English தமிழ்

Share the Article

“எல்லோருக்குமே பயணம் செய்யும் ஆவல் உள்ளது. ஆனால் பயம்தான் ஒரு சவால்” என்கிறார் பெங்களூரை சேர்ந்த சாய் தேஜா. இருபத்தாறு வயதான சாய் தேஜா தன்னந்தனியே தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றி முடித்துவிட்டார்.

அக்டோபர் 2ஆம் தேதி பெங்களுருவில் இருந்து புறப்பட்ட அவர் மாண்டியா வழியே ஊட்டி வந்து, கோவை, பொள்ளாச்சி, மதுரை, திருநெல்வேலி வழியே கன்னியாகுமாரி சென்று அங்கிருந்து தூத்துக்குடி, ராமேஸ்வரம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி வழியாக சென்னை அடைந்திருக்கிறார். 56 நாட்களில் தமிழ்நாட்டை சுற்றிவிட்டு தேஜா அடுத்ததாக ஆந்திரா செல்கிறார்.

அவரது பயணத்துக்கு வேண்டிய எல்லாமே அவரது சைக்களில் தயாராக இருக்கிறது. ஒரு டென்ட், சமைக்க பாத்திரங்கள் மற்றும் ஒரு சிறிய எரிவாயு உருளை மற்றும் பிற சாதனங்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 120 கிலோமீட்டர்கள் பயணம் செய்கிறார். மலைப்பாதை என்றால் 50 அல்லது 60 கிலோமீட்டர்கள். சைக்களின் பின்னால் சன்யாசியின் சவாரி என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்.

தன்னுடைய பயணத்துக்கு அவர் கூறும் காரணம் சற்று நூதனமான ஒன்று. “நீங்கள் நினைப்பதுபோல சமூகம் அவ்வளவு கெட்டது அல்ல. நல்ல மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள். உண்மையில் நான் இந்த சமூகத்தில் உள்ள அற்புதங்களைத் தேடி சென்று கொண்டிருக்கிறேன்” என்கிறார்.

சிவில் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ முடித்துள்ள சாய் தேஜாவும் அவரது நண்பரும் கடந்த 2018ஆம் ஆண்டு நேபாளத்தில் உள்ள திழிச்சோ ஏரி வரை செல்லும் ஒரு பயணத்தை மேற்கொண்டார்கள். பயணம் கொஞ்சம் சிக்கலானது.

சொந்தச் செலவில் செல்லும் பயணம் கிடையாது. கிடைத்த வண்டிகளில் லிப்ட் கேட்டு செல்வது. வெளிநாட்டில் இதை ஹிட்ச் ஹைக்கிங் (hitch hiking) என்று சொல்வார்கள். இவ்வாறு ஹிட்ச் ஹைக்கிங் செய்பவர்கள் அங்கு அதிகம்.
“நாங்கள் கிட்டத்தட்ட திழிச்சோ ஏரி வரை சென்று விட்டோம். ஆனால் மோசமான வானிலை காரணமாக இலக்கைச் சென்று அடைய முடியவில்லை. ஆனால் பயணத்தில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். சில மோசமான சம்பவங்களும் இருந்தன ஆனால் அது ஒரு அற்புதமான பயணம். மக்களிடம் இன்னும் எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கின்றன என எங்களுக்கு தெரியவைத்த பயணம் அது”” என்கிறார் அவர்.

நிஜ வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்குமா என்று பார்ப்பதே அவரது பயணத்தின் நோக்கம்

திரும்பவும் ஒரு பயணம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதும், 2019இல் வந்த கோவிட் தொற்றும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் வீட்டிலேயே கழிக்க நேர்ந்தது என்றும் திரும்பவும் இப்பொழுது பயணம் மேற்கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார்.

அற்புதங்களை எதுவும் கிடைத்ததா என்ற கேள்விக்கு சாய் தேஜா, “அவற்றிற்கு பஞ்சமே இல்லை என்கிறார். சில நாட்கள் முன்பு கையில் உள்ள பணம் முழுவதும் தீர்ந்து போகும் நிலையில் முகம் தெரியாத யாரோ ஒருவர் 1200 ரூபாய் தந்ததை அற்புதமாகவே பார்க்கிறார். “உங்களுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் உங்களுக்கு உணவு தருவார்கள். தங்கள் வீட்டில் தங்க இடம் தருவார்கள். சொந்தச் சகோதரனை போல நடத்துவார்கள். இவைகள் எல்லாம் அற்புதங்கள் இல்லாமல் வேறென்ன?” என்கிறார் சாய் தேஜா.

சில நாட்கள் முன்பு கையில் உள்ள பணம் முழுவதும் தீர்ந்து போகும் நிலையில் முகம் தெரியாத யாரோ ஒருவர் 1200 ரூபாய் தந்ததை அற்புதமாகவே பார்க்கிறார்

தன்னுடைய பயணத்துக்கு வேண்டிய பணத்தை தேஜா சம்பாதிக்கும் வழி வித்தியாசமான ஒன்று. முகக்கவசங்களை மொத்தமாக வாங்கி ஐந்து ரூபாய்க்கு ஒன்றென்று விற்கிறார். கோவிட் மீதான பயம் நீங்கியுள்ள நிலையில் முகக்கவசத்திற்கு அவ்வளவு தேவை இல்லை என்பதால் அடுத்து தேநீர் விற்கும் முடிவெடுத்திருக்கிறார். “என்னுடைய பயணம் பற்றி அறிந்தவுடன் ஐந்து ரூபாய் முகக்கவசத்தை 100 ரூபாய் கொடுத்து சிலர் வாங்கியிருக்கிறார்கள்.

தாங்கள் மேற்கொள்ள முடியாத ஒரு பயணத்தை, முயற்சி செய்து பார்க்கும் ஒரு முகம் தெரியாத மனிதனுக்கு உதவி செய்ய நினைக்கும் சாமானியர்கள் எனக்கு ஒரு பெரிய பலம்” என்பது சாய் தேஜாவின் கூற்று.

தன்னுடைய சைக்களில் இந்தியா முழுதும் சுற்றிவர திட்டம் வைத்திருக்கும் இவர், ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் இந்த பயணத்தை முடிக்க முடியும் என்கிறார்.


Share the Article