English தமிழ்

Share the Article

சமூகத்தில் பாலினம், நிற, இன வேறுபாடு தொடர்பான பார்வை காலந்தோறும் மாறி வருகிறது. உயர்ந்த கருத்தியலை மனதில் கொண்டு செயல்பட்டவர்களும், பல விழுமியங்களில் பின்தங்கியிருந்த பதிவுகளை ஆங்காங்கே காண முடியும். அதை சுய சரிதை பதிவுகளே நிரூபிக்கும். பாலின ரீதியாக பின்தங்கிய சிந்தனைகளை தமிழ் சினிமா மட்டுமல்ல, சுவாரசியமாக எழுதப்பட்ட சுய சரிதைகளும் வெளிப்படுத்தியுள்ளன.

அப்படியான பதிவு ஒன்றை சமீபத்தில் காண நேர்ந்தது. மகாத்மா காந்தி நடந்திய, ‘ஹரிஜன்’ என்ற பத்திரிகையை, தமிழில் கொண்டுவந்தவர், சின்ன அண்ணாமலை. சென்னை இந்தி பிரசார சபாவில் நடந்த கூட்டம் ஒன்றில், காந்திக்கு இவரை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அந்த சம்பவம் பற்றி, ஹரிஜன் பத்திரிகையில் காந்தி எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தி நடந்திய, ‘ஹரிஜன்’ என்ற பத்திரிகையை, தமிழில் கொண்டுவந்தவர், சின்ன அண்ணாமலை.

ஆங்கிலேயரை எதிர்த்த வெள்ளயைனே வெளியேறு போராட்டம், 1942ல் நடந்த போது, தமிழகத்தில் தீவிரமாக பங்கேற்றவர்களில் ஒருவர் சின்ன அண்ணாமலை. அந்த போராட்டத்தை ஓட்டி திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பொதுமக்கள் ஆவேசம் கொண்டு அந்த சிறையை உடைத்து, அவரை மீட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிலர் பலியாகினர்.

ஆங்கிலேயரை எதிர்த்த வெள்ளயைனே வெளியேறு போராட்டம், 1942ல் நடந்த போது, தமிழகத்தில் தீவிரமாக பங்கேற்றவர்களில் ஒருவர் சின்ன அண்ணாமலை

இந்த சம்பவம் பற்றி காமராஜர் குறிப்பிடுகையில், ‘ஆங்கிலேய அரசு,1942 ஆகஸ்ட்டில் சின்ன அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தது. மக்கள் திரண்டு, 24 மணி நேரத்தில் சிறையை உடைத்து விடுதலை செய்துள்ளனர். இப்படி, மக்களே ஆவேசங்கொண்டு சிறையை உடைத்து விடுதலை செய்த சம்பவம், உலக சரித்திரத்தில் முதல் தடைவையாக இருக்கும் என எண்ணுகிறேன். போராட்ட வாழ்வால் சரித்திரத்தில் எழுத வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகங்கள் பல எழுதியுள்ளார் சின்ன அண்ணாமலை. ராஜாஜியின் புத்தகங்களையும் பதிப்பித்துள்ளார். தன் வாழ்க்கை சம்பவங்களை கட்டுரைகளாக எழுதியுள்ளார். எளிய நடையில், ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்ற தலைப்பில், ஒரு கட்டுரை. அதில், தான் எழுத்தாளரானதை சுயவரலாறாக பதிவு செய்துள்ளார். அவரே சுவாரசியமாக எழுதியுள்ளதை படியுங்கள்.

நான், எழுத்தாளர் ஆனதற்கு ஒரு பால்கார சிறுவன் தான் காரணம். அவன் பெயர் கருப்பையா. ஆகஸ்ட் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது, என்னை கைது செய்து, தேவகோட்டை போலீஸ் லாக் அப்பில் சட்ட விரோதமாக பல நாட்கள் அடைத்திருந்தனர். என் வீட்டிலிருந்து சாப்பாடு, துணிமணி கொண்டு வர அனுமதித்திருந்தனர்.

தினமும் எனக்கு சாப்பாடு எடுத்து வந்தவன் பெயர் கருப்பையா. பால்கார கருப்பையா என்பர். நல்ல கறுப்பு நிறம். சுருள் சுருளான தலைமுடி. எனக்கு அப்போது வாலிப வயது. முறுக்குடன் திகழ்ந்தேன்.
ஒருநாள் சாப்பாடு எடுத்து வந்த போது, ஒரு கடிதத்தை நீட்டினான். என்ன என்று கேட்டேன். ஒரு இளம் பெண் கடிதம் கொடுத்திருப்பதாக சொன்னான்.

‘எனக்கா? யாரது?’ என்று கேட்டேன்.‘மெய்யம்மை என்று பெயர். ஒங்க மேல ரொம்ப ஆசையா இருக்கிறாள். நல்ல சிவப்பு நிறம்.’ என்றான்.கடிதத்தை ஆர்வத்துடன் பிரித்தேன். கையெழுத்து குண்டு குண்டாக இருந்தது. கடித வாசகம் கீழ்கண்டவாறு இருந்தது. என் உள்ளம் கவர்ந்த அன்பருக்கு,

என்னை நீங்கள் பார்த்திருக்க முடியாது. உங்களை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் மேடை பேச்சை கேட்டு மயங்கியிருக்கிறேன். தாங்கள் சிறையில் தவம் இருக்கிறீர்கள். நான் சிறைக்கு வர வேண்டும் என தவம் இருக்கிறேன்.

நான் பெண் ஜென்மம். இஷ்டப்படி செல்ல பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். தாங்கள் விடுதலையாகும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். விரைவில் சந்திப்போம். மறக்காமல் பதில் எழுதுங்கள்.
இப்படிக்கு, மெய்யம்மை.

படித்ததும் புளங்காகிதம் அடைந்தேன். பின்னர், அந்த பெண் குறித்து கருப்பையாவிடம் குறுக்கு விசாரணை நடத்தினேன். அவளை பற்றி அவன் விவரித்த விதம் உடனே சந்திக்க துாண்டியது. சிறை தடையாக இருந்தது. போலீஸ் காவல் வேறு குறுக்கே நின்றது.
அந்த கடிதத்துக்கு பதில் எழுத பேப்பர், பேனா எல்லாம் கொண்டு வந்திருந்தான் கருப்பையா. பலவாறு யோசனை செய்து, காதல் கடிதம் எழுதினேன். சொற்கள் கும்மாளமிட்டு வந்து விழுந்தன.

படித்து பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இவ்வளவு சிறப்பாக எழுத வருமா என வியப்படைந்தேன். கடிதத்தை அவனிடம் தந்தேன். வரிசையாக, இப்படி கடிதங்கள் வந்தன. நானும் சலிப்பின்றி வித்தியாசமாக எழுதி கொடுத்தேன். கடித தொடர்பின் மூலம் ரொம்ப அன்னியோன்யம் ஆகிவிட்டதாக உணர்ந்தேன். ஓருயிர் ஈருடன் என்றெல்லாம் பிதற்றி எழுதி வைத்தேன்.

தீபாவளி வந்தது. ஒரு பட்டுப்புடவை கேட்டு, எழுதியிருந்தாள். கருப்பையாவிடம் பணத்தை கொடுத்து பட்டுப்புடவை ஆசையை நிறைவேற்றினேன். பின் ஒரு கைக்கடிகாரம் கேட்டிருந்தாள். அதற்காக, 300 ரூபாய் கொடுத்து அனுப்பினேன். தொடர்ந்து, தங்க வளையல் கேட்டாள். அதற்கும் பணம் கொடுத்து அனுப்பினேன். இப்படி மதிப்பு மிக்க பரிசுகள் கொடுத்து சொக்கினேன்.

பின்னர் என்னை மதுரை சிறையில் அடைத்தனர். அங்கு தண்டனை காலம் முடிந்து திரும்பினேன். கடிதத்தில் மட்டுமே தொடர்பில் இருந்த மெய்யம்மையை நேரில் பார்க்கும் ஆசையில் வந்தேன். ஊர் சென்றதும் கருப்பையாவை தேடினேன். அவன், திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அறிந்து அதிர்ந்தேன். மறுநாள், தேவகோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை பார்க்க போனேன். சிரித்தபடியே வரவேற்றவர், ‘உங்க காதல் கடிதங்கள் எல்லாம் வெகு ஜோர்…’ என்றார்.

எனக்கு துாக்கிவாரி போட்டது.‘எந்த காதல் கடிதம்.’ என்று கேட்டேன். ‘நீங்க மெய்யம்மைக்கு எழுதிய கடிதங்கள் தான்…’ என்றார்.

‘அதெப்படி உங்களிடம் கிடைத்தது. திருட்டு வழக்கு பற்றி விரிவாக கூறி, ‘பால்கார கருப்பையா திருட்டு கேசில் மாட்டியதும், அவன் வீட்டை சோதனை செய்தோம். நீங்க எழுதிய காதல் கடிதங்கள் அங்கு கிடைத்தன. அவனிடம் விசாரித்த போது, உங்களிடம் நாடகம் ஆடி, மெய்யம்மை என்ற பெயரில் கடிதம் எழுதி, பணம் பறித்த மோசடி கதையை சொன்னான். நன்றாக ஏமாற்றியிருக்கிறான்.’ என்றார்.

எனக்கு ஆத்திரமாக வந்தது. என்ன செய்வது… வேறு வழியின்றி மவுனியானேன். சப் இன்ஸ்பெக்டர் மிகவும் உயர்வாக, ‘சார்… நீங்கள் பெரிய எழுத்தாளர். காதல் கடிதங்கள் எழுதுவதில் மன்னர்.’ என புகழ்ந்துரைத்தார்.

ஏமாந்த வேதனையுடன் எழுந்தேன். நானும் எழுத்தாளனானேன் என்ற திருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.இவ்வாறு, தியாகி சின்ன அண்ணாமலை வாழ்க்கை குறிப்பில் பதிவு செய்துள்ளார்.விடுதலைப் போராட்ட வீரரின் மனநிலையில் பெண் பற்றிய பார்வையை, இந்த சுயசரிதை பதிவு வெளிப்படுத்துகிறது. வெளிப்படையாக பதிந்துள்ளது மிகவும் சிறப்புக்குரியது. அந்த கால கட்டத்தில், பாலின ரீதியான பார்வை, நிற பேதம் தொடர்பான எண்ணம் போன்றவற்றில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை நிரூபிக்கிறது.


Share the Article