English தமிழ்

Share the Article

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை எழுதும் சமயத்தில் என் நினைவு முழுக்க,  புற்றுநோயுடன்  போராடி சென்னையில் மருத்துவமனையில் உயிர்நீத்த நெல் ஜெயராமன் நினைவே மேலோங்கியுள்ளது. அவருடைய பங்களிப்பு குறித்து எங்கு ஆரம்பித்து எதிலிருந்து எழுதுவது என்று புரியவில்லை. அவர் இயற்கை விவசாயி. பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து பிரபலப்படுத்தி வந்த போராளி என்று பெரும்பாலான ஊடகங்கள் கூறுகின்றன.  கடந்த வியாழக்கிழமை, அவர் மரித்த சில நிமிடங்களில்  செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் அவரைப் பற்றி காண நேர்ந்தபோது என்னுடைய நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக பின்னோக்கி நகர்ந்தது. அப்போது, இதேபோல சமூக ஊடகங்கள் பிரபலமாகவில்லை. இப்போது உள்ள அளவுக்கு ஏராளமான தொலைக்காட்சிகளும் இல்லை. அப்போது புழக்கத்திலிருந்த செல்போன், என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு எட்டாத விஷயமாக இருந்தது. நெல் ஜெயராமனிடம் ஒரு செல்போன் நீண்டநாட்களாக இருந்தது.

(இந்த கட்டுரை முதலில் Dec 8,2018 அன்று வெளியிடப்பட்டது)

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் என்னை நெல் ஜெயராமனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும், என் நெருங்கிய நண்பர் டி.இ.டி.இ அறக்கட்டளை ரங்கராஜன் இயற்கை விவசாயியாக நெல் ஜெயராமனை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அவரை முதன்முதலாக எழும்பூரில் டான்போஸ்கோ பள்ளிக்கு அருகில் ஓர் அறையில் சந்தித்தேன். அப்போது அவர் முதல் மாடியில் இருந்தார். என்னை அன்பாக வரவேற்று இயற்கை விவசாயம், அதனை மீட்ருவாக்கம் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசினார். அவருடைய பேச்சில் இருந்த கண்ணியத்தையும் நேர்மையையும் அப்போது கவனித்தேன். அவர் உண்மையிலேயே  விவசாயிகள் குறித்து அக்கறையுடன் பேசினார். அந்த சந்திப்புக்குப் பிறகு, நான் அவரை அடிக்கடி தொலைபேசியில் அழைப்பேன். அவர் சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்திப்பார்.

இப்படியாக மலர்ந்த எங்கள் நட்பு ஆண்டுகள் செல்ல, செல்ல மிகவும் பலமாக மாறியது. அப்போது நான் ஒரு ஆங்கில நாளேட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவரைப் பற்றி எழுத முடிவு செய்தேன். அப்போது தொலைபேசியில் அழைத்து அவரை  பேட்டிக்காக சந்திக்க ஒரு நாளை  முடிவு செய்தேன். வழக்கம்போல் எழும்பூரில் ஒரு ஹோட்டலில் சந்த்திதோம். 2014இல் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. நான் அவரிடம் பேசும்போது, பேட்டி ஒரு மணி நேரம் என்று சொல்லியிருந்தேன்.ஆனால் பேட்டி முடிந்து பார்த்தபோது, நாங்கள் நான்கு மணிநேரம் பேசியிருக்கிறோம். அப்போது நான் குறிப்புகளை எடுத்துக்கொள்ளக்கூட மறந்திருந்தேன். அதுதான் நெல் ஜெயராமனின் சிறப்பு. பேசுகின்ற விஷயத்தில் உங்களை முழுமையாக மூழ்கடித்துவிடுவார். ஒரு திரைக்கதையைப் போல அவர் தன்னுடைய கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்வார். இந்தத் துறைக்கு எப்படி வந்தார், எப்படியெல்லாம் போராடினார் என்று அவர் விவரிக்கும் விதமே அலாதி.

எளிய மொழியிலான தகவல் தொடர்புதான் அவருடைய பலம். அவருடைய தனித்துவமான, எளிய பேச்சு மொழியால்  விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் பிரபலமாக இருந்தார். எந்த நேரத்திலும் இடத்திலும் தொடர்புகொள்ளக்கூடியவராக இருந்தார். அரசு வேளாண் அதிகாரிகள் அவர் மூலமாக அரசுத் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சென்ற கதைகளெல்லாம் உண்டு. அவர் சொன்னால் விவசாயிகள் ஒத்துழைப்பார்கள்.

ஜெயராமனிடம் எப்போதும் அசாத்தியமான மனோபலம் இருக்கும். அவர் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்தார். டெல்டா பகுதிகளில் பல இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். ஏதாவது திட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்காது என தெரிந்தால் அதை எதிர்க்கும் முதல் குரல் ஜெயராமனிடமிருந்துதான் வரும். திருத்துறைபூண்டியில் இருக்கும் அவருடைய விதை வங்கி முக்கியத்துவம் வாய்ந்தது. பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர், அரசு அதிகாரிகள், பள்ளிக்குழந்தைகள் அவருடைய பாரம்பரிய விதை வங்கியை பார்வையிட்டுள்ளனர். அவருடைய முயற்சியை  அனைவரும் வாழ்த்தியுள்ளனர்.

ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த ஜெயராமன், மறைந்த நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, மறைந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து, அவற்றை சேகரித்து, பாதுகாத்து அவற்றை விவசாயிகளுக்கும் வழங்கினார். நம் மாநிலத்திலேயே இதுபோன்ற முதல் முயற்சி இதுதான்.  அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழாவை அவரே முன்னின்று  நடத்தினார். காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க காரில் செல்வது வழக்கம். அப்போது, நெல் ஜெயராமன் சைக்கிளில் சென்றார். அப்போது காரை நிறுத்தி அவரிடம்  பேசியபோது, அப்பகுதிகளில் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடுவதற்காக வந்தததாகக் கூறினார். இதுதான், நம்மாழ்வார் அவருக்குள் பற்றவைத்த நெருப்பு!

மாநிலத்தில் இயற்கை  விவசாய மறுமலர்ச்சிக்கு நம்மாழ்வார் காரணம் என்று சொல்லும் அதேநேரத்தில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து பிரபலமாக்கிய பெருமை நெல் ஜெயராமனையே சேரும். நிறைய பணமும் புகழும் அவருடைய உழைப்புக்குக் கிடைத்த போதும் அதனால் பெருமைகொள்ளாத எளிய மனிதர். இந்த சமூகத்துக்கு நம்மால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்யவே பிறந்து வந்துள்ளதாகக் கூறும்  நேர்மை மிகுந்தவர்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு இடங்களிலிருந்து அவருக்கு நன்கொடைகள் குவிந்தன. உலகின் பல மூலைகளிலிருந்து 5 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை  வந்தது.  அவருடைய வரலாற்று பயணத்தில் நாமும் சிறு துளியாக இருக்க வேண்டும் என்கிற உந்துதலே இதற்குக் காரணம்.

சென்னையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த ஐந்து மாதங்களிலும் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஒவ்வொருமுறை அவரை சந்திக்கும்போதும் அவர் வழக்கமான உற்சாகத்துடன் இருந்தார். கடந்த முறை அவரைச் சந்திக்கும்போது அவர் இந்த முறை விதைத் திருவிழாவை மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்றார். நான் புன்னகையுடன் தலையசைத்தேன்.

ஓராண்டுக்கு முன்பு, காஞ்சிபுரம் கிரீன் காஸ் பவுண்டேஷன் மூலமாக மூன்று விதை வங்கிகளை ஆரம்பிப்பதற்கான் நான் அவரைச் சந்தித்தேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இரண்டு தொடக்க விழாக்களிலும் ஆண்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள், அமைச்சர்கள், தொழில்நுட்ப விற்பனர்கள், விவசாயிகள், என பலர் சந்தித்தனர். திடீரென நெல் ஜெயராமன் அனைவருக்கும் தேவையான மனிதரானார். மக்கள் அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். ஓரிரவில் ஓர் எளிய விவசாயி, பிரபலமான மனிதரானார். ஆனால் அது நீடிக்கவில்லை.

அவர் நம்மாழ்வாரின் வார்த்தைகளை அடிக்கடி நினைவுகூர்வார்: ‘’நாம் மரித்துப்போவதில்லை; விதைகளாக மாறி மரங்களாவோம்’’ – இது உண்மையென்றே நம்புகிறேன். அவருடைய எண்ணங்கள், கனவுகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த பத்தியை எழுத ஆரம்பித்தபோது, எனக்கு ஊக்கமாக இருந்த நெல் ஜெயராமனுடனான எனது நினைவுகளை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். ஒருவரைப் பார்த்து நான் அவரை பின்தொடர அவரிடம்  பணம், பதவி, அதிகாரம்  இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த சமூகத்தை உய்விக்கும் நல்ல இதயம் இருந்தால் போதும். இந்த சமூகம் நம்மைப் பார்த்துக்கொள்ளும்; நம் பின்னே நிற்கும்.

மீண்டும் சந்திப்போம்.


Share the Article