English தமிழ்

Share the Article

பிரபாவதி கோலார் மாவட்டம் தொட்டபன்னந்தாஹல்லியைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் ராமகிருஷ்ணப்பா, தனலக்ஷ்மி இருவரும் நாகஸ்வரக் கலைஞர்கள் ஆவார்கள். பிரபாவதி தவழும் குழந்தையாக இருந்தபோதே பெற்றோர் பெங்களூர் வந்துவிட்டனர்.

குழந்தையாக இருந்தபோதே பிரபாவதி இசையில் ஆர்வம் காட்டினார். குருகுலத்தில் வேறு ஒரு ஆசிரியரிடம் பயிற்சி பெற்றால்தான் இசையை கற்பதற்குத் தேவையான தீவிரமும் ஈடுபாடும் ஏற்படும் என்று முடிவு செய்த பெற்றோர் அவரை திருப்பதி ஆர். வேணுவிடம் இசை கற்க அனுப்பினர்.

இசை கற்பதில் பெரும் முன்னேற்றம் காட்டினார் பிரபாவதி. ஆனால், இசையில் அவரின் முன்னேற்றத்துக்கு திருமணம் தடையாக இருக்குமோ என்று பெற்றோர் கவலைப்பட்டனர். அந்த நேரத்தில்தான் பெங்களூருக்கு ஓர் இசை நிகழ்ச்சிக்காக பிரபாவதி சென்றார்.

பழனிவேல் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தாபுரத்தைச் சேர்ந்தவர். முதலில் செக்கரபட்டி சின்னையாவிடம் இசை பயின்றார். இசை இரட்டையர்களான மாயவரத்தைச் சேர்ந்த வண்டிக்காரத்தெரு மணி, மாமூண்டி ஆகியோரில் மாமூண்டியிடம் இசை பயின்று தனது திறமையை மேலும் வளர்த்துக்கொண்டார்.

பழனிவேல் பெங்களூரில் கச்சேரியில் கலந்துகொண்டபோது நல்வாய்ப்பாக பிரபாவதியின் பெற்றோர் அங்கே இருந்தனர். பழனிவேலின் இசைத் திறமையாலும் அடக்கமான பண்புகளும் பிரபாவதியின் பெற்றோருக்கு மிகவும் பிடித்துப்போனது. தங்கள் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியுமா என்று பழனிவேலின் பெற்றோரிடம் பேசி மணம் முடித்தவைத்தனர் பிரபாவதியின் பெற்றோர். பெங்களூரில் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று உணர்ந்த பழனிவேல் அவரும் அங்கு சென்றார். இருவரும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கே இசைக்கச்கேரிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் தொழில் வளர்ச்சி இன்னும் மேம்பட்ட நிலையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து பெங்களூரி எம்.கோதண்டராமனிடம் இசைப் பயிற்சிபெற்றனர். இது குறித்துப் பேசும் பழனிவேல் “உண்மையான ‘காயகி’ பாணியில் எங்கள் வாசிக்கும் திறமையை வளர்க்க விரும்பினோம். பாடகர் விதுஷி ஆர்.ஏ. ரமாமணியை மிகச் சிறந்த குருவாகக் கண்டோம். அவரிடன் இன்றுவரை கற்றுக்கொண்டு வருகிறோம்.

ஹம்பி உற்சவம் உள்ளிட்ட பல பெருமைமிகு கோயில் விழாக்களில் அவர்கள் கச்சேரி நடத்தியுள்ளனர். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஜாம்பவானாக விளங்கும் தவில் கலைஞர்கள் அவர்களுடன் கச்சேரியில் கலந்துகொள்கின்றனர்.

ஒரு பெண் நாகஸ்வரக் கலைஞராக இருப்பதில் உள்ள சவால்களை குறித்துப் பேசிய பிரபாவதி, “நாகஸ்வரம் என்பதே ஒரு கடுமையான இசைக்கருவி. அதற்கு உடல் பலமும் தேவை. அதை வாசிக்கப் பழகி குறிப்பிட்ட அளவு நிபுணத்துவம் அடைவதற்கு கடுமையான பயிற்சி தேவை. ஒரு பாட்டுக் கலைஞரோ, வீணை வித்வானோ கல்வி கற்றுக்கொண்டே கலையையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், நாகஸ்வரம் கற்பவர்கள் தங்கள் முழு நேரத்தையும் அதைப் பயிலவும் பயிற்சி செய்யவும் செலவிட வேண்டும்.

பெரும்பாலான நாகஸ்வர மாணவர்கள் குருவுடனோ அல்லது இசைக் கல்லூரிகளுடன் இணைந்த பள்ளிகளிலோ தங்கிப் பயிற்சியை மேற்கொள்வார்கள். ஆனால், பெண்கள் வீட்டுக்கு வெளியே தங்குவது மிகவும் கடினமானது. அவர்கள் தயாராக இருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் நடுவே ஒரு பெண்ணைத் தங்க வைப்பதை விரும்புவதில்லை. பெண்ணின் பெற்றோர் சிறப்பு கவனம் எடுத்து அவள் நாகஸ்வரம் கற்க உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தாலொழிய ஒரு பெண் நாகஸ்வரம் கற்கவும் பயிற்சி செய்யவும் முடியாது. ஒரு சிறந்த கலைஞராக உருவாகவும் முடியாது. எனக்குத் தேவையான ஆதரவு என் வாழ்நாள் முழுவதும் கிடைத்தது எனது அதிர்ஷ்டமாகும். என் கணவரே சிறந்த குருவாக விளங்குகிறார். அவருடன் இணைந்து கச்சேரிகள் செய்வதால் எனது திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள முடிந்தது. ஒரு பெண்ணால் நாகஸ்வரக் கலைஞராக நிலைப்பது கடினம் என்று கூறுவதால் அது முடியவே முடியாது என்று அர்த்தமல்ல. கடுமையான பயிற்சி சிறந்த பலனைக் கொடுக்கும். நிறைய பெண்கள் நாகஸ்வரம் கற்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

மேலும், அவர் கூறுகையில் “பல திறமையான நாகஸ்வரக் கலைஞர்கள் குழந்தைகள் பிறந்தவுடன் கலையை விட்டுவிடுகின்றனர். கணவரது குடும்பத்தினரும் பெற்றோரும் பெண்கள் நாகஸ்வரக் கலையைத் தொடர்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

அகில இந்திய வானொலி நிலையத்தின் ‘ஏ’ கிரேடு தரவரிசை உள்பட பல பாராட்டுகளை பழனிவேலும் பிரபாவதியும் பெற்றுள்ளனர்.
தங்கள் இசை வாழ்வின் பொன்னான தருணங்களைப் பற்றிக் கேட்டபோது பெங்களூரில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வரவேற்கும் வகையில் நாகஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைவுகூர்ந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அப்துல் கலாம் இரட்டையரின் இசையில் மிகவும் கவரப்பட்டு என்றும் வாழும் தியாகராஜ கிருதியான ‘எந்தரோ மகானுபாவலு’ என்ற பாடலை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். பாடலை முழுவதும் கேட்டபின்னர்தான் மேடை ஏறினார். அவரது பேச்சிலும் இருவரது இசையைப் புகழ்ந்து பேசினார்.

நவராத்திரி நவசக்தி தொடரில் பழனிவேல், பிரபாவதி கச்சேரியுடன் புகழ்பெற்ற வித்வான்களான மன்னார்குடி வாசுதேவனும் கோவிலூர் கல்யாணசுந்தரமும் கலந்துகொள்கின்றனர்.


Share the Article