English தமிழ்

Share the Article

நடிகர் ரஜினிகாந்த் தன் மீது ஒட்டப்பட்டிருக்கும் பாஜக அடையாளத்தை அவர் மறைக்க முயன்றாலும் அது நாளொரு வண்ணம் வளர்ந்துகொண்டே உள்ளதால், அவருடைய அரசியல் கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதாக அது அமைகிறது. சிலநாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அவர் புகழ்ந்து பேசியது  ஒரு எடுத்துக்காட்டு. தன் கட்சியை ஒரு அடி முன்னெடுத்து வைப்பது போல தோன்றினாலும், அவர் அறிக்கைகள்   தமிழகத்தில் ஒரு தனிக்கட்சியாக அவர் செயல்படுவதை இரண்டு அடிகள் பின்னுக்குத்  தள்ளிவிடுகின்றன.

வாஜ்பாயி காலத்திலிருந்து, அத்வானி மற்றும் மோடி ரஜினியை பாஜகவுக்குள் இழுக்க எவ்வளவோ முயற்சித்து  வந்தனர்.  இந்துத்துவத்தை ஆதரிக்கும் தூதனாக   ரஜினி இருக்கும் காரணத்தால்  காவிக் கட்சிகள் ரஜினிகாந்த் தென்னிந்தியாவில் பாஜகவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஆளுமையாக இருப்பார் என்று நம்பி அவரை தங்கள் கட்சிக்குக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். குறிப்பாக, அவருக்கு அதிகளவில் விசிறிகள் இருக்கும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரபிரதேசத்திலும் ரஜினியின் தேவை இருப்பதாக நினைக்கிறார்கள்.

மறைந்த நடிகரும் பத்திரிகையாளருமான சோ.ராமசாமியுடன் ரஜினி நெருங்கிய தொடர்பில் இருந்தார்.  ஆர்.எஸ்.எஸ் சார்பாக  சோ அவர்களின் திட்டம் ரஜினியை பாஜக வில் சேர்ப்பது அல்லது பாஜக விற்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்வது அல்லது ரஜினியின் தனி கட்சி மூலமாக பாஜக கூட்டணிக்கு வலுசேர்ப்பது.

கடந்த 1996-98 காலக்கட்டத்தில்  ரஜினி, திமுக-மாகா கூட்டணிக்கு ஆதரவளிக்கக் காரணம் சோ. அதன்மூலம் தமிழகத்தில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.  1999 பொதுத்தேர்தலின்போது சோ வழியில் ரஜினி  தேர்தலுக்கு முன்பு   பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க    மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். அதேபோல்,  2004 பொதுத்தேர்தலின்போதும் கோரிக்கை விடுத்தார். அப்போது அத்வானி அடுத்த பிரதமராக வர வேண்டும் எனக் கூறினார்.

இருந்தபோதும், 2004 பொதுத்தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி ஓரிடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைத் தழுவியது. அத்தோல்வியால் ரஜினி  அதிர்ச்சியடைந்தார். தன்  கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ரஜினியின் அரசியல் நிலையை ஆதரிக்கவில்லை என்பதனால், ரஜினி அரசியலிலிருந்து ஒதிங்கிவிட்டார்.

2014 பொதுத்தேர்தலின்போது, மோடி ரஜினியின் இல்லத்துக்கே சென்று ஆதரவு கோரினார். ஆனால், ரஜினி தனித்து போட்டியிடத் தயாராகிக்கொண்டிருந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவை வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள அப்போது தயாராக இல்லை.

இந்நிலையில் தான், கடந்த சில மாதங்களாக பாஜக ரஜினியின் மீது தங்கள் கட்சியில் சேர வேண்டும் என அதீத அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டுள்ளது.  ஆனால் ரஜினி தனிக் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் உறுதியாக உள்ளார். காரணம் தமிழகத்தில் பாஜகவுக்கு தகுந்த இடம் இல்லை என்பதை ரஜினி நன்கறிவார். மேலும் ரஜினிக்கு அவருடைய ஆலோசர்கள் தனிக்கட்சி தொடங்குவதுதான் நல்லது என்றும் மற்ற கட்சிகளில் இருக்கும் தலைவர்களையும் தொண்டர்களையும் ரஜினி கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஆலோசனையை வழங்கிவருகின்றனர். பாஜக அடையாளம் சிக்கல் நிறைந்தது எனவும் அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும் ரஜினி இப்போதும் எப்போதும் காவி கட்சிக்கு நெருங்கிய தொடர்புள்ளவர் என்பதை  தன்னுடைய அறிக்கைகள் மூலம், தெரிந்தோ தெரியாமலோ,  வெளிப்படுத்திவருகின்றார்.

அண்மையில் ஊடகங்கள், ரஜினியிடம் பல கட்சிகள் சேர்ந்து பாஜகவை எதிர்க்கின்றனவே என்று கேட்டதற்கு பத்துப் பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தால் யார் பலசாலி என அதிர்ச்சி தரும் பதிலைக் கூறினார். இப்பதில் கூட ரஜினி மோடியையும் பாஜகவையும் ஆதரிக்கிறார் என்பதையே சுட்டுவதாக உள்ளது.

ரஜினியின் இந்த பதில் பல கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.ஆகையால் அவர்கள் ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை விமர்சனத்துக்குள்ளாக்கினர்; பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிராக தங்கள் எச்சரிக்கையையும் பதிவு செய்தனர். அதேபோல், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவரின் விடுதலை குறித்து ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விஷயத்திலும்  பெரும்பாலான  கட்சிகள் ரஜினியின் ‘அறியாமையை’ விமர்சனத்துக்குள்ளாக்கினர்.

ரஜினி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தபோது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஊடகங்களிடம் அதே கேள்வியை இப்போது ரஜினியிடம் கேட்டால் அவர் தகுந்த, சரியான பதிலைக் கூறுவார் என ரஜினிக்கு ஆதரவு தரும் விதமாகப் பேசினார். இது ரஜினி இந்த விஷயத்தில் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை பாஜக தலைவர்கள் தீர்மானிக்கிறார்களா என்கிற ஐயத்தையும் எழுப்பியுள்ளது. ரஜினி எப்படிப்பட்ட பதிலை தரவேண்டும் என்று அவருக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்ற ஐயத்தை ஊர்ஜிதப்படுத்திறார்கள்.

ரஜினி தன்னை ‘பாஜகவின் சிப்பாய்’ என்பது போல முன்னிலைப்படுத்திக்கொள்வது அவருக்கு பாதகமாகத்தான் அமையும். கடந்த வாரத்தில் அவர், பிரதமர் மோடியைப் பற்றி புகழ்ந்து கூறியது அவர் பாஜக ஆதரவாளர் என்பதை வலுப்படுத்துவதாகத்தான் உள்ளது. ஆகையால் அவருக்கென்று தனி அடையாளத்தை அவர் உருவாக்கிக்கொள்ள வேண்டிய கோரிக்கையை அதிகப்படுத்துகிறது.

கமல் தன்னுடைய தனி அடையாளத்தின் மீது கவனப்படுத்தி செயல்படுகிறார். தொடக்கத்தில் தான் பாஜக வின் தீவிர எதிர்ப்பாளர் என்ற நிலையை சற்று  மாற்றிக்கொண்டு, கமல் பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டும்தான் பாஜக அரசின் அல்லது கட்சியின் கொள்கைகளுக்கு தாம் எதிர்ப்பதாக   வெளிப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக இந்தியாவில் நடுநிலைவாதம் அல்லது நடுநிலைக்கு அப்பாலான சற்று இடதுத்தன்மை தான் வெற்றிபெறும் தத்துவங்களாக இருந்துள்ளன.  கமல் இப்படியான ஒரு நிலைப்பாட்டை  நோக்கி மெல்ல மெல்ல நகர்கிறார்.

ரஜினி தனித்தன்மையுள்ள ஒரு தலைவர் என்றால் தன்மீது  படியும் பாஜக நிறத்தைறக் களைய வேண்டும்.  களைவாரா?


Share the Article