Read in : English

Share the Article

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போனார்கள். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வந்தபோது, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. தடுப்பூசி வந்தாலாவது பிரச்சினைத் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். தடுப்பூசி போடத் தயங்கிய மக்கள், முதல் டோஸை போட்டார்கள். இரண்டாவது டோஸையும போட்டார்கள்.

இதற்கிடையில், கொரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக்க குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தார்கள். ஆனால், மக்களின் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. மழை வெள்ளம் மக்•களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அது ஓய்ந்து சற்று இளைப்பாறி இருந்த வேளையில், கொரோனா உருமாறி ஒமைக்ரான் என்ற புதிய தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்கூட பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது, தமிழகத்தில் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் நோய் பரவலை தடுப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இரண்டு நாட்களில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவுக்கு மதுரை வருவதாக இருந்த பிரதமர் மோடி தனது வருகையை ரத்து செய்து விட்டார்.

முதல் முறையாக பார்வையாளர்கள் இன்றி அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிகட்டு நடைபெற உள்ளது. பொது இடங்•ளில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இப்படி, நோய் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பழைய கட்டுப்பாட்டு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பொது முடக்க காலத்தில் ஓடிடி மூலம் படம் பார்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளபோதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க விரும்பும் ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. தீபாவளியையொட்டி நூறு சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்படம் திரையரங்கில் வெளியானது. தன்னை தல என்று அழைக்க வேண்டாம், அஜித் குமார் என்றோ, அஜித் என்றோ, ஏகே என்றோ அழைத்தால் போதும் என்று அண்மையில் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் அஜித் நடத்த வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

படத்தின் 1.27 நிமிடங்கள் ஓட கூடிய இந்தப் படத்தின் டீஸரில், முதல் காட்சியில் பைக் ஒன்று விண்ணில் பறப்பது போலவும், அதனை தொடர்ந்து நெருப்பு பற்றி எரிய அஜித் தோன்றுவது போன்ற காட்சிகளைப் பார்த்து உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் பொங்கல் ரீலீஸை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பை அடுத்து, அந்தப் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்தது. இதையடுத்து, சமூக வலைத் தளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகிறார்கள்.

கொரோனாவும், ஒமைக்ரானும் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள். எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொங்கலன்று பட்டாசு வெடிகளுடன் படம் பார்க்க திரையரங்குகளுக்கு வரும் ஆசையுடன் இருந்த அஜித் ரசிகர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள், கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடை மூடப்பட்டபோது, தவித்துப் போன மதுப் பிரியர்களைப் போல. அவரவர் பிரச்சினை அவரவர்களுக்கு. இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு வலிமை இல்லாத பொங்கல். இது அவர்களுக்கு ருசிக்காது.


Share the Article

Read in : English