Read in : English

Share the Article

பி.எச்டி படித்து கல்லூரி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தாலும் தந்தை, தாத்தா என தனது முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரியமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடிய மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். பகலில் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியராக வலம் வரும் பாலசுப்ரமணியம் காலை, மாலை நேரங்களில் மண்பாண்ட தொழிலாளியாக இருந்து மண்ணுக்கு உயிர் கொடுத்து வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர்  பாலசுப்ரமணியம். வர்த்தகத்தில் பி.எச்டி  படித்த இவர் தரங்கம்பாடி அருகே உள்ள தர்மபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வர்த்தகவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பாலசுப்ரமணியத்தின் தந்தை பாண்டியன், அவரது தந்தை என முன்னோர்கள் என காலம், காலமாக மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். பாண்டியனிற்கு பாலசுப்ரமணியம் உட்பட 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பாலசுப்ரமணியம் பட்ட மேற்படிப்பு படிக்க, அவரது ஒரு தம்பி சிங்கப்பூரிலும், மற்றொரு தம்பி உள்ளூரில் கோவிலும் வேலை பார்த்து வருகின்றனர். பாண்டியன் உயிருடன் இருக்கும் வரை தனது பிள்ளைகளை மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபடுத்தவில்லை. நீர்நிலைகளில் இருந்து தரமான மண்ணை எடுத்து, அதை பதப்படுத்தி, பாத்திரமாக வடிவமைத்து, உடையாமல் தீயில் சுட வேண்டும்.

பராம்பரியத்தை விரும்பிய துபாயில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்கும் பாத்திரங்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளன.

இந்த கஷ்டத்தை தலைமுறை, தலைமுறையாக சந்தித்து வந்த பாண்டியன் மண்பாண்டங்களை தயாரிக்க தனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை. “என்னோடு இந்த கஷ்டம் போகட்டும், நீங்களாவது வேறு வேலை செய்து பணம் சம்பாதியுங்கள்” என தனது மகன்களிடம் பாண்டியன் கூறியுள்ளார்.

உதவி பேராசிரியர் பாலசுப்ரமணியம்

2012ஆம் ஆண்டில் பாண்டியன் இறந்ததும் மண்பாண்டம் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. பாண்டியன் உற்பத்தி செய்யாததால் மண்பாண்டங்களை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் பொருள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை பார்த்த பாலசுப்ரமணியம் தந்தைக்கு பிறகு அழியும் கலையை மீட்டெடுக்க விரும்பினார். தந்தை மறைவின் போது எம்.பில். படித்து விட்டு கல்லூரியில் உதவி பேராசிரியராக இருக்கும் பாலசுப்ரமணியம் பகுதிநேர வேலையாக மண்பாண்டங்களை தயாரிப்பதை செய்ய தொடங்கினார். உயிருடன் இருந்தவரை மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை தொட்டுப்பார்க்கக்கூட தந்தை விடாததால் பாலசுப்ரமணியத்திற்கு, மண்பாண்டத்தை வடிவமைக்கத் தெரியவில்லை.

இதனால் தனது உறவினரிடம் மண்பாண்டங்களை தயாரிக்க கற்றுக்கொண்டார். தண்ணீர் குடிக்கும் டம்ளர் முதல் அடுப்பு, சமையல் பாத்திரங்கள், சாமி சிலைகள், துளசி மாடம் என ஒவ்வொரு பொருளிலும் கலை நுணுக்கங்களை பாலசுப்ரமணியம் கற்றுத் தேர்ந்தார். ஆரம்பத்தில் வடிவமைப்பு சரியாக வராமல் பொருட்கள் உடைந்து இழப்பு ஏற்பட்டாலும் மன தளராமல் மீண்டும் மீண்டும் செய்து பழகினார். அதிகாலை 5 மணிக்கே எழுந்து 9 மணி வரை மண் பாண்டங்களை செய்துவிட்டு, 10 மணிக்கு கல்லூரிக்குச் சென்று விடுவார். பிறகு கல்லூரியை விட்டு வந்ததும் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மீண்டும் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பாலசுப்ரமணியம்  கல்லூரிக்கு சென்றதும், அவர் தயாரித்த பொருட்களை அவரது தாயும், மனைவியும் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியின் போது மிகுந்த சிரமத்திற்கு பிறகே கட்டணம் செலுத்தி மண் எடுத்ததாக கூறும் பாலசுப்ரமணியன்,  தற்பொழுதுள்ள அரசு அருகில் உள்ள நீர்நிலைகளில் எந்தவித கட்டுப்பாடும்  இன்றி மண் எடுத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

பாலசுப்ரமணியத்தின் கலைத்திறனைப் பார்த்து துபாயில் உள்ள தமிழர்கள் ஆர்டர் செய்து மண்பாண்டங்களை வாங்கியுள்ளனர்.  பராம்பரியத்தை விரும்பிய துபாயில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்கும் பாத்திரங்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளன. அவர்கள் கேட்கும் வடிவமைப்பிலும், அளவிலும் பாத்திரங்களை தயாரித்து பாலசுப்ரமணியம் கொடுத்துள்ளார். இதேபோன்று, ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டாஞ்சோறு செய்யவும், யூடியூபில் மினியேச்சர் சமையல் செய்து காட்டுபவர்களும் சிறு பாத்திரங்கள் செய்து தரக்கோரி பாலசுப்ரமணியதை அணுகியுள்ளனர். 10 பொருட்களாக இருந்தாலும் அதை தவிர்க்காமல் நேரத்தைச் செலவிட்டு வாடிக்கையாளரின் விருப்பப்படி பொருட்களை வடிவமைத்து கொடுத்து வருவதாலேயே பாலசுப்ரமணியத்தின் புகழ் துபாய் வரை சென்றுள்ளது. பாலசுப்ரமணியத்தின் தொழில் நேர்த்தியை விரும்பி அதிமானோர் வர தொடங்கியுள்ளனர். சில நேரங்களில் அளவுக்கு அதிகமான ஆர்டர்கள் வந்து விடுவதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போவதாகவும் பாலசுப்ரமணியம் கூறுகிறார். சாதாரண மண் என்கிறார்கள், ஆனால் இதில் எவ்வளவு உழைப்பை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு லாபத்தை பார்க்க முடியும் என்கிறார்.

பொதுவாக மண்பாண்ட தொழிலாளர் உழைப்பால் மட்டுமின்றி உற்பத்திக்கு தேவையான மண்ணை எடுப்பதில் ஏற்படும் சிரமங்களையும் பாலசுப்ரமணியம் பதிவு செய்தார். மன்னர்கள் காலத்தில் தொடங்கி தற்பொழுது வரை நீர்நிலைகளுக்கு அருகில் வசித்து வருவோர் மட்டுமே இந்தத் தொழிலை செய்து வருகின்றனர். வாழ்வாதாரத்திற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்கும் நிலையில், சிலர் சட்டத்திற்கு புறம்பாக இவர்களின் பெயரை சொல்லி ஏரி, குளங்களில் உள்ள மண்ணை அள்ளி செல்கின்றனர். இதனால் மண்பாண்ட தொழிலையே நம்பி இருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சட்டவிரோதமாக நீர்நிலைகளில் மண் எடுக்க அரசு தடை விதிப்பதால், வாழ்வாதாரத்திற்காக மண் எடுக்க செல்லும் தொழிலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அப்படி மண் எடுத்தாலும் மாசுகட்டுப்பாட்டு வாரியம், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்ற பின்னரே குறிப்பிட்ட அளவு மட்டுமே மண் எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியின் போது மிகுந்த சிரமத்திற்கு பிறகே கட்டணம் செலுத்தி மண் எடுத்ததாக கூறும் பாலசுப்ரமணியன்,  தற்பொழுதுள்ள அரசு அருகில் உள்ள நீர்நிலைகளில் எந்தவித கட்டுப்பாடும்  இன்றி மண் எடுத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

ஒரு பானை செய்தால் அதற்கான கூலியைப் பெற 8 நாட்கள் காத்திருக்க வேண்டும்.  8 நாள் உழைப்பிற்கு பிறகே அந்த பானைக்கான ஆதாயம் கிடைக்கும் என்பதாலும், கடின உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதாலும், உடனடியாக லாபம் பார்க்க முடியாது என்பதாலும் மெல்ல, மெல்ல மண்பாண்ட கலை  அழிந்து வருவதாக வேதனை தெரிவித்தார் பாலசுப்ரமணியம். எனினும் தந்தைக்கு பிறகு தானும், தனக்கு பிறகு தனது மகளுக்கும் இந்தக் கலையை கற்றுக் கொடுத்து மண்பாண்டம் தயாரிக்கும் கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பேன் என உறுதியாக கூறினார் பாலசுப்ரமணியன். உருவமில்லா மண்ணிற்கு உருவம் கொடுக்கும் இந்தப் பணியைச் செய்ய ”மண்ணுயிர் கலைக்கூடம்” என்ற பெயரை வைத்திருப்பதாக பெருமையுடன் கூறுகிறார் கூறுகிறார்  பாலசுப்ரமணியம்.  பி.எச்டி படித்து, கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தாலும் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் அழிந்து வரும் மண்பாண்டக் கலையை அழியாமல் காத்து வருகிறார் முனைவர் பாலசுப்ரமணியம்.


Share the Article

Read in : English