Read in : English

Share the Article

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 80 வயதைத் தாண்டிய ஒரு முதியவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் நிதி உதவி கேட்டு வந்தார், திரைப்படம் ஒன்று தயாரிக்க. தள்ளாத வயதிலும் அவரால் திரைப்படம் தயாரிக்கும் ஆசையைப் புறந்தள்ள முடியவில்லை. அவரது முதுமை மற்றும் அநாமதேய அடையாளம் அங்கிருந்தோரை அவர் மீது சந்தேகம் கொள்ள வைத்தது. பின்னர்தான் விஷயம் தெரிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு நூற்றாண்டையும் இரண்டு தசாப்தங்களையும் தாண்டி நவீன உலகில் ஓடிடி வரைக்கும் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கும் தமிழ்த் திரைப்படக் கலையின் ஆதிகர்த்தா அவர்; தென்னிந்திய மௌனப்படங்களின் முன்னோடி (தகவல் உபயம்: ராண்டார்கை: 2007).

இப்போது சரித்திரம் வெறும் அடிக்குறிப்பாக வைத்திருக்கும் ரங்கசாமி நடராஜ முதலியார் (1885-1972) யார் என்று, வீட்டில் சோஃபாவில் கால்நீட்டி வடையோ பஜ்ஜியோ தின்றுகொண்டு புதிய படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் இணையதள குடிமக்களுக்குத் தெரியாது என்பது ஆச்சரியமில்லை. ஏனென்றால் “விதை நான் போட்டது,” என்று கோபுரத்தின்மீது ஏறிநின்று கூவத்தெரியவில்லை முதலியாருக்கு.

தமிழ் சினிமாவின் தந்தை ‘கீசகவதம்’ என்னும் முதல் மௌனப் படத்தை (1917) எடுத்துத் தமிழ்த் திரைப்பட உலகிற்கு பிள்ளையார் சுழிப்போட்டு ஆறு ஆண்டுகள் கழித்து மௌனமாக ஒதுங்கிப் போனார்

தமிழ் சினிமாவின் தந்தை ‘கீசகவதம்’ என்னும் முதல் மௌனப் படத்தை (1917) எடுத்துத் தமிழ்த் திரைப்பட உலகிற்கு பிள்ளையார் சுழிப்போட்டு ஆறு ஆண்டுகள் கழித்து மௌனமாக ஒதுங்கிப் போனார் என்பது காலம் என்னும் பின்நவீனத்துவவாதியின் தர்க்கமற்ற செயல்களில் ஒன்று. மொத்தம் ஏழு மௌனப்படங்கள் மட்டுமே தயாரித்து, இயக்கிய அவர் 1923இ-ல் களத்தை விட்டு விலகிப்போனபின்பும் நூற்றுக்கும் மேலான மௌனப்படங்கள் அவரிடமிருந்து எழுச்சிபெற்ற மற்றவர்களால் 1934 வரை எடுக்கப்பட்டன. அவரை முன்மாதிரியாகக் கொண்டு ஏ. நாராயணன், ரகுபதி சூரிய பிரகாசா, மற்றும் மலையாளத் திரைப்படத் தந்தை என்று போற்றப்படும் ஜே. சி. டானியல் போன்ற இயக்குநர்கள் புதிய தடம் பதித்தவர்கள். (டானியல் பற்றி வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘செல்லுலாயிட்’ என்ற பெயரில் மலையாளத்தில் 2013-இல் வெளியானது)..

மௌனப்படம்

கீசகவதம்

பின்பு ‘காளிதாஸ்’ (இயக்கியவர் எச்.எம்.ரெட்டி) பேசும் திரைப்பட வரலாற்றை முதல்முதலாகத் தொடங்கிவைத்த 1931-லிருந்து தமிழ் சினிமா பல்வேறு அலைகளை, பரிசோதனைகளை, மாற்றங்களை, தொழில்நுட்பங்களை படிப்படியாகச் சந்தித்தது. இந்த அசுரத்தனமான வெள்ளித்திரைப் பயணத்தில் கலந்துகொள்ளாமல் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டே அரைநூற்றாண்டு வனவாசத்தைக் கழித்தார் முதலியார்.

அவர் தயாரித்து இயக்கிய திரைப்படங்களும் காணாமல்போயின; அவர் காலமான 1972-ஆம் ஆண்டுவரை (2022 அவரது 50-ஆவது நினைவு ஆண்டு) அவர் என்ன செய்தார் என்ற குறிப்புகளும் காணக்கிடைக்கவில்லை. கிடைத்திருக்கும் அதிகப்பட்ச தகவல்கள், 1970-இல் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் ஒருவிழாவில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பதும், இறுதி நாட்களை அயனாவரத்தில் தன்மகள் ராதாபாய் இல்லத்தில் சிறுநீரக நோயால் அவதிப்பட்டுக் கொண்டு கழித்தார் என்பதும்தான்.

வேலூரில் 1885-இல் பிறந்த நடராஜ முதலியார் சென்னையில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையாளராகவும், பின்பு சைக்கிள் விற்பனையாளராகவும் தன் தொழில்வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவின் முதல்திரைப்படம் ‘ராஜா ஹரிசந்திரா’ (மௌனப்படம்) 1913-இல் வெளியாகி தொழிலதிபர்களுக்குச் சினிமாத் தொழில்கனவை விதைத்திருந்தது. தாதாசாகேப் பால்கேவின் வெற்றி 20-ஆம் நூற்றாண்டின் ஆகப்பிரதானமான கலையே திரைப்படம்தான் என்பதைச் சூசகமாகத் தெரிவிக்க, நடராஜ முதலியாரும் அந்த ஜோதியில் ஐக்கியமாகத் தீர்மானித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மேலும் அன்றைய காலகட்டத்தில் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும் இருந்த கர்ஷன் பிரபுவின் ஆட்சியைப் படம்பிடித்த ஸ்டூவர்ட் ஸ்மித்திடம் கேமரா தொழில்நுட்பத்தை முதலியார் கற்றுக்கொண்டார்.

சில பங்குதாரர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு தனது புதிய தொழிலை ஆரம்பித்தார் முதலியார். ஏற்கனவே திரைப்படங்கள் சிலவற்றை சில இடங்களில் சாமிக்கண்ணு (அவர்தான் தென்னிந்தியாவில் முதல் திரைப்பட அரங்கைக் கோயம்புத்தூரில் கட்டியவர்) போன்றவர்கள் காட்டியிருந்தாலும், முதல் மௌன தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கியவர் முதலியார்தான். மில்லர்ஸ் சாலையில் ஒரு காலத்தில் சினிமா ஸ்டூடியோ இருந்தது என்பது இன்றைய தலைமுறைக்கு ஆச்சரியமூட்டும் தகவல். ஆம். அங்கேதான் ‘இந்தியா ஃபிலிம் கம்பெனி’யை ஆரம்பித்து ஸ்டூடியோவைக் கட்டினார் முதலியார். அதில் நிகழ்ந்த தீவிபத்தில் அவரது மகன் மரணமடைந்ததுதான் அவரை சொற்பகாலத்திலே சினிமாத்துறையை விட்டு விலகச் செய்தது. மேலும் பங்காளிகளின் தகராறு, அவரது விலகலுக்கு மற்றுமொரு காரணமானது. பின்னர் அவர் மீண்டும் மோட்டார்வாகன உதிரிப்பாகங்களை விற்கப் போய்விட்டார் என்று கிடைத்த தகவல்கள் சொல்கின்றன.

இந்தி கார்டுகளை எழுதியவர் மகாத்மா காந்தியின் மகனும், ராஜாஜியின் மாப்பிள்ளையுமான தேவதாஸ் காந்தி என்பது ஆச்சரியமூட்டும் தகவல்.

மேடை நாடகங்கள் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலகட்டத்தில் திரைப்படம் நாடகத்தின் நீட்சியாகவே செயல்பட்டது. ஆதலால் தனது முதல் முயற்சியும், தமிழின் முதல்முயற்சியுமான கீசகவதத்திற்கான கதையை, மக்களுக்குப் பரிச்சயமான மஹாபாரதத்தின் விராடப்பருவத்தில் திரௌபதியின்மீது காமுற்ற கீசகனைப் பீமன் வதம் செய்த நிகழ்விலிருந்து நடராஜ முதலியார் எடுத்துக்கொண்டார். அது தமிழ் நாடக மறுமலர்ச்சி முன்னோடிகளில் ஒருவரும், 1954-ல் வெளியான ‘மனோகரா’ திரைப்படத்தின் நாடக வடிவை எழுதியவருமான பம்மல் சம்பந்த முதலியார் கொடுத்த ஆலோசனை. படத்தின் டைட்டில் கார்டுகள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இருந்தாலும் நடித்தவர்கள் அனைவருமே தமிழர்கள் என்பதால் அது தமிழ்ப் படமாகவே கருதப்படுகிறது. இந்தி கார்டுகளை எழுதியவர் மகாத்மா காந்தியின் மகனும், ராஜாஜியின் மாப்பிள்ளையுமான தேவதாஸ் காந்தி என்பது ஆச்சரியமூட்டும் தகவல்.

முதல் படமே அபாரமான வெற்றி. போட்ட முதல் ரூ.35,000; கிடைத்த லாபம் ரூ.15,000 (அப்போது ஒரு டாலரின் விலை வெறும் 13 ரூபாய்தான்). வெற்றிக்களிப்பில் மிதந்த நடராஜ முதலியாருக்கு மேலும் படங்களைத் தயாரிக்கவும், இயக்கவும் பேரார்வம் ஏற்பட்டது. வரிசையாக அடுத்து ஆறுபடங்கள் உருவாயின: திரௌபதி வஸ்த்ராபஹரணம், மஹி ராவணா, லவ குஸா, காலிங்க மர்த்தனம், ருக்மணி சத்யபாமா, மார்க்கண்டேயா ஆகிய படங்களை அவர் தயாரித்தார்.

ஆனால் சொந்தவாழ்க்கைத் துயரம், நடராஜ முதலியாரைக் காணாமல் போன அவரது மௌனப்படங்களைப் போலவே, திரைப்படம் பேசிய காலங்களில் பேசாமல் மௌனமாகவே இருக்கவைத்தது.


Share the Article

Read in : English