English தமிழ்

Share the Article

ரஜினி காந்த் என்னும் பெயருக்கும் அவரது ஸ்டைலுக்கும் தமிழ்நாட்டில் பெரிய சந்தை மதிப்பு உள்ளது. அதை அறுவடை செய்வதில் இன்னும் தயாரிப்பாளரிடையே போட்டியே இருக்கிறது. வயது எழுபதைத் தொட்டிருந்தாலும் ரஜினியைக் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் சரிதான்.

ஆனால், ரஜினி என்னும் தனித்துவத்துக்காக மட்டும் ரசிகர்கள் படம் பார்த்த நிலைமை மாறிவிட்டது. அந்த மாற்றம் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிட்டது. அந்த உண்மையை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது அண்ணாத்த.

ரஜினி ரசிகர்களிடையே ரஜினி மீதான தங்கள் மரியாதையையும் அன்பையும் அநியாயத்துக்குச் சுரண்டுகிறார்களோ என்ற எண்ணத்தையே அண்ணாத்த திரைப்படம் அழுத்தமாக உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் சிறு நகரங்களிலுள்ள ரஜினி ரசிகர்கள்கூடக் குறைந்தது இருநூறு ரூபாய் செலவழித்தே படம் பார்க்க முடிந்தது.

Source: Twitter.com

ரஜினியின் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மிகச் சாதாரண வருவாய் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்திச் சம்பாதித்த பணம்தான் ரஜினியின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசாக மாறுகிறது.

அண்ணாத்த படத்தை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் பலருக்கு அடிவயிற்றில் அடித்ததுபோல் இருந்தது. “அண்ணாத்த நமக்குக் கிடைக்கலடா நாமதான் அண்ணாத்தக்குக் கெடச்சிட்டோம்” என்று படத்தின் தொடக்கத்தில் வில்லன் பேசும் வசனத்தையே ரசிகர்களும் சொல்லும்படியாகிவிட்டது. அதனால் தான் பாபாவின் பாதையில் படுபாதாளத்துக்கு அண்ணாத்த செல்கிறது.

“அண்ணாத்த நமக்குக் கிடைக்கலடா நாமதான் அண்ணாத்தக்குக் கெடச்சிட்டோம்” என்று படத்தின் தொடக்கத்தில் வில்லன் பேசும் வசனத்தையே ரசிகர்களும் சொல்லும்படியாகிவிட்டது. அதனால் தான் பாபாவின் பாதையில் படுபாதாளத்துக்கு அண்ணாத்த செல்கிறது.

புத்தாயிரத்தில் வந்த முதல் ரஜினி படம் பாபா. 2002இல் வெளியானது. முதல்நாளிலேயே படம் தோல்வியடைந்தது. சூப்பர் ஸ்டார் என்னும் மிகப் பெரிய பிம்பத்தின் மீது விழுந்த பலமான அடி அந்தப் படத்தின் தோல்வி. அந்தத் தோல்வியைத் துடைத்தெறிய மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன ரஜினிக்கு.

சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியே அவரை மீண்டும் குரல் உயர்த்திப் பேசவைத்தது. ஆனால், அதை வெறும் ரஜினி படம் என்று சொல்லிவிட முடியாது. அந்தப் படத்தின் தலைப்பே நாயகி வேடத்தை முன்னிலைப்படுத்தியது. அதற்கு முன்னதாக வெளியான படையப்பா படத்திலும் நீலாம்பரி கதாபாத்திரமே பெயர் வாங்கியது என்றபோதும் படத்தின் தலைப்பு படையப்பாதான்.

ஆனால், சந்திரமுகி என்னும் தலைப்பு வைக்க ரஜினி ஒத்துக்கொண்டதே அவரது நிலைமை அவருக்குப் புரியத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிதான். இனியும் தான் சூப்பர் ஸ்டார் அல்ல; தனக்காக மட்டுமே ரசிகர்கள் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டியதுதான் என்பதை ரஜினிக்கு உணர்த்திய படமாக அமைந்தது சந்திரமுகி. அதற்கு முன்னர் நாயகிப் பாத்திரத்தின் தலைப்பில் வெளியான ரஜினி படம் 1978இல் வெளியான ப்ரியாதான்.

சந்திரமுகிக்குப் பின்னர், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களில் ஷங்கர் என்ற இயக்குநரின் சூத்திரம் ரஜினியின் கணக்கில் வரவுக்கு வழிவகுத்தது. அடுத்து, அவரது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெளியான ஒரே ரஜினி படமான லிங்கா அவருக்குக் கடும் தலைவலியாக அமைந்தது.

இனி என்ன செய்யப்போகிறார் ரஜினி என்னும் கேள்வி அவரைத் துரத்தியது. அதன் பின்னர்தான் புதிதாக வந்த இயக்குநர்களின் வசம் தனது படத்தை ஒப்படைக்கத் தொடங்கினார்.

கபாலி, காலா ஆகிய படங்களை பா.இரஞ்சித் இயக்கினார். படம் பெரிய வெற்றிபெறாவிட்டாலும் ரஜினியின் வழக்கமான மசாலாப் படங்களாக அவை அமையாமல், ரஞ்சித்தின் கைவண்ணத்தில் சற்றுப் புது மாதிரியான சித்திரமாக அவை அமைந்தன. அந்த ஆசுவாசத்தில் பழைய ரஜினியை மீண்டும் காட்டுகிறோம் என்னும் பெயரில் பேட்ட, தர்பார் என்னும் இரண்டு படங்கள் வெளியாயின.

இரண்டும் மாபெரும் வெற்றிப்படங்கள் என்று ரஜினி தரப்பினரைத் தவிர யாரும் நம்பவில்லை.

இப்படியான நிலையில் மீண்டும் ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் ரஜினி. கடுமையான உடல்நலப் பிரச்சினை வாட்டியபோதும் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டிய சூழலில் அண்ணாத்தவை ரஜினி முடித்துக்கொடுத்தார்.

தொடர்ந்து அஜித்தை வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவாவை இயக்குநராக நியமித்துக்கொண்டார். வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் என்பதால் தன் வேலை சுலபம் என நினைத்திருக்கலாம் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பதால் தன் வேலை சுலபம் என நினைத்துவிட்டார் இயக்குநர்.

சினிமா தோன்றிய காலத்தில் சொல்லப்பட்டிருந்தால்கூட மறுக்கப்பட்டிருக்கும் ஒரு கதையை ரஜினி ஓகே செய்திருக்கிறார். அவர் ஓகே செய்த காரணத்தால் அப்படியான பழங்கதைக்கும் திரைக்கதை எழுதிவிட்டார் இயக்குநர்; அதில் ரஜினியை நடிக்கவும் வைத்துவிட்டார்; அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் என்னும் பெரிய நிறுவனம் பெரும் பொருள் செலவில் தயாரித்திருக்கவும் செய்கிறது. ரஜினி ரசிகர்களை இவர்கள் மிகவும் எளிதான இலக்காகக் கருதிவிட்டார்களா?

ரஜினி ரசிகர்களை இவர்கள் மிகவும் எளிதான இலக்காகக் கருதிவிட்டார்களா?

பாபா தொடங்கி அண்ணாத்த வரையான ரஜினி படங்களின் வெற்றி தோல்விகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால், பெரும்பாலானவை படுதோல்வி என்னும் முடிவுக்கு வர முடிகிறது.

படம் மாபெரும் வெற்றி என ஊடகங்களில் செய்தி வருவதும், படம் வெளியான சில நாள்கள் மட்டுமே வசூல் இருந்தது அதன் பின்னர் படம் பெரிதாகச் சம்பாதித்துத் தரவில்லை என்ற குரல் எழுவதும் வாடிக்கையானது.

ஆக, ரஜினி படங்களின் வெற்றி தோல்வி என்பது ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியமாகவே இன்றுவரை உள்ளது. எவ்வளவு நாள் தான் ஊடகங்களின் உதவியுடன் வெற்றியை ஜோடிக்க முடியும்?

நாயகனாக மட்டுமே நடித்து இனியும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது ரஜினி. தனது வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பது அவருக்கும் அவரை இன்னும் ரசிக்கும் ரசிகர்களுக்கும் நல்லது. அதை அவர் விரும்பாமல் இன்னும் டூயட் பாட விரும்பினால் அவர் ஓய்வுபெற்றுவிடுவதே மேலானது. ஆனால், நடிப்பின் மீது தாகம் கொண்ட ரஜினி ஓய்வு என்பதை விரும்ப மாட்டார்.

அவருக்காக நல்ல கதையம்சத்துடன் திரைக்கதையை உருவாக்கும் இளைஞர்கள் கோடம்பாக்கத்தில் இன்னும் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் ரஜினி தன்னை ஒப்படைக்க வேண்டும்.

இயக்குநர்கள், ஹீரோயின்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை மாற்றியபோதும் ரஜினி மாறாமல் இருப்பதை ரசிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள்; கதையும் அப்படியே மாறாமல் அண்ணத்த போல் ரஜினியைப் பல ஆண்டுகள் பின்னே இழுத்துச் செல்பவையாக இருந்தால் அது ரஜினி, தன் ரசிகர்களுக்குச் செய்யும் நியாயமாக இருக்காது.

மேலும் ரஜினியின் பெயர் சொல்ல 16 வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், தர்மதுரை, தளபதி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. இனிப் புதிதாக ரஜினி நடித்துப் பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்னும் நிலைமை அவருக்கு இல்லை.

இல்லாதவனுக்கு அள்ளிக் கொடுத்துப் பாரு அந்த சாமியே சந்தோஷப்படும் என அண்ணாத்த படத்தில் ரஜினி பேசுவதுபோல இனியும் வெற்று வசனங்களைப் பேசுவது நலம்பயக்காது.

ரஜினியின் கிரீடத்தில் மேன்மேலும் வைரக் கற்களைப் பதிக்க வேண்டுமே ஒழிய அதில் கரி அள்ளிப் பூசுதல் அழகாகாது. இனி ஒரு அண்ணாத்த வந்தால் அதன் பின்னர் ரஜினியை அந்த ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது.


Share the Article