English தமிழ்

Share the Article

தமிழ் நாட்டு வரலாற்றில் கோவில்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. அப்படி வரலாற்று சான்றுகளாக கோவில்கள் இருக்க முக்கிய காரணம் இந்த கோவில்கள் தான் அன்றைய அரசுகளின் கருவூலம், அரசவை என ஒரு அரசு நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக இருந்தது.

அதே போல கோவில்கள் எப்பொழுதும் அரசின் சொத்தாக தான் இருந்திருகிறதே தவிர தனி நபர்களின் சொத்தாகவோ தனிநபர் நிர்வாகத்தின் கீழோ இருந்ததில்லை. கோவில்கள் சேர சோழ பாண்டிய அரசுகளாக இருந்தாலும் சரி விஜநகராக இருந்தாலும் சரி முகலாய பேரரசாக இருந்தாலும் சரி பெருங்கோவில்கள் எப்பொழுதும் அரசின் கட்டுப்பாட்டிலையே தான் இருந்துள்ளது.

பெருங்கோவில்கள் தோன்றிய காலத்திலிருந்தே அரசின் கட்டுப்பாட்டில் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டேதான் இருந்திருக்கின்றன. மன்னர்கள் கோயில்களைக் கட்டி இயங்குவதற்கான இறையிலி நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். சொத்துக்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை செலுத்தியே வந்திருக்கிறார்கள்.

மன்னராட்சி வீழ்த்தப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் வந்த பிறகு தான் கோவிலில் இருந்து சில காலம் அரசு ஒதிங்கியிருந்திருகிறது. அந்த காலகட்டம் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்கள் தனியார்களிடம் இருந்த காலகட்டமாகும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் கோவில் சொத்துக்கள் கோவில் நிர்வாகத்தில் இருந்தவர்களான பார்ப்பனர் மற்றும் மற்ற மேல் ஜாதிகளில் இருந்த சிலர் சூறையாடினார்கள். இதற்கு எதிராக மக்கள் கிழக்கிந்திய கம்பெனியிடம் கோவிலில் நடக்கும் ஊழல்கள் சீர்கேடுகளை சரி செய்ய கோரிக்கைகளை வைக்க துவங்கினர்.

அதன் விளைவாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் 1817ல் உருவாக்கப்பட்டது. சட்டம் எண் VII/1817. இந்தச் சட்டம் 1817 செப்டம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தின்படி இந்துக் கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முதலான கொடைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் வேலை அப்போதைய வருவாய் வாரியத்திடம் அதாவது Board of Revenueவிடம் வழங்கப்பட்டது.

ஒரு கிறித்தவப் பின்னணி நாட்டைச் சேர்ந்தவர்கள் இதர மதக் காரியங்களை நிர்வகிப்பது கூடாது என்று 1858-ல் கிறித்தவ அமைப்புகள் விக்டோரியா மகாராணியிடம் முறையிட்டன. விளைவாக, இத்தகு தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு. விளைவாக, உள்ளூர் குழுக்களிடம் கோயில் நிர்வாகங்கள் சென்றன. தர்மகர்த்தாக்கள் உருவானார்கள். அவர்களுடைய செயல்பாடுகளில் பிரச்சினை ஏற்பட்டால் மட்டும் நீதிமன்றங்கள் வழி நிர்வாக அமைப்பு (scheme decree) சீரமைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு உயர்சாதியினரோடு இணக்கமாகச் சென்ற காலகட்டத்தில்தான் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் தலையிடா கோவில் சொத்துக்கள் கணக்கு வழக்கில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து தொடர்ச்சியாக அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.

1926-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் மெட்ராஸ் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் II/1927 இயற்றப்பட்டு, இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்த சட்டம் அரசுக்கு வழங்கியது. இந்த சட்டத்தின் மீதான விவாதத்தில் நீதிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான நடேசனார் பேசியது மிக முக்கியமானது.

கோவில் குளங்கள் என்ற பெயரால் பெரும் பணத்தை கொட்டிக் கொடுத்து அவற்றின் வருவாயை ஒரு சமுதாயத்தில் உற்றாரும் சுற்றத்தாரும் அனுபவித்து வரும்படி விட்டுவிட்டனர். இப்படிப்பட்ட சொத்து சுகங்களுக்கு அவர்களே உரிமையும் கொண்டாடும்படி ஆகிவிட்டது. செத்துப் போய் விட்ட மொழியான சமஸ்கிருதம் மொழியின் வளர்ச்சிக்கு தர்ம ஸ்தாபனங்களில் சொத்து தண்ணீராக செலவழிக்கப்பட்டது.

அன்றும் இன்றும் என்றும் இயங்கிய இயங்குகிற இயங்கும் கலைச் செல்வமாம் தமிழ் இலக்கியங்களை படுபாதாளத்தில் புதைத்துவிட்டனர் என்று பேசியிருப்பார்.

இன்று சிலர் பொது காரியங்களுக்கு கோவில் வருமானம் பயன்படுத்தக்கூடாது என்று பேசத் துவங்கியிருக்கிறார்கள் ஆனால் காலங்காலமாக கோவில் வருமானம் என்பதும் கோவில் சொத்து என்பதும் கோவிலின் தேவைக்கு வெளியில் சில குறிப்பிட்ட தனி நபர்களால் அவர்கள் விருப்பப்படி செலவிடப்பட்டது.

இதிலிருந்து மாற்றி பொது காரியங்களுக்கு பயன்பட வேண்டும் என்பது இந்த சட்டத்தை உருவாக்கியவர்களில் நோக்கமாகவே இருந்தது இதன் மூலம் தெரியவருகிறது.

இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் (திருத்தப்பட்ட சட்டம் 39/1996) கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அலுவலர் ஒருவர் ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

துறையின் பொது நிர்வாகம் மற்றும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமை பொறுப்பில் இந்த ஆணையர் உள்ளார்.

1927 -ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கபட்டது. இதன்பிறகு கோவில்களின் நிர்வாகம் அறநிலைய வாரியத்திடம் கொடுக்கபட்டது.

பிரிட்டிஷ் அரசு வெளியேறிய பிறகு சென்னை மாகாணத்தின் முதல்வராக 1947-1949 ஆண்டு வரை இருந்த ஓமந்தூரார். கோவில் நிர்வாகத்தில் இருந்த சீர்கேடுகளையும் ஊழல்களையும் மிக தீவிரமாக விசாரித்தார்.

ஆதிக்க சமூகமாக இருந்தவர்கள்தான் மிக குறைவான தொகைக்குத் குத்தகை எடுத்து ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்த ஓமந்தூரார், அதனை தடுத்தும் நிறுத்தினார். இந்து சமய அறநிலைய வாரியத்தை அரசு துறையாக மாற்றியதில் அவரின் பங்கு மிக முக்கியமானது.

அப்பொழுதும் ஆதிக்க சாதிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு வந்தது. அதை எதிர் கொண்ட ஓமந்தூரார், விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை கோவில் நிலம் மற்றும் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 65 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று எதிர்ப்பவர்களுக்குப் பதில் கூறி தனது சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

மத விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது. வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்), உள்ளே ஒரு கதர் சட்டை ராமசாமி என விமர்சித்தனர் . இதை ஏற்றுக்கொள்ளாத ஓமந்தூரார், தேவதாசி ஒழிப்பு மசோதா, அரிசன ஆலயப் பிரவேச மசோதா போன்றவை கொண்டு வரப்பட்டபோதும் இதையேதான் சொன்னார்கள்; இந்த எதிர்ப்பு கூச்சல்களை ஏற்க முடியாது என்றும் ஓமந்தூரார் கூறினார்.

கோவில்களிலும் வழிபாடு தமிழில் நடத்தப்பட வேண்டும். இறைவன், இறைவி பெயர்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். கோவில்களில் அனைத்து பயன்பாடுகளும் தமிழிலேயே இடம்பெற வேண்டும் என்று கோவில்களில் தமிழைப் புகுத்தியவர் ஓமந்தூரார்.

1951-இல் ‘மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம்’ இயற்றப்பட்டது. முதன்முதலாக இச்சட்டத்தின் வாயிலாக கோவில் நிர்வாகத்திற்கான அதிகாரிகளும் அவர்களின் அதிகாரங்களும் கீழிருந்து மேலாக நிர்ணயிக்கப்பட்டன. மேலும் அதிகாரிகளின் நிர்வாக எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

பரம்பரை அறங்காவலர் முறையானது மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டத்தின் பிரிவு பி-63 கீழ் அங்கீகரிக்கப்பட்டது. அறங்காவலர்களைக் கேள்வி கேட்கும் உரிமையை இச்சட்டம் அதிகாரிகளுக்கு முழுமையாக கொடுக்கவில்லை. அதேபோல் பணியாளர்களுக்குப் பரம்பரை உரிமையையும் இச்சட்டம் கொடுக்கவில்லை.

1959-ம் ஆண்டு ‘தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி கோவில்களையும் சமய நிறுவனங்களையும் நிர்வகிக்க புதிய அரசுத்துறை உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி இந்து அறநிலையத்துறை ஆணையர், தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோவிலின் துணை உதவி ஆணையர்களிடமோ, செயல் அலுவலர்களிடமோ அல்லது பரம்பரை அறங்காவலர்களிடமோ கணக்கு வழக்குகளை கேட்க முடியும்.

இந்துக் கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் குத்தகைக்கு விடவும், விற்கவும் ஆணையரின் அனுமதியை அறங்காவலர்கள் பெற வேண்டும் என இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

காமராஜர் உருவாக்கிய இந்த சட்டம் தான் இந்துசமய அறநிலையத்துறையை முழு அதிகாரம் பொருந்திய துறையாக மாற்றியது.

இரண்டாம் பாகத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியை இங்கே படிக்கவும்

நேருக்கு நேர்

அரசியல்சிந்தனைக் களம்பண்பாடு

அரசாங்கம் கோயில்களை நிர்வகிக்கக் கூடாது; ஏன்?

அரசு கோவில்களை நிர்வகிக்க வேண்டும் என்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் கொள்கையைப் பற்றி இந்த கட்டுரையின் முதல் பகுதி விவாதித்தது. இது இறுதி பகுதி. சென்னை மாகாணத்தின் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது (மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949), வழிபாட்டு...

Kapaleeswarar Temple

Share the Article