Read in : English

Share the Article

மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவுக்கு ஒரு புத்துயிர்ப்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அஇஅதிமுக மோசமான நிலையில் இருக்கிறது. திராவிடக் கட்சிகள், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களை ஒன்றுதிரட்டுதல், அவர்களின் நலம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியலைக் கட்டமைத்து வைத்திருக்கின்றன. இந்த அரசியல் எவ்வளவு பொருத்தமானது? இந்தக் கட்சிகளின் எதிர்காலம்தான் என்ன?

இன்மதி, இந்த இரண்டுகட்சிகளின் எதிர்காலம் பற்றி பேராசிரியர் நரேந்திர சுப்ரமணியனிடம் விவாதித்தது. அவர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் பேராசிரியராக  பணிபுரிகிறார். சுப்ரமணியன் இந்தியாவில் இனம், தேசியவாதம், மதம், பால் ஆகியவற்றைச் சார்ந்த அரசியலை பற்றி ஆராய்ச்சி செய்தவர்.

அவரது படைப்புகள் அடையாள அரசியல், தேர்தல் போட்டி, பொதுக்கலாச்சாரம், மற்றும் கொள்கை ஆகியவற்றின் பங்களிப்பை ஆராய்கின்றன. “Ethnicity and Populist Mobilization: Political Parties, Citizens and Democracy in South India” (இனவியல் மற்றும் வெகுமக்களியத் திரட்சி: தென்னிந்தியாவில் அரசியல் கட்சிகள், குடிமக்கள், மக்களாட்சி) என்ற அவரது புத்தகம் இந்தியாவின் சில பகுதிகளில் மொழியை மையப்படுத்தி ஜனங்களை திரட்டும் வழக்கம், சாதிப்பதாகைகள் பலப்படுத்திய ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசுகிறது.

பேராசிரியர் நரேந்திர சுப்ரமணியன்

நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:

கேள்வி: அஇஅதிமுகவின் எதிர்காலம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அஇஅதிமுக தமிழ்நாட்டின் தெற்கிலும், மேற்கிலும் காங்கிரசின் இடத்தைப் பிடித்து வளர்ந்தது; வடக்கிலும், காவிரிப்படுகைப் பகுதியிலும் திமுக கம்யூனிஸ்ட்டுகளை ஓரங்கட்டியது என்று நீங்கள் உங்களது நூலில் காட்டியிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட தனித்தனியான வாக்குவங்கிகள் இருக்கும்போது, அஇஅதிமுகவின் வாக்குவங்கி என்னவாகும்?

பதில்: முதலில் ஒரு விளக்கம்: 1960கள் வரை காங்கிரஸ் மாநிலம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஒருகட்சி. 1950-களில் காவிரிப்படுகைப் பகுதிகளில் காங்கிரஸ்க்கு இருந்த ஒரே எதிரி கம்யூனிஸ்ட்டுகள்தான். ஆனால் 1960-களிலிருந்து காங்கிரஸ் தன் பிரதான இடத்தைத் திமுகவிடம் இழந்தது. 1950-களில் வடதமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளிடமிருந்து பலமானதோர் போட்டி்யைக் காங்கிரஸ் சந்தித்தது. ஆனால் 1960-களிலிருந்து திமுகதான் அதன் பிரதான எதிரியாக மாறியது. அஇஅதிமுக தெற்கிலும், மேற்கிலும் 1970-களிலிருந்து 1990-கள் வரை ஆகப்பலமானதோர் கட்சியாக வளர்ந்தது. ஜெயலலிதா மறையும்வரை அது தன் பலத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

இந்த வருட ஆரம்பத்தில், ஜெயலலிதாவுக்குப் பிந்திய முதல் சட்டசபைத் தேர்தலில் அஇஅதிமுக மேற்கில் பலமான கட்சியாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குள் தெற்கில் திமுக அதை வென்றுவிட்டது. திமுகவின் வாங்குவங்கியை விட அஇஅதிமுகவின் வாங்குவங்கி அடுத்தடுத்து ஆட்சிசெய்த அதன் இரண்டு தலைவர்களான எம்ஜியார், மற்றும் ஜெயலலிதாவின் தனிப்பட்ட மக்கள்செல்வாக்கைச் சார்ந்து இருந்தது. 2016- லிருந்து அஇஅதிமுகவில் அவர்களுக்கு இணையான ஒரு தலைவர் உருவாகவில்லை. 2016-லிருந்து 2021 வரை ஆட்சியில் இருந்தபோது அஇஅதிமுக-வின் கொள்கைகள் பலவகைகளில் பலமற்றுதான் இருந்தன. என்றாலும் 2016-லிருந்து (அப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தார்)
இப்போதைய 2021 வரை அஇஅதிமுக-வின் வாக்குவிகிதம் 9.1 சதவீதத்தை மட்டுமே இழந்திருக்கிறது. அது கடந்த சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்தது.

பல தசாப்தங்களில் திராவிடக்கட்சிகள் பின்பற்றிய ஒருசில கொள்கைகளை வாக்காளர்கள் எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்கள் ஆதரவை பலமாகக் கட்டமைக்கப்பட்ட திராவிடக் கட்சிகளுக்குத் தராமல், மிகவும் பழசான, கிட்டத்தட்ட நோய்வாய்ப்பட காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கோ அல்லது 2016-லிருந்து எல்லோரையும் கவரும் புதிய அமைப்புகளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளுக்கோ தருவதற்குத் தயாராக இல்லை. மக்களின் ஆதரவை நீண்டகாலமாகத் திராவிடக் கட்சிகள் தக்கவைத்துக் கொண்டன. அதற்கு முக்கிய காரணங்கள்: உயர்கல்வியிலும் வேலையிலும் ரிசர்வேஷன் (69 சதவீதம்) போன்ற ஓரளவு சமதர்மக் கொள்கைகளை அவை கடைப்பிடித்தன; ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்தும் மதிய உணவுத் திட்டம், கல்வி, ஆரம்பச் சுகாதாரம் ஆகிய துறைகளில் செய்த அதிக முதலீடு, 2016 வரை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமப்புறத்து வேலைவாய்ப்புத் திட்டம்; இவற்றை எல்லாம் திராவிடக் கட்சிகள் தொடர்ந்தன.

அதே வேளையில் 1990- களிலிருந்து மத்திய அரசின் புதிய தாராளமயக் கொள்கைகளையும் திராவிடக் கட்சிகள் அனுசரித்து நடந்துகொண்டன. கடந்த பத்தாண்டில் திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக மிகவும் வெற்றிபெற்ற கட்சிகள் நாம் தமிழர் கட்சியும் (என்டிகே), வன்னியர் அமைப்பான பாட்டாளி மக்கள் கட்சியும்தான் (பாமக). என்டிகே கடந்த தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாமகவிற்கான வாக்காளர் ஆதரவு 1991-ல் 5.9 சதவீதமாக இருந்தது. இது 2021-ல் 3.8 சதவீதமாக சரிந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், திராவிடக் கட்சிகளுக்கான மாற்றுக்கட்சிகள் மிகவும் பலகீனமாக இருக்கின்றன.

ஆனாலும் பின்வரும் காரணங்களால் மாற்று அரசியல் சக்திகளுக்கு இடமிருக்கிறது: 1990-களிலிருந்து திராவிடக் கட்சிகள் ஜனங்களைத் திரட்டுவதை நிறுத்திவிட்டது; அதனால் சில குழுக்கள் கூடி அலைகளை ஏற்படுத்துகின்றன. இடைநிலைச் சாதிகள், தலித்துகள், குறிப்பிட்ட தொழில்ரீதியிலான, பிராந்தியக் குழுகள் குடிமைச் சமூக அமைப்புகள் மூலம் பெரிதும் வளர்ந்துவருகின்றன.

மக்களின் ஆதரவை நீண்டகாலமாகத் திராவிடக் கட்சிகள் தக்கவைத்துக் கொண்டன. அதற்கு முக்கிய காரணங்கள்: உயர்கல்வியிலும் வேலையிலும் ரிசர்வேஷன் (69 சதவீதம்) போன்ற ஓரளவு சமதர்மக் கொள்கைகளை அவை கடைப்பிடித்தன

இவற்றை சிந்திக்கக்கூடிய மாற்றுக்கட்சிகள் பயன்படுத்தக்கூடும். புதிய தாராளமயக் கொள்கைகளை திமுகவும், அஇஅதிமுகவும் ஆதரித்ததால் மக்களிடையே கொஞ்சம் அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், நான் மேலே சொன்ன ஓரளவு சமதர்ம மேம்பாட்டுக் கொள்கைகளைப் பேணிக்காத்து அந்த அதிருப்தியைத் திராவிடக்கட்சிகள் சரிசெய்தன. கடந்த ஆறு அல்லது ஏழு தசாப்தங்களில் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தின்மீது ஆழமானதோ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதைப் போன்றதோர் தாக்கத்தை அடுத்த தலைமுறையில் ஏற்படுத்தினால் மட்டுமே மாற்று அரசியல் சக்திகளுக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

இதன் காரணமாகத்தான் பொதுஜன வெளியில் பிரபலமான ஆளுமைகளான ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மேலும் என்டிகே, பாமக போன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனரஞ்சகப் பிரபல்யம் இல்லாத போதும், அவை உயர்ந்ததோர் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன.

கடந்த ஆறு அல்லது ஏழு தசாப்தங்களில் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் அரசியல்
கலாச்சாரத்தின்மீது ஆழமானதோ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கேள்வி: இந்த இரண்டு திராவிடக் கட்சிகளை நீங்கள் வெறும் வெகுமக்களியக் கட்சிகள் என்று சொல்வீர்களா? இல்லை, சில நிபுணர்கள் கருத்தாக்கம் செய்வதுபோல திராவிடப் பொருளாதாரம் என்று ஒன்று உள்ளதா?

பதில்: என்னைப் பொருத்தவரையிலும், மற்றும் வெகுமக்களியவாத ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரையிலும், வெகுமக்களியம் என்பது பொருளாதாரக் கொள்கையிலிருந்து விலகிப்போன சல்லிசான அரசியல் அல்ல. வெகுமக்களிய சமூக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும், தாங்கள் திரட்டிக் கொண்டுவரும் மெய்நிகர் அல்லது மெய்யான ஜனசமூகத்தை, அறவொழுக்கமற்ற அல்லது கலாச்சார வேர்கள் அற்ற மேல்தட்டுவர்க்கத்திற்கு எதிராக முன்னிறுத்துகின்றன. இந்தியாவிலும், மற்ற இடங்களிலும், அந்த மாதிரியான தரிசனங்கள் பல்வேறு சமூகக் கூட்டணிகளைத் திரட்டியுள்ளன; பல்வகையான அரசியல் கட்சிகளை உருவாக்கி உள்னன; பல்வேறு கொள்கைத் திட்டங்களை எழுச்சிபெற
வைத்திருக்கின்றன.

இந்தியாவில் வெகுமக்களியம் மூன்று அலைகளில் வந்தது. முதல் அலை காலனிய ஆட்சியின் பிந்திய தசாப்தங்களில் நிகழ்ந்தது. காந்தியவாத தேசியவாதமும், இடைநிலை, மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளின் இயக்கமும்தான் அந்த அலையில் எழுந்த பிரதான வெகுமக்களிய சக்திகள். காலனிய ஆட்சிக்குப் முந்திய, கற்பனையான, சுயசார்புக் கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதாரத்தைக் காந்தி மறுமதிப்பீடு செய்தார். காலனிய ஆட்சியில் நிகழ்ந்த நவீனமயமாதலின் விளைவாக அந்தச் சமூகப்பொருளாதாரம் நாசமாகி விட்டதாகச் சொல்லி, காந்தி ஒரு கூட்டுச்சக்தியை உருவாக்கினார். அதில் விவசாயிகளை, சின்ன விவசாயிகளை, கைவினைஞர்களை, உழைப்பாளிகளை, மற்றும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினரை, சாதியினரை, வெள்ளைக்கார ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களை எல்லாம் அவர் திரட்டினார்.

வெகுமக்களிய அம்சங்கள் கொண்ட, மத்திய, மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளின் இயக்கங்கள் மேலெழுந்தன. இன்றைய மஹாராஷ்ட்ராவில் சத்ய ஷோதக், இன்றைய கேரளாவில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம், இன்றைய தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம்/திராவிடர் கழகம் ஆகியவை நடுத்தர சாதிகளின் இயக்கங்கள்.

தாழ்த்தப்பட்ட சாதிகளின் இயக்கங்கள் பின்வருவன: பஞ்சாபில், ஹரியானாவில், உத்தரபிரதேசத்தில் சமார்/ஜாதவ் சாதி மக்களைத் திரட்டிய அட்-தர்ம் என்ற இயக்கம்; கேரளாவில் புலையர்களை, பறையர்களை ஒன்றுதிரட்டிய சாது ஜன பரிபாலன யோகம்; மஹாராஷ்ட்ராவில் மகர் என்ற இனமக்களுக்கிடையே புகழ்பெற்ற அனைந்திந்திய பட்டியலினத்தார் ஃபெடரேஷன் அல்லது சுயாதீன உழைப்பாளர்க் கட்சி அல்லது இந்தியக் குடியரசுக் கட்சி; உத்தரபிரதேசத்தில் சமார்கள்; இன்றைய வங்கதேசத்திலும், மேற்கு வங்காளத்திலும் நாமசூத்ராக்கள் மற்றும் ராஜ்பன்ஷிக்கள்.

சுதந்திரத்திற்குப் பின்பு, 1970-களில் இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் வெகுமக்களிய அம்சங்களை மேற்கொண்டது. ‘கரிபி ஹடோவா’ (வறுமையை ஒழிப்போம்) என்ற முழக்கம் அப்போது பிரபல்யமானது, வங்கிகள் தேசியமயமாக்கல் போன்ற தொடர்ச்சியில்லாத வறுமைக்கெதிரான சில கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஏழைகளுக்குச் சிறுகடன்கள் வழங்கும் நோக்கத்துடன் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன என்று சொல்லப்பட்டது. காங்கிரஸ் வெகுமக்களிய அம்சங்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவில்லை. என்றாலும், 1960-களிலிருந்து மாற்று இயக்கங்களும், கட்சிகளும் வெகுமக்களியத்தைப் பலமாகக் கையில் எடுத்துக் கொண்டன. இந்த வெகுமக்களிய சக்திகள் சாதியை முன்னிறுத்தின.

ஜனதா தளம், சமாஜ்வாடி பார்ட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற சமதர்மக் கட்சிகள், முக்கியமாக நடுத்தர சாதிக் கட்சிகள், வெகுமக்களிய சக்திகளுக்குள் அடங்கும். பகுஜன் சமாஜ் பார்ட்டி போன்ற தாழ்த்தப்பட்ட சாதிக் கட்சிகளும் வெகுமக்களிய சக்திகள்தான். மொழியை முன்னிறுத்தின தெலுங்குத் தேசம், அஸ்ஸாம் கண பரிஷத் போன்ற கட்சிகள். மொழியையும், சாதியையும் களத்தில் இறக்கிவிட்டன திமுகவும். அஇஅதிமுகவும். குறிப்பிட்ட வளர்ச்சிச் திட்டங்களுக்கும், நிறுவனமயமாக்கல் நோக்கங்களுக்கும் எதிராக எழுந்த வெவ்வேறு இயக்கங்களிலும் வெகுமக்களிய அம்சங்கள் இருந்தன.
உதாரணத்திற்கு, இமாலயப்பகுதிகளில் மரம் வெட்டுவதற்கு எதிராக, 1970- களில் கேரளாவில் சைலண்ட் பள்ளத்தாக்குத் தேசிய பூங்காவின் பல்லுயிர்மையை (பயோடைவர்சிட்டியை) அச்சுறுத்திய நீர்மின்சாரத் திட்டத்திற்கு எதிராக, நர்மதா நதியின் குறுக்கே அணைகட்டுவதற்கு எதிராக, 1990-களிலிருந்து ஒடிஷாவில் மண்தோண்டும் திட்டங்களுக்கு எதிராக, 2020-21- ல் வேளாண்மை மானியங்களை நிறுத்தும் திட்டங்களுக்கு எதிராக, வேளாண்மைச் சந்தையை நிறுவனமயமாக்கும் திட்டங்களுக்கு எதிராக எழுந்த எல்லா இயக்கங்களிலும் வெகுமக்களிய அம்சங்கள் இருந்தன.

திராவிடக் கட்சிகள் கொடுத்த வெகுமக்களிய, கொள்கை வாக்குறுதிகள் சில நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட பிற சாதிகளுக்கான (ஓபிசி) இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது; பட்டியலினத்தார் மற்றும் மலைச்சாதியினருக்கான இடஒதுக்கீடு 16-லிருந்து 19 சதவீதமாக ஏற்றப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் மதிய உணவு, ஆரம்பக் கல்வி வளர்ச்சி, ஆரம்பநிலைச் சுகாதார மேம்பாடு, கூலியுணவு வழங்கல், கிராமப்புற வேலைவாய்ப்பு ஆகிய சாதி இலக்கில்லாத, நலவாழ்வு, மற்றும் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வெற்றி பெற்று பின்பு விரிவாக்கமான மதிய உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களிலும் கொண்டுவரப்பட்டது. அதைப் போன்றதோர் தேசிய அளவிலான திட்டம் ஏழைகளின், குறிப்பாக தலித்துகளின் போஷாக்கை, ஆரோக்கியத்தை, கல்வியை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அது பிரமாதமான விளைவை ஏற்படுத்தவில்லை.

1970-களிலும், 1980-களிலும் திராவிடக் கட்சிகள் மேற்கொண்ட வளர்ச்சிக் கொள்கைகள், பரமஏழைகளான தலித்துகளை, ஆதிவாசிகளைக் காட்டிலும், முன்னேறிக்கொண்டிருந்த நடுத்தர அஸ்தஸ்து கொண்ட இடைநிலைச் சாதியினர்களுக்கே பலனளித்தன  

1980-களிலிருந்து தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் முதலீட்டை அதிகரித்தது. எஸ்சி, எஸ்டி வகுப்பினர்களுக்கான கல்வி மானியங்களையும் அது அதிகரித்தது. விளைவாக இந்தியாவிலே மூன்றாவது இடத்தைப் பிடித்தது தமிழ்நாட்டின் ஆரம்பக்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை. மேலும்
தலித்துகள் மற்ற இனத்தினர்க்கு இணையாக கல்வியில் முன்னேற முடிந்தது. ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் உயர் கல்விக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ வருவது குறைவாகவே இருக்கிறது.

ஆரம்ப சுகாதாரத் துறையில் அதிக முதலீடு, எல்லோருக்கும் சேவை கிடைக்கச் செய்வதற்கு முன்னுரிமை, அரசு கொடுக்கும் பலமான சேவைகளைப் பயன்படுத்தத் தாழ்த்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அமைப்புகள் – இவை தமிழ்நாட்டின் சிறப்பு அம்சங்கள். மேலும், மானிய உணவுத்தானியங்களைப் பரவலாக வழங்குதல், ஒவ்வொரு வீட்டுக்கும் நிலம், வீடு (சுமாரான தரமானாலும்), குறிப்பாக 2016 வரை கிராமத்து ஏழைகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்த,
வெற்றிகரமான தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், ஏழைகளின் சிறிய சொத்துக்களை உருவாக்க உதவிசெய்த பெண்கள் சுயநிதிக் குழுக்களின் பெருகிய எண்ணிக்கை – இவை எல்லாம் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் சாதனைகள் என்று சொல்லலாம்.

1970-களிலும், 1980-களிலும் திராவிடக் கட்சிகள் மேற்கொண்ட வளர்ச்சிக் கொள்கைகள், பரமஏழைகளான தலித்துகளை, ஆதிவாசிகளைக் காட்டிலும், முன்னேறிக்கொண்டிருந்த நடுத்தர அஸ்தஸ்து கொண்ட இடைநிலைச் சாதியினர்களுக்கே பலனளித்தன. உதாரணமாக, ஓபிஸி இடஒதுக்கீடு 25- லிருந்து 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்பட்டது. அதே சமயம், கொங்கு வேளாள கவுண்டர் போன்ற நல்ல நிலைமைச் சாதிகளில் இருக்கும் மக்களில் மேலும் 27 சதவீதத்தினர்க்கும் இந்த இடஒதுக்கீடு அதிகரிப்பின் பலன் அளிக்கப்பட்டது. அதன்பின் அந்தச் சாதியினர்கள் பிரதானமான பலனாளிகள் ஆனார்கள். ஒப்பீட்டளவில், எஸ்சி-எஸ்டி இடஒதுக்கீடு ஐந்தில் ஒருபாகம் அளவில்தான், அதாவது, 16-லிருந்து 19 சதவீதமாகத்தான் உயர்த்தப்பட்டது. இந்த இனத்தார்களின் அறிவிக்கப்பட்ட மக்கள்தொகை 21 சதவீதம். அதிக சம்பளம் கொடுக்கும் உயர்பணிகளில் எஸ்சி-எஸ்டி இடஒதுக்கீட்டில் இருப்பவர்களை விட ஓபிஸி இடஒதுக்கீட்டில்தான் அதிக அபேட்சகர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசின் சாதிசார்ந்த கொள்கைகள் முக்கியமாக நல்ல நிலைமையில் இருக்கும் மத்தியதரச் சாதிகளுக்கு மட்டுமே பலனளித்தன. சமயங்களில் ஒருசில தலித்துகளும், ஆதிவாசிகளும், மோசமான நிலையில் இருக்கும் சில ஓபிசி மக்களும் பலனடைந்திருக்கிறார்கள். வேளாண்மை நிலவுடமை, குத்தகைச் சீர்திருத்தம் எல்லாம் பெரும்பாலும் நடுத்தரச்சாதியினராகிய குத்தகை விவசாயிகளுக்கே நன்மை அளித்திருக்கின்றன. நீர்ப்பாசனம், மண்வளம் ஆகியவை குறைந்து போகும் போதும், நிலவுடமை உச்சவரம்பு கீழிறங்கும்போதும், நிலவுடமையாளர்கள் நிலத்தை விற்க வருவார்கள். அப்போது அந்த நிலத்தை வாங்கக் குத்தகைதார்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பான குத்தகையே உதவியிருக்கிறது. வேளாண்மைக்கு உதவும் பொருட்களான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, நீர்க்குழாய்கள், மின்சாரம், விவசாய எந்திரங்களுக்கான எண்ணெய். மற்றும் விவசாயக்கடன். கடன் தள்ளுபடி போன்றவற்றிற்குக் கொடுக்கப்பட்ட தாராளமான மானியங்கள் இடைநிலைச் சாதியினரின் மேம்பாட்டுக்கே மேலும் உதவியிருக்கின்றன. அடிமட்ட ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் குறைவான அளவிலே சொத்துக்கள் மறுவினியோகம் செய்யப்படுவதைத் திராவிடக் கட்சிகள் உறுதிசெய்தன.

நடுவண் அரசின் புதிய தாராளமயக் கொள்கையை 1990-களிலிருந்து திராவிடக் கட்சிகள் ஏற்றுக்கொண்ட காலக்கட்டத்திலிருந்து, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினர்க்குக் குறைவாகவே வளங்களை மறுவினியோகம் செய்தன அவை. நிறுவன முதலீடுகளிலேயே திராவிடக் கட்சிகள் கவனம் செலுத்தின. அப்போதுகூட, மறுவினியோகம், வெகுமக்களியம் சார்ந்த தங்களின் முந்தைய நிலைப்பாடுகளை அவை தக்கவைத்துக் கொண்டன. அப்படித்தான் அந்தக் கட்சிகளால் தங்களுக்கிருந்த பெரும்பாலான மக்கள் ஆதரவை இழக்காமல் கட்டிக்காக்க முடிந்தது. உதாரணமாக, 1989-ல், எஸ்டி வகுப்பினர்க்கு 1 சதவீத அடுக்கும், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் (எம்பிசி), சீர்மரபினர்க்கும் (டினோட்டிஃபைய்ட் கம்யூனிட்டி – –டிஎன்சி) 20 சதவீத அடுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டன; 2009-ல் 3 சதவீத அருந்ததியார் அடுக்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த ஃபிப்ரவரியில் பாமகவைக் குஷிப்படுத்த, அஇஅதிமுக அரசு எம்பிசி இடஒதுக்கீட்டில் 10.5 சதவீத அடுக்கை வன்னியர்களுக்குக் கொடுத்தது. ஆனல் அது நிச்சயமற்ற வினியோக விளைவை ஏற்படுத்தியது. ஏனென்றால் இதனால் டிஎன்சி இடஒதுக்கீடு 7 சதவீதமாகவும், மற்ற எம்பிசிகளின் இடஒதுக்கீடு 2.5 சதவீதமாகவும் குறைந்துபோனது. இடைநிலைச் சாதிகளுடன் திராவிடக் கட்சிகள் கொண்டிருந்த கூட்டணி தலித்துகளுடனும், ஆதிவாசிகளுடனும் ஏற்பட்ட மோதல்களில் மிகத்தெளிவாக வெளிப்பட்டது.
உதாரணத்திற்கு விழுப்புரம் (1978), வச்சாத்தி (1992), புலியூர் (1998), சங்கரலிங்கபுரம் (2001). நாயக்கன்கோட்டை, கொண்டாம்பட்டி (2012) ஆகிய இடங்களில் ஏற்பட்ட மோதல்களைச் சொல்லலாம். அதனால்தான், அதிகாரப்பூர்வமான ஒரு மதிப்பீட்டின்படி, 2010 வரை, அதாவது திராவிட இயக்க ஆட்சியில் ஐந்தாவது தசாப்தத்தில், தலித்துகளுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட வன்கொடுமைகளில் முதல் பத்து (டாப் டென்) மாநிலங்களில் தமிழ்நாடும் இருக்கிறது. முன்னேறிக்கொண்டிருக்கும் ஆளுமை கொண்ட குழுக்களோடு, அதாவது இடைநிலைச் சாதிகளுடன், கூட்டுசேரும் அதேவேளை, திராவிடக் கட்சிகளால் தங்களின் வெகுமக்களியவாதத்தின் அம்சங்கள் பலவற்றைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது ஒருசில வழிகளில். இது தங்களின் தேர்தல் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், சாதி, வர்க்க சமத்துவமின்மைக்கு ஏற்படும் சவால்களைச் சமாளித்து அடக்கிவைக்கவும் திராவிடக் கட்சிகளுக்கு இதுவரை உதவியிருக்கிறது.

கேள்வி: இப்போதைய தமிழக நிதிமந்திரி பொருளாதார நிலைபற்றி ஓர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதைப் புதிய தாராளமயக்
கொள்கைரீதியிலான விமர்சனம் எனலாம். அதன் பரிந்துரைகள் – தலைமுறைக்கு ஒருதடவை நிகழும் சீர்திருத்தங்கள் – புதிய தாராளமயக்
கொள்கை போலவே ஒலிக்கின்றன. உதாரணமாக, பேருந்துப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு 1996-2001-ல் கொண்டுவரப் பட்ட ஓய்வூதியத் திட்டமும் பாதிக்காரணம். இந்த நஷ்டத்தை அவர் பெரியதோர் பிரச்சினையாகப் பார்க்கிறார். புதிய தாராளமயக் கொள்கையைச் சார்ந்தவர் என்று கருதப்படக்கூடிய, ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்களை அரசு ஆலோசகர்களாக நியமித்திருக்கிறது. நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெகுமக்களியவாதத்தைக் கட்டமைத்து அதன்மேல் வாக்குவங்கியை உருவாக்கிக் காத்த திமுகவால் எவ்வளவு தூரம் இந்த புதிய ராளமயக்கொள்கைச் சாலையில் பயணிக்க முடியும்?

பதில்: தமிழ்நாட்டு நிதிமந்திரியின் பேச்சுக்களையும், சமீபத்து நிகழ்வுகளையும் நான் அவதானிக்கவில்லை. கடந்த சில மாதங்களின் நிகழ்வுகள் பற்றி என்வாதங்கள் எப்படி போகும் என்பதை நான் இப்போது நிறைய சொல்ல முடியாது. ஆனால் ஒன்று சொல்ல முடியும்: புதிய
தாராளமயக் கொள்கையும், வெகுமக்களியவாதமும் 1990-களிலிருந்தே பல்வேறு நாடுகளில் பல்வேறு வழிகளில் இணைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு டிரம்ப் (அமெரிக்கா), போல்சோனாரோ (பிரேசில்), மெனம் (அர்ஜெண்டினா), டியூடெர்டே (ஃபிலிப்பைன்ஸ்) ஆகியோரைச் சொல்லலாம். அப்போதிருந்து தமிழ்நாட்டிலும் இப்படித்தான் இருக்கிறது.

தொடரும்…


Share the Article

Read in : English