Read in : English

Share the Article

யாரும் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பமாக நாகாலாந்து ஆளுநர் ரவீந்திர நாராயண ரவியை தமிழ் நாட்டு ஆளுநராக குடியரசுத் தலைவர் வெள்ளிக்கிழமை நியமித்தார். பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்ட பன்வாரிலால் புரோஹித் இடத்தை அவர் நிரப்புகிறார். தடாலடியான ஆளுநர் மாற்றத்துக்கு அவசர தேவை எதுவும் இல்லாத நிலையில் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் நடந்த இந்த நியமனம் ஆளும் திமுக அரசு எதிர்பாராதது. ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த நியமனம் பல்வேறு கணிப்புகளை உருவாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அதிரடி நியமனத்தின் காரணங்களை அரசியல் பார்வையாளர்கள் பலவிதமாக அலசி வருகிறார்கள்.

ஆளுநரை நியமனம் செய்வது ஒன்றிய அரசின் தனி உரிமையாகவும் அன்றாட அரசியல் பணிகளில் ஒன்றாகவும் இருந்தாலும் ரவீந்திர நாராயண ரவியின் பின்னணி பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.
.
கேரளாவில் 1976-ல் ஐ.பி.எஸ். பணியில் நுழைந்த ஆர் என் ரவி தேசிய பாதுகாப்பு அமைப்பில் நன்கு அறியப்பட்டவர். கேரள போலீஸ் துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருபது ஆண்டுகளாக சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார். அப்போது கேரளாவில் மூத்த அதிகாரியாக இருந்த அஜித் தோவலுடன் இணைந்து பணியாற்றிய ரவி அந்த கால கட்டத்தில் தோவலிடம் நல்ல பெயர் எடுத்தார். தொடர்ந்து சி.பி.ஐ உள்பட ஒன்றிய அரசின் பல்வேறு பணிகளில் ரவி இருந்தார். புலனாய்வு பிரிவில் அஜித் தோவல் இயக்குனராக இருந்தபோது அதே துறையில் பணியில் இருந்த ரவி, அப்போது தோவலுக்கு நெருக்கமானார்.

நீண்ட பணிக்காலத்துக்கு பின் 2012 -ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரவி தேசிய பாதுகாப்பு குறித்து முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களின் கிளர்ச்சிகள் பற்றி நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்தார். அஜித் தோவலுடன் சேர்ந்து வடகிழக்கு மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஈடுபட்டிருந்ததால் அந்தப் பிரச்சினைகளில் ரவி நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

2014-ஆம் ஆண்டு பாஜக பெரும் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக ஆனவுடன் மத்திய கேபினெட் அமைச்சருக்கு நிகரான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் அஜித் தோவல் அமர்த்தப்பட்டார். அதே ஆண்டு மத்திய உளவு நிறுவனங்களான ஐ.பி.மற்றும் ரா தவிர தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தையும் ஓன்றிணைக்கும் மைய புலனாய்வு அமைப்பான ஒருங்கிணைந்த புலனாய்வு குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் கிளர்ச்சிகளையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் கையாள்வதில் திறமையும் அனுபவமும் மிக்கவராக இருந்த ரவியை ஒன்றிய அரசு நாகலாந்து அமைதிப் பேச்சுகளில் சமரச தீர்வாளராக ஈடுபடுத்தியது.

ஒரே ஆண்டில் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலை சேர்ந்த பல்வேறு போராளிக் குழுக்களை பேச்சுகளில் கலந்துகொள்ளச் செய்த ரவி, 2015-ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க நாகாலாந்து அமைதி ஒப்பந்தத்தில் போராளி குழுக்கள் கையெழுத்திட வைப்பதில் வெற்றிபெற்றார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நடந்த 80 சுற்றுப் பேச்சுகளுக்கு நல்ல முடிவு ஏற்பட்டது. இதனால் ரவிக்கு நல்ல பெயர் கிடைத்தது.

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் 2018-ஆம் ஆண்டு அவர் நியமனம் பெற்றார். அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராகக்கப்பட்டார்.
.
அவர் ஏன் தமிழ்நாடு ஆளுநராக மாற்றப்பட்டார்? இந்த நியமனத்தின் முக்கியத்துவம் என்ன? இதில் பாஜகவின் மறைமுகத் திட்டம் ஏதும் இருக்கிறதா? அவரால் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படுமா? முக்கிய ஊடங்களிலும் சமூக ஊடங்களிலும் முக்கியமாக யூ டியூப்களிலும் இந்தக் கேள்விகள்தான் விவாதப் பொருளாகியுள்ளன.
நாகாலாந்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு ரவி மாற்றப்பட முதல் காரணம் நாகாலாந்து ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே. அமைதி பேச்சுகளுக்கு மத்தியஸ்தராக இருந்த ரவி ஆளுநராக்கப்பட்டது போராளிக்குழுக்களுக்குப் பிடிக்கவில்லை. ஆளுநராக நாகாலாந்தில் அவர் தொடர்வது நியாயமான அரசியல் உடன்பாட்டை ஈட்டுவதற்கான போராளிக்கு குழுக்களின் பேர வலிமையைக் குறைக்கும். அதே நேரத்தில்,பேச்சுகளை நடத்துவதிலும் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் காட்டிய திறமையால் நாகாலாந்தில் அமைதியும் நிலைத்தன்மையும் திரும்புவதில் முக்கிய பங்கு வகித்த ரவிக்கு நல்ல பரிசு தர வேண்டும் என்று ஒன்றிய அரசு எண்ணியது.

ஊழலை எதிர்த்து அவர் நடவடிக்கை எடுக்க முடியும். அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட முடியும்.  

இரண்டாவது காரணம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதப் போக்கில் திருப்ப அதிகரித்துவரும் வன்முறையற்ற தீவிரவாதப் பிரச்சாரம். தென் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும் இஸ்லாமிய ஸ்டேட் கொரொசான், அல்-கொய்தா இந்தியன் சப் கான்டினென்ட் ஆகிய முஸ்லீம் இயக்கங்களின் ஆதரவு பெற்றுள்ள தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் திறமைமிக்க ரவி ஆளுநராக இருப்பது பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநரின் பங்கு வரையறைக்குட்டது என்றாலும் தேசப் பாதுகாப்பு போனற போன்ற முக்கிய பிரச்சினைகளில் அவரால் ஆக்கபூர்வமாக செயல்பட முடியும். மாவட்ட நீதிபதிகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆகியோர் நியமனங்களை அவர் கண்காணிக்க முடியும். மேலும், ஊழலை எதிர்த்து அவர் நடவடிக்கை எடுக்க முடியும். அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட முடியும்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுக்கு அவர் இடைஞ்சல் செய்வார் என்று கூறுவது முன்கூட்டியே ஊகித்துச்சொல்லும் கருத்தாகும். நிர்வாக நடைமுறைகளில் பயிற்சிபெற்ற அதிகாரி என்பதால் தனது அரசியல் அமைப்பு கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றவே ரவி முயற்சி செய்வார்.
இறுதியாக, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்பதால் ரவியின் நியமனம் வரவேற்கப்பட வேண்டும்.

ஆனால், அவரது நியமனம் பற்றி எதிர்மறைக் கருத்துகளை காங்கிரஸ் உள்ளிட்ட சில திமுகவின் கூட்டணிக் கட்சிகள் சொல்லியிருப்பது துரதிஷ்டவசமானது. அப்படிக் கூறியிருப்பது ஆரோக்கியமற்றதும் விரும்பத்தகாததும் ஆகும்.
.
(கட்டுரையாளர் ஜம்மு மத்திய பல்கலைக் கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்வித் துறையில் மூத்த பேராசிரியர் ஆவார். அவரை twitter @chamujegan என்பதில் தொடர்பு கொள்ளலாம்.)


Share the Article

Read in : English