Read in : English

Share the Article

அதிமுகவில் மக்களை ஈர்க்கக்கூடிய, செல்வாக்கு மிகுந்த, திறமைவாய்ந்த தலைவரும் ஆட்சிப் பொறுப்பும் இல்லாத சூழ்நிலையில், தமிழகத்தின் தவிர்க்க முடியாத முக்கியக் கட்சியாக கடந்த 49 ஆண்டுகளாக விளங்கிய அதிமுக தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் எதிர்காலம் இலை உதிரும் காலமா? மீண்டும் துளிர் விடும் காலமா? என்பது அதிமுகவின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைப் பொருத்தே இருக்கும்.

திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பிறகு, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோது, குறுகிய காலத்தில் இந்த அளவுக்குப் பிரமாண்டமான கட்சியாக வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியும்,

அதைத் தொடர்ந்து 1977இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்ததும், உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும் எம்ஜிஆரை அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக்கியது கடந்தகால வரலாறு.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி அடுத்த முதல்வராக முன்னிறுத்தப்பட்டாலும்கூட, தேர்தல் தோல்வி அரசியலிருந்து அவரை ஒதுங்க வைத்துவிட்டது. அதிமுகவில் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்டு தேர்தல் வெற்றி மூலம் தனது செல்வாக்கை நிருபித்தார். அதனால், அதிமுகவை அவரது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

தற்போதைய சூழ்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டுகள் சிறைவாசத்தை முடித்து விட்டு விடுதலையாகி வந்துள்ள சசிகலா, அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவின் நெருங்கிய உறவினரான டிடிவி தினகரனால், அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அமமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்த வேண்டியநிலைக்கு ஆளாகிவிட்டார்.

அதிமுகவை எதிர்த்து ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிடி.வி. தினகரனால் அடுத்த வந்த தேர்தல்களில் தனது வெற்றி முத்திரையை பதிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சியும் கலகலத்துப் போய் உள்ளது.

இந்த நிலையில், சசிகலா சிறையிலிருந்து வெளிவந்தபோது சென்னைக்கு வரும் வரையில் வழிநெடுக இருந்த கூட்டத்தைப் பார்த்தோ, ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செலுத்த வரும்போது வந்த கூட்டத்தை வைத்தோ அவர் வசம் அதிமுக மீண்டும் வந்துவிடும் என்று ஆருடம் சொல்லிவிட முடியாது.
அதிமுக தொண்டர்கள் சசிகலா வசம் வருவதற்கு தேவை தேர்தல் வெற்றி. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தேர்தலில் களம் கண்டு வெற்றி வாகை சூடியவர்கள். அதனால், ஆட்சி அதிகாரத்தையும் கட்சி அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறந்தார்கள்.

அதேபோல, சசிகலாவும் தேர்தலில் வெற்றிக் கனியைப் பறித்தால், அதாவது ஆட்சி அதிகாரம் அவருக்கு வந்தால், கட்சி அதிகாரம் தானே கைக்கு வந்து விடும். ஆனால், நீதிமன்றத் தீர்ப்புப்படி இன்னமும் 6 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் நிற்க முடியாது. அத்துடன் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியோ தங்களது வசம் இருக்கும் கட்சியை சசிகலாவுக்கு அவ்வளவு எளிதில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சசிகலாவிடம் காட்டிய பணிவை மீண்டும் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, அவரை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய ஓ. பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கி பிரச்சினைக்கு முடிவுக் கொண்டு வந்து தனது ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.

அமமுகவை வெற்றிகரமாகச் சமாளித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய பாஜக அரசை அனுசரித்து நடந்து, அதிமுகவின் ஐந்து ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து விட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 68 இடங்களை அதிமுக பெற்றது என்பது சாதாரண காரியமல்ல.

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்தாலும்கூட, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடிய இரண்டு பிரதான கட்சிகளில் அதிமுகவும் ஒன்று என்பதில் மாற்றமில்லை. திமுகவையும் அதிமுகவையும் மையமாக வைத்தே தமிழக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

எனினும்கூட, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று மக்களை ஈர்க்கக்கூடிய செல்வாக்குமிக்க தலைவரும் ஆட்சி அதிகாரமும் இல்லாத சூழ்நிலையில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அதிமுகவின் எதிர்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என்று கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவின் சமீபத்திய நடவடிக்கைகளை தற்போதைய அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது முக்கியமானது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே நடந்து வரும் பனிப்போரில் சசிகலா குளிர்காய நினைக்கலாம்.
இந்த நிலையில், ஆட்சி அதிகாரம் இல்லாமல் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ள இந்தக் காலகட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரின் அணுகுமுறைதான் கட்சியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது தற்போது சொத்துக் குவிப்பு, ஊழல் வழக்குகள் தொடரப்படுவது அக்கட்சியினரின் செயல்பாடுகளை முடக்கக்கூடும்.
இந்த நிலையில், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தி, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு மக்களிடம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது என்பது பிரதான வேலை.

அத்துடன், தற்போதைய சூழலில் தேர்தலில் கூட்டணி என்பது முக்கியமானது. எனவே, கழன்று கொண்டு போகும் கூட்டணிக் கட்சிகளை தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது. அத்துடன், மக்கள் பிரச்சினைகளில் திமுக அரசின் மீது ஆக்கப்பூர்வமாக விமர்சனங்களை வைத்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு மக்களிடம் இழந்த நம்பிக்கையைப் பெறுவதில் அதிமுக தீவிர கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பழைய கதை மீண்டும் தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

“அதிமுக முடிந்து விட்டது. இனி ஆட்சிக்கு வரமுடியாது” என்று எம்ஜிஆருடன் நிழல் போல இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் கூறியிருக்கிறார்.

“அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தொண்டர்களையும் கழத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்’’ என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதாவுடன் நிழல் போல இருந்த சசிகலா.

அரசியல் தலைவர்களின் நிழல் போல இருந்தவர்கள் கூறியுள்ளதில் எது நிஜமாகப் போகிறது என்பது அதிமுகவின் கையில் இருக்கிறது. யார் தலைமையில் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அதுவே, பொன் விழா காணும் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.


Share the Article

Read in : English