Read in : English

Share the Article

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும், பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடலாம் எனக் காத்திருந்தனர் அவருடைய ரசிகர்கள். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.  அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீதப் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது.

வலிமை திரைப்படம் பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதால், திரையரங்குகளில் நூறு சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே வசூல்ரீதியான வெற்றியைப் பெற இயலும் எனத்  திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். ஆகவே, வலிமை வெளியாக இயலாத சூழல் உருவாகியுள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் வெளிவருவதாக இருந்த இந்தப் படம் இப்போது, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுவதாகவும் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் இன்னொரு பெரிய நட்சத்திரமான விஜய் நடித்துவரும் பீஸ்ட் என்னும் படமும் வெளியாகவில்லை. மேலும், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய படங்களும் வெளிவரவில்லை. எனவே, சிறிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைத்துள்ளன.

சசிகுமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா, விதார்த் நடித்துள்ள கார்பன், சதீஷ் நாயகனாக அறிமுகமாகும் நாய் சேகர், குக் வித் கோமாளி அஸ்வினின் அறிமுகப் படமான என்ன சொல்ல போகிறாய், லட்சுமி மேனன் நடித்த ஏஜிபி, ராதிகா நடித்துள்ள மருத, விக்னேஷ் நடித்துள்ள பாசக்கார பய, பிரபு தேவா நடித்த தேள் போன்ற படங்கள் வெளியாக உள்ளன என்கிறார்கள். இதில் எத்தனை வெளியாகுமோ?

பொதுவாகவே, தமிழ்நாட்டில் திரைப்பட ரசிகர்களுக்கு அவர்கள் விருப்பத்துக்குரிய நடிகர்கள் நடித்த படம் வெளிவரும் நாள்தான் திருவிழா நாள். உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற திருநாள்களில் வெளியாகும்போது, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாகவே தீபாவளி, பொங்கல் போன்ற நாள்களில் பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குக்கு வருவது வழக்கம். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துக்குப் பின்னர் ரஜினி கமல் காலம் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு பண்டிகையின் போதும், இவர்கள் நடித்த படங்கள் தனித்தனியாகவோ, ஒன்றுசேர்ந்தோ வெளிவரும்.

எண்பதுகளில் தொடக்கத்தில் ரஜினி கமல் இருவருமே திரைப்பட உலகில் முதல் நிலை நாயகர்களாக இருந்தார்கள். ஆகவே, எண்பதுகளிலிருந்து அவர்கள் படங்களே முன்னணிப் படங்களாக மாறின. பொங்கல் பண்டிகையின் போது ரஜினி காந்த் நடித்த போக்கிரி ராஜா (1982), பாயும் புலி (1983),  நான் மகான் அல்ல (1984), மிஸ்டர் பாரத் (1986), பணக்காரன் (1990), தர்ம துரை (1991), மன்னன் (1992), பாட்ஷா (1995), பேட்ட (2018), தர்பார் (2020) ஆகிய பத்துப் படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் வணிக வெற்றிபெற்றவை. இதேபோல் கமல் ஹாசன் நடிப்பில் மீண்டும் கோகிலா (1981), ஒரு கைதியின் டைரி (1985), புன்னகை மன்னன் (1986), காதல் பரிசு (1987), மகாநதி (1994), சதிலீலாவதி (1995), பம்மல் கே சம்பந்தம் (2002), அன்பே சிவம் (2003), விருமாண்டி (2004) ஆகிய ஒன்பது படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இவர்கள் இருவரும் நடித்த படங்கள் 1986இலும் 1995இலும் மட்டும் மோதியுள்ளன. 1986இல் மிஸ்டர் பாரத்தும் புன்னகை மன்னனும் வெளியானது, 1995இல் பாட்ஷாவும் சதிலீலாவதியும் வெளியானது.

தமிழ்நாட்டின் இன்னொரு பெரிய நட்சத்திரமான விஜய் நடித்துவரும் பீஸ்ட் என்னும் படமும் வெளியாகவில்லை. மேலும், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய படங்களும் வெளிவரவில்லை.

தொண்ணூறுகளின் மத்தியில் அஜித் விஜய் ஆகிய இருவரும் பெரும் கதாநாயகர்களாக வளரத் தொடங்கினர். அஜித் நடிப்பில் வான்மதி (1996), நேசம் (1997), தொடரும் (1999), தீனா (2001), ரெட் (2002), பரமசிவன் (2006), ஆழ்வார் (2007), வீரம் (2014), விஸ்வாசம் (2019) என ஒன்பது படங்கள் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வந்துள்ளன. அடுத்ததாக விஜய் நடித்த கோயமுத்தூர் மாப்ளே (1996), காலமெல்லாம் காத்திருப்பேன் (1997), கண்ணுக்குள் நிலவு (2000), ஃப்ரண்ட்ஸ் (2001), வசீகரா (2003), திருப்பாச்சி (2005), ஆதி (2006), போக்கிரி (2007), வில்லு (2009), காவலன் (2011), நண்பன் (2012), ஜில்லா (2014), பைரவா (2017), மாஸ்டர் (2021) ஆகிய 14 படங்கள் வெளியாகியுள்ளன.

எண்பதுகளுக்குப் பிறகு இந்த நாற்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகப் பொங்கல் நாளன்று பெரிய நடிகர்கள் நடித்த 42 படங்கள் திரைக்கு வந்துள்ளன. மிகச் சில ஆண்டுகளில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகாத பொங்கல் நாள் இருந்துள்ளது.  கமல், ரஜினி ஆகிய இருவரது படங்களும் வெளிவராத 1988இல் சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு, பிரபு நடித்த காலையும் நீயே மாலையும் நீயே 1988 ஆகிய படங்களும் 1989இல் பிரபு நடித்த நாளை மனிதன் போன்ற படங்களும்  1993இல் கேப்டன் மகள், ஜாதி மல்லி, மறுபடியும் ஆகிய படங்களும் 1998இல் மறுமலர்ச்சி, பொன்மனம் 1999இல் ஹவுஸ்புல் 2000இல் வானத்தப்போல,  2016இல் ரஜினி முருகன் எனப் பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆக, பெரிய நடிகர்களின் படம் வெளிவராத ஆண்டுகளில் மட்டுமே சிறிய படங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படியொரு வாய்ப்பு இந்த ஆண்டு சிறிய படங்களுக்குக் கிடைத்துள்ளது.

எண்பதுகளுக்குப் பிறகு இந்த நாற்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகப் பொங்கல் நாளன்று பெரிய நடிகர்கள் நடித்த 42 படங்கள் திரைக்கு வந்துள்ளன. மிகச் சில ஆண்டுகளில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகாத பொங்கல் நாள் இருந்துள்ளது

இதுவரை முதல்நிலை நடிகர்கள் நடித்த படங்கள் இல்லாதபோது, அடுத்த நிலை நடிகர்களது படங்களாவது ரசிகர்களுக்குக் காணக் கிடைத்தன. இந்த ஆண்டு அப்படி அடுத்த நிலை நடிகர்களது படங்கள்கூட வெளிவரவில்லை. முழுக்க முழுக்க நடிகர்கள் ஆதிக்கம் இல்லாத ஒரு பொங்கல் என்றே இதைச் சொல்ல வேண்டியதிருக்கிறது. நடிகர் வடிவேலு கோரியும் தலைப்பைத் தராத நாய் சேகர் படம் திரைக்கு வந்திருக்கிறது. நாற்பது கதைகளைக் கேட்டுத் தூங்கிவிட்டேன் நான் தூங்காத கதை இது என நடிகர் அஷ்வின் கூறிய என்ன சொல்லப் போகிறாய் படத்தைப் பார்த்த ரசிகர்களது கருத்து படம் வெற்றிபெறுமா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.  2001இல் மின்னலே படத்தில் அறிமுகமாகி 2010இல் மைனா மூலம் பெரிய கவனத்தை ஈர்த்த விதார்த்தின் 25ஆம் படமான கார்பன் வெற்றிபெற்றால் அவர் நாயகனாக இன்னும் சில வெற்றிகளைத் தர இயலும். நடிகை ராதிகா நடித்த ஜிஆர்எஸ் இயக்கிய மருத என்னும் படம் கடந்த ஆண்டே தயாராகியும் இப்போதுதான் வெளியாகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியன் இளையராஜா இசையில் பாடிய பாடலொன்று இடம்பெற்றிருக்கிறது.

பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவந்ததால் தங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதேயில்லை என்று வழக்கமாக புகார் சொல்லும் சிறிய படங்கள் மட்டுமே இப்போது வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் இருக்கும் திரையரங்குகளைப் பங்குபோட்டுக்கொண்டு இந்தச் சிறிய படங்கள் வெளியாகும் சூழல் ஒருவகையில் ஆரோக்கியமானது. 50 சதவீதப் பார்வையாளர்கள் என்பது இந்தப் படங்களைப் பாதிக்கப்போவதில்லை. ஓரிரு நாள்கள் ஓடினால்கூடப் போதும் படம் சம்பாதித்துக்கொடுத்துவிடும் என்பதே உண்மை என்றபோதும், இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தந்தார்கள் எனில் சிறிய படங்கள் உருவாவதற்கு வாய்ப்பாக அமையும். இப்படி ஒரு வாய்ப்பு இனிக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் படங்கள் வெற்றிபெற்றால் நல்லது. கொண்டாட்ட மனைநிலையைப் பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரது படங்கள் மட்டுமே கொடுக்கும் என்ற ஐதீகத்தைச் சிறிய படங்கள் உடைக்குமா என்பது மட்டுமே பதில் காண வேண்டிய கேள்வியாக எஞ்சியுள்ளது


Share the Article

Read in : English