English தமிழ்

Share the Article

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் நான்காவது தம்பதி தில்லையைச் சேர்ந்த விஸ்வநாதன் – விஜயலட்சுமி.

விதுஷி விஜயலட்சுமி பிரசித்தி பெற்ற திருவாரூர் நாகஸ்வர மரபைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா டி. எஸ். மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாரூர் கோயிலில் ஆஸ்தான வித்வனாக இருந்தவர். இவருடைய தந்தையார் டி.எஸ். எம். கிருஷ்ணமூர்த்தி பிள்ளை கொண்டத்துக்காளியம்மன் கோவிலின் தற்போதைய ஆஸ்தான வித்வானாக இருந்து வருகிறார். தனது நாகஸ்வர பயிற்சியை முதலில் தன் தந்தையாரிடமும் பின் திருவாரூர் இசைப் பள்ளியில் சேர்ந்து வித்வான் இஞ்சிக்குடி ஈ.எம். சுப்ரமணியம் , வித்வான் சிக்கல் எஸ்.பி. உத்ராபதி போன்ற தேர்ந்த கலைஞர்களிடம் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டுள்ளார். அதன்பின் தன் தந்தையாருடன் இணைந்து கச்சேரிகளும் செய்துள்ளார்.

வித்வான் விஸ்வநாதனின் முதல் குரு வித்வான் திருப்பனந்தாள் மோகன்தாஸ். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லூரியில் சேர்ந்து வித்வான் செம்பனார் கோவில் SRD சிவராஜின் வழிநடத்திலில் நான்கு வருடங்கள் பயிற்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆஸ்தான வித்வான் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளயிடம் குருகுல முறையில் பயிற்சி பெற்றுள்ளார். தெலுங்கு/ தமிழ்க் கீர்த்தனைகளோடு, தேவாரத் திருமுறைகளையும் முறையாகப் பயின்று அதை தொடர்ந்து வாசிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

இவர் தாத்தா நாகஸ்வர வித்வான் சிதம்பரம் எஸ். சிதம்பரம் பிள்ளையைத் தொடர்ந்து, சிதம்பரம் ஶ்ரீ தில்லை காளியம்மன் கோவிலின் ஆஸ்தான வித்வானாக இருந்து வருகிறார். சிங்கப்பூரில் ஐந்து வருடங்கள் நாகஸ்வர வித்வானாக பணிபுரிந்த போது பெற்றோர்கள் பார்த்து விஜயலட்சுமியை இவருக்கு மணமுடித்து வைத்தனர்.
ஹிருமணத்துக்கு பின் சில வருடங்களுக்கு விஜயலட்சுமி வாசிப்பதை நிறுத்தியிருந்தார். விஸ்வநாதன் இந்தியா திரும்பியதும் தம்பதியர் சேர்ந்து வாசிக்கத் தொடங்கினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கச்சேரிகள் செய்து வருகின்றனர்.

நாகஸ்வரத் துறையில் பெண் கலைஞர்கள் சந்திக்கும் சூழல்கலைப் பற்றிக் கூறிய விஜயலட்சுமி,,” எனக்கு நினைவு தெரிந்து நாகஸ்வர இசைத்துறையில் ஆண்கள் தான் அதிகம் இருந்துள்ளார்கள். அவர்களால் தான் நாகஸ்வரம் வாசிக்க முடியும் என்ற ஒரு எண்ணம் பரவலாக இருந்தது. இந்தச் சுழலில் பெண்கள் விரும்பி அதை தேர்ந்தெடுப்பது என்பதே ஒரு சவால் தான். கற்க ஆரம்பிக்கும் போது ஆண்கள் அளவுக்கு மூச்சுப்பிடித்து வாசிப்பது கடினம்தான். தொடர்ந்து ‘உன்னால் முடியும்’ என்று உற்சாகப்படுத்துகிற சூழல் வாய்த்தால் நிச்சயம் பெண்களாலும் வாசிக்க முடியும். என் பயணம் அவ்வாறே இருந்தது.

தொடக்கத்திலிருந்தே என் தந்தை என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். என் குருநாதர்களும் எனக்கு நிறைய ஆதரவு அளித்தனர். கச்சேரிகளில் பெண் வாசிப்பதை ஆச்சரியத்தோடு பார்ப்பவர்களும், அதை கிண்டல் செய்கிறவர்களும் கலந்தே இருக்கின்றனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் மேலும் வளர்வதை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக வெற்றியை அடையலாம்.
என் அப்பாவிற்க்கு பிறகு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பவர் என் கணவரே. திருமணம் மற்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபின், வாசிப்பதை நிறுத்தியிருந்த என்னை, கற்ற வித்தையைக் கைவிடக் கூடாது என்று தன்னுடன் சேர்ந்து பயிற்ச்சி செய்ய உற்சாகப்படுத்தி மீண்டும் வாசிப்பை நோக்கி என்னை நகர்த்தியவர் அவரே.
திருவாரூர் வழியில் கற்ற எனக்கும், என் கணவரின் குரு பரம்பரை வழி வாசிப்பு முறைக்கும் நிறைய பாட பேதங்கள் இருந்தன. கடந்த இருவருடங்களாக அவருடன் சேர்ந்து பயிர்ச்சியில் ஈடுபட்டு ஒத்திசைவை நாங்கள் அடைந்துள்ளோம்.

இந்த பரிவாதினி நவசக்தி தொடர் போல பல வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டால் இன்னும் நிறைய பெண்கள் முனைந்து துறைக்கு வருவார்கள். என் இரண்டு பெண்குழந்தைகளுக்கு படிப்பை வழங்குவதோடு, என் பாரம்பரிய இசைக்கலையையும் வழங்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். என்னைப் போலவே இத்துறையில் இருக்கும் அனைவரும் இவ்விசையை தங்களின் அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.”, என்கிறார்.

வருகிற நவராத்திரி நவசக்தி நாகஸ்வர விழாவில் கே.எஸ்.கே.மணிகண்டனும், பி.வெங்கடேஷும் இந்த ஜோடிக்குத் தவில் வாசித்துக் கச்சேரியைச் சிறப்பிக்கவுள்ளனர்.


Share the Article