Read in : English

Share the Article

கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே, வித்தியாசமான குறிக்கோள்களை கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சந்தித்து கொள்ளும் போது ஏற்படும் நட்பையும் காதலையும் கூறுகிறது. வழக்கமான தமிழ் கதைதான் ஆனால் கதை சொல்லப்பட்டிருக்கும் களம்தான்  வேறு. 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் வடிவம்தான் ஓ மணப்பெண்ணே. பொறியியல் படித்த கதாநாயகனின் கனவு சமையல் கலை வல்லுநர் ஆவது, கதாநாயகியின் கனவு ஆஸ்திரேலியா செல்வது. இரண்டு பேரின் கனவு நனவானதா என்பதுதான் கதை. ஹரிஷ் கல்யாணும் ப்ரியா பவானி சங்கரும் கதாநாயகன் கதாநாயகி. கதை சொன்ன பாணியும் இளைஞர்களை சுற்றிய கதைக்களமும் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. 

இளைஞர்களின் லைஃப் ஸ்டைல் தொடர்பான மாறுபட்ட கதையைக் கூட காசு கொடுத்து வாங்கும் நிலையில் தான் தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. ஏன் இப்படியான கதைகள் தமிழில் இல்லையா, தமிழ் இளைஞர்கள் வாழ்வைத் தருவதில் புதுமைக் கண்ணோட்டம் ஏன் இங்கே இல்லை?
தமிழில் யூத் என்னும் பெயரில் நடிகர் விஜய் நடித்த ஒரு சினிமா வெளியானது. ஆனால், தமிழ்த் திரைப்படங்கள் இளைஞர்களுக்கானவையாக உள்ளனவா?

அண்மையில் வெளியான ஜெய் பீம் போன்ற படங்களில் காணப்படும் அரசியல் குறித்து அறிந்துகொள்ள இளைஞர்கள் ஆசைப்படுகிறார்கள். அது என்ன எனப் பார்க்கும் ஆர்வம் அவர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் இதுவரை அறிந்திராத ஒரு விஷயமாக அது உள்ளது. வெறுமனே காதல் காமம் என்று ஊர் சுற்றுபவன் இளைஞன் என்ற பழங்கதை இப்போது செல்லுபடியாகாது.

 அரசியல், சினிமா, கலை, இலக்கியம் என எங்கெங்கும் இளைஞர்கள் கோலோச்சுகிறார்கள். கிட்டத்தட்ட இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான காலமாகிவிட்டது. எனும்போது, திரைப்படங்களும் அவர்களது பிரச்சினைகளைப் பேசுவது அவசியமாகிவிட்டது. அவர்கள் வாழ்க்கைப் பாடுகளைப் பேசினால் மட்டுமே திரைப்படம் வெற்றியும் பெறும் பேசவும் படும். இப்போது திரையரங்குக்குச் சென்று சினிமா பார்ப்பவர்களில் மிகப் பெரும்பான்மையினர் இளைஞர்களே. அவர்களுக்கான படங்கள் தமிழில் வெளிவருகின்றனவா?
தமிழ் சினிமாவில் எழுபதுகளின் இறுதியில் எண்பதுகளின் தொடக்கத்தில்  ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் இளைஞர்களின் பிரச்சினைகளை மையப்படுத்திய படங்களை உருவாக்கினார்கள். ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது, பாலசந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு, பாரதிராஜாவின் நிழல்கள் எனப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். அப்போது, வேலையின்மை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. அதனால் திரைப்படங்கள் அது தொடர்பான விஷயங்களைக் கையிலெடுத்து விவாதித்தன. கமல் ஹாசன் நடித்த சத்யா திரைப்படத்தில் கூட வேலையில்லாத இளைஞர்கள் அரசியல் கைப்பாவைகளாக எப்படி மாற்றப்படுகின்றனர் என்பது தான் கதைக் களமாக இருந்தது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் தமிழில் படம் எடுக்கத் தொடங்கியபோது, அவர்களும் இளைஞர்களின் பிரச்சினைகளைக் கையெலெடுத்தார்கள். ஜெண்டில்மேன் படத்தில் இட ஒதுக்கீட்டை அதனால் மாணவர்களின் கல்வியில் ஏற்படும் தாக்கத்தைத் தான் ஷங்கர் படமாக்கினார். ஆனால், அதில் சமூகப் புரிதல் இல்லாமலிருந்தது. இட ஒதுக்கீடு என்பது ஒரு சமூகத்தில் நிலவும் பாகுபாட்டைச் சமன்செய்யும் ஏற்பாடு என்பதைப் புரிந்துகொள்ளாமல் அதைச் சலுகை என்பதைப் போல் மேலோட்டமாக அணுகியிருந்தார். அடுத்து அவர் இளைஞர்களின் பிரச்சினையை விவாதிக்கிறேன் என்னும் பெயரில் உருவாக்கிய பாய்ஸ் அவரது பெயரை முடிந்த அளவு பாழ்படுத்தியது. ஓரளவு நகர்ப்புற இளைஞர்களைத் தம் படத்தில் கையாண்டவர் என மணிரத்னத்தைச் சொல்ல முடியும். ஓர் இயக்குநராகத் தமிழில் மணியான பெயர் பெற்றிருந்த மணி ரத்னமும் இளைஞர்களின் பிரச்சினை என்பதில் காதலையே அதிகமாகக் கையாண்டார். அவரது முதல் படமான இதயக் கோவில் தொடங்கி, இதயத்தைத் திருடாதே, மௌனராகம், அலைபாயுதே எனப் பட்டியலிட்டால் ஓகே காதல் கண்மணி வரை பல படங்கள் முட்டி மோதிக்கொண்டு வந்து நிற்கும். அலைபாயுதே படத்தில் அவர் காட்டிய காதல் ஏற்கெனவே சமூகத்தில் இருந்தது. அதை எடுத்துக் காட்சிப்படுத்தியிருந்தார் அவர். அதே நேரத்தில் ஆயுத எழுத்து போன்ற படங்கள் மிகவும் சொற்பமே. குரு திரைப்படத்தில் முன்னேறத் துடிக்கும் இளைஞனின் வாழ்க்கைக் கதையை மணிரத்னம் படமாக்கியிருந்தார். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரளவு நகர்புற இளைஞர்களின் பிரச்சினையைத் தொட்டுப் பார்த்திருக்கிறார் மணிரத்னம்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புது வசந்தம் மூலம் தமிழ்த் திரையில் நுழைந்த விக்கிரமன் நான்கு இளைஞர்களுக்கும் ஒரு இளம்பெண்ணுக்குமான நட்பைச் சித்தரித்துத் தனித்துத் தெரிந்தார். இவரே உருவாக்கிய புதிய மன்னர்கள் என்னும் அரசியல் படம் கண்டுகொள்ளப்படாமல் போனது.

நகரத்து இளைஞர்களின் பிரச்சினையை, குறிப்பாக அவர்களது மனநிலைமை தொடர்பான பிரச்சினையை விவாதித்த செல்வராகவனும் காதல், காமம், அரசியல் என்னும் பெரும் தலைப்புகளிலேயே தனது படங்களை உருவாக்கினார். அவரது துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் காதல், காமம் என்றால் புதுப்பேட்டையில் அரசியல். அவரது மயக்கமென்ன படத்தில் கானுயிர் புகைப்படக் கலையில் ஈடுபாடு கொண்ட ஒருவரது கதையைக் களமாகக் கொண்டிருந்தாரெனினும் அதுவும் ஒரு புதிய களத்தைக் கையாள்வதில் சறுக்கிக் காமத்திலேயே புதைந்தது.
இளைஞர்களின் பிரச்சினை காதல் காமம் மட்டும்தானா? கௌதம் மேனன் முதல் படத்தில் பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடையேயான காதலை மையப்படுத்தியே மின்னலே படத்தை எடுத்திருந்தார். பாலாவின் முதல் படமான சேதுவும் காதல் படமே.

இளைஞர்களின் வாழ்வில் எவ்வளவோ சிக்கல்கள் உள்ளன. புதிதாகப் படமெடுக்க வரும் இளைஞர்களும் ஏற்கெனவே பழகிய பாதையிலேயே பயணப்படுகின்றனர்.

பா.இரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தியில் கையாண்டதும் காதலே. படமான விதத்திலும் தேர்ந்தெடுத்த களத்திலும் ஒரு சிறு மாறுபாடு இருந்தது. அடுத்து மெட்ராஸில் அவர் அரசியல், ஒடுக்கப்பட்டவர்களின் கல்வி என நகர்ந்தார். பின்னர் அவர் ரஜினியுடன் கைகோத்ததால் இளைஞர்களுக்காக அவர் படமெடுக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. இப்போது அவர் வேறொரு பகுதிக்கு நகர்ந்துவிட்டார். அவரது நிழலில் திரைப்பயணத்தைத் தொடங்கிய மாரிசெல்வராஜ், இளைஞர்கள் வாழ்வின் சாதி என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையே பரியேறும் பெருமாள் படத்திலும் கர்ணன் படத்திலும் காட்சிப் படுத்தியிருக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் தனது பொல்லாதவன் படத்தில் முழுக்க முழுக்க இளைஞர்களின் பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தார் எனச் சொல்ல முடியும். அது தான் பைக் மீதான இளைஞர்களின் காதல். இளம்பருவத்தில் பைக் என்னும் வாகனம் இளைஞர்கள்மீது எந்த அளவு தாக்கத்தைச் செலுத்தும் என்பதற்கு அந்தப் படம் மிகச் சிறந்த உதாரணம். இதே போல் பெண்களின் ஸ்கூட்டியை மிகக் கச்சிதமாகக் கையாண்டார் பாலாஜி சக்திவேல் தனது காதல் படத்தில். அதற்கு முன்னதாக பெண்கள் சைக்கிளோ மொபெட்டோ ஓட்டினால் அது வேலையை முன்னிட்டுத்தான் இருந்தது. உதாரணமாக பொண்ணு ஊருக்குப் புதுசு, மனதில் உறுதி வேண்டும் ஆகிய படங்களில் பெண்கள் சைக்கிளையும் மொபெட்டையும் ஓட்டிய காட்சியைச் சொல்லலாம். காதல் படத்தில் தான் நாயகி படிக்கும்போதே ஸ்கூட்டியில் பறப்பாள். அது பெண்களின் இன்னோர் உலகத்தைக் காதல் வழியே சொல்லிச் சென்ற படம். மதுரை என்னும் ஒரு நகரத்தையே கதாபாத்திரமாக வடித்திருந்த படம் அது.
2007இல் சசிகுமார் தனது முதல் படமான சுப்ரமணியபுரத்தை உருவாக்கியபோது, அதுவும் இளைஞர்கள் பற்றிய படமே. ஆனால், அது சித்தரித்திருந்த விஷயம் முற்றிலும் வேறானது. அதில் காதல் உண்டு என்றபோதும், அந்தப் படத்தில் முதன்மையான விஷயமாக துரோகம் இருந்தது. அதனால் அது இப்போதும் தனித்துத் தெரிகிறது. கிராமப்புறத்தில் இருந்து வந்து நகர்ப்புறத்தில் கொத்தடிமைபோல வாழ்க்கை நடத்த நிர்ப்பந்திக்கப்படும் இளைஞர்களைத் தனது அங்காடித் தெருவில் காட்டியிருந்தார் ஷங்கரின் சீடரான வசந்தபாலன்.
இந்தக் கால இளைஞர்களுக்கு தியேட்டரே இரண்டாம்பட்சமானது தான். அவர்களது முதல் தேர்வு ஓடிடி என்றாகிவிட்டது. உலக அளவிலான அனைத்து வெப்சீரிஸ்கள் அவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கின்றன. அவர்களது சினிமா தேர்வு நினைத்துப் பார்க்க முடியாத தரத்திலும் உயரத்திலும் உள்ளது. அதை உணர்ந்து கொள்ளாமல் இன்னும் தமிழ் இயக்குநர்கள் குண்டுசட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் இளைஞர்களது விருப்பத்துக்குரிய தமிழ்ப்படங்கள் அருகிவிடும்.


Share the Article

Read in : English