Read in : English

Share the Article

இன்று, இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகப்போகிற நேரத்தில், இந்து ஆலயங்கள் அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று கோருகிற ஓங்கிய குரல்களைக் பொதுவெளியில் கேட்க முடிகிறது.

ஆனால், இரண்டாம் உலகப் போரில் மிகுந்த அழிவுகளை சந்தித்த பிறகு, பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் ஆட்சியை இந்தியர்கள் கையில் கொடுத்துவிட்டு சென்ற காலகட்டத்தில், கோயில்களை அரசு எடுத்து நடத்தவேண்டும் என்று ஒரு குரல் அழுத்தமாக ஒலித்தது.

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், தமிழ் நாட்டில் மகாத்மா காந்தியின் முக்கிய  சீடர்களில் ஒருவராக அறியப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அவர் ஒரு சமரசம் செய்யாத தூய்மையாளர், ஊழல்வாதிகளையும் போலிகளையும் தீவிரமாக வெறுத்தவர்.

பிரதமர் நேரு அவரை ‘பட்டை தீட்டப்படாத’ வைரம் என்றார், சில நேரங்களில் அவரை மாற்ற  முயன்று, தோற்றும்போனார்!

காந்திகூட ஓமந்தூராருடைய கடுமையான விமர்சனத்துக்குத் தப்பவில்லை. 1947ல், ‘ஹரிஜன்’ பத்திரிகையின் பத்திகளில், கோயில்களுக்குச் செல்வமும் வளங்களும் தேவையில்லை என்று காந்தி எழுதியபோது, ஓமந்தூரார் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். (சோமலெ எழுதிய ‘விவசாய முதல் அமைச்சர்’ என்ற ஓமந்தூராருடைய வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது).

காந்தி கோயில்களைக் குறித்து இப்படி எழுதிய சில நாட்களுக்குப்பிறகு, சென்னை மாகாணத்தின் அப்போதைய தலைவராக இருந்த ஓமந்தூரார் டெல்லியில் மகாத்மாவைச் சந்தித்தார். அவருடைய இந்தக் கருத்தை வெகுவாகக் கண்டித்தார். கோயில்களும் மடங்களும் தங்களுடைய செயல்பாடுகளைச் செய்யவேண்டுமென்றால், அவற்றுக்கு வளங்களும் செல்வமும் தேவை என்று ஓமந்தூரார் காட்டமாகத் தெரிவித்தார்.

கோயில் வளங்களை  சமய நோக்கங்களைத் தாண்டிப் பொது காரியங்களுக்குப் பயன்படுத்த நினைக்கும் இன்றைய அரசாங்கங்கள் சில பொழுது பேசும் பாஷையை ஒமந்தூரார் பேசவில்லை. ஆனால் கோயில் பொது ஜனங்களுக்குப் பயன்படவேண்டும் என்று அவர் அழுத்திக்கூறும் போது,  மறைமுகமாக அந்தக் குறிப்பும் அவர் பேச்சில் இல்லாமல் இல்லை.   ‘பொது’ மக்கள், ‘பொதுக்’ காரியங்கள் என்று கோயில் தொடர்பாக அவர் பேசியதில் ஒரு முரண் இருந்தது. இந்துக் கோயில்கள் எல்லா மக்களுக்குமான ஒரு பொது நிறுவனம் அல்ல….அவை இந்துக்களின் வழிபாட்டு நிறுவனம் என்கிற அடிப்படை உண்மையை அவர் கவனிக்கவில்லை.

சொந்த வாழ்க்கையில் பல சோகங்களையும் இழப்புகளையும் சந்தித்தவர் ஓமந்தூரார். இத்தகையவரின் வாழ்க்கையில் மாறாத நேர்கோடுகாளாய்த்  தொடர்ந்து வந்தவை இரண்டு முக்கியமான விஷயங்கள். முதலாவது, அவர் பழைய காங்கிரஸ் கட்சி மீது வைத்திருந்த விசுவாசம். விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில், அவர் பிறந்த கிராமமாகிய ஓமந்தூர் இடம்பெற்ற அவருடைய சொந்த மாவட்டமான தெற்கு ஆற்காட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அவர் வியர்வை சிந்திப் பல தியாகங்கள் செய்து கட்சியை வளர்த்திருந்தார். காலப்போக்கில் மாறிக்கொண்டிருந்த கட்சியின் தலைமையோடு அவருக்கு முரண்கள் இருந்தபோதும், அவரால்  கட்சிக்கு எதிராகச் செயல்பட இயலவில்லை. ‘‘நானே வளர்த்த கட்சிக்கு நானே கெடுதல் செய்ய என் மனம் எப்படி ஒப்பும்’’ என்பது அவருடைய மனப்போக்காக இருந்தது.  (இந்தப் பார்வையை T. S. சொக்கலிங்கம் தன்னுடைய ‘எனது முதல் சந்திப்பு’ என்ற புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார்.)

இரண்டாவது, அவருடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட தெய்வ பக்தி உணர்வு. அவருடைய குடும்பத்தில் வரிசையாக நிகழ்ந்த மரணங்கள் அவரைத்  தனிமையில் தள்ளின. அவர் கோயில்களை நோக்கியும், ஆன்மிகத்தை நோக்கியும் பயணப்பட்டார். பல மகான்களைத் தேடிச் சென்று தரிசனம் செய்தார்.  சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்த டி.பிரகாசத்தைப் பல காரணங்களுக்காக காமராஜரும் ராஜாஜியும் அகற்ற நினைத்தார்கள். மாகாணத்தின் பிரதமர் பொறுப்பை ஓமந்தூராருக்கு வழங்க அவர்கள் முன்வந்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் ஓமந்தூரார் ரமண மகரிஷியின் ஆசியைப் பெறுவதில் மிகவும் குறியாக இருந்தார். பகவானின் ஆசியுடன்தான் அதை ஏற்றார்.

இந்துக்களின் வாழ்க்கையில் கோயில்களுடைய முக்கியத்துவத்தை ஓமந்தூரார் தீர்க்கமாக அறிந்திருந்தார். அவருடைய காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றின் நிர்வாகம் மிகவும் சீரழிந்துபோயிருந்தது. இந்த நிலையில், மாகாணத்தின் தலைவர் என்ற முறையில்,   மடங்களின் ஆதீனங்கள், கோயில்களின் அறங்காவலர்கள் மற்றும் கோயில்களில் பங்குவகிக்கிற பிறரைக் கூட்டி அவர் பேசினார். கோயில்கள் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் அந்த நாடு எப்படிப்பட்ட அழிவைச் சந்திக்கும் என்பதுபற்றிய   திருமந்திரப் பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினார்:

‘‘முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரிவளங்கன்றும்

கன்னங்களவு மிகுத்திடும் காசினிக்கு

என்னருள் நந்தி எடுத்துரைத்தானே’’.

சிவ ஆலயங்களில் வழிபாடு பாதிக்கப்பட்டால், அந்த நாட்டின் அரசருக்குத் தீங்குகள் வளரும், மழை பெய்யாது, வழிப்பறியும் திருட்டும் அச்சமின்றிப் பெருகும் என்பது பாடலின் பொருள். (ஓமந்தூரார் வழங்கிய சொற்பொழிவுகளின் உரை வடிவத் தொகுப்பான “ஓமந்தூரார் எழுத்தும் கருத்தும்” என்ற நூலிலிருந்து).

இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையைத் தவிர்க்கவேண்டுமென்றால், கோயில்களை அரசாங்கம் நிர்வகிக்கவேண்டும் என்று ஓமந்தூரார் உறுதியாக நம்பினார். ‘சட்டை இல்லாத’ வரதாச்சாரி என்றும், காந்திய லட்சியங்களுக்கு உண்மையாக இருந்த காரணத்தால் ‘சட்டை அணியாதவர், காலணி அணியாதவர், தன்னலம் இல்லாதவர்’ என்றும் அழைக்கப்பட்ட என். எஸ். வரதாச்சாரி, கோயில் நுழைவு புகழ் மதுரை ஏ. வைத்தியநாத ஐயர் போன்றோர், கோயில்களை அரசு கையில் எடுக்கும் முடிவை எதிர்த்தார்கள். ஆனால், விடுதலைப் போராட்ட வீரர் ம. பொ. சிவஞானம், புகழ் பெற்ற இதழாளர் டி. எஸ். சொக்கலிங்கம் மற்றும் தமிழ் அறிஞர் ‘அவ்வை’ துரைசாமிப் பிள்ளை உள்ளிட்டவர்கள், அரசாங்கம் கோயில்களை நிர்வகிக்கண்டும் என்று ஆதரவு திரட்டினார்கள், ஓமந்தூராருடைய கரங்களை வலுப்படுத்தினார்கள்.

மடத் தலைவர்கள், குறிப்பாக, ஆதீனங்களின் பண்டார சன்னிதிகள் ஊழலில் ஈடுபடுகிறவர்கள், தகுதியற்றவர்கள், ஒரு சிலரைப்  பொறுத்தவரை சிற்றின்ப வேட்கையில் ஈடுபடுகிறவர்கள் என்றெல்லாம் களங்கத்துக்கு ஆளாகியிருந்த நேரம் அது.  1936ல் ‘சந்திரகாந்தா’ என்ற ஒரு   திரைப்படம் வெளிவந்து, நல்ல வெற்றியைப் பெற்றது. அதில் திறமை மிக்க நடிகரான காளி. என். ரத்தினம், ஒரு பண்டார் சன்னிதியின் சிற்றின்ப விளையாட்டுகளை அற்புதமாக சித்திரத்து, அவர்களைக் கேலி செய்திருந்தார். இத்தகைய சூழலில் படத்தில் ஏளனத்துடன் பயன்படுத்தப்பட்ட ‘சுவாமிகள்’ என்ற சொல், தமிழ் நாடு முழுவதும் புகழ் பெற்ற ஒரு கிண்டல் சொல்லாக மாறிவிட்டதாக திரைப்பட வரலாற்றாளர் அறந்தை நாராயணன் குறிப்பிடுகிறார் (தமிழ் சினிமாவின் கதை, பக்கம் 98).

இந்தச் சூழலுடன், காற்றில் எங்கும் பரவியிருந்த மக்களாட்சிப் பொதுவுடைமைவாத எண்ணமும் சேர்ந்துகொண்டது. சுயநலக் கோஷ்டிகளிடமிருந்து கோயில்கள் மற்றும் மடங்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அவற்றின் நிர்வாகத்தை முழுமையாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கோஷம் வலுத்தது. இத்தகைய ஒரு தீவிரமான செயல்பாடு, மிகவும் வரவேற்கத்தக்கதாக சிலருக்குத் தோன்றியது.

ஓமந்தூரார் தன்னுடைய அதிகாரப் பீடத்தில் இருந்து மடத் தலைவர்களை நோக்கிப் பேசினார். அவர்கள் தங்களுடைய மடங்களின் ஆரவாரம் மற்றும் தம்பட்டங்களையெல்லாம் விட்டுவிடவேண்டும், அன்றாடம் கோயிகளில் நடக்கிற வழிபாட்டுச் செயல்களை  ஓய்வு பெற்ற IAS அலுவலர்களிடம் விட்டுவிடவேண்டும், தவம் செய்வது, சாமானிய பக்தர்களை ஆன்மிக வழியில் மேம்படுத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்ற அறிவுரையை அவர்களுக்கு வழங்கினார். இது பழைய அமைப்புகளுக்கு சங்கூதுவதான சம்பவம்.

இந்தத் திருப்பத்தில், கோயில்களையும் மடங்களையும் மீட்கப்போகிற மகானாக ஓமந்தூரார் காட்சியளித்தார்.  கோயில் நிர்வாகத்தை அரசு முழுமையாக எடுத்துக்கொள்வதை சாத்தியப்படுத்த அறிமுகப்படுத்திய மசோதா அவர் பதிவியிலிருந்து விலகிவிட்ட பிறகு அமலுக்கு வந்தது. வழக்கு, திருத்தம், மீள் உருவாக்கம் என்று வலுப்பெற்று 1959ன் தமிழ் நாடு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டமாக வடிவெடுத்தது.

தமிழ் நாட்டுக் கோயில்களும் மடங்களும் அரசின் வலுவான பிடிக்குள் முழைமையாக வந்துவிட்டன.

கடந்து போன எழுபத்தும் மேற்பட்ட ஆண்டுகளில், கோயில் வழிபாடுகளில் ஈடுபட்ட லட்சோப லட்சம் இந்துக்கள், அரசு நிர்வகிக்கும் ஒரு துறையாகத்தான் கோயில்களைக் உணர்ந்திருக்கிறார்கள், அனுபவித்திருக்கிறார்கள். அரசு அலுவலர்கள் கோயில்களில் அரசோச்சுவதைத்தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள்.

கோயில்களின் நிர்வாகம் பக்தர்களின் கையில் எப்போதாவது இருந்திருக்கக்கூடும் என்று கற்பனைகூட செய்ய முடியாது. ஆனால், பல நூற்றாண்டுகளாகக் கோயில்கள், அவை இருக்கும் இடத்தில் அமைந்த பக்தர்களின் குழுக்களால்தான் நிர்வகிக்கப்பட்டுவந்திருக்கின்றன. இந்த உண்மையை தற்கால நிதரிசன நிலை முழுமையாக மறக்கடித்துவிட்டது!

சரி, கோயில்களின் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்ளுவதன் வாயிலாக ஓமந்தூரார் எட்ட விரும்பிய நோக்கங்கள் என்ன? அவை நிறைவேறினவா? அரசு கோயில் நிர்வாகத்தை ஏற்றதன் விளைவுகள் என்ன?

இரண்டாம் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

(கட்டுரையாசிரியர் மூத்த இதழாளர் மற்றும் எழுத்தாளர்)


Share the Article

Read in : English