Read in : English

Share the Article

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாக தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து இடைவிடாமல் போராடி வந்த சூழ்நிலையில், திடீரென்று அச்சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் விவசாயிகள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக பிரதமர் மோடி இந்தத் திடீர் அறிவிப்பை செய்தாரா? இதுகுறித்து தமிழக விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?

“விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. நியாயமான கோரிக்கைகளுக்காக விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை விவசாயிகளின் இந்தப் போராட்டம் அளித்துள்ளது.

இச்சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் நன்மைதான். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டே, இந்தச் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்” என்கிறார் இயற்கை வேளாண் விவசாயி பாமயன்.

“இச்சட்டம் வாபஸ் பெறுவதுடன் விவசாயப் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. ஏற்கெனவே இருந்து வரும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்க வேண்டும். விலை நிர்ணயக் கொள்கைகளிலும் மாற்றம் தேவை. உழைப்பு, இடுபொருள் மட்டுமல்ல, நிலத்தின் மதிப்பு, நிர்வாகம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு உத்தரவாத விலையை நிர்ணயிக்க வேண்டும். நமது விவசாயம் சந்தையை நோக்கி உற்பத்தி செய்யக்கூடாது.

தேவையை நோக்கி உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கேற்ற வகையில் நமது அணுகுமுறையில் மாற்றம் தேவை. விவசாயிகள் தற்சார்புடன் விவசாயம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்” என்கிற அவர்,
“விவசாயத்தைப் பொருத்தவரை மாநிலப் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு சட்டங்களைக் கொண்டு வந்து நேரடியாகத் தலையிடக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

“கடும் குளிர், வெயில், மழை போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். வரப்போகும் தேர்தல்களில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் பிரதமர் மோடி, இச்சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இச்சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதைப் பிரதமரே ஒத்துக்கொண்டிருக்கிறார். இதனைக் கண்டறிவதற்கு ஒராண்டு காலம் தேவையா?” என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம்.

“இந்த வேளாண் சட்டங்கள் காலைச் சுற்றிய பாம்பு போல, இவை தூரப் போய் இருக்கிறதே ஒழிய, செத்துவிடவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வேறு வடிவில் இது எந்நேரமும் திரும்பி வரலாம். எனவே, மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

”பல மாதங்களாக நடந்து வரும இந்த வேளாண் போராட்டத்தில் 600க்கு மேற்பட்ட விவசாயிகள் இறந்து போனார்கள். அப்போதெல்லாம் சட்டங்களை வாபஸ் பெறாமல், இப்போது திடீரென்று அந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. பெரு நிறுவனங்களின் நலனுக்காகச் செயல்பட்டு வரும் மத்திய அரசு விவசாயிகளின் நலன்களுக்காகச் செயல்படும் என்று நம்பமுடியவில்லை” என்கிறார் மதுரைச் சேர்ந்த விவசாயி அருள் பிரகாசம்.

“வட இந்தியாவில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் இல்லாமல் விவசாயிகள் தங்களது பொருள்களை விற்பது கடினம். தமிழ்நாட்டில் அந்த மாதிரியான நிலைமை இல்லை. இங்கேயும தரகர்கள் இருந்தாலும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விருப்பம் போல விற்க முடியும். எனவேதான் தமிழ்நாட்டில் வட இந்தியா அளவுக்கு இங்கு பெரிய எழுச்சி இல்லை” என்கிறார் அவர்.

“தில்லிப் போராட்டத்துக்குத் தமிழகத்திலிருந்தும் விவசாயிகள் சென்று பங்கேற்று இருக்கிறார்கள். இங்கிருந்து அவ்வளவு தூரம் போய் போராடுவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் செல்வதற்கு வாய்ப்பு, வசதிகள் குறைவு. நாடாளுமன்றத்தில் இயற்றிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் வாபஸ் பெற வேண்டும். எனவே, என்ன செய்யப் போகிறது மோடி அரசு என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்” என்கிறார் பாளையங்கோட்டையில் உள்ள இயற்கை வேளாண் ஆர்வலர் குமாரசாமி.

வட இந்தியாவில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் இல்லாமல் விவசாயிகள் தங்களது பொருள்களை விற்பது கடினம். தமிழ்நாட்டில் அந்த மாதிரியான நிலைமை இல்லை. இங்கேயும தரகர்கள் இருந்தாலும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விருப்பம் போல விற்க முடியும். எனவேதான் தமிழ்நாட்டில் வட இந்தியா அளவுக்கு இங்கு பெரிய எழுச்சி இல்லை

“தேர்தல் அரசியல் காரணங்களுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தவறு. குறிப்பிட்ட விவசாயிகளின் வலியுறுத்தலுக்காக நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை பிரதிநிதிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவது என்பது சரியான முடிவு இல்லை.

இதுபோல நிறைவேற்றப்பட்ட சட்டங்களை வாபஸ் பெற்றுக் கொண்டே போனால், இதற்கு முடிவே இருக்காது” என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் வாஞ்சிநாதன்.


Share the Article

Read in : English