English தமிழ்

Share the Article

மதுரை விளக்குத்தூண் ஆங்கிலேய மாவட்ட தலைவர் ஜான் ப்ளாக்பர்ன் மதுரை நகரை நாயக்கர் காலத்து கோட்டையை தகர்த்து விரிவாக்கியதற்காக அவரது நினைவாக 1847ல் நிறுவப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒரு நூற்றாண்டுக்கு முன் பிரிட்டிஷ் ராணி முடிசூட்டு விழா நினைவாக விளக்குத் தூண் நிறுவப்பட்டுள்ளது.  மாட்சிமை தாங்கிய இந்திய சக்ரவர்த்தி ஏழாவது எட்வர்டு, ராணி அலெக்ஸாண்ட்ரா ஆகியோர் 1903ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முடிசூட்டிக்கொண்டதை சகல வைபவங்களுடன் கொண்டாடியதன் நினைவாக அந்த தீபஸ்தம்பம் நிறுவப்படுகிறது என்று அந்த விளக்குத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த அபூர்வமான தகவலை தனது வாட்ஸ்அப் செயலியில் பதிவு செய்திருக்கும் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரணியன், இதுபோல தென் தமிழகத்தில் பல நினைவுச் சின்னங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். 

ஏழாவது எட்வர்டுக்கு அடுத்து முடிசூடிய ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்காகவும் முதல் உலகப் போரில் பிரிட்டன் பெற்ற வெற்றிக்காகவும் தமிழகத்தில் நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. இந்த நினைவு சின்னங்கள் ஆங்கிலேயர்கள் கட்டியவையல்ல, அவர்களைக் கொண்டாடி நம்மவர்கள் கட்டியது. 1913ஆம் ஆண்டு தில்லியில் வைஸ்ராய் லார்ட் ஹார்டிங்கே மீது குண்டு வீசி கொலை முயற்சி நடந்தபோது, ஐந்தாம் ஜார்ஜின் முடிசூட்டு விழாவுக்கு தோரணவாயில் கட்டுவதை இங்குள்ளவர்கள் சிரமேற்கொண்டு செய்துகொண்டிருந்தார்கள்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியபோது அவர்களுக்கு கிடைத்த மரியாதை தமிழகத்தில் வேறு மாதிரி இருந்தது. முகலாய மன்னர் ஔரங்கசீப் 1707இல் இறந்தபிறகு, வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் நாடு பிடிக்க இறங்கிவிட்டார்கள். ஹைதராபாத் மற்றும் கர்நாடக வாரிசுரிமை போராட்டங்களில் மூக்கை நுழைத்து மூன்று கர்நாடக போர்களுக்குக் காரணமானார்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான முதல் புரட்சி திருநெல்வேலி நெற்கட்டும்செவலில் 1757ஆம் ஆண்டு பூலித்தேவன் தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து பாளையக்காரர்கள் ஒவ்வொருவராக ஆங்கிலேயர்களை எதிர்க்கத் தலைப்பட்டார்கள். ஆனால் மதுரை நாயக்கர் அரசு 1736இல் விழுந்த பிறகு பாளையக்காரர்களை ஒன்றிணைக்கும் ஒரு மைய அரசு இல்லாமல் போனது. கட்டபொம்மனை தூக்கிலிட்டு மருது சகோதர்களையும்  நசுக்கிய கிழக்கிந்திய கம்பெனி 1790ஆம் ஆண்டு வாக்கில்  தமிழகத்தில் மிக வலுவாகக் காலூன்றிவிட்டது.  1799ஆம் ஆண்டு மே மாதத்தில் திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு மிச்சசொச்ச ஆங்கிலேயர் எதிர்ப்பும் முடிந்து போனது.

1857இல் சிப்பாய் கலகம் என்று ஆங்கிலேயர்களால் கூறப்படுகிற  முதல் இந்திய சுதந்திர போரில் வடஇந்தியா பற்றி எரிந்தபோது  தென்னிந்தியாவில் வழக்கத்திற்கு மாறான அமைதியே நிலவியது. வங்காள ராணுவம் தொடங்கிய கிளர்ச்சியை கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய பம்பாய், மெட்ராஸ் ராணுவங்களை வைத்து நசுக்கியது வரலாறு.

1757இல் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இங்கு தொடங்கிய கிளர்ச்சி அவ்வளவு சீக்கிரம் பிசுபிசுத்து போனதன் மர்மம் என்ன? தங்களை அடிமைப்படுத்தி வைத்த  வெளிநாட்டுக்காரர்களை பணிந்து வணங்க இவர்களைத் தூண்டியது எது? இதுகுறித்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தன்னுடைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இது ஒருவகையான ராஜவிசுவாசம். ஆள்பவர்களின் நன்மதிப்பில் இருப்பதற்காக செய்யப்படுவது. தனவந்தர்களான  கனவான்களுக்கு இந்த ராஜவிசுவாசம் முக்கியமான ஒன்று.

கேள்வி: வள்ளியூர் தீபஸ்தம்பத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிவசுப்பிரமணியன்: வள்ளியூர் மட்டுமல்ல இதைப்போன்று பல நினைவு சின்னங்களுக்கு தென்தமிழகத்தில் குறைவே இல்லை. காரனேஷன் பள்ளிகள் என்று நிறுவப்பட்ட பல பள்ளிகள் ஐந்தாம் ஜார்ஜின் முடிசூட்டு விழாவுக்கு நிறுவப்பட்டதுதான். திருவாவடுதுறை திருப்பனந்தாள் மடங்கள்கூட முடிசூட்டு விழாவுக்கு பள்ளிக்கூடங்கள் திறந்ததாக குறிப்புகள் உண்டு. மணிகூண்டுகள், தோரணவாயில்கள், மண்டபங்கள் என ஆங்கிலேயரின் வெற்றி சின்னங்கள் பலவும் இங்குள்ளவர்கள் கட்டினார்கள். இது ஒருவகையான ராஜவிசுவாசம். ஆள்பவர்களின் நன்மதிப்பில் இருப்பதற்காக செய்யப்படுவது. தனவந்தர்களான  கனவான்களுக்கு இந்த ராஜவிசுவாசம் முக்கியமான ஒன்று.

A Sivasubramanian

நாட்டுப்புறவியல் அறிஞர் பேராசிரியர் ஆ சிவசுப்பிரமணியன்

கேள்வி: ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும் என்ற உங்களது புத்தகத்தில், சுட்டுக் கொல்லப்பட்ட ஆஷ் துரைக்காக மணிமண்டபம் கட்டியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதுவும் ராஜா விசுவாசத்தின் வெளிப்பாடு என சொல்லலாமா?

சிவசுப்பிரமணியன்: ராஜவிசுவாசம் என்பதைவிட ஒரு குற்றவுணர்ச்சி என்றுகூட சொல்லலாம். ஆஷின் கொலைக்கு பிறகு முக்கியஸ்தர்கள் ராவ் பகதூர் க்ருஸ் பெர்னாண்டோ தலைமையில் தூத்துக்குடி கடற்கரை சாலை சந்திப்பில் இந்த சிறிய மண்டபத்தை அவரது நினைவாக 1912 – 13ல் கட்டினார்கள்.ஐந்தாம் ஜார்ஜ் இந்திய சக்ரவர்த்தியாக முடிசூட்டி கொண்டதை எதிர்த்து மாவட்ட கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றதை அனைவரும் ஆதரிக்கவில்லை.

கேள்வி: காலனியாதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நம் மக்கள் நிலைப்பாடு எடுத்ததின் காரணம் எதுவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

சிவசுப்பிரமணியன்: வேலூர் கலகத்தை கிழக்கிந்திய கம்பெனி நசுக்கியவிதம் மக்களை அச்சுறுத்தியது என்று சொல்லலாம். முக்கியமாக நாடு கடத்துவது என்பது ஒரு கடுமையான தண்டனை. இறந்து போவது என்பது ஒரு வேதனையெனில், சொந்தங்கள் ஒருவரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போய்விடுவது மிகக் கொடுமையான ஒன்று. கட்டபொம்மனிடம் என்னுடைய பெயர் கொண்ட எங்களுடைய உறவினர் ஒருவர் அமைச்சராக இருந்தார். அவரை பினாங்குக்கு நாடு கடத்திவிட்டதாக கூறுவார்கள். அவ்வாறு நாடு கடத்தப்பட்ட உறவினர்களை நினைத்து அவ்வப்போது அழும் பெண்கள் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் இருந்தார்கள்.

கேள்வி: கும்பினி ராசாக்கள் எவ்வாறு உருவானார்கள் ?

சிவசுப்பிரமணியன்: ஆரம்பத்தில் தோன்றிய கிளர்ச்சிகளுக்கு பிறகு கம்பெனியை எதிர்க்க ஒரு வலுவான அமைப்பு அல்லது அரசு இல்லாமல் அதை எதிர்ப்பதால் ஒரு பலனும் இல்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். கம்பெனியை எதிர்த்து போரிட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘கும்பினி ராசா’ என பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். வேலூர் கலகத்திற்கு பிறகு, மெட்ராஸ் ராணுவத்தில் எல்லா தரப்பு மக்களும் இருந்தார்கள். பம்பாய் ராணுவத்தின் மகர் ரெஜிமென்ட் போல பறையர் ரெஜிமென்ட் இருந்ததாக சொல்வார்கள். மெட்ராஸ் ராணுவத்தில் வடதமிழகத்தின் வன்னியர்கள் மிகுந்த அளவில் இருந்தார்கள்.

ஆற்காடு பகுதிகளில் ஒரு மூன்று வரி நாட்டுப்புற பாடல் அந்த சமயங்களில் மிகவும் பிரசித்தம்.

‘பேபி சரோஜா வாருக்கு போறேன்
கம்பெனி ரோட்டினிலே கும்பினி சைக்கிளிலே
காத்தா பறக்கிறேன்’

முதல் உலகப்போரில் ஐரோப்பிய போர்க்களங்களில் போரிட்ட மெட்ராஸ் ராணுவத்தில் இருந்த பலர் திருவண்ணாமலை, ஆற்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கேள்வி: இந்த அமைதியான சூழலும் ஆங்கிலேயர்கள் கட்டிய தொழிற்சாலைகள், பள்ளிகள் மருத்துவமனைகள் போன்ற வசதிகள் தங்கள் வாழ்க்கைத் தரம் உயர வழிவகுத்ததாக இங்குள்ளவர்கள் கருதியதாக எடுத்து கொள்ளலாமா?

சிவசுப்பிரமணியன்: வாய்ப்புண்டு. ஆனால் அதற்கான தரவுகள் வேண்டும். விரிவான ஆராய்ச்சி செய்தால் மட்டுமே இதை குறித்து நம்மால் ஒரு உறுதியான கருத்தை கூற முடியும்.


Share the Article