English தமிழ்

Share the Article

கொரோனா தொற்று வராமல் இருக்க இரண்டு கட்டத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவரும், கொரோனாவைத் தடுக்கும் வகையில் எப்போதும் முன் எச்சரிக்கையுடன் கவனமாக இருப்பவருமான கமல் ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று குறைந்து வருகிறது என்றாலும்கூட, இது முழு முற்றாக நம்மைவிட்டுப் போய்விடவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, அனைவரும் இனிமேலும் தொடர்ந்து முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று குறைந்து வருகிறது என்றாலும்கூட, இது முழு முற்றாக நம்மைவிட்டுப் போய்விடவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, அனைவரும் இனிமேலும் தொடர்ந்து முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

50 நாட்களைத் தாண்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து கலக்கிய கமல் ஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ள அவர் எப்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நவம்பர் மாதத் தொடக்கத்தில் தீபாவளிக்குச் சில நாள்களுக்கு முன்னர் நடிகர் ரஜினி காந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். குணமடைந்து அவர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.

இந்த நிலையில், அண்மையில் அமெரிக்கா சென்று வந்திருந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன். அது முதலே அவருக்கு லேசான இருமல் இருந்திருக்கிறது. பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் நவம்பர் 22 அன்று நண்பகல் 2:57க்குத் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று ட்விட்டரில் பதிவிட்டது முதல் சமூக வலைத் தளங்களில் கமலின் உடல்நிலை பற்றிய பதிவுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றின் பிரச்சாரக் களங்களில் முழு மூச்சாகச் சுற்றி வந்த நேரத்தில் எல்லாம் அவரை விட்டு எட்டியிருந்த கொரோனா பெருந்தொற்று ஒருமுறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டவரை நெருங்கிவிட்டதே என ரசிகர்கள் அங்கலாய்க்கின்றனர்

இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட கமல் ஹாசனுக்குத் தொற்று லேசாகத்தான் இருக்கும் என்றும் விரைவில் அவர் நலம்பெற்று மீண்டும் தன் பணிக்குத் திரும்புவார் என்றும் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

பொதுவாக, நடிகர் கமல் ஹாசன் எதிலும் முதன்மையானவர் மட்டுமல்ல; முன்னோடியாகவும் இருக்கக் கூடியவர். சினிமாவில் எந்தத் தொழில்நுட்பம் வந்தபோதும் அதை உடனே தனது படத்தில் பயன்படுத்தத் தயங்காதவர். எண்பதுகளில் விக்ரம் படத்தில் கம்ப்யூட்டர் டைட்டில், புன்னகை மன்னனில் கம்ப்யூட்டர் இசை, குருதிப்புனல் படத்தில் டால்பி ஸ்டீரியோ எனத் திரைத் துறையில் அதுவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் தமிழ்ப் படங்களில் பயன்படுத்திப் பார்ப்பதில் அலாதியான விருப்பம் கொண்டவர்.

சுனாமி என்பதைத் தமிழர்கள் அனுபவத்தில் 2004இல் அறிந்துகொள்ளும் முன்னரே மதன் மூலம் வசனமாக அன்பே சிவத்தில் வைத்திருந்தவர். தமிழில் இதுதான்டா போலீஸ், வைஜெயந்தி ஐபிஎஸ் என மொழிமாற்றப் படங்கள் வசூலில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் மைக்கேல் மதனகாம ராஜன் என்ற காமெடிப் படத்தை உருவாக்கியவர். அதன் பின்னரே அந்தக் காலகட்டத்தில் காமெடிப் படங்கள் அநேகமாக வரத் தொடங்கின.

நிதிநிறுவன மோசடிகள் நாட்டில் பெருகிவழியத் தொடங்குவதற்கு முன்னதாகவே அத்தகைய மோசடியைத் தனது மகாநதியில் விவாதித்தவர். இப்படி எல்லாவற்றிலும் முன்னோடியாக விளங்கிய கமல் ஹாசன், அமெரிக்கா சென்று வந்த பிறகு கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று விடைபெறத் தொடங்கிவிட்டது என அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடும் பொழுதில், கமலைத் தொற்றி அந்தப் பெருந்தொற்று ரசிகர்களை ஏக்கப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

கமல் ஹாசன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய உடனே லோகராஜ் கனகராஜ் இயக்கும், கமல் ஹாசனின் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விக்ரம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள எண்ணியிருந்த கமல் ஹாசனை கொரோனா தொற்றியுள்ளதால் அந்தப் படப்பிடிப்பு சற்றுத் தாமதமாகும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகவிருந்த இந்தப் படம் சற்றுக் கால தாமதமாகலாம். விக்ரம் படத்தில் கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே கொரொனா தொற்றிலிருந்து மீண்டவர்.

கமல் ஹாசன் பங்குகொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 அவரின்றி எப்படிக் கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

நடிகர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றோர் கொரோனா தொற்று நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிதி, முதல்வர் நிதி ஆகியவற்றுக்கு நன்கொடையைத் தாராளமாக வழங்கினார்கள். கமல் ஹாசனோ ஒருபடி மேலே போய், நாமே தீர்வு என்னும் தன்னார்வலர் திட்டத்தைக் கடந்த ஆண்டில் உலகச் சுற்றுச்சூழல் நாளான ஜூன் 5இல் தொடங்கினார்.

தனது ரசிகர் மன்றத்தையே நற்பணி மன்றமாக நடத்திய கமல் ஹாசன் இப்படி மக்களுக்காக நேரடியாக பங்களிக்கும் காரியங்களில் ஈடுபடுவதில் முன்னணியில் இருப்பார். பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தபோது, துடைப்பத்துடன் களம் இறங்கியவர் கமல் ஹாசன்.

*நாமே தீர்வு திட்டம் மூலம் கொரோனா பெருந்தொற்றிலிருந்து பலரையும் விடுவிக்கும் வகையில் செயல்பட்ட கமல் ஹாசன் இப்போது பெருந்தொற்று காரணமாக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார்.

நடிகர் கமல் ஹாசன் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று திரைப்படத்துறையினரும் கமல் ரசிகர்களும் தங்களது அன்பை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று இன்னும் விலகவில்லை. எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.


Share the Article