English தமிழ்

Share the Article

அண்மையில் தமிழ்த் திரைப்படத் துறையின் இரண்டு சம்பவங்கள் சமூக வலைத் தளங்களைப் பரவலாக ஆக்கிரமித்தன. முதலாவது, விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஷ்வினின் மேடைப் பேச்சு. அவர் முதன்முதலாக நாயகனாக நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் உரை அது. குக் வித் கோமாளி மேடை போல அந்த மேடையையும் நினைத்துக்கொண்டாரோ என்னவோ வாய்க்கு வந்ததை பேசினார். தான் நாற்பது கதைகளைக் கேட்டதாகவும், அவற்றைக் கேட்ட போதெல்லாம் தான் தூங்கிவிட்டதாகவும், மேடையில் இயல்பாகவும் காமெடியாகவும் பேசியதாக நினைத்துக் கிட்டத்தட்ட உளறினார். இதனால் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் கடும் கண்டனத்துக்கும் ஆளானார். மீம்ஸ் கிரியேட்டர்களோ அஷ்வினைக் கேலிசெய்து சரமாரியாக ட்ரோல் வீடியோக்களை வெளியிட்டு அவரை ஒருவழி பண்ணிவிட்டனர். வேறு வழியற்ற சூழலில் அவர், தான் பதற்றத்தின் காரணமாக அப்படிப் பேசியதாகவும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அறிவிக்கும் நிலைக்கு ஆளானார். ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை அதற்குள் இப்படிப் பேச எப்படித்தான் முடிகிறதோ எனத் திரைத்துறையினர் வருந்தினர்.

மற்றொரு சம்பவமோ சோகம் ததும்பிவழியக்கூடியது. தமிழ்த் திரைப்படத் துறையினர் பலரையும் இந்தச் சம்பவம் வருத்தம் கொள்ள வைத்தது. அது விஜயகாந்த் நடித்த, 1991இல் வெளியான மாநகர காவல் என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். தியாகராஜனின் மரணம். மரணத்தை விட அது நிகழ்ந்த விதம் எல்லோரையும் அனுதாபப்பட வைத்துவிட்டது. ஏவிஎம் தயாரித்த 150 ஆம் படமான மாநகர காவலை இயக்கிய தியாகராஜன் அந்தப் பட நிறுவனத்தின் வாசலருகே ஒரு தெருவில் இறந்து கிடந்தார் என்னும் தகவலால் பலரும் பரிதாபப்பட்டனர்.

அருப்புக் கோட்டையைச் சார்ந்த அவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தைப் போல் குத்துச் சண்டையை களமாகக் கொண்டு வெற்றி மேல் வெற்றி என்னும் படத்தை உருவாக்கியவர். பிரபு நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக சீதாவும் நடித்திருந்தார்கள். ரஜினி நடித்த மாவீரன் படத்தில் நடித்திருந்த தாராசிங் இந்தப் படத்தில் குத்துச் சண்டைப் பயிற்சியாளராக வேடம் தரித்திருந்தார். இந்தப் படத்தில் தியாகராஜன் எழுதிய வசனங்களில் இரண்டை இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவற்றுக்கு வேறு வண்ணம் கிடைக்கிறது. அவை:
“வாழ்க்கையில வெற்றி தோல்வி சகஜம்தான். அது மத்தவங்களுக்கு. ஆனா எனக்கு, தோல்வியும் பிடிக்காது, தோத்தவங்களையும் பிடிக்காது.”
“வெற்றியைத் தவிர வேற எதையும் விரும்பாதவன் நான்”

இப்படியான வசனங்களை எழுதிய அவருக்கு மாநகர காவல் படத்துக்குப் பின்னர் எந்த வெற்றியும் கிடைத்திருக்கவில்லை. வெற்றி மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டிய இயக்குநரான அவர் ஒரு விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று மீண்டிருக்கிறார். மீண்டும் எப்படியாவது ஒரு திரைப்படத்தை உருவாக்கிட வேண்டும் என்னும் நினைப்பிலேயே வட பழனியைச் சுற்றிச் சுற்றி அலைந்திருக்கிறார். திரைப்படத் துறையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே வாழ்ந்திருக்கிறார். அம்மா உணவகத்தில் உண்டு வாழ்நாளைக் கழித்திருக்கிறார். அப்படியோர் இயக்குநர் வாழ்ந்து வந்ததே அவரது மரணத்திற்குப் பின்னர்தான் வெளியுலகுக்கு தெரியவந்தது என்பதுதான் துயரம்.

இப்படித் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர் பரிதாபமான விதத்தில் உயிரைவிடுவது இது முதன்முறையன்று. ஒரு படத்தை இயக்கிவிட்டு அல்லது ஓரிரு படங்களை உருவாக்கிவிட்டு மீண்டும் வாய்ப்புத் தேடித் தேடியே வாழ்நாளைத் தொலைக்கும் இயக்குநர்களின் கதையும், எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சினிமா ஸ்டுடியோக்களையே சுற்றிவந்து மாண்ட நடிகர் நடிகைகளின் கதையும் ஒன்றிரண்டல்ல; எண்ணற்றவை.

அஷ்வின் நாற்பது கதைகளைக் கேட்டதாகக் கூறினாரே அப்படி அநேகக் கதைகளுடன் அஸ்வின் போன்ற நடிகர்களிடம் கதை சொல்லி அதற்கு ஒப்புதல் வாங்கிப் படமெடுத்து அது வெற்றிபெற்றபோதும் தொடர்ந்து படம் கிடைக்காத காரணங்களால் இப்படி இயக்குநர்கள் உயிரை விடுகிறார்கள். அதே நேரத்தில் அஷ்வின் போன்ற நடிகர்கள் புகழ் வெளிச்சத்தில் எதையெதையோ பேசுகிறார்கள்.

பாரதிராஜா இயக்கத்தில் 1990இல் வெளியான என்னுயிர்த் தோழன் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் பாபு. சென்னைத் தமிழை அழகாக பேசி குப்பத்து மனிதனாகத் தனித்துவமான நடிப்பைத் தந்த அவர் பின்னர் விக்ரமன் இரண்டாவதாக இயக்கிய பெரும்புள்ளி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் மனசார வாழ்த்துங்களேன் என்னும் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக படுத்த படுக்கையாக சற்றேறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடக்கிறார். அவருடைய தாய் முன்னாள் சபாநாயகர், அமைச்சர் ராஜாராமின் தங்கை.

தனது நாயகனுக்கு ஏற்பட்ட நிலையை அறிந்த இயக்குநர் பாரதிராஜா பாபுவைப் போய்ப் பார்த்து உடல்நலம் விசாரித்துவந்தார். அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாயின. நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் கூட அவருக்கான பொருளாதார உதவி தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டார். பாபுவின் சோகக் கதையை சினிமாவில்கூடப் பார்க்க முடியாது. பாரதிராஜாவால் அறிமுகமாகிறார்; விக்கிரமன் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள். திடீரென ஒரு விபத்து. வாழ்க்கை தலைகீழாகிறது. பொருளாதாரரீதியாக சிக்கல் வருகிறது. உதவிய தம்பி மரித்துப் போகிறார். தந்தையின் பணம் நிதி நிறுவனத்தில் மாட்டி, கைக்குக் கிடைக்காமல் போகிறது. தம்பி மறைந்த சில காலத்தில் தந்தையும் மரணமடைகிறார். எண்பது வயது தாயும் படுத்த படுக்கையான பாபுவும் தனித்து விடப்படுகிறார்கள். வாழ்க்கை குறித்த பல கேள்விகளை எழுப்பும் இப்படியான சம்பவங்கள் திரைத்துறையில் சர்வசாதாரணம்.

இதைப் போல் 1991இல் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சின்னதம்பி. இதில் குஷ்புவின் சகோதரர்களில் ஒருவராக நடித்திருந்தார் நடிகர் உதயபிரகாஷ். அவர் படங்களில் வாய்ப்பில்லாமல் போய், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, உடல் நலிவுற்றுப் போனார். இறுதியாக நடிகர் சங்கம் அருகே சாலையில் விழுந்து கிடந்தார். அவரைக் காவல் துறையினர் மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இது நடந்தது 2004ஆம் ஆண்டில். அவர் சட்டக் கல்லூரியில் பயின்றவர்.

நடிகர் உதிரிப்பூக்கள் விஜயன் கதையும் கிட்டத்தட்ட இதே மாதிரியானது. அவள் அப்படித்தான் தந்த இயக்குனர் ருத்ரய்யா அடுத்து இயக்கிய கிராமத்து அத்தியாயம் பெரிய வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் அவர் படமெடுக்கும் கனவு நிறைவேறாமலே காலமானார். இவை மிகச் சில எடுத்துக்காட்டுகள். திரைத் துறையினரிடம் பேசும் போது, வெளிச்சத்துக்கு வராத, இப்படியான எண்ணற்ற சோகக் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

இப்படி எண்ணற்ற மனிதர்களின் உயிரைக் குடித்துத்தான் வளருகிறது திரைப்படத் துறை என்பது கசப்பான உண்மை. ஆனாலும், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்னும் முனைப்பில் நாள்தோறும் புதிது புதிதாக இளைஞர்கள் சென்னைக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றனர். விளக்கிருக்கும்வரை விட்டில் பூச்சிகள் வந்து விழுந்துகொண்டுதான் இருக்கும் என்பது போல எத்தனையோ பேரின் துயரக் கதைகளைக் கேட்ட பிறகும், தான் வெற்றிபெற்றுவிடலாம் என்னும் நம்பிக்கையில் பலரும் கோடம்பாக்கத்தின் கதவைத் தட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

திரைத்துறையின் இத்தகைய கறுப்புப் பக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் எளிதாய் வாய்ப்பு கிடைத்துவிட்டது; வெற்றி கிடைத்துவிட்டது என்ற மிதப்பில் மைக்கைப் பிடித்து தான்தோன்றித்தனமாகப் பேசும் அஷ்வின் போன்றவர்களுக்கு தியாகராஜன் போன்றவர்களின் கதை ஒரு பாடம். சிலருக்கு வரமளிக்கும் சினிமா என்னும் மாயதேவதை பலரைச் சபிக்கிறார் என்பதை இப்படியான மனிதர்கள் மனதில் கொள்வது நல்லது.


Share the Article