English தமிழ்

Share the Article

காயா, பழமா என்பது தமிழகக் கிராமப்புறங்களில் சிறுவர், சிறுமியரின் விளையாட்டு>. தக்காளி காயா? பழமா? என்பது 19ஆம் நூற்றாண்டில் மிகப் பெரியப் பிரச்சினையாகி விட்டது. தக்காளியைக் காய்கறி என்பதா? Ðபழம் என்பதா? என்பது குறித்த வழக்கு நீதிமன்றம் வரை போய்விட்டது. இதற்கெல்லாம் கோர்ட்டுக்கு போவதா என்ற கேள்வி எழலாம்.

காய்கறிகள் மீது அமெரிக்க அரசு வரி விதித்தபோது தக்காளியை காய்கறிப் பட்டியலில் சேர்த்தது. அதனால்தான், இந்தப் பிரச்சினை நீதிமன்றம் வரை போனது. நீதிமன்றத்தில் வாத, பிரதிவாதங்கள் நடந்து 1893இல் தக்காளி காய்கறிதான் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சரஸ்வதி சபதம் படத்தில் பாண்டிய மன்னருக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்பது போல இந்த விவாதம் நீண்டு கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் தேசியக் காய் தக்காளி. ஓககியோ மாகாணத்தில் தக்காளி தேசியப் பழம்.
“பெரும்பாலும் உருண்டை வடிவத்தில் இருப்பதும் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவை உடையதும் காய்கறியாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைச் சிவப்பு நிறப்பு நிறப்பழம்” என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.

தக்காளியின் தாயகம் இந்தியா இல்லை. தென் அமெரிக்காவும் மத்திய அமெரிக்காவும்தான். தக்காளியைப் பற்றி பைபிளில் எதுவும் சொல்லப்படவில்லை என்று அதைச் சாப்பிடலாமா, வேண்டாமா என்று ஒரு காலத்தில் யோசித்தார்கள். ஓநாய்கள் சாப்பிடுவதால் தக்காளியை ஓநாய் பழம் (Wolf Peach) என்று அழைத்த காலமும் உண்டு.

ஆனால் இன்று சமையலறையில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. தக்காளி இல்லாமல் சமையல் இல்லை என்றாகிவிட்டது. ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்றபோது, அகமகிழ்ந்த மக்கள், தக்காளி கிலோ நூறு ரூபாய் விலைக்கு விற்கப்படும்போது நொந்து நூலாகிவிடுகிறார்கள்.

அப்போதும் லாபத்தின் பெரும்பகுதி விவசாயிகளுக்குக் கிடைக்காது. இடைத்தரகர்களுக்குத்தான். அதேசமயம், சந்தைகளில் வியாபாரிகள் விவசாயிகளிடம் வாங்குவதற்குக் குறைந்த விலை நிர்ணயிக்கும்போது, அதுகட்டுபடியாகாத நிலையில், விவசாயிகள் தக்காளிகளை சாலையோரங்களில் கொட்டிவிட்டு செல்லும் அவலத்தைப் பார்க்கிறோம்.
சென்னையிலும் தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மழை வெள்ளம். இதன் காரணமாக சந்தைகளுக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் தக்காளி வரத்துக் குறைந்து

விட்டதையடுத்து அதன் விலை நூறு ரூபாயைத் தாண்டிவிட்டது. விலைவாசி ஓட்டப் பந்தயத்தில் பெட்ரோலையும் தாண்டிய, தக்காளி தற்போது பின்தங்கிவிட்டது. விலை காரணமாக தக்காளியை சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்கள் குடும்பத் தலைவிகள். தக்காளி சட்னிக்குக் கொஞ்ச நாளைக்குக் குட்பை சொல்லிவிட்டார்கள். தக்காளி இல்லாமல் சுவையாகக் குழம்பு செய்வது எப்படி என்ற சமையல் யோசனைகள் வாட்ஸ்அப் மூலம் வலம் வருகின்றன.

பசுமைப் பண்ணைக் கடைகளில் வெளிமார்க்கெட்டைவிட குறைந்த விலையில் தக்காளி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. கோயம்பேடு மைதானத்தில் தக்காளி லாரிகளுக்கு அனுமதி அளித்தால், தக்காளி விலையைக் குறைத்து விற்க முடியும் என்று கூறி வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். எப்போது தக்காளியும் மற்ற காய்கறி விலையும் பழைய நிலைக்கு வரும் என்று தெரியாமல் காத்திருக்கிறார்கள் சாமானிய மக்கள்.

இதற்கிடையே, துன்பம் வரும் வேளையிலே கொஞ்சம் சிரிங்க என்று மீம்ஸ்கார்கள், தக்காளியை வைத்து கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். வடிவேலுவின் திரைப்படக் காமெடி இல்லாவிட்டால் மீம்ஸ்காரர்கள் திண்டாடிப்போய்விடுவார்கள். நமக்கு நினைவுக்கு வருவது வடிவேலுவின் பிரபலமான காமெடிதான்: எனக்கு வந்தா ரத்தம், உனக்கு வந்தா தக்காளிச் சட்னியா?


Share the Article