Read in : English

Share the Article

நாடக உலகச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி. கிட்டப்பா, நடிகவேள் எம்.ஆர். ராதா போன்றவர்கள் நாடக கம்பெனியில் இருந்தபோது அவருக்குப் பாட்டும் நடிப்பும் சொல்லிக் கொடுத்த வாத்தியார் தமிழிசை தவமணி என்று பொது மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மாரியப்பசாமி.

தமிழிசை இயக்கம் தோன்றாத காலத்திலேயே, முழுக் கச்சேரியும் தமிழில் பாடியவர் அவர். அந்தக் காலத் திரைப்படங்களிலும் அவரது பாடல்கள் இடம்பெற்றன.

மாரியப்பசாமி 1902-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். அப்பா பூச்சன் செட்டியார். அம்மா அலமேலுமங்கை. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த அவர், வேலுநாயரின் ‘சண்முகானந்தா பாய்ஸ் கம்பெனி’ நாடக சபாவில் சேர்ந்தார். அந்த சபையில்தான் தமிழ் நாடகப் பேராசான் சங்கரதாஸ் சாமிகள் பயிற்சி ஆசிரியராக இருந்தார்.

நாடக கம்பெனியில் பெரிய மாணவர்களுக்கு நடிப்பும் நாடகப் பாடமும் பாட்டும் கற்றுக்கொடுப்பார் சங்கரதாஸ் சாமிகள். பாட்டு, நடிப்பு இரண்டிலும் மாரியப்பர் சிறந்து விளங்கினார். அதனால் விரைவிலேயே ‘சட்டாம் பிள்ளை’ ஆகி விட்டார். தன்னைவிட சிறிய மாணவர்களுக்கு, மாரியப்பர் பாட்டும் நடிப்பும் கற்றுக்கொடுப்பார். அந்த நாடக கம்பெனிக்கு வந்தவர்தான் எஸ்.ஜி. கிட்டப்பா.

மாரியப்பரைவிட நான்கு வயது சிறியவர். கிட்டப்பா போலவே கிட்டப்பாவின் சகோதரர்கள், பி.டி. சம்பந்தம், எம்.எஸ். முத்து கிருஷ்ணன், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, எம்.வி. மணி, டி. பாலசுப்ரமணியம், எஸ்.வி. வெங்கட்ராமன், நடிகவேள் எம்.ஆர். ராதா முதலியோர் மாரியப்பரிடம் மாணவர்களாக இருந்தார்கள்.

கிட்டப்பாவுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கும் போது, அடித்து சொல்லிக்கொடுப்பாராம் மாரியப்பர். அதை பார்த்த சங்கரதாஸ் சாமிகள். ”டே….டே…அவன் அல்பாயுசுகாரண்டா; அவனை அடிக்காதேடா” என்று கண்டித்தாராம். கிட்டப்பா இளம் வயதில் மறைந்த போது பலரிடம் இதுபற்றி மாரியப்பசாமி மனம் உருகச் சொல்லி இருக்கிறார்.

பதினைந்து வயதிலேயே ‘ராஜபார்ட்’ நிலைக்கு மாரியப்பர் வந்து விட்டார். கர்நாடக இசையில் பாடும்போது இந்துஸ்தானி இசையில் உள்ள ‘கவாய்’ பாடும் முறையை அறிமுகப்படுத்தினார். இசையும் வசனமும் கலந்து பாடும் முறை இது

நாடக துறையில் இருந்த பொறாமை காரணமாக மாரியப்பர் துறவு பூண்டார். அதனால், அவர் மாரியப்பசாமி என்றே அழைக்கப்பட்டார். 1926-ஆம் ஆண்டு ‘செந்தில் ஆண்டவன் கீர்த்தனை’ நூலை வெளிக்கொண்டு வந்தார். இந்த நூலில் ஞான விநாயகனுக்கு ஒரு கீர்த்தனையும், வரத விநாயகருக்கு இரண்டு கீர்த்தனைகளும், தனக்கு தீட்சை அளித்த சுகுணானந்த கிரி சாமிகளுக்கு குருஸ்துதி மூன்றும் இயற்றியுள்ளார். மற்ற கீர்த்தனைகள் அனைத்தும் செந்தில் ஆண்டவன் மீதே.

இந்த நூலில் உள்ள பல மெட்டுக்கள், சிதம்பரநாதா திருவருள் தா தா என்பதைப் போன்று திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
1923ஆம் ஆண்டு முதல் மேடைக் கச்சேரி செய்யத் தொடங்கினார் மாரியப்பசாமி. தேவார காலம் முதற்கொண்டு, கொண்டுகூட்டிப் பாடும் மரபு தமிழில் இருக்கிறது.

ஓதுவார்கள் பாடும்போது, பல்வேறு வரிகளையும் சொற்களையும் பொருள் மாறாமல் கூட்டிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் செல்வார்கள். கச்சேரியில் சொந்த பாடல்களையே அதிகமாக பாடுவார். இடையே தாயுமானவர், வள்ளலார், அருணகிரிநாதர், மாம்பழக்கவி முதலியவர்களுடைய பாடல்களை பாடுவார்.

பொதுவாகப் பாடல்கள் இயற்றுபவர்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையிலேயே இயற்றுவார்கள். ஆனால் மாரியப்பசாமியின் பாடலில் சரணத்திற்கு பிறகு சந்தமென்கிற பிரிவு காணப்படும். கற்பனை சுரம் அல்லது சிட்டாசுரம் கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் பாடப்பெறும். இவற்றை சுரமாகவே பாடுவார்கள்.

சாமியோ சுரத்தை சுராட்சரமாக சந்தம் மிகுந்த நடையில் நாலடுக்கு, ஐந்தடுக்கு அமைப்பார். இதுவே மாரியப்பசாமிகள் பாணி. இவற்றை ‘மகுடம்’ என்பார்கள்.

“இசையரங்குகளில் மரபாக முதலில் வர்ணம் பாடவேண்டும். அதற்கு நிகராக வர்ணத்தில் உள்ள பண்சுவை மிக்க இசைச் சுர அமைப்புகளையும் ‘ததிங்கிணத்தோம் ‘வைக்கும் தாள முத்தாய்ப்பு அமைப்புகளையும் இனிய செந்தமிழ் மகுடங்களாகவே அமைத்துக்காட்டி வியப்பூட்டுவார் மாரியப்பசாமி” என்கிறார் இசைத்தமிழ் அறிஞர் வி.பா.க. சுந்தரம்.

சாமி பாடும் போது, சொல்லையோ பொருளையோ சிதைக்க மாட்டார். அது போல ‘சங்கதி’ போடும்போது, பாடலின் சொற்பொருளை வலியுறுத்துவதற்காகவே பொருள் சுவையை ஊட்டவே சங்கதிகளை அமைப்பார். சங்கதியை கால அளவுக்குள்ளும் உரிய தாள இடத்திலும், ராகத்தின் நீர்மையை வெளிக்கொண்டு வருவதற்காக பொருள் ஆழம் தோன்ற அளவோடு மூன்று, நான்கு முறை அமைப்பார். கேட்கும் நம்மை எங்கோ அழைத்து செல்வது போல இருக்கும்.

மாரியப்பசாமியின் இசை நிகழ்வை ஒரு தரம் கேட்டவர்கள், அவரது கச்சேரிக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள். அந்த அளவுக்கு கேட்பவர்களை அவரது இசை வசியம் செய்துவிடும். எவ்வளவு பெரிய கூட்டமானாலும் தனது கம்பீரமான குரலால் கூட்டதைக் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்.

மாரியப்பசாமியின் இசை நிகழ்ச்சி என்பது பெருமளவு அவரது சொந்த சாகித்யங்களைக் கொண்டதாக இருக்கும். திருப்புகழ் சபையாக இருந்தால் அருணகிரிநாதரின் பாடல்களை பாடுவார். .அருட்பா சபையாக இருந்தால் பெருமளவு திருவருட்பாவே இடம் பெறும். கச்சேரியில் முதல் பாடலாக ‘வந்திதேன் மஹா கணபதே’ அல்லது ‘நமோ, ஓம் மகா கணபதே’ என்ற பாடலையே பாடுவார்.

அதன் பிறகு, ‘ராஜராஜேஸ்வரி’,’ சமயமிதே அருள் தயாநிதே’, ‘சரவணபவ தமியேன் எனையாள்’, ‘ஆடவாரீர் என்னோடு ஆடவாரீர்; கச்சேரி களை கட்டுவதற்காக கச்சேரியின் மத்தியில் ‘மாமதுராபுரி வாழ் மகாராணியே ‘என்ற பாடல் இருக்கும். ‘வடிவேலும் மயிலும் துணை’, இது நல்ல சமையமையா’,’ சுகமே சொரூபமான குகனே ‘முதலிய பாடல்களில் சாமிகளுடைய சந்த நயம் மிக்க மகுடங்களைக் கேட்டு இன்புறலாம்.

‘என்னடி சொன்னார் என் தோழி’ என்ற பாடலின் விறுவிறுப்பு தூங்கிக்கொண்டிருப்போரையும் எழுப்பி உட்கார வைத்துவிடும். ‘காலம் வீண் போகுதே காதலனே குகா’ என்றபாடல் இளைஞர்களை திரும்பிப் பார்க்க வைக்கும். ‘ஆஸ்திகனோ நான் நாஸ்திகனோ’ என்ற இந்தோள ராகப்பாடல் மனதை இதமாகத் தடவும்.

கச்சேரிக்கு இடைஇடையே இராமலிங்க சாமிகளின் ‘காராய வண்ணா மணிவண்ணா’ என்ற பாடலும் ‘சிந்தை மயங்கி’ என்ற பாடலும் ‘ஞானமே வடிவாய்’ என்ற தாயுமானவர் பாடலும், ‘பொன்னால் பிரயோஜனம் ‘என்ற பட்டினத்தார் பாடலும்,’ நோயொரு பக்கம்’ என்ற மாம்பழக்கவியின் தத்துவ கருத்து நிறைந்த இப்பாடல்களின் வரிகளை சாமி இழைத்து, இழைத்து உருகி பாடுவார். கேட்பவர் மனம் கரையும்.
கச்சேரியின் இறுதியில், ‘குமாராயநம’ என்ற நாமாவளியை பாடுவார்கள் .

அடுத்து இங்கிலீஷ் நோட்டான, ‘அரனார் திருமகனே. கடைசியாக அருணகிரிநாதரின் கந்தரநுபூதியில் சில பாடல்களைப் பாடி முடிப்பார்.

சுப்புராய செட்டியார் பாடிய ‘கிளிக்கண்ணி’ புகழ் பெற்றது.தத்துவ செறிவு மிக்கது. இதன் இசை நாட்டுப்புற இசையாக இருப்பதால், சாதாரண பொதுமக்களையும் பரவசப்படுத்தி வந்தது. மாரியப்பசாமி கிளிக்கண்ணிக்கு புது மெட்டமைத்துப் பாடிப் பரப்பினார்.

இவர் இசையமைத்த முறையையும், இவர் பாடல்களுக்கு இருந்த செல்வாக்கையும் கண்ட எச்.எம்.வி. நிறுவனம், இவரது பாடல்களை இசைத்தட்டுக்களாகப் பதிவு செய்தது. வேலவா உன்னை, கிளிக்கண்ணி தேசியம், தாயினுமினிய நின்னே, இது நல்ல சமமயமய்யா, இத்தனை நாலும், தினமும் நினை மனமே, ஆடவாரீர், நானெனும், ஆஸ்திகனோ, என்னடி சொன்னார், வடிவேலும் மயிலும், மாமதுராபுரி, சரவணபவா போன்ற இவரது பாடல்கள் இசைத்தட்டுகளில் வந்துள்ளன.
‘ஐந்து கரத்துக் கிளையவன் ‘என்ற கிளிக்கண்ணியையும் ‘வள்ளிக்கணவன் பேரை’, வண்ண தாமரையைக்கண்டு ‘என்ற கிளிக்கண்ணியும் பொதுமக்களிடம் வெகுவாகப் பரவியதால், மாரியப்பர் பாடிய இதே கிளிக்கண்ணிகளை எஸ்.ஜி. கிட்டப்பாவும் இசைத்தட்டில் பாடிப் பதிவு செய்தார்.

இவர் இசையமைத்த முறையையும், இவர் பாடல்களுக்கு இருந்த செல்வாக்கையும் கண்ட எச்.எம்.வி. நிறுவனம், இவரது பாடல்களை இசைத்தட்டுக்களாகப் பதிவு செய்தது

இதுபோல மாரியப்பசாமியின் பாடல்களான ‘சரவண பவ ‘என்ற கல்யாணி பாடலையும் ‘நன்மையே செய்யும் ‘என்ற ஹரிகாம்போதி பாடலையும் பிற்காலத்தில் கிட்டப்பாவும் பாடினார். இதிலிருந்து இவர்கள் இருவருக்கும் இருந்த நட்பை உணர முடியும்.

அவர் காலத்து நாடகக்காரர்களைப் போலவே, மாரியப்பசாமியும் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 1935-இல் அவரது பாடல் எம்ஜிஆரின் முதல் படமான சதிலீலாவதியில் ஒலித்தது. எம்.கே. ராதா நடித்த மாயமச்சீந்திரா படத்தில் ‘மாயா விகாரமாகிய லோக மாயை ‘என்ற பாடலை எழுதினார். 1938-இல் வெளிவந்த ‘ஜோதி ராமலிங்கம் ‘படத்தில் அவரது 12 பாடல்கள் இடம்பெற்றன.
1944-ஆம் ஆண்டு ‘பூம்பாவை ‘படம் வெளிவந்தது.

தேவார மூவரில் ஒருவரான ஞானசம்பந்தருடைய வாழ்க்கையை ஒட்டியை கதை இது. இந்தப் படமே கே.ஆர். ராமசாமிக்கு முதல் படம். அவருக்கு ஜோடியாக பாடகி யூ.ஆர். ஜீவரத்தினம் நடித்தார். தான் பங்கற்கும் படங்களில் தனது கச்சேரிகளில் பாடிப் புகழடைந்த ஏதாவது ஒரு பாடலை ஒவ்வொரு திரைப்படத்திலும் அப்படியே வைப்பதை ஒரு பாணியாக கொண்டிருந்தார் மாரியப்பசாமி.

அது போலவே ‘பூம்பாவை’யில், ‘’காலம் வீண் போகுதே காதலனே குகா’ என்ற உருக்கமான பாடலை வைத்திருந்தார்.
கிருபானந்தவாரியாரின் முயற்சியில் இவர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். இவரது கடைசிக் காலம் இவர் வானொலியில் பாடுவதுடனே கழிந்தது.

நாடகத்துறையில் கால்பதித்து, திரைப்படத்துறையிலும் முத்திரை பதித்து மதுரைக்கும் தமிழிசைக்கும் பெருமைச் சேர்த்த இசைக் கலைஞர் மாரியப்ப சாமிகள் 1967ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி மரணமடைந்தார்.


Share the Article

Read in : English