Read in : English

Share the Article

முஸ்லிம்கள் இல்லாத பாரதம் – பொளரென்று கடூரமாக தொனிக்கிறதா?  கடவுளே! ஒரு பக்கம் முஸ்லிம்களை எல்லாம் அப்புறப்படுத்திவிடலாம், நாடு கடத்தி விடலாம், முடிந்தால். ஏதோ ஓர் அதிசயத்தால் அவர்கள் காணாமல் போய்விட்டாலும் நல்லதுதான். ஆனால் அப்புறம்? அவர்களைக் காட்டி  தலித்துக்களையும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் நிலை மாறக்கூடுமே…அவ்விரு பிரிவினரும் முஸ்லிம்கள் விட்டுச் சென்ற உடைமைகளுக்கு உரிமை கோரினால், அவர்கள் இணைந்து அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றத் தொடங்கினால்…? கொஞ்சம் ஏடாகூடமான நிலைமைதான்.

பிரபல பத்திரிகையாளர் சயீத் நக்வி ‘Muslim Vanishes’ (இஸ்லாமியன் மறைகிறான்) என்ற தலைப்பில் எழுதியுள்ள நாடகம் அத்தகையதொரு அதிசயத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.  திடீரென்று ஒரு நாள் இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் மறைந்து விடுகின்றனர். அவர்களோடு குதுப்மினாரும் கூட மறைந்து விடுகிறது.  சில நாட்கள்  கழித்து உருது மொழியும் மறைகிறது. அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் உருது வார்த்தைகளும் மறைந்து விடுகின்றன. இந்துஸ்தானி இசை கூட. இவ்வாறாக முசல்மான் தடயம் இன்றி மறைந்து போகிறான்.

வட புலத்தில் வாழும் பெரும்பான்மை இந்து மக்கள்வரலாற்றுக் காரணங்களினால் முஸ்லிம்கள் மீது தீராப்பகை கொண்டிருப்போர்முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை அடிக்கடி கற்பனை செய்து மகிழ்வர். இன்றைய மோடி அரசும் அத்தகைய கனவுகளை ஊக்குவிக்கிறது.

வட புலத்தில் வாழும் பெரும்பான்மை இந்து மக்கள், வரலாற்றுக் காரணங்களினால் முஸ்லிம்கள் மீது தீராப்பகை கொண்டிருப்போர், முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை அடிக்கடி கற்பனை செய்து மகிழ்வர். இன்றைய மோடி அரசும் அத்தகைய கனவுகளை ஊக்குவிக்கிறது. ஆனால் அடுத்து என்ன என்று மட்டும் கேட்பதில்லை. நக்வி கேட்கிறார்.

இந்து பாரதத்தின் அடிப்படையே ஆட்டம் காணுகிறது. மதச்சார்பின்மை பேசிக்கொண்டே தங்கள் ஆள்கையினை வலுப்படுத்திக்கொள்ளும் இந்து மேல் சாதியினர் விழிக்கின்றனர். மறைந்துவிட்ட இந்து, மற்றும் முஸ்லிம் ஞானிகளின் ஆவியோடு கலந்து பேசி சிக்கலுக்குத் தீர்வு காண முயல்கின்றனர். காணாமல் போன முஸ்லிம்கள் திரும்புவார்களா மாட்டார்களா,  ஏன் இப்படி ஒரு சேர அனைவரும் மாயமாகவேண்டும், நொந்து போய் ஓடிவிட்டவர்கள் திரும்பவில்லையானால், நிலையை சமாளிப்பது எப்படி? இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்தியாவின் இந்து – முஸ்லிம் உறவை பற்றிய வரலாற்றை குறித்து நக்வியின் அறிவு பிரமிக்கத்தக்கது.  படிக்கும்போது நமக்கு புல்லரிக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்கள் ஏறக்குறைய 20,000 பேர் இந்தியா திரும்புகிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. அவர்கள் விட்டு சென்றவற்றுக்கு இந்துக்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.  அரசு  கண்டு கொள்ளவில்லை.  பாகிஸ்தானை நிராகரித்து இந்தியா திரும்பும் முஸ்லிம்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சீர் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு வேதனை தரும் திருப்பம் என்னவெனில், கிழக்கு வங்காளம், கிழக்கு பாகிஸ்தான் என்றான பின்பு, அங்குள்ள இந்துக்கள் அன்றைய சூழலில் இந்தியா வர ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் அதே சலுகைகள் மேற்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு காரணங்களினால் திரும்ப விழையும் முஸ்லிம்களுக்குக் அளிக்கப்படவில்லை. நேரு காலத்திலேயே அப்படி என்பதை நக்வி நமக்கு நினைவூட்டுகிறார்.

ஹிந்துஸ்தானி இசைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பை நினைவூட்டுவதாகட்டும்உருதுவில் எழுதிய இந்து கவிஞர்களைப் பற்றி பேசுவதாகட்டும்நக்வி எவ்வளவு சிறந்த  கலாச்சார வரலாற்று அறிஞர் என்பதை இந்நாடகத்தின் வாயிலாக நாம் புரிந்து கொள்கிறோம்.


ஹிந்துஸ்தானி இசைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பை நினைவூட்டுவதாகட்டும், உருதுவில் எழுதிய இந்து கவிஞர்களைப் பற்றி பேசுவதாகட்டும், நக்வி எவ்வளவு சிறந்த  கலாச்சார வரலாற்று அறிஞர் என்பதை இந்நாடகத்தின் வாயிலாக நாம் புரிந்து கொள்கிறோம்.  அவரை போன்ற ஆழ்ந்த புலமையும், இந்திய பாரம்பரியத்தின் மீது மாளாக் காதலையும் அற்புத எழுத்துத் திறமையினையும் கொண்ட ஒரு இந்திய பத்திரிகையாளரை நாம் காண்பதரிது.

உதாரணமாக, இந்தக் காட்சியை பாருங்கள். ‘இதுதான் பாபா அலாவுதீன் கானின் அறை. அவரது அறையில் தொங்கவிடப்பட்டுள்ள சரஸ்வதியின் ஓவியங்களை பாருங்கள். அதே நேரம் தரையில் காபாவை நோக்கி விரிக்கப்பட்டுள்ள  அவரது பிரார்த்தனைப் பாயையும் பாருங்கள்’, காட்சி அடுத்து ஒரு கோவிலுக்குச் செல்கிறது. ‘இதுதான் சாரதா மாதாவின் கோவில். இங்குதான் சரஸ்வதியின் அருளை பெற பாபா அலாவுதீன் கான் தினமும் செல்வார்’. என்று பின்னணியில் குரல். இப்படிப்பட்ட நம் இந்தியாவை மோடியும் அவரது பரிவாரத்தினரும்  உருக்குலைத்தது எப்படி?

நாடகத்தின் பெரும்பகுதி  தொலைக்காட்சி ஸ்டுடியோக்களில் நிகழ்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அது சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது.  தவிரவும் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்து- முஸ்லிம் பதற்றங்களுக்கு இந்து வெறியர்களையே முக்கியக் காரணமாக சித்தரிக்கிறார் சயீத் நக்வி. அது நிச்சயம் மிகையே.

குறிப்பாக, 1986ஆம் ஆண்டில் நடந்த   ஷா பானோ வழக்கை எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வழக்கில் தீர்ப்பு வெளியானபோது அன்றைய ராஜீவ் அரசு மேற்கொண்ட முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகள் பற்றி ஒரு வரி கூட நாடகத்தில் எங்கும் இல்லை.

பசு மாநிலத்தவர் எரிச்சலடைந்தது, முஸ்லிம்களுக்கு மேலதிகச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன, அவர்களைத் திருப்திப் படுத்த, அவர்கள் வாக்குகளுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யும் என்ற புரிதல் வடக்கே பரவலானது அக்கட்டத்தில்தான். பாபர் மசூதி தகர்ப்பு தொடங்கியது கூட அப்போதுதான் என்பதே பொதுவான கருத்து. ஆனால்   நக்வியோ வழக்கு குறித்து மௌனம் சாதிக்கிறார்.

இண்டியன் எக்ஸ்பிரசின் தென்பகுதி பதிப்புகளின்  ஆசிரியராயிருந்தபோது அவர் இப்படி எழுதியதில்லை சிந்தித்ததில்லை. அனைத்துவித அடிப்படைவாதத்தையும் சாடுவார். எவருக்கும் வக்காலத்து வாங்கமாட்டார். மலப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டதைக்கூட அவர் விமர்சித்தார்.  ஆனால் காலப்போக்கில் அவர் மாறிப்போனார்.

எந்த ராம்நாத் கோயங்கா, நக்வியை மிக இளம் வயதில் தென்பகுதி பதிப்புகளுக்கு அவரை ஆசிரியராக்கி பெருமைப்படுத்தினாரோ அவரே பின்னொரு கட்டத்தில் ஒதுக்கி வைக்கவும் செய்தார். இன்னும் வளர்ந்திருக்க வேண்டியவர். தலைமை ஆசிரியராகிவிடுவார் என்ற நிலைமாறி, ஒரே நாளில் அவர் வெறும் நிருபராக மும்பைக்குத் தூக்கியடிக்கப்பட்டார். அப்போது பொறுப்பிலிருந்த அருண் சௌரிக்கும் சயீத் நக்விக்குமிடையே கடும் மோதல்கள். சௌரி-குருமூர்த்தி இணைந்து செயல்பட்டு கோயங்காவின் மனதை மெல்ல மெல்லக் கரைத்து, நக்வியை செல்லாக்காசாக்கினர். வெறுத்துப் போய் அச்சு ஊடகத்திலிருந்து வெளியேறிய நக்வி பின்னர் எந்த முக்கியப் பொறுப்புக்கும் வரமுடியவில்லை.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் பதவி தனக்கு கிட்டவிருந்ததாகவும் ஆனால் முஸ்லீம் என்பதால் அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் நக்வி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். உண்மையோ பொய்யோ மிகவும் மனம் நொந்துவிட்டார். அதன் விளைவாகவே தனது இஸ்லாமிய அடையாளத்தை முன் நிறுத்தத் தொடங்கினார். முல்லாக்களைக் கூட மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கினர் என்பது கசப்பானதொரு உண்மை.

அவரை விரட்டியடித்த அருண் சௌரி இந்நாடகத்தை புகழ்ந்திருக்கிறார். அனைவரும் படிக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். அவரது புகழுரை நூலின் முன் அட்டையிலேயே பிரசுரமாயிருக்கிறது. என்னே காலத்தின் கோலம்.

எது எப்படியோ இனி இந்து- முஸ்லிம் உறவுகள் சீர்பெறும், நல்லிணக்கம் நிலவும், உண்மை ஜனநாயகம் மலரும் என்ற நம்பிக்கை சயீத் நக்விக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எத்தனை மேதைகள், ஞானிகள் இணைந்தாலும் நற்புத்தி கூறினாலும் இன்னுமொரு அவசர நிலையிலிருந்து நாம் தப்புவது கடினம் என்று அவர் வருந்துகையிலேயே திரை விழுகிறது.

மக்களிடையே சமூக நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இருந்தாலும்கூட, வட மாநிலங்களில் இந்து முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவது கடினமாக உள்ளது. 1998இல் கோவையில் நடந்த பயங்கர வெடிகுண்டு சம்பவம், தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்களை விரோத உணர்வுடன் பார்க்கும்படி செய்யவில்லை. ஆனால், விந்திய மலைக்கு வடக்கே வாழ்க்கை பயங்கரமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மோடி அல்லது யோகி போன்ற அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.


Share the Article

Read in : English