தமிழ்

Share the Article

பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஐன்னல் என்று நேருவால் கூறப்பட்ட புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் (27.4.1945 – 21.12.2018), தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமை.

“மரணம் என்ற உண்மையை, இல்லாமையாக நான் உணரவில்லை. மாறாக மரணத்தை ஒரு மாற்றாக உணர்ந்தேன். பிறந்தது எதற்கும் மரணமல்ல. மாற்றமே நிரந்தரம் என்பதாக நான் உணர்ந்தேன்”, என்று 1982ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டு இலக்கியச் சிந்தனை விருது பெற்ற பிரும்மம் சிறுகதை பற்றி கூறியவர்  பிரபஞ்சன்.

அடர்நிறத்தில் ஜிப்பா, வேஷ்டி, ஜோல்னா பை ஆகியவற்றுடன் மெல்லிய சிரிப்பும்தான் அவரது அடையாளம். அவரது 73 ஆண்டுகள் வாழ்க்கையில் 25 ஆண்டுகளுக்கு மேல் மேன்ஷன் வாழ்க்கை. அனைவருடன் எளிமையாகப் பழகுவார். அவரைப்போலவே அவரது எழுத்துகளும் எளிமையானவை. வாழ்க்கை முழுவதும் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த கலைஞன்.

“மூளையைப் பிராண்டும்படி என்னால் எழுத முடியாது. உண்மை என்பது சிக்கலானது அல்ல. எளிமையானது. தெளிவானது. எல்லோருக்கும் புரியும்படியாக உள்ளது. அதுதான் எனக்கு உடன்பாடு. எழுத்தை வைத்து வித்தை காட்ட நான் விரும்பவில்லை” என்று கருதியவர் பிரபஞ்சன். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது கதைகள் அமைந்திருந்தன.  பெண்களின் உலகம் குறித்து அவரது எழுத்துகளில் தனித்து இனம் காட்டிய பிரபஞ்சன், புதுச்சேரியின் அரசியல் சமூக வரலாற்றை தனது புதினங்களின்  வாயிலாக ஆவணப்படுத்தியவர். வானம் வசப்படும் என்ற நாவலுக்காக அவருக்கு 1995ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.

பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்திலிங்கம். 1964ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, சேத்தூர் கூத்தன் நடத்திய பரணி என்ற பத்திரிகையில் என்ன உலகமடா என்ற கதையை எழுதினார். அதுதான் அவரது முதல் சிறுகதை. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மயிலம் சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, அதனால் வானூர் சிறையில் 15 நாட்கள் சிறையில் இருந்தார். அதன் பிறகு கரந்தை தமிழ்ச் சங்கக் கல்லூரிJ™ படிக்கச் சேர்ந்தார். தஞ்சாவூரில் இருந்த காலத்தில் தஞ்சை பிரகாஷுடன் இருந்த நட்பு காரணமாக அவரது இலக்கியப் பார்வை விரிவடைந்தது. அவர் மூலம் எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. போன்ற  பல எழுத்தாளர்களின் அறிமுகமும் சிறந்த புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது.  பிரகாஷுடன் சேர்ந்து சம்ஸ்கிருதம் படிக்கச் சென்றார். வீணை வாசிக்கக் கற்றுக் கொள்ளச் சென்றார். இப்படி அவரது வாழ்க்கை அனுபவம் விரிந்தது.

புதுச்சேரியில் ஒரு மாலை பத்திரிகையின் உள்ளூர் நிருபராக பிரபஞ்சன் கொஞ்ச காலம் வேலை பார்த்தார். ஒரு பெண், அரசு ஊழியரின் பாலியல்  துன்புறுத்தலுக்கு ஆளானபோது அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக அவர் எழுதிய செய்தியைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகை வேலை பறிபோனது. அவசரநிலைக்குப் பிறகு, செழியன் ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிகையிலும் நிருபராக அவர் வேலை பார்த்தார்.

தி.க.சிவசங்கரன் தாமரை இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த போது, 1968லிருந்து 1971 வரை தாமரை இதழில் ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார். அவர் தாமரையை விட்டு விலகிய பிறகு, அவர் எழுதிய கதையில் சில வரிகள் நீக்கப்பட்டு, சில வரிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. அத்துடன், தாமரையில் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

தொடக்கக் காலத்தில் பொன்னித் துறைவன் என்கிற பெயரில் எழுதினார். வானம்பாடி குழுவில் கவிதைகள் எழுதிய போது பிரபஞ்சக் கவி என்ற பெயரில் அவர் கவிதைகளை எழுதினார். அதன்பிறகு, பிரபஞ்சன் என்ற பெயரில் கதைகள் எழுதினார். கதைகள், நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் முட்டை, அகலிகை என்ற நாடகங்களை அவர்  எழுதியிருக்கிறார். முட்டை நாடகத்தை ஞாநியின் பரீக்ஷா  அரங்கேற்றியுள்ளது.   1980இல் சென்னையில் வீதி நாடக இயக்கம் சார்பில் நடைபெற்ற பாதல் சர்க்கார் நாடகப் பட்டறையில் பங்கேற்றவர் பிரபஞ்சன்.

1970களில் `இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று முறம் மாதிரி பெரிய அளவில் மிக அழகான படங்கள், அச்சுநேர்த்தியோடு வந்து கொண்டிருந்தது. அதுமாதிரி தமிழில் ஓர் இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும் என்பது பிரபஞ்சனின் கனவு. அவரது மனைவியின் நகைகளை வைத்து மூவாயிரம் ரூபாயில், புதுச்சேரி காந்தி வீதியில் பாரதி அச்சகம் என்ற பெயரில் அச்சகம் தொடங்கினார். ஆனால், அந்த முயற்சியும் தொடக்கத்திலேயே கருகி விட்டது.

பின்னர் ஞாநி, 1982இல் `தீம்தரிகிட’ இதழ் தொடங்கிய போது அதன் உதவி ஆசிரியராக இருந்தார். பின்னர், எழுத்தாளர் சா.கந்தசாமி உதவியால் `குங்குமம்’ பத்திரிகையில் அவருக்கு வேலை கிடைத்தது. அங்கு ஒன்றரை ஆண்டுகள் வேலை பார்த்தார். அந்த காலத்தில் அவரது ஒரு சிறுகதையைககூட அவர் எழுத அனுமதிக்கவில்லை. எழுதத் தெரியாதவங்க அனுப்புகிற சிறுகதைகளை எல்லாம் திருத்தி கொடுக்கிற வேலையைத் தண்டனையாகக் கருதிய அவர், அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு, `திரைச்சுவை’ பத்திரிகையில் சினிமா கட்டுரைகளை எழுதினார்.

1985இல் `அசைடு’ பத்திரிகை நிர்வாகம், பிரபஞ்சனை ஆசிரியராகக் கொண்டு தமிழில் பத்திரிகை கொண்டுவர ஏற்பாடு  செய்தது. ஆனால், பத்திரிகை வெளிவரவில்லை. சுதேசமித்திரன் பத்திரிகை சார்பில் `வானவில்’ என்ற இதழை கொண்டு வர முயற்சி செய்தார்கள். அதற்காக அந்தப் பத்திரிகையில் சேர்ந்தார். ஆனால், அந்தப் பத்திரிகையும் வெளிவரவில்லை.

இதையடுத்து, குமுதத்தில் வேலைக்குச் சேர்ந்தார் பிரபஞ்சன். அப்போது, அங்கு அவரது சிறுகதைகள் வெளியாயின. ஈரோட்டில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் வாசகர் கேட்ட ஒரு கேள்விக்கு பிரபஞ்சன் அளித்த பதில் அவரது பத்திரிகை வேலையை பலி வாங்கி விட்டது. “குமுதம் குப்பையான பத்திரிகை. அதில் நீங்க கதை எழுதலாமான்னு” ஒரு வாசகர்  கேட்டார். “ஆனால் நான் எழுதற கதை குப்பையான்னு பாருங்க”  என்றார் பிரபஞ்சன் பதிலளித்தார். இதுகுறித்து, குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை கேட்டதற்கு, ஆமாம் என்று சொன்னார். இலக்கியக் கூட்டத்திற்கே போவதில்லை என்றால், வேலையில் தொடரலாம் என்றார் அண்ணாமலை. “சாரி சார்! என்னால் வாசகர்களைச் சந்திக்காமல் இருக்க முடியாது” என்றார். அவரது வேலை பறிபோய்விட்டது.

அதன் பிறகு, `ஆனந்தவிகடன்’ இதழில் சேர்ந்தார். சினிமா பார்க்காமலேயே ஒரு திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதியதாக அவர் மீது பொய் புகார் கூறப்பட்டது. சினிமா டிக்கெட்டை காட்டினார். அவரது நேர்மையில் சந்தேகப்பட்டது பிடிக்காமல் அங்கிருந்தும் வெளியே வந்து விட்டார். அதன் பிறகு, வெகுஜன பத்திரிகைகளில் வேலைக்குச் சேரவில்லை. எழுத்தை மட்டுமே நம்பி சென்னையிலும் புதுச்சேரியிலும் வாழ்ந்து வந்தார்.

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன், பிரபஞ்சனின் புத்தக முன்னுரையில் சொல்லி இருப்பதைப்போல, “வெகுஜனப் பத்திரிகைகளின் நிர்பந்தங்களிலோ, சிற்றிதழ்களின் அரசியலிலோ தன்னை இழந்து விடாமல் தடம் பார்த்து நடக்கிற மனிதர். எத்தனையோ அவதானிப்புக்களை அவ்வப்போது சொல்லி வந்தாலும் எவரையும் கிழித்து விடாத ஒரு நிதானம் இயல்பாகவே அவருக்கு வாய்த்திருக்கிறது. ஒரு வாசகனாக அவர் சேமித்ததற்குச் சற்றும் குறைந்ததல்ல ஓர் எழுத்தாளாராக அவர் சேமித்த அனுபவங்கள். அத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் நேசம் கொண்ட நெஞ்சம் அவருடையது.”

“எழுத்து, இசை, கலை, பண்பாடு எல்லாம் மனிதர்களை ஒருவரோடு ஒருவரை இசைவிக்கத்தானே அன்றி வேறு எதற்கும் இல்லை. அன்பால் இணைந்து, அன்பால் புரிந்து கொண்டு அன்பே பிரதானமாக ஒரு உலகத்தை உருவாக்கும் தொழிலையே நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனித குலம் அன்பினால் மட்டுமே தழைக்கும்…” என்பதே பிரபஞ்சன் நமக்கு சொல்லிவிட்டுச் சென்றுள்ள செய்தி. என்றும் தனது எழுத்துகள்  மூலம்  நம்முடன் வாழந்து கொண்டிருப்பார் பிரபஞ்சன்.


Share the Article