Share the Article

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள்  தில்லியை நோக்கி பேரணி சென்றுகொண்டிருக்கின்றனர்.

எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.’’விலை ஏற்றத்தின் பலனை கடைசியாக அனுபவிக்கும் விவசாயிதான் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும்  முதல் நபர்’’. இந்தப் பழமொழி இன்றும் கூட உண்மையாகத்தான் இருக்கிறது. பலவிதமான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டாலும்கூட விளைபொருட்களின் விலை  முன்னுக்குப் பின்னாக மாறிக்கொண்டே இருப்பதால், விவசாயிகளின் லாபமும் சரிந்து வருகிறது. மிகப்பெரிய சாபக்கேடு என்னவென்றால், சாதி அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் வாக்களிக்கிறார்கள். பின்னர், அரசு தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

துரதிஷ்டவசமாக, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் சரியான விவசாய தலைவர்கள் தற்போது இல்லை. தங்களை முன்னிலைப்படுத்தும் விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறது. அவர்கள் எதாவது அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இன்றைய தேதியில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் கூட அரசியல் இருக்கிறது.

புதுதில்லியில் பாரத் கிருஷிக் சமாஜ் தலைவரும் பஞ்சாப், விவசாயிகள் நல ஆணையத்தின் தற்போதையத் தலைவருமான  அஜய் வீர் ஜக்கரின் பேச்சை தில்லியில் கேட்க நேர்ந்தது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மக்களவைத் தலைவராக இருந்த பல்ராம் ஜாக்கரின் பேரன் அஜய். அவர் ஒரு விவசாயியும் கூட.

‘’விவசாயிகளை விட, கொள்கையை வடிவமைப்பவர்களுக்கு சந்தை குறித்த விஷயங்கள் கற்றுத்தரப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் விவசாயிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல விவசாயச் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் கிளைபோலவோ அல்லது அரசியல் உள்நோக்கம் கொணடதாகவோ மாறிவிடுகின்றன. முடிவில் அவை அரசியல் கட்சிகளின்  ஊதுகுழல்களாக மாறிவிடுகின்றன. ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்திருக்கும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும்போது அந்த விவசாய சங்கம் அந்த அரசை எதிர்த்துத் தீவிரமாக செயல்படும்” என்கிறார் அஐய்.

இதனால், பல விவசாய சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செயல்படக்கூடியவையாக மாறிவிடுகின்றன. சில நேரங்களில் விவசாயிகளின் கோபத்தையும் அழுத்தத்தையும் அரசுக்கு எதிராக திருப்பிவிடுகிறது’’ என்று கூறும் அஜய், ‘’இதில் நன்றாக செயல்படக்கூடிய சங்கங்கள் இது குறித்து தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது’’ என்கிறார்.

அனைத்து விவசாய சங்கங்களும் அரசியல்மயமானவை என்று சொல்ல முடியாது. பல சங்கங்கள் களத்தில் மிக நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.ஆனால் அந்த அமைப்புகளைப் பற்றி பரவலாகத் தெரியாது ஏனெனில் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக வேலை செய்கிறார்கள், விளம்பரத்துக்காக அல்ல. காகிதத்தில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும் ஏராளமான சங்கங்களுக்கு முன்னால், இந்தச் சங்கங்ளின் இருப்புத் தெரியாமலேயே போய்விடுகிறது.

தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு அமைப்புகளும் சப்தமாகக் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் சமூகத்தின் கவனதைப் பெற முடிகிறது. தொலைக்காட்சிகளின் கடைக் கண் பார்வையும் அதிகரிக்கிறது. பணமும் பதவியும் கிடைக்கிறது என்கிறார் அவர்.

அவருடைய பார்வையில், விவசாயத்துகாக நடத்தப்படும் பல கருத்தரங்கங்கள், கூட்டங்கள், விவாத நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துகின்றனர். தங்கள் கண்ணில் பட்ட தவறுகளை மட்டும் பெரிதாக பேசுகின்றனர். நேர்மறையான விவாதங்கள் அபூர்வம்.

சாலையை மறித்து நடத்தப்படும் பல விவசாயப் போராட்டங்கள் மூலம் அவர்கள் பெரிதாக எதையும் அடைந்துவிடவில்லை. அதேவேளையில் அமெரிக்க  விவசாயிகளால் அரசின் கொள்கைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. இந்தியாவில் 70 சதவீத விவசாயிகள் பெண்கள். அவர்களில் மிகச் சிலர் மட்டுமே விவசாய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் மிகச் சிலர் மட்டுமே நிர்வாகப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.

விவசாய சங்கங்கள் இரண்டு விஷயங்களில் முக்கிய வேலைகளைச் செய்ய முடியும். முதலில், விவசாயிகளை பாதிக்கும் தவறான கொள்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இரண்டாவது, விவசாய தொழில்நுட்பங்களிலும் நடைமுறைகளிலும் உள்ள சிறந்த விஷயங்களைத் தெரியப்படுத்துவது. அதன்மூலம் விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வசதியாக இருக்கும்.

நல்ல தகவல்களின் மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. சரியான தகவல்களை விவசாயிகள் அறிந்திருப்பதன் மூலம் தங்களது கோரிக்கைகளுக்காக கொள்கை வகுப்பாளர்களுக்கு அழுத்தம் தர முடியும். இதனால் கிடைத்த பலன்களை மதிப்பிடுவது கடினம். நல்ல பணிகளை மேற்கொள்பவர்களுக்கு நிதி ஒரு பெரும் தடையாக உள்ளது. விவசாயிகளின் முடிவில்லா துயரங்களைக் குறைக்கும் வகையில் விவசாய சங்கங்கள் நேர்மறையாக பணியாற்ற வேண்டும். சுயநலம் இல்லாத, அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாமல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு யார் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.  அதுதான் இப்போதைய தேவையும் கடமையும்!

அஜய் வீர் ஜாக்கர், தலைவர், பாரத் கிரிஷிக் சமாஜ்.
இமெயில்: email:aj@bks.org.in.


Share the Article