Read in : English

Share the Article

தமிழகச் சட்டப்பேரவையில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் திமுக அமைச்சர்களில் நான்கு பேர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள். பின்வரிசையிலும் சிலர் இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான அவருடைய திருமணத்தை ஜெயலலிதாதான் நடத்தி வைத்தார். கட்சியின் வட சென்னை மாவட்டத்தில் பொறுப்பில் இருந்த அவர் மெல்ல மெல்ல வளர்ந்து, அதிமுகவில் சட்டப்பேரவை உறுப்பினராகி, ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானதால் ஓரங்கட்டப்பட்டு, பின்னர் திமுகவில் இணைந்தார். கடந்த முறை திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மறுபடியும் வெற்றி பெற்று அமைச்சராகியிருக்கிறார்.


பிகே சேகர் பாபு

விசுவாசம் என்றால் அதன் அடையாளம் சேகர்பாபு. திமுகவில் இணைந்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிதீவிர விசிவாசியாகி, அவரை நிழல் போல் தொடர்ந்து, கட்சிப் பணியாற்ற, தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக உருவாகியிருக்கிறார்.

எத்தனையோ பேர் திமுகவில் இணைந்தாலும், சேகர்பாபு திமுகவில் சேரும் போது புருவங்கள் உயர்ந்தன. அவர் ஜெயலலிதாவின் விசுவாசி என்பதால் அல்ல. சட்டப்பேரவையில் திமுகவுடன் மல்லுக்கு நின்றவர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய கடவுள் பக்திதான் புருவங்களை உயர்த்துவதற்கு காரணமாக இருந்தது. திமுகவிலும் பக்திமான்கள் இருந்தாலும் அவ்வளவு வெளிப்படையாக அதை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

சேகர்பாபுவைப் பொறுத்தவரை, மாதந்தோறும் சபரிமலைக்கு செல்லும் பக்தர். அந்த அதிதீவிர பக்தன்தான் இப்போது இந்து அறநிலையத்துறைக்கு அமைச்சராகியிருக்கிறார்.

கடந்த காலத்தில் மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மட்டும்தான் திமுகவில் வெளிப்படையான கடவுள் நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார். சபாநாயகராக பணியாற்றிய காலத்திலேயே நெற்றியில் மதுரை மீனாட்சி குங்குமத்துடன் காட்சியளித்தார். நீதிக்கட்சி பரம்பரையில் வந்த அவருடைய தந்தை பி.டி.இராஜன்தான் தமிழகத்தில் சபரி்மலைக்கு செல்லும் வழக்கத்தை தொடக்கத்தில் பிரபலப்படுத்தியவர் என்று சொல்லலாம். சபரிமலையில் தீ விபத்து ஏற்பட்ட சேதம் உண்டாகிய போது அவர்தான் மூலவர் சிலையை செய்து கொடுத்தார். 2006-ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே இறந்ததால், அவருடைய பணிகள் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. 

சேகர்பாபுவைப் பொறுத்தவரை, அறநிலையத்துறை ஒதுக்கப்பட்ட போது அவருக்கு பெரிய விருப்பம் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்டென அவருக்கே உரித்த உற்சாகத்துடன் அத்துறையை நிர்வகிக்க ஆரம்பித்தார். களத்தில் இறங்கி பணியாற்றும் அடிமட்டத் தொண்டனின் உற்சாகம் துளியும் குறையாமல் அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். திமுகவிலேயே காலமெல்லாம் உறுப்பினராக இருந்த ஒருவருக்கும் இத்துறையில் தீவிரமாக இறங்கி ஒரு பக்தனைப் போல செயல்படுவதற்கு மனத்தடை இருந்திருக்கலாம். ஆனால் சேகர்பாவுக்கு அந்த மனத்தடை எதுவும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற திருநாவுக்கரசர் போல் அவர் பணி செய்ய ஆரம்பித்து விட்டார்.

ஒரு காலத்தில் இந்து அறநிலையத்துறையில் இருந்து ஆணிக்கு ஒன்று, ஆவணிக்கு ஒன்று என்ற நிலையில்தான் செய்தி அறிக்கைகள் வெளியாகும். சேகர்பாபு அமைச்சரானதும் பரபரப்பான செய்திகளைத் தரும் அமைச்சகமாக அது மாறி விட்டது. கோயில் கோயிலாக பயணம் செய்ய ஆரம்பித்த அவர் கோயில் நிலங்களை மீட்க ஆரம்பித்த போதுதான் களை கட்ட ஆரம்பித்தது. நீதிமன்றங்கள் மூலமாக சொத்துகளை மீட்பதற்கு போராட்டம் நடக்கும். சேகர்பாபுவோ நேரடியாக களத்துக்கு செல்கிறார். வாடகை கொடுக்காமல், அல்லது உரிமை பெறாமல் காலங்காலமாக கோயில் நிலங்களை அனுபவத்தவர்கள் கலகலத்துப் போனார்கள். நிலங்களை மீட்டு, அங்கேயே தெளிவாக பலகையை வைத்து, கோயிலுக்கு சொந்தம் என்று அறிவிக்கிறார். எத்தனையோ ஏக்கர் நிலங்கள் இக்குறுகிய காலக்கட்டத்தில் மீட்கப்பட்டிருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு நிகழ்வு கன்னியாகுமரியில் நடந்தது. அந்த மாவடத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பானது. கடந்த காலத்தில் இந் நிகழ்வை உள்ளூரில் உள்ள இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இந்த முறை சென்னையில் இருந்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உடனடியாக அங்கே விரைந்தார். கேரளத்தில் இருந்து பிரசன்னம் பார்க்கும் நம்பூதிரிகள் அழைத்து வரப்பட்டு தீ விபத்து ஏற்பட்ட காரணத்தை

ஆராய்ந்தார்கள். தீவிரமான கடவுள் நம்பிக்கை உள்ள அரசு எப்படி முக்கியத்துவம் கொடுத்து செயல்படுமோ அதை விடவும் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடந்தன. இதுவரை பலமுறை அங்கு சென்றிருக்கும் சேகர்பாபு மீண்டும் அங்கு செல்ல இருக்கிறார்.

ஒருபக்கம் தன்னுடைய அரசியல் கொள்கையான சாதி ஒழிப்பை கோயில்வரை எடுத்து செல்ல காலம் இப்போது அனுமதித்திருக்கிறது.  

மதக்கலவரங்களே நடக்காத தமிழகத்தில் முதலில் கலவரம் தொடங்கியது மண்டைக்காட்டில் இருந்துதான். அதைப் பயன்படுத்தி ஹிந்துத்வா அமைப்புகள் அம்மாவட்டத்தில் காலூன்ற ஆரம்பித்தன. முதலில் சட்டப்பேரவைக்கு ஒரு ஹிந்துத்வா உறுப்பினரை அனுப்பியதும் அக்கட்சிதான். இன்றும் ஒருவரை அம்மாவட்டம் தேர்ந்தெடுத்திருக்கிறது. திமுக என்றாலே அது நாத்திகம் பேசும் கட்சி, அதன் தலைவர்கள் இந்துக் கடவுள்களை கேவலமாக பேசுவார்கள் என்றெல்லாம் இருந்த ஒரு கருத்தை சேகர்பாபு மெல்ல மெல்ல உடைத்தெறிந்து வருகிறார். அவருடைய செயல்பாடுகள், ஹிந்துக்கள் மத்தியில் திமுகவுக்கு ஒரு நற்பெயரை ஈட்டியிருக்கிறது. இந்திய அரசியலில் மாறியிருக்கும் சூழல்தான் திமுகவையும் சேகர்பாபு போன்றவர்களை முக்கியப் பொறுப்பில் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது எனலாம். சேகர்பாபு போல் ஒரு அமைச்சர் ஒற்றைக் குறிக்கோளுடன் கோயில் நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, திமுகவை இந்துக்களின் எதிரியாக சித்திரிக்க அதிமுகவினாலோ பாரதிய ஜனதா கட்சியாலோ இயலாது. சேகர்பாபு செயல்பாடு அளித்த நம்பிக்கையின் காரணமாகத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் கோயில்களில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் பணியில் அமர்த்தும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. ஒருபக்கம் தன்னுடைய அரசியல் கொள்கையான சாதி ஒழிப்பை கோயில்வரை எடுத்து செல்ல காலம் இப்போது அனுமதித்திருக்கிறது.

இந்துக்களின் எதிரி என்ற தோற்றத்தை உடைக்க கடந்த காலத்தில் திமுக எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறது. ஆனால் அதை இலகுவாக செய்து முடித்திருக்கிறார் அதன் அறநிலையத்துறை அமைச்சர்.


Share the Article

Read in : English