருக்கின்றனர். கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாத கும்பல், சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒருவரை விடுவிக்குமாறு அரசிடம் தெரிவிக்கின்றனர். இதுவரை அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தால் போதுமென்றே நினைக்கிறார் நாயகன். ஆனால், அக்கும்பல் வைக்கும் கோரிக்கைக்கும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு இழை பிணைந்திருக்கிறது. அதனால், அக்கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கக்கூடாது என்று கருதுகிறார் நாயகன். அது ஏன், எதற்கு? அதனை எப்படி முறியடிக்கிறார் என்பதெல்லாம் எத்தனையோ நூறு ஆக்‌ஷன் படங்களில் நாம் கண்டுணர்ந்ததுதான்.

ஆனாலும், வடிவேலு பாணியில் ‘ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ என்பது போல மரண பயத்திற்கு நடுவே ஆங்காங்கே நமக்கு கிச்சுகிச்சு மூட்டுகின்றனர் ‘பீஸ்ட்’டில் வரும் பாத்திரங்கள். அதில் ஒருவராக விஜய்யும் இருப்பது இப்படத்தின் சிறப்பு.

தெலுங்கு ‘டப்பிங்’ படங்களில் இது போன்ற சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கின்றன. ஆனாலும், விஜய் போன்ற குழந்தை ரசிகர்கள் அதிகம் கொண்ட ஒரு நட்சத்திரத்திற்கு இது போன்ற காட்சியமைப்பு தேவையா என்பதே கேள்வி.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு தொடக்கத்தில் வரும் சண்டைக்காட்சியிலேயே நம்மை பிரமிப்பின் உச்சத்தில் கொண்டு செல்கிறது. நிறைய விஎஃப்எக்ஸ் உழைப்பு இருக்கிறதென்றாலும்அதற்கேற்றவாறு காட்சிகளை வடித்தெடுப்பதற்கு மாபெரும் திட்டமிடல் வேண்டும். போலவேநிர்மலின் படத்தொகுப்பு எந்தவொரு இடத்திலும் அதீதமாகவோகுறைவாகவோ உள்ளடக்கம் இருக்கும் உணர்வை ஏற்படுத்தாமலிருக்கிறது. இவர்களோடு அனிருத்தின் ‘அதிர்வேட்டு’ பின்னணி இசையும் ஆக்‌ஷன் காட்சிகளை நம் மனதுக்கு கடத்துகிறது.

இந்த கூட்டணியின் உழைப்புதான் நெல்சனின் திரைக்கதையை மென்மேலும் பரபரப்பானதாக மாற்றுகிறது. அதே நேரத்தில், முன்பாதியில் இடைவேளை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பையும் மீறி காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன; பின்பாதியில் அதற்கு மாறாக காட்சிகள் அல்லது காட்சித் தொடர்கள் வெகு நீளமாக அமைந்திருக்கின்றன.

டாக்டர் படத்தில் மாகாளி, கிளி பாத்திரங்களில் நடித்த சுனில், சிவா இருவரும் அதே பாத்திரங்களில் இதிலும் வருவது சிரிப்பை வரவழைத்தாலும், ‘திரும்பவும் அதே பாத்திரங்கள் தேவைதானா’ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. விஜய் தானாக வந்து சரணடையும் காட்சி கூட, டாக்டர் படத்தின் கிளைமேக்ஸை நினைவூட்டுகிறது. இது போதாதென்று போலவே, படத்தின் முடிவு வந்தபிறகும் ஒரு சண்டைக்காட்சி, ஒரு பாடல் என்று நீட்டித்திருப்பது முழுக்க முந்தைய படத்தையே பிரதிபலிக்கிறது.

‘பீஸ்ட்’ என்று பெயர் வைத்தபோதும், ‘ஆர்னால்ட்’ டைப்பில் விஜய் துப்பாக்கியை ஏந்தியபோதும் உள்ளுக்குள் ஒரு பட்சி பரபரத்தது. தொடக்க சண்டைக்காட்சியே அதன் அலறலை கேட்க வைத்தது. அதன்பின், அதே ரக வன்முறை ஆங்காங்கே வருவது தொடர்கதையானபோது இப்படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்தது நினைவில் நின்றது.

Photo Credit : Actor Vijay Twitter page

’டாக்டர்’ரில் ஒரே ஒருமுறை விரல் வெட்டப்படும் காட்சியே தேவைதானா என்ற கேள்வி எழுந்த நிலையில், ‘பயமா இருக்கா.. போகப் போக பயங்கரமா இருக்கும்’ என்பது போல இதில் காட்சிகளில் ரத்தம் பாய்ந்தோடுகிறது. அதனை ரசிகர்கள் கொண்டாடும்விதமாக அமைத்திருப்பதுதான் இதில் வேதனையான விஷயம். பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தெலுங்கு ‘டப்பிங்’ படங்களில் இது போன்ற சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கின்றன. ஆனாலும், விஜய் போன்ற குழந்தை ரசிகர்கள் அதிகம் கொண்ட ஒரு நட்சத்திரத்திற்கு இது போன்ற காட்சியமைப்பு தேவையா என்பதே கேள்வி.

படத்தில் வில்லன் கும்பலை விஜய் வேட்டையாடும்போது பார்வையாளர்கள் சார்பாக நாயகன் விஜய் ஒரு வீடியோ கேம் விளையாடுவதாகத் தோன்றுகிறது. நாலாபுறமும் சுற்றிச் சுழன்று பார்ப்பது போல 360 டிகிரியில் இக்காட்சிகளை பார்க்காமலிருந்தோமே என்ற ஆசுவாசமே கடைசியில் மிஞ்சுகிறது.

படபடவென்று பொரிந்து தள்ளும் ஒரு பாட்டிக்கு துப்பாக்கியால் வில்லன் தரும் பரிசெல்லாம் ‘போச்சா.. பாட்டி போச்சா’ என்ற படபடப்பை உருவாக்காமல் போயிருப்பதுதான் இதில் சிறப்பம்சம். ஏனென்றால், திரையில் இடம்பெறும் வன்முறை பார்வையாளர்களிடம் பதற்றத்தையும் பயத்தையும் நெகிழ்வையும் உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் அதன் பின் இல்லாமல் இருப்பதுதான். அக்காட்சியின் மூலமாக பார்வையாளர்களிடம் உணர்வெழுச்சியை ஏற்படுத்தாவிட்டால், அந்த வன்முறையை ஏன் காட்ட வேண்டும்?

யோகிபாபு கிங்ஸ்லி முதல் தெலுங்கு நடிகர் பிருத்வி ராஜ் (பாரிஸ் ஜெயராஜ் புகழ்) வரை அனைத்து கலைஞர்களின் நகைச்சுவையும், பூஜா ஹெக்டே முதல் பின்னணியில் தெரியும் நங்கைகளின் கவர்ச்சியும், இவற்றுக்கு நடுவே விஜய்யின் ஆக்‌ஷன் தெறிக்கும் நடிப்பும் தற்போதிருக்கும் கமர்ஷியல் ட்ரெண்டுக்கு ஏற்ற அம்சங்கள்தான். இதையெல்லாம் தாண்டி, விஜய் இப்படத்தில் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்காகவே இதனைக் கொண்டாடலாம். அப்படியென்ன பாத்திரம் என்றால், வேலையை உதறிய ஒரு ‘ரா’ அமைப்பின் அதிகாரி மனநல அழுத்தத்திற்கு உள்ளாவதுதான் அவரது பாத்திரத்தின் மையம்.

‘மாஸ்டர்’ படத்தில் கூட முழுமையான மது அடிமையாக வந்து அசத்தியிருப்பார். ஆனாலும், அதில் வந்துபோன விஜய் சேதுபதியை பெரிதாக கொண்டாடிவிட்டோம். அதனால், இதில் அளவோடு அந்த பாத்திரத்தை ஏற்று, கொஞ்சம் வித்தியாசமாக திரையில் தென்படுகிறார். படம் முழுக்க ‘ட்ரிம்’ செய்யப்படாத தாடி மீசையுடன் தோன்றியிருப்பது இதற்கொரு உதாரணம்.

கமர்ஷியல் படத்தில் எந்தளவுக்கு கதாபாத்திரங்களில் நடிப்புத்திறனைக் கொட்ட வேண்டுமென்பதற்கு சமகால உதாரணம் விஜய். இதில் மாற்றுக்கருத்து இருப்பவர்கள் முதலில் ‘மாஸ்டர்’ பார்த்துவிட்டு ‘பீஸ்ட்’ பார்க்கலாம். கண்டிப்பாக, 13 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தவிர்த்துவிட்டு மற்றவர்கள் கொண்டாடலாம்..

ஒரு காட்சியில் தீவிரவாதியிடம் தமிழில் பேசுவார் விஜய். அவர் புரியாமல் பார்க்க ‘உனக்காக நான் இந்தி கத்துக்க முடியாது; நீ வேணா தமிழ் கத்துகிட்டு வா’ என்பார். இதுவும் அரசியல் அல்ல என்று யாரும் சப்பைக் கட்டுக் கட்டிவிட முடியாது.

’நாம ஏதாவது செய்யணும்னு நினைச்சா நம்மளை ஏதாவது செஞ்சிர்ரானுங்க’ என்றொரு வசனத்தை விஜய் பேசும்போது, தியேட்டரில் ரசிகர்கள் கத்துகின்றனர். உடனடியாக, உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் சிலர் வெற்றி பெற்றது உங்கள் நினைவுக்கு வந்தால், அவர் அரசியல் பேசியதாகத்தான் மனதில் படும். அதேபோல, ஒரு காட்சியில் தீவிரவாதியிடம் தமிழில் பேசுவார் விஜய். அவர் புரியாமல் பார்க்க ‘உனக்காக நான் இந்தி கத்துக்க முடியாது; நீ வேணா தமிழ் கத்துகிட்டு வா’ என்பார். இதுவும் அரசியல் அல்ல என்று யாரும் சப்பைக் கட்டுக் கட்டிவிட முடியாது.

முத்தாய்ப்பாக, கிளைமேக்ஸில் ‘இன்னும் ஒரு மாசத்துல தேர்தல் வருது; இப்ப சொல்லுங்க, பாகிஸ்தான் பார்டரை தாண்டி மிசைல் அனுப்புறீங்களா இல்லையா.. பிரதமருக்கு நான் சொல்றதோட அர்த்தம் புரியும்’ என்று விஜய் சொல்லும்போது ‘பார்றா.. விஜய்யோட அரசியல் பஞ்ச்’ என்று குதூகலிக்கிறது ரசிக மனது. கூடவே, ரஃபேல் விமானங்களும் வேண்டும் என்கிறார். அப்புறம் ‘ஐ யாம் நாட் எ பொலிட்டிஷியன்; ஐ யாம் எ சோல்ஷியர்’ என்று வேறு சொல்கிறார். ’ஜாலி ஓ ஜிம்கானா’ பாடலும் கூட இதே ரகத்தில் ரசிகர்களை ‘தயாராக இரு’ என்று சொல்லும் வகையிலேயே அமைந்திருக்கிறது. யாருக்காக, எதற்காக இந்த இடைச்செருகல்கள் என்பது ‘பீஸ்ட்’ தரப்புக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கக் கூடும்.


Share the Article

Read in : English