English தமிழ்

Share the Article

கடலூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் மரணம் அடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் சந்துரு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித்தருகிறார்.

28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்சம்பவம்தான் ஜெய்பீம் கதைக்குக் கரு. சந்துரு வேடத்தில் சூர்யா. ஆனால், அந்த உண்மைக் கதையை அப்படியே முழுமையாக எடுக்கப்படவில்லை. இடம் மாறி இருக்கிறது. ஜாதி மாறி இருக்கிறது. சில பாத்திரங்களின் பெயர் மாறி இருக்கிறது. புதிய பாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

திரைப்படத்துக்கான சில புனைவுகள் இடம் பெற்றுள்ளன. விளிம்பு நிலை மக்களிடம் காவல் துறை நடத்திய அத்துமீறல்களை வெளிப்படுத்தி சமூக அக்கறையுடன் மக்களின் மனசாட்சியை உலுக்கும் திரைப்படமாக அது வெளிவந்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசரநிலைக் காலத்தில் தானும் சித்தரவதைக்கு ஆளானதை நினைவுகூர்ந்துள்ளார்.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தினூடாக, காலம்காலமாய் எவராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டோரைக் குற்ற உணர்வுடன் ஒவ்வொருவரையும் உற்றுக் கவனிக்க வைத்த- எங்குமே எப்போதுமே கேட்கப்படாதோரின் கதறியழும் அவலக்குரலை அழுத கண்களுடன் அகிலத்தையே கேட்கவைத்த, பாதிக்கப் பட்டோருக்காகச் சட்டத்தின்வழி போராடி வென்ற சமூகநீதிப் போராளியைப் போற்றி பெருமைப்படுத்திய படமாகப் பார்க்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

இந்தப் படத்தைப் பாராட்டியுள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இதுபோன்று விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நிகழ்வுகளின்போது கம்யூனிஸ்ட் கட்சி அந்த மக்கள் பக்கம் நின்றதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். திரைப்படத்துக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும்கூட, சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.

இதற்கிடையே, இந்தத் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி, சூர்யாவிடம் ஒன்பது கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை.
எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாக திருத்தி சரி செய்யப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சூர்யா.

அதன் பிறகும், தற்போது வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த பு.தா. அருள்மொழி ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திரைப்படப் பிரச்சினை அடையாள அரசியல் பிரச்சினையாகத் தீவிரமாகிக் கொண்டே போகிறது.

ஜெய் பீம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படமே தவிர, உண்மையாக நடந்த கதையை அச்சுப் பிசகாமல் எடுத்த கதையல்ல. இதுபோல, உண்மைச் சம்பவத்தைத் தழுவி பல படங்கள் வந்திருக்கின்றன. அதுபோன்ற படங்களில் ஒன்றுதான் இது. சில படங்களின் பெயர்களும் படங்களின் வரும் சில வசனங்களும குறிப்பிட்ட சமூகத்தினரையோ தனிநபர்களையோ குறிப்பதாக வந்த புகார்களை அடுத்து அவை நீக்கப்பட்டிருக்கின்றன அல்லது மாற்றப்பட்டிருக்கின்றன.

சில திரைப்படங்கள் வெளிவருவதற்கேகூட தடங்கல்கள் எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. புனைவாக எடுக்கப்பட்ட திரைப்படத்தின் மீது குற்றம்சாட்டிவிட்டு, அதற்கு விளக்கம் அளித்த பிறகும், அதற்கு ஆதாரங்களைக் கதைகளுக்கு வெளியே தேடிக் கொண்டிருக்கும் போக்கு கூடாது.

விசாரணையின் மூலம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத அல்லது கண்டுபிடிக்க விரும்பாத வழக்குகளில், ஏதும் அறியாத அப்பாவி மக்களை கைது செய்து அவர்களை தண்டனைக்கு உள்ளாக்குவது நடந்து கொண்டிருக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வராத வழக்குகளும் நமது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றன.

இதுபோன்ற காவல் நிலைய சித்திரவதைகளையும் காவல் நிலையச் சாவுகளையும் தடுப்பதற்கும் சட்ட நடைமுறைகளில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் ஜெய் பீம் சொல்லாமல் நமக்குச் சொல்லும் பாடம்.. ஆனால் ஜெய் பீம் திரைப்படம் குறித்து இதுகுறித்த விவாதங்கள் நடைபெறுவதற்கு பதிலாக, விவாதம் திசைமாறி போய்க் கொண்டிருப்பது ஆரோக்கியமானது அல்ல.

“எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்” என்று சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை

இங்கு ஒரு கிரிமினல் புகார், காவல் நிலையத்தில் எப்ஐஆராக பதிவு ஏற்பட்டவுடன், இந்திய போலீஸ் செய்யும் முதல் வேலை குற்றம் சாட்டப்பட்ட அல்லது சந்தேக நபரை கைது செய்வதுதான். சில சமயம், சரியான முன் விசாரணையோ, புலனாய்வோ செய்யாமலும், சரியான ஆதாரமும் சாட்சியமும் சேகரிக்காமலே எடுக்கப்பட்ட கைது முடிவை (Decision for Arrest) உறுதிப்படுத்தும் நோக்கத்தில் செயற்கையாக தனிநபர் சாட்சியங்களை உருவாக்குவதிலும், கைதுக்குள்ளான நபரையே தான் செய்யாத குற்றத்தைக் கூட தானே செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி சித்திரவதைக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கி, கடைசியில் ஜோடிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதிலும் போய் முடிகிறது.

வளர்ந்த நாடுகளின் போலீசார் பின்பற்றுவதைப்போல், கைது வாரண்டு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு நபர் பேரிலான குற்றசம்பவம் குறித்து புகார் – தகவல் – சந்தேகம் வந்தவுடன் முதலில் புலன் விசாரணை, பிறகு குற்றப்பத்திரிக்கை, பிறகு நீதிமன்ற வாரண்ட் அடிப்படையில் கைது, பிறகு நீதிமன்ற விசாரணை, கடைசியாக தீர்ப்பு, என்கிற வரிசை நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை வழக்கறிஞர்கள் கூறுவதை கவனத்தில் கொண்டால் எதிர்காலத்தில் ராஜாக்கண்ணு மரணங்களைத் தவிர்க்க முடியும்.

“அடக்குமுறை யார் மீது கட்டவிழ்க்கப்பட்டாலும், அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்று கூறும் அன்புமணி, “கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம்.

உண்மையான சமூக மாற்றத்தை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்” என்று சூர்யா கூறியிருப்பதை மறுக்க முடியாது.


Share the Article