English தமிழ்

Share the Article

பெரும்பான்மை மக்களை தீண்டத்தகாதவர்களாக்கி, 19ம் நுாற்றாண்டில் கதவை அடைத்துக் கொண்டன கோவில்கள். ஏழை, எளிய, பின்தள்ளப்பட்ட, வாய்ப்பற்ற மக்கள், இறை வழிபாட்டுக்காக கோவில்களில் நுழைய முடியாத நிலை இருந்தது. அதை எதிர்த்த போராட்டங்களும், அடங்க மறுத்த நிகழ்வுகளும் பல இடங்களில் நடந்தன. பெரிய விளைவுகள் அப்போது ஏற்படாவிடிலும், அது பற்றிய சிந்தனை சமூகத்தில் பரவியது; பிரச்னையாக கனன்று கொண்டிருந்தது

கடவுள் உருவங்களை, வண்ண ஓவியங்களாக்கி, படி எடுக்கும் நுட்பமும் வளர்ந்துவந்தது. சிவன், பார்வதி, விநாயகர், மயில் ஏறிய முருகன், ல‌ஷ்மி, சரஸ்வதி போன்ற மாதிரி உருவங்கள் ஓவியமாக்கி, வண்ணத்தில் படி எடுக்கப்பட்டன. அவை, மத்திய தர பிரிவினரின் வீட்டு அறைகளை கோவிலாக மாற்றின.

இந்த நிலையில், ஐரோப்பிய தொழில் நுட்பங்கள், இந்தியாவில் புகுந்து, பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. அச்சு இயந்திரமும் அவற்றில் ஒன்று. அதன் ஒரு பகுதியாக கடவுள் உருவங்களை, வண்ண ஓவியங்களாக்கி, படி எடுக்கும் நுட்பமும் வளர்ந்துவந்தது. சிவன், பார்வதி, விநாயகர், மயில் ஏறிய முருகன், ல‌ஷ்மி, சரஸ்வதி போன்ற மாதிரி உருவங்கள் ஓவியமாக்கி, வண்ணத்தில் படி எடுக்கப்பட்டன. அவை, மத்திய தர பிரிவினரின் வீட்டு அறைகளை கோவிலாக மாற்றின.

அதாவது, ‘ஓலியோகிராப்’ என்ற அச்சுப் பதிவுத் தொழில்நுட்பம் மூலம், ஓவியங்கள் பன்மயமாக்கப்பட்டன. புனித கடவுள் உருவங்கள், காலண்டர், சோப்பு விளம்பரங்களிலும், வணிக நிறுவன அட்டையிலும் இடம் பெற்று வீடுகளில் புகுந்தன.அவை மத்தியதர வர்க்க குடும்ப வீடுகளில் பக்தி, பணிவை கலந்து கொடுத்தன. ஆலய நுழைவுப் போராட்டம் சாதிக்க முடியாததை, கடவுள் உருவ ஓவியங்கள் பக்தியில் மற்றொரு திசையைக் காட்டின.

ஓவியர் ராஜா ரவிவர்மா

அந்த அடிச்சுவடு சற்று சுவாரசியமானது. தைல வண்ணத்தால், கான்வாசில் தீட்டப்பட்ட ஓவியங்களை, காகிதத்தில் அச்சிடும் ஓலியோகிராப் தொழில்நுட்பம், ஜெர்மானியரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவிலும் அடி எடுத்து வைத்தது.

அந்த காலத்தில் பிரபலமாக விளங்கிய ஓவியர் ராஜா ரவிவர்மா கேரளாவை சேர்ந்தவர். ஓவியக் கலையின் மேற்கத்திய நுட்பத்தை உள்வாங்கி, இந்துக் கடவுள்களை, கேரள பெண் -– ஆண் மாதிரிகளில் சித்தரித்து, ஓவியங்களாக உயிரூட்டினார். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், மேல்தட்டுச் சமூகம் அவரது கலை வண்ணத்தைக் கொண்டாடியது. பக்திபூர்வமாக ஏற்றது

கேரளா திருவாங்கூர் சமஸ்தானம், கிளியமனுாரில் ராஜ குடும்பத்தில், 1848ல் பிறந்தார் ராஜா ரவிவர்மா. திருவாங்கூர் அரண்மனை நுாலகத்தை பயன்படுத்தும் அனுமதியை அவரது, 13 வயதில் பெற்றார். அங்கிருந்த புத்தகங்களில் இத்தாலிய ஓவியர்களின் முப்பரிமாண ஓவியங்களைக் கண்டார். அதன் நுட்பத்தை அறிந்து அது போல ஓவியம் தீட்டும் ஆர்வம் கொண்டார். அதற்காக முயற்சி செய்தார்.

ஐரோப்பிய முறை ஓவிய நுட்பங்களை, திருவாங்கூர் அரசவை ஓவியர் ராமசாமி நாயக்கரிடம் கற்க முயன்றார். அவர் மறுக்கவே அரசவையில் இருந்த டச்சு ஓவியர் தியோடர் ஜென்சன் என்பவரிடம் முயன்றார். அவரும் ஓவிய நுட்பங்களை, சிறுவனான ரவிவர்மாவுக்கு கற்றுக் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் மனம் தளர்ந்துவிடவில்லை ரவிவர்மா. திருவாங்கூர் சமஸ்தான மகாராஜா ஆதரவில் ஒரு சலுகை கிடைத்தது. அதாவது, ஓவியர் தியோடர் ஜென்சன், ஓவியம் தீட்டும்போது பக்கத்தில் இருந்து பார்க்கலாம் என்பதே அந்த சலுகை. அந்த சலுகையை பயன்படுத்தி கவனமாக நுட்பங்களை அறிந்தார் ரவிவர்மா.

மலையாளம், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளை அறிந்திருந்த ராஜா ரவிவர்மா, கல்விக் கடவுளான சரஸ்வதியை, ஓவியமாக்கினார். அந்த பெண் ஓவியம், கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்து வீணை இசைப்பது போல் அமைத்தது

ஐரோப்பிய யதார்த்தபாணி ஓவியம் தீட்டும் நுணுக்கங்களை மட்டுமின்றி, தஞ்சாவூர் ஓவியம், இசை, நடனங்களையும் நன்கு கற்றார். இந்த கலைகளில் தேர்ச்சி பெற, ஒன்பது ஆண்டுகள் பிடித்தன. மலையாளம், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளை அறிந்திருந்த ராஜா ரவிவர்மா, கல்விக் கடவுளான சரஸ்வதியை, ஓவியமாக்கினார். அந்த பெண் ஓவியம், கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்து வீணை இசைப்பது போல் அமைத்தது. இது போல் அப்போது பிரபலமாக விளங்கிய கடவுள் உருவங்களையும் ஓவியமாக வரைந்தார்.

ரவிவர்மாவை, 1888ல் அரண்மனை விருந்தினராக அழைத்த பரோடா மன்னர் கெய்க்வார்ட், ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதை காட்சிகளை, 14 ஓவியங்களாகப் படைக்க வைத்தார். அவற்றை, பரோடாவின் தனிச் சொத்தாக மாற்றிக்கொண்டார்.

தனது ஓவிய படைப்புகளை விரும்பியோருக்கு படி எடுத்து விற்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார், ராஜா ரவிவர்மா. அதற்காக, 50ஆயிரம் ரூபாய் முதலீட்டில், லிதோகிராப் அச்சுக்கூடம் ஒன்றை, 1894ல், மும்பையில் ஒரு பங்குதாரருடன் இணைந்து நிறுவினார்.
ஓலியோகிராப் முறையிலான படி எடுப்புக்கும் தொழில் நுட்பத்துக்கு ரவிவர்மா வரைந்த சகுந்தலாவின் பிறப்பு என்ற ஓவியம் முதலில் பயன்படுத்தப்பட்டது. இது, ஜூலை 12, 1894ல் வண்ண அச்சு படிகளாக எடுக்கப்பட்டது. ஒரு படம், ஆறு ரூபாய் வீதம் விற்கப்பட்டது. பின், ல‌ஷ்மி, சரஸ்வதி ஓவியங்கள், இதே முறையில் படிகளாக எடுத்து, இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டன.

பெண் கடவுள் ஓவியங்கள் வரைய மாடலாக, ரவிவர்மாவுக்கு கோவாவைச் சேர்ந்த ராஜீவ்பாய் மூல்காவ்ங்கர் இருந்தார்.

பிளேக் நோயால் மும்பை, 1898ல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த அச்சுக்கூடம், காட்கோபர் பகுதிக்கு மாற்றப்பட்டது. பின், ஒரு ஜெர்மானியருக்கு விற்கப் பட்டது. அந்த ஜெர்மானியர், கடவுள் படங்களை, காலண்டர், அஞ்சல் அட்டை, சீட்டுக்கட்டு, தீப்பெட்டி அட்டை போன்றவற்றில் விளம்பரங்களாக அச்சிட்டு பயன்படுத்தினார்.

அதன் மூலம் இந்தியா முழுவதும் கடவுள் ஓவியங்கள் பரவின. மத்திய தர பொருளாதார அந்தஸ்துள்ள குடும்ப வீடுகளில் எளிதாக புகுந்து வீட்டின் அறைகளை அலங்கரித்தன.
துவக்க காலத்தில் ஓலியோ கிராப் முறையில் அச்சிட்ட ஓவியங்களில், 130 படங்கள் சென்னை சி.பி.ராமசாமி பவுண்டேஷனில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் ரவிவர்மா வரைந்த ஓவியங்கள்.
கடவுள் உருவங்களை பாமரருக்கும் பரிச்சியமாக்கிய ஓவியர் ராஜா ரவிவர்மா, நீரிழிவு நோயால் பாதிக்ப்பட்டு, 58ம் வயதில் அக்டோபர் 2, 1906ல் மரணமடைந்தார்.

ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்கள் மதத்தில் ஒரு மௌனப் புரட்சியை, ஓலியோகிராப் தொழில் நுட்பம் மூலம் நிகழ்த்தியது. இந்தியாவில், கடவுள்கள் உருவங்கள் ஜனநாயகப்படும் பாதையாக அது அமைந்தது.


Share the Article