Share the Article

தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணிக்கு அடுத்த நாள் நூற்றுக்கணக்கான இறந்து போன விவசாயிகளின் மனைவிகள் பஞ்சாபில் மான்சாவில் கூடினர். அங்கு நானும் அமர்ந்து அந்த விதவைகள் கூறிய நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவங்களைக் கேட்டறிந்தேன். பசுமைப்புரட்சியின் தாயகமான பஞ்சாபில் இறந்து போன பல நூறு விவசாயிகளின் மனைவிகளைச் காண்பதும் சந்திப்பதும் அத்தனை எளிதான விஷயம் அல்ல. அவர்களுடைய வலிமிகுந்த  கதைகளைக் கூற ஆரம்பித்ததுமே அவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக தங்களது கதையைத் தொடர்ந்து சொல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள். அங்கு நிலவிய மௌனம் அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

விவசாயிகளின் தற்கொலை செய்திகள் இல்லாத நாளை பார்ப்பது அரிது உள்ளது. லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகம்,  அமிர்தசரஸில்  உள்ள குருநானக் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து வீட்டுக்கு வீடு சென்று நடத்திய ஆய்வு மூலம், 2000லிருந்து 2017ஆம் ஆண்டு வரை கடந்த 17 ஆண்டுகளில் 16,600 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் தொடரும் இந்த நேரத்தில் பஞ்சாபில் மூன்றில் ஒரு விவசாயி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற தகவலையும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

கணவனை இழந்த அந்த விதவைகள் தங்களது தாங்கொணா துயரத்தையும் போராட்டங்களையும் தனிநபராக நின்று குடும்பத்தைக் காப்பற்ற  வேண்டிய துர்பாக்கியத்தையும் விவரித்துக்கொண்டிருந்த நேரத்தில், நாட்டின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பஞ்சாபில் ஏன் இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டேன். கிராமப்புரங்களில் 98 சதவீதக் குடும்பங்கள் கடனில் தத்தளிக்கின்றன. மேலும், 94 சதவீதக் குடும்பங்களில் வருமானத்துக்கும் மீறிய செலவுகள். அதாவது, முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் பஞ்சாபின் கிராமப்புற மக்கள் கடனில் வாழ்கிறார்கள். இதைத்தான்  முன்னாள் பிரதம மந்திரி சரண்சிங், ‘விவசாயி கடனில் பிறந்து  கடனிலேயே சாகிறான்’ என்று சரியாகக் குறிப்பிட்டார். வாழ்நாள் முழுக்க கடனில் வாழ்வது நரகத்தில் வாழ்வதற்கு சமம் என்று அவர் சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்றார்.

கணவனை இழந்த அப்பெண்கள் கூறியவற்றைக் கேட்ட பிறகு, நான் ஒரு கேள்வியை முன்வைக்க முயன்றேன். அதாவது, பயிர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதாரவிலை, நிலுவையில் உள்ள கடன்களைத் தள்ளுபடி செய்வது, நீர்ப்பாசனக் கால்வாய்களை விரிவாக்கம் செயதல் ஆகியவற்றைச் செய்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா என்பதுதான். ஆனால், பஞ்சாபில் ஏற்கெனவே 98சதவீத பகுதிகளுக்கு உறுதியான பாசன வசதி உள்ளது. அத்துடன், அதிக உற்பத்தித் திறன்கொண்ட தானியங்களான  கோதுமை, அரிசி, மக்காச்சோளம் ஆகியவற்றை விளைவிப்பதில் உலகளவில் முன்னணியில் உள்ளது. உற்பத்தித் திறனும் நீர்ப்பாசனமும் தான் இப்போது நிலவும் விவசாயப் பிரச்சனைகளுக்கான தீர்வு எனில்  பிறகு ஏன் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?  உற்பத்தித் திறனுக்கும் நீர்ப்பாசன வசதிகளுக்கும் அப்பாற்பட்டு அங்கு பிரச்சினைகள் நிலவுவதே, விவசாயகளின் துயரங்களுக்கு முக்கியக் காரணம்.

இதில் முக்கியமானது, பஞ்சாபில் விரிவான, பரந்துபட்ட  பயிர்கொள்முதல் நடைமுறை உள்ளது. பஞ்சாபில் நாட்டிலேயே தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைளும் பயிர்கொள்முதல் வேளாண் உற்பத்தி விற்பனைக் குழுக்களின் விற்பனையகங்களும், கொள்முதல் மையங்களும் நிறையவே உள்ளன. இந்த விற்பனையகங்களையும் கிராமங்களையும் இணைக்கும் சாலைகள் சிறப்பாக உள்ளன. இந்த விற்பனையகங்களுக்குக் கொண்டு வரப்படும் 98 சதவீத கோதுமையும் நெல்லும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதாரவிலைப்படி, வெளிச்சந்தையில் உள்ள விலையை விட அதிகமாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. இந்தக் காரணத்தால்தான் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து லாரிகளில் நெல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு பஞ்சாபில் விற்கப்படுகிறது.

பஞ்சாபில் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடிசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,  கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் பெறப்பட்ட 9 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதில் 1000 கோடி ரூபாய் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. மகாராஷ்டிரத்தில் 34 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்ய முடிவெடுக்கப்பட்டாலும், 14 லட்சம் கோடி ரூபாய் அளவு கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், உத்தரபிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உறுதியளிக்கப்பட்டதவிட மிக சொற்பமான கடன் தொகையே தள்ளுபடி செய்யப்பட்டது.  மாநில அரசுகள் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தாலும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லை.

பஞ்சாபில் ஒவ்வொரு விதவைக்குப் பின்னாலும் அவர்களது கணவர்கள் விட்டுச் சென்ற கடன் 2 லட்சத்திலிருந்து 12 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. பஞ்சாபில் அனைத்து உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப, பாசன வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட பின்பும் விவசாயிகள் தீராக் கடனில் எப்படி மூழ்கினார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

பஞ்சாபில், இந்த ஆய்வு சிறப்பான புரிதலை வழங்குகிறது. அதன் மூலம் அர்த்தமுள்ள வகையில் செயலூக்கம் உள்ள விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளை உருவாக்க செயல்படுத்த வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் வாய்சொல்லில் நின்றுவிடாமல், சிறு மற்றும் குறு விவசாயிகள் தேசத்தின் சுமையாக நடத்தப்படாமல் எதிர்காலத்துக்கான வரைவுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

விவசாயிகளைக் கைவிடப்பட்டவர்கள் என கருதாமல் பொருளாதார வளர்ச்சியில் அவர்களையும் எவ்வாறு இணைத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்காக, விலை – கொள்கை  என்பதை விவசாயிகளின் வருவாய் கொள்கையாகச் சிந்திக்க வேண்டுமென பல முறை கூறியுள்ளேன். அதற்கு விவசாயிகளுக்கு உலக வர்த்தக நிறுவனம் சொன்ன அளவுக்கு இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட மாத வருவாய் கிடைக்கும்படி செய்து அவர்களது சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் அவர்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இது தொடக்கமாக அமையும். இதுகுறித்து மீண்டும் சிந்திப்பதற்கு இது சரியான நேரம்.

இக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்


Share the Article