Read in : English

Share the Article

ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் பயிற்சியே சாதனைகளுக்கு அடித்தளம். இதை நிரூபிக்கும் விதமாக ‘போட்டோகிராபி’ என்ற ஒளிப்படக்கலையில், கானுயிர்களை படம் எடுத்து உலக அளவில் புகழ்பெற்றுள்ளார் கலைஞர் பாரிவேல் வீராச்சாமி. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே அவரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர். இயற்கையின் கைபிடித்து, ஒளி ரேகைகளை வரைபவர்.

உலகப் புகழ்பெற்ற ‘நேஷ்னல் ஜியோகிராபி’ ஆங்கில இதழ், இவரது ஒளிப்படங்களை உலக அளவில் சிறந்ததாக தேர்வு செய்து பலமுறை பாராட்டியுள்ளது.  அறியாமையிலிருந்து, அறிவு நோக்கி நம்பிக்கையுடன் நகர்ந்து வந்த வெற்றிக்கதையை, ‘இன்மதி’ இணைய இதழுடன் பகிர்ந்து கொண்டார் பாரிவேல்.
அவருடன் நடத்திய உரையாடல்…

கேள்வி: இளமைப் பருவத்திலே ஒளிப்படக்கலை பின்புலம் இருந்ததா

கானுயிர் ஒளிப்பட கலைஞர் பாரிவேல்

பதில்: எந்த பின்புலமும் இல்லை. ஒளிப்படக்கலை பற்றி, 27 வயது வரை எதுவுமே தெரியாது. வேதாரண்யம் உப்பளத்தில் கூலி வேலை, கேளராவில் கட்டட வேலை என முறைசார பணிகள் செய்துவந்தேன். அவற்றுக்கு கடும் உடலுழைப்பை செலுத்த வேண்டியிருந்தது.
அதனால் வேறு வேலைகளை மனம் தேடியது. ஒரு சீட்டுக்கம்பெனியில், வேலை கிடைத்தது. அதில் பலவித தொழில் செய்தவர்களையும் சந்தித்தேன். வசூலுக்கு செல்லும்போது, அவர்கள் வலியையும், சிரமங்களையும் உள்வாங்கினேன். போட்டோ ஸ்டுடியோக்களில் மனக்கஷ்டம் இன்றி பணம் தருவதை அவதானித்தேன். அதுதான், ஒளிப்படக்கலைஞனாக வர அடித்தளம் போட்டதாக எண்ணுகிறேன்.

எல்லா மனிதனுக்குள்ளும் கானுயிர் ஆர்வம் இருப்பதை கண்டேன். அது எனக்குள்ளும் இருந்தது. ஆதிமனிதன், காட்டில் வாழ்ந்த போது, விலங்குகளை கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதாவது, மனிதன் சாப்பிடும் விலைங்குகளையும், மனிதனை சாப்பிடும் விலங்குகளையும் கூர்மையாக அவதானித்து தகவமைத்தால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தது. அதுவே, கானுயிர்கள் மீதான ஆர்வமாக தொடர்ந்து வருவதை அறிந்தேன்.

கேள்வி: அது எப்படி நிகழ்ந்தது

பதில்: சீட்டுக் கம்பெனியில் விடுப்பே கிடையாது. என் உறவினர் மரண இறுதி நிகழ்வில் பங்கேற்க ஒருநாள் விடுப்பு எடுத்தேன். அதற்காக கடுமையாக கேள்வி கேட்டது நிர்வாகம். உடனே அங்கிருந்து விலகுவதாக தெரிவித்தேன். அடுத்து என்ன செய்வாய் என்று கேட்டனர்.

போட்டோ ஸ்டுடியோ துவங்கப் போவதாக தெரிவித்தேன். உடனே, சீட்டு கம்பெனி உரிமையாளர், ‘கிழிச்சே…’என அலட்சியமாக கூறினார். அந்த சொல் மனதில் தைத்தது. ஸ்டுடியோ துவங்கும் எண்ணம் கனன்றது.

ஆனால் அந்த தொழில் பற்றி எதுவும் தெரியாததால் தவித்தேன். சீட்டு கம்பெனி பணியின் போது அறிமுகமான சில ஸ்டுடியோக்களில் தொழில் கற்றுத்தர கேட்டேன். என் ஆர்வத்தை யாரும் பூர்த்தி செய்யவில்லை. இறுதியாக ஒருவர், சில அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்தார். அதில் கவனம் கொண்டு குறைந்த விலையில் இருந்த கேமரா வாங்கி, மிக சிரமத்துடன் தொழிலை துவங்கினேன். தட்டுத்தடுமாறி நடத்தினேன். புத்தகங்களை வாங்கி, விடிய விடியப் படித்து தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டேன். டீக்கடைகாரர் வடையை மடக்கித் தந்த பேப்பரில் இருந்து கூட இந்த கலையின் சில அம்சங்களைக் கற்றேன்.
அதன்பின்னும் பிரிண்ட் போட்ட படங்களை முறையாக வெட்டித்தர தெரியாது. எவ்வளவு முயன்றும் அதில் தோல்வி அடைந்தேன். பின், வெட்டும் கருவி ஒன்றை வாங்கி சமாளித்தேன். இப்படித்தான் தொழிலின் அடிப்படை அறிவைப் பெற்றேன். இதற்கே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

சிறகு விரித்து பறக்கும் கடற்காகம்

கேள்வி: கானுயிர்களை படம் எடுக்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது

பதில்: திருமணங்களுக்கு படம் எடுக்கப் போகும்போது, வெளியில் காணும் சில காட்சிகளையும் படம் எடுப்போன். அவற்றை முகநுாலில் பதிவேற்றிவந்தேன். அதன் மூலம், பலரின் அறிமுகம் கிடைத்தது. நெய்வேலியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம், நான் வசிக்கும் வேதாரண்யம் பகுதி படங்களை பதிவேற்றி வந்தார். அதில் ஆர்வம் ஏற்பட்டதால் அவரை சந்தித்தேன்.
ஒருநாள் வேதாரண்யம் உப்புமலை என்ற பகுதிக்கு அவரை அழைத்து போனேன். அங்கு போனதும், அவர் படம் எதுவும் எடுக்காமல் நீண்ட நேரம் அவதானித்துக் கொண்டிருந்தார். வழக்கமாக, எதையும் பார்த்தவுடன் ஒளிப்படம் எடுத்து விடும் எனக்கு இது வியப்பாக இருந்தது.

நீண்ட நேரத்துக்கு பின், உப்புமலை அருகே ஒருவர் சைக்கிளில் போனார். அதை ஒளிப்படமாக எடுத்தார் செல்வம். அந்த வழியாக பறவைகள் பறந்த போது எடுத்தார். அப்போதுதான், ஒளிப்படக்கலையில் உயிரினங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன்.
அவர் எடுத்தப் படங்களை முகநுாலில் பதிவேற்றியபோது, மேலும் பாடங்கள் கற்றேன். அதாவது, உப்பு மலையின் உயரத்தை, சைக்கிள் ஓட்டியவரின் உருவம் காட்டியது. அது மிகுந்து உயிரூட்டத்துடன் இருந்தது. பின், அதுபோல் நானும் முயற்சி செய்து படங்கள் எடுக்கத் துவங்கினேன்.

அப்போது, எல்லா மனிதனுக்குள்ளும் கானுயிர் ஆர்வம் இருப்பதை கண்டேன். அது எனக்குள்ளும் இருந்தது. ஆதிமனிதன், காட்டில் வாழ்ந்த போது, விலங்குகளை கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதாவது, மனிதன் சாப்பிடும் விலைங்குகளையும், மனிதனை சாப்பிடும் விலங்குகளையும் கூர்மையாக அவதானித்து தகவமைத்தால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தது. அதுவே, கானுயிர்கள் மீதான ஆர்வமாக தொடர்ந்து வருவதை அறிந்தேன்.

இதை சோதிக்க விரும்பி, திருமணம் போன்ற நிகழ்வுகளை ஒளிப்படம் எடுக்கும் சகக் கலைஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். அதாவது, ‘ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்…’ என்பதுதான் அந்த கேள்வி. அவர்கள் தந்த பதில்தான் ஆச்சரியம் தந்தது. பொதுவாக அனைவரும் கூறியது, ‘ஒரு கோடி கிடைத்தால், திருமணம் போன்ற நிகழ்வுகளை படம் எடுப்பதை விடுத்து, காட்டில் மாதக் கணக்கில் அமர்ந்து, இயற்கையை படம் எடுப்போம்…’ என்றனர். அதிலிருந்து, சரியான வழியில் நடப்பதாக உறுதி செய்து கொண்டேன்.

பாரிவேலின் கானுயிர் படங்கள் அவரது கிராமத்தை சுற்றி எடுக்கப்பட்டவை

கேள்வி: கானுயிர்களை ஒளிப்படம் எடுப்பதை எங்கிருந்து துவங்கினீர்கள்

பதில்: என் கிராமத்தில்தான் துவங்கினேன். இங்குதான் சுற்றி சுற்றி வந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வேறு எங்கும் செல்வது இல்லை. அதற்கு முக்கிய காரணம் உள்ளது. காடுகளில் கானுயிர் ஒளிப்படங்கள் எடுப்பது மிகவும் செலவு பிடிக்கும் கலை. அதை பணக்காரர்கள், சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும்.
ஒரு கேமரா லென்ஸ் வாங்கவே பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். அது போல், காட்டில் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். அதற்கும் செலவு பிடிக்கும். பெரும் பணம் வைத்திருப்பவர்களால்தான் இவற்றை செய்ய முடியும். அவர்களுக்கு அது பொழுது போக்கு.
எனவே, என்ன முடியும் என சிந்தித்தேன். என்னிடம் உள்ள ஒளிப்படக் கருவிகளை வைத்து யோசித்தேன். என்னை சுற்றியுள்ள இயற்கைக்குள் தேடலை நிகழ்த்த துணிந்தேன். அதற்குள் உறையும் உயிர்களை படமாக்கி நிறைவடைகிறேன்.

என் கிராமத்துக்கும், ஸ்டுடியோ வைத்துள்ள இடத்துக்கும் இடையே, 13 கி.மீ., துாரம் உள்ளது. இந்த பயண நேரத்தில், பயண துாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒளிரும் உயிரினங்களையே படம் பிடிக்கிறேன். தணியாத ஆர்வத்துடன் இங்கு கானுயிர்களுக்காக காத்திருக்கிறேன்.

பாரிவேல் எடுத்த பெரும்பாலான ஒளிப்படங்கள் வேதாரண்யம் பகுதிகளில் எடுக்கப்பட்டது

கேள்வி: கானுயிர் தொடர்பாக எவ்வளவு படம் எடுத்திருக்கிறீர்கள்.

பதில்: ஒரு முழுநேர கானுயிர் ஒளிப்படக்கலைஞர், ஓர் ஆண்டில் எவ்வளவு படம் எடுப்பாரோ, அதை மிஞ்சும் வகையில், அதற்கு அதிகமாகவே நல்ல படங்களை எடுத்துள்ளேன்.

இயற்கையை புரிந்து, இயைந்து வாழ முயன்றால் மனிதன் பிழைப்பான். அல்லாவிடில், மனிதனைப் பிடுங்கி எறிந்து, தன்னை சமநிலை செய்து கொள்ளும் இயற்கை.

கேள்வி: கானுயிர் ஒளிப்படக் கலைஞராக உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது எப்படி

பதில்: கானுயிர் ஒளிப்படங்கள் மட்டுமின்றி, தெருப்படங்களையும் அதிகமாக எடுத்து வருகிறேன். நெல்லை மாவட்டம், குலசேகரம்பட்டினத்தில் நடந்த தசரா விழாவில் ஒரு படம் எடுத்தேன். அதை, நேஷ்னல் ஜியோகிராபி இதழ், உலகில் சிறந்த 12 படங்களில் ஒன்றாக தேர்வு செய்து வெளியிட்டது. பின்னர், மற்றொரு படம் உலகின் மிகச்சிறந்த படமாக தேர்வானது. தொடர்ந்து, பல படங்கள் உலக அளவில், தேர்வாகி சிறப்பு பெற்றுள்ளன. மேலும் பல கேமரா தயாரிப்பு நிறுவனங்கள் என் கானுயிர் படங்களை சிறந்ததாக தேர்வு செய்து வெளியிட்டுள்ளன.

திறமையான ஒளிப்பட கலைஞருக்கு விட்டில்களும் அழகியலே

கேள்வி: இந்த கலை மூலம் நீங்கள் கற்றுக்கொண்டதென்ன…

பதில்: இயற்கையை மதிக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன். மற்ற உரியினங்களின் துணையுடன்தான் வாழ்கிறான் மனிதன். மற்ற உயிரினங்களுக்கு, மனிதன் துணை எப்போதும் தேவையில்லை என அறிந்து கொண்டேன்.

இயற்கையை புரிந்து, இயைந்து வாழ முயன்றால் மனிதன் பிழைப்பான். அல்லாவிடில், மனிதனைப் பிடுங்கி எறிந்து, தன்னை சமநிலை செய்து கொள்ளும் இயற்கை. இவற்றையே நான் கற்றுள்ளேன்.


Share the Article

Read in : English