Read in : English

Share the Article

விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும்  ஈடுபாடு கொண்ட, 29 வயதிலேயே மறைந்து போன அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய “சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” என்ற பிரபல பாடல்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்த பாடல்.

1961இல் மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் எம்ஜிஆர் நடித்த அரசிளங்குமரி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் ஜி.ராமனாதன். டி.எம். சௌந்தரராஜன் இப்பாடலைப் பாடி இருக்கிறார்.

ஜெயலலிதா தனக்குப் பிடித்த பல்வேறு விஷயங்கள் குறித்து ‘தாய்’ வார இதழில் எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார். அதன் முதல் கட்டுரை, எனக்குப் பிடித்த பாடல். அந்தக் கட்டுரையில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்னப் பயலே என்ற பாடல் ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்கி எழுதியிருக்கிறார்.

எம்ஜிஆரால் அதிமுகவுக்குக் கொண்டுவரப்பட்ட காலத்தில், அதாவது தமிழக முதல்வராக ஆவதற்கு முன்னதாக ஜெயலலிதா எழுதிய கட்டுரை இது.பின்னாளில், அவர் தமிழக முதல்வரான பிறகு, 1993ஆம் ஆண்டில பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களை நாட்டுடைமையாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய் இதழில் ஜெயலலிதா எழுதிய கட்டுரை இதோ:
எனக்குப் பிடித்த பாடல். ‘பிடித்த’ பாடல் என்றால், எந்தக் கண்ணோட்டத்தில் அது நமக்குப் பிடித்திருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா?

நாட்டுப்பற்று, காதல், வீரம், பாசம், பக்தி இப்படி பல சுவைகளை வெளிப்படுத்தும் பலவகையான உணர்வுகளைத் தூண்டும் எத்தனையோ சிறந்த பாடல்கள் இருக்கின்றபோது, இவற்றில் ஒன்றினை மட்டும் அனைத்திலும் சிறந்தது என எப்படித் தேர்ந்தெடுப்பது? அதற்கு எந்த அளவுகோலைப் பயன்படுத்துவது?

இந்தப் பாடலைக் கேட்பதானால் மனித சமுதாயம் பயன் அடையும். முக்கியமாக, நாளைய சமுதாயத்தை உருவாக்கப்போகும் இன்றைய சிறுவர்கள், அதனால் பயன் அடைவார்கள் என்று உறுதியாக நம்மால் கூறமுடியுமானால் – அத்தகைய பாடலே அனைத்திலும் சிறந்த பாடல் என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் இங்கே குறிப்பிடப் போகிறேன். என்றைக்கு இந்தப் பாடலை முதன்முதலாகக் கேட்டேனோ, அன்று முதல் இதுவே எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் நிரந்தரமாக முதல் இடம் வகித்து வருகிறது.

அதுதான்- அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இயற்றி, அரசிளங்குமரி திரைப்படத்தில் இடம் பெறுகிறது, சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா எனத் தொடங்கும் பாடல்.

கேள்வி கேட்க தெவிட்டாத இனிமை மிகுந்த மெட்டமைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் ஜி. ராமனாதன் அவர்கள். பாடலை ரசித்து அனுபவித்துப் பாடியிருக்கிறார். டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். கருத்தாழம் நிறைந்த இப்படியொரு பாடல் அரசிளங்குமரி படத்தில் இடம்பெறக் காரணமாயிருந்தவர் யார் என்பதை எளிதில் கூறிவிட முடியும்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். தோன்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் மனித சமுதாயத்திற்கு பயனுள்ள அறிவுரை கூறும் ஒரு பாடலாவது நிச்சயமாக இடம் பெறும் என்பது நாடறிந்த உண்மை.

“சின்னப் பயலே சின்னப் பயலே
சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்ல
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா”

இது பாடலின் ஆரம்ப பல்லவி. முதல் பார்வைக்கு இந்த வார்த்தைகள் மிகச் சாதாரணமாக உள்ளதாகத் தோன்றலாம். உண்மையில் அப்படியில்லை. இன்னும் ஒரு முறை படித்துப் பாருங்கள். “நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா” என்னும் அந்த ஒரு வரியைக் கவனியுங்கள். பாடலைப் பாடுபவர் வயதில் பெரியவர்.

அவர் அறிவுரை கூறுவது ஒரு சிறுவனுக்கு, இருப்பினும் தான் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவரானாலும், அந்தக் காரணத்தினால் மட்டும், தான் சொல்லுவதை அந்தச் சிறுவன் கண்மூடித்தனமானப் பின்பற்ற வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தான் சொல்லப் போகும் வார்த்தையை நன்றாக எண்ணிப் பார்க்கத்தான் சொல்லுகிறார். எண்ணிப் பார்த்து, சிந்தித்த பிறகு, அது சரியென்று அந்தச் சிறுவனுக்குப்பட்டால், அதன் பின் அவன் அதை ஏற்றுக் கொள்ளலாம். எவ்வளவு முற்போக்கான கருத்தை வெளியிட்டிருக்கிறார் கவிஞர்.

சிறுவயது முதலே தாமாக சிந்தித்துச் செயல்படும் நல்ல வழக்கத்தைச் சிறுவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதை இந்த ஒரு எளிமையான வரியினால் நம்மை உணர வைக்கிறார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.

“ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி-உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே
நீ தரும் மகிழ்ச்சி.”

ஆள் மட்டும் பனைமரம் போல் வளர்ந்தால் போதாது. ஒருவனுக்கு உடல் ஆரோக்கியமாக வளர்ச்சியடையலாம். வேறு வகையிலும் அவன் வளர்ச்சி அடையலாம். அவன் நிறைய பணம் சம்பாதித்து பொருள் சேர்க்கலாம். பெரிய பதவியை அடையலாம். இதெல்லாம் வளர்ச்சியே ஆனாலும், இது மட்டும் போதாது.

அவன் அறிவும் வளர வேண்டும். பிறர் அவனை அறிவாளி எனப் போற்ற வேண்டும். கல்வி அறிவுடன் கூடவே பகுத்தறிவு, கருணை, பரிவு, இரக்கம், எல்லாமும் ஒருசேர வளர வேண்டும். இந்த நற்குணங்கள் உடைய சான்றோன் என தன் மகனை பிறர் போற்றக் கேட்கும் ஒரு தாய்க்கு உண்டாகும் மகிழ்ச்சி வேறு எதனாலும் உண்டாக முடியாது.

“நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி உன்
நரம்போடுதான் பின்னி வளரணும
தன்மான உணர்ச்சி”

எவ்வளவுதான் புத்தகங்கள் படித்து கல்வி அறிவு பெற்றாலும், இதனால் மட்டும் உலக அனுபவம் கிடைக்காது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களினாலே தான் உண்மையான அறிவு வளருகிறது. ஒருவன் தன் வாழ்க்கையில் எத்தனையோ சிக்கலான, இக்கட்டான கட்டடங்களைச் சந்திக்க நேரிடலாம். தன்மானத்திற்குச் சோதனை விளைவிக்கக்கூடிய சூழ்நிலையில் அகப்பட்டுக் கொள்ளலாம்.

கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து குவிக்கலாம். செல்வாக்குப் பெற்று அதிகாரம் செலுத்தலாம். பேரும் புகழும் பெறலாம். பெரிய புலவர் என பாராட்டுப் பெற்று விருதுகள் பெறலாம். இதெல்லாம் பெரிதல்ல. தேவை மனிதத்தன்மை, மனிதனாக வாழ வேண்டும்

தைரியமாக துணிந்து நிற்க பழகிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் ஆலோசனை கூறவோ, தைரியமூட்டவோ, உற்றார் உறவினர் யாரும் அருகில் இல்லாமல் போகலாம். அதனால், “உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி” என்கிறார் கவிஞர்.

தன்மானத்தை எந்தச் சூழ்நிலையிலும் இழக்கக்கூடாது. விட்டுக் கொடுக்கக்கூடாத தன்மானத்தை இழந்த பின் வேறு என்ன இருந்தும் பயனில்லை. தன்மானத்தைத் தக்க வைத்துக் கொண்டால், வேறு என்ன இல்லையென்றாலும் கவலையில்லை.

“மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா – தம்பி
மனதில் வையடா
வளர்ந்துவரும் உலகத்துக்கே – நீ
வலதுகையடா – நீ
வலது கையடா”

கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து குவிக்கலாம். செல்வாக்குப் பெற்று அதிகாரம் செலுத்தலாம். பேரும் புகழும் பெறலாம். பெரிய புலவர் என பாராட்டுப் பெற்று விருதுகள் பெறலாம். இதெல்லாம் பெரிதல்ல. தேவை மனிதத்தன்மை, மனிதனாக வாழ வேண்டும்.

பிறரின் துன்பங்களை உணரும் இதயமுள்ள மனிதனாக இருக்க வேண்டும். பிறரின் துன்பங்களை தீர்க்கப் பாடுபடும் உள்ளம் படைத்த மனிதனாக வாழ வேண்டும். ஒரு சிறுவன் அத்தகைய மனப்பாங்குடன் வளர்ந்து பெரியவன் ஆனால், அவனே நாளைய உலகத்திற்கு வலது கையாக விளங்குவான்.
Õவலது கை என்று ஏன் குறிப்பிடுகிறார் கவிஞர்?

நமக்குத் தேவையான முக்கிய வேலைகள் அனைத்தையும் வாய்க்கு உணவு ஊட்டுவது, எழுதுவது, தற்பாதுகாப்புக்காகப் போரிடுவது, வாள் வீசுவது, துப்பாக்கிச் சுடுவது இதுபோன்ற பணிகளையெல்லாம் கைதானே செய்கிறது (சில விதிவிலக்குகள் இருக்கலாம்) வலதுகைதான் நம் வாழ்வுக்கு முக்கிய ஆதாரம். மனிதத் தன்மை நிறைந்த மனிதன் சமூகத்திற்கே வலது கை போன்றவன்.

“தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா – நீ
தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா எல்லாம்
பழைய பொய்யடா”

பெரிய பண்ணையார் ஏழை விவசாயத் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்துகிறான். பெரிய தொழிற்சாலையின் முதலாளி அதில் உழைக்கும் ஊழியர்களைக் கொடுமைப்படுத்துகிறான். ஏன்? தனி மனிதனிடம் சொத்து சேருவதானால்தான். தனியுடைமை வளர்ந்தால், அதையொட்டி கூடவே கொடுமைகளும் அதிகமாகின்றன.

சிறுவயதிலே சுயநலம் கூடாது என்பதை சிறுவர்கள் உணர வேண்டும் என்று இதை எழுதியிருக்கிறார் கவிஞர். தானாக எதுவும் மாறாது. சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மறைய ஒவ்வொரு மனிதனும் தொண்டு செய்ய வேண்டும். அரசாங்கம் இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படட்டும். நான் என் குடும்பத்தைப் பற்றி கவலைப்படுகிறேன் என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது.

மனிதனும் தொண்டு செய்ய வேண்டும். அரசாங்கம் இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படட்டும். நான் என் குடும்பத்தைப் பற்றி கவலைப்படுகிறேன் என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது.

மக்களின் ஒத்துழைப்பின்றி அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. தனியுடைமைக் கொடுமைகள் தீர அரசாங்கம் விதிகளை நிறுவலாம். அவற்றை செயல்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த லட்சியம் நிறைவேற ஒவ்வொரு மனிதனும் தொண்டு செய்ய வேண்டும்

“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க உந்தன்
வீரத்தை கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பிவிடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே – நீ
வெம்பி விடாதே”

பிறக்கும்போதே எந்தக் குழந்தையும் மனதில் பயத்தோடு பிறப்பதில்லை. இளங்கன்று பயமறியாது என்பது மிகவும் உண்மை. நெருப்புப் பக்கத்தில் சிறு குழந்தையை விட்டால், தொட்டால் அது சுடும் என்பது குழந்தைக்குத் தெரியாது. தொட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. குழந்தையை அத்தகைய விஷப் பரிட்சைக்கு உட்படுத்த விரும்பாமல், பெரியவர்கள் அது சுடும் அருகில் போகாதே என எச்சரிக்கை செய்து, குழந்தையின் மனதில் நெருப்பு என்றாலே. ஒரு பயத்தை உண்டாக்கி விடுகிறார்கள். இது தேவைதான். அவசியந்தான். ஆனால் சில மூடநம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு, தாங்களும் கெட்டு, வளர்ந்து வரும் குழந்தைகளையும் கெடுத்து விடுகிறார்கள்.

மக்களின் ஒத்துழைப்பின்றி அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. தனியுடைமைக் கொடுமைகள் தீர அரசாங்கம் விதிகளை நிறுவலாம். அவற்றை செயல்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் குழந்தைகளைப் பயமுறுத்தி, அச்சுறுத்தி அவர்களை எதற்கும் பயனில்லாதவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். குழந்தை வேப்பமரத்தடியில் விளையாடப் போனால், “போகாதே! அதன் உச்சியில பேய் இருக்கிறது. உன்னைத் தின்று விடும்” என்று சொல்லி வைப்பார்கள். “வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே” என்கிறார் கவிஞர்.

புதிதாகக் காய்த்த ஒரு கனியை கூடைக்குள்ளே போட்டு அடைத்து வைத்தால், சில நாட்களில் அது கருகி, எதற்கும் பயன்படாமல் போய்விடும். அதைப்போலவே சிறுவர்களின் மனதில் பயத்தை வளர்த்து விட்டு எதிர்காலத்தில் எதற்கும் பயப்படும் கோழைகளாக அவர்களை ஆக்கிவிடுகிறார்கள் சில பெரியவர்கள். அதனால்தான் இப்படிப்பட்ட வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக்கூட நம்பக்கூடாது என்கிறார் கவிஞர்.

இந்தப் பாடலிலேயே ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அறிவுரைகளையும் விளக்கிக் கூறிவிட்டார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இது வெறும் பாடல் அல்ல. ஒரு சிறந்த வாழ்க்கை முறை. அதனால்தான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

 


Share the Article

Read in : English