English தமிழ்

அன்புள்ள விவசாயிகளே! நான் இந்த பத்தியை எழுதும் நேரத்தில் ஊருக்கெல்லாம் உணவு அளித்து வ்ரும் நம் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஜா புயல் பாதிப்பினால் தீரா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். பல நூறு மக்கள் வீடுகளை இழந்து, வீடுகள் சிதைந்து, அவர்கள் பல ஆண்டுகளாக வளர்த்த மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து, பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு சொல்லொண்ணா துயரில்  வாடி வருகின்றனர்.  ஏராளமான  மின் கம்பங்கள் சாய்ந்ததால் பல நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். தன் சொந்த மண்ணிலேயே நம் சகோதர, சகோதரிகள் அகதிகள் போல் வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வழக்கம் போல் அரசின் நிவாரணப் பணிகள் மெதுவாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதில் எத்தனை பேர் அரசிடம் இருந்து நிவாரணத் தொகையைப் பெறுவார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். நமது அரசு எந்திரம் எந்தளவு ஊழலால் புரையோடிப்போயிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அரசிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொஞ்சமாவது நிதி உதவி கிடைக்குமா என்பது பெரிய கேள்வி.

நண்பர்களே! நமக்கு நம் விவசாய நிலம் தான் வேலை இடம்; நல்ல மகசூல் தான் நமது ஆண்டு வருமானம். இந்தியா ஒரு வேளாண் நாடு, அந்தவகையில் வேளாண் தொழில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால் பல ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பாலான விவசாயிகள் பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் சுடும் நிஜம். இதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள்?

அனைவருக்கும் பொறுப்பு அவசியம். பணத்தை இங்கும் அங்குமாகக் கொடுப்பதில் பயன் இல்லை. இதனால் இன்றோ கடந்த காலத்திலோ பயன் கிடைத்ததாக  பொறுப்பான பதில்கள் இல்லை. இப்போது  உள்ள அரசும் கடந்த கால அரசுகளும் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்காக அறிவிக்கின்றன. ஆனால், அந்த  நிதி திட்டங்களாலோ அல்லது வங்கி கடன்களாலோ என்ன நன்மை கிடைத்துள்ளது?

இந்தத் தகவல்கள் அனைத்தும் செய்தித்தாள்களில் மட்டும் தான் இருக்கின்றன. மானியத்தையோ அல்லது உள்ளூர் வேளாண் அலுவலகத்திலிருந்து சிறு தகவலைப் பெறவோ போராட வேண்டியுள்ளது. வங்கியிலிருந்து  பயிர்க்கடன் வாங்குவது எவ்வளவு கடினமான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன்.

அதேவேளையில் நகரவாசி ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் பல லட்சம் மதிப்புள்ள புதிய காரை எவ்வளவு எளிதாகப் பெறுகிறார். இதுவா ஆரோக்கியமான பொருளாதாரம்?  வசதிகள் மற்றும் சொகுசுக்கு எதிரானவன் இல்லை நான். இன்று அவை அவசியமாகிவிட்டன. சொகுசு வசதிகள் என்ற பெயரில், நம்மையும் நமது  விவசாயத் தொழிலையும் அலட்சியப்படுத்துவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

பாதிப்பு ஏற்பட்டுள்ள கிராமங்களில் நடந்த இறப்புகளையும் தற்கொலைகளையும் மட்டும் செய்தியாக்குவதுடன் நின்றுவிடாமல்,  கிராமங்களில் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் எழுத வேண்டியது பத்திரிகையாளர்களின் முக்கியக் கடமை. நம் சகோதர, சகோதர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது உண்மைதான். ஆனால், வேறுவழியின்றி விவசாயம் செய்துவரும் பல்லாயிரக்கணக்கானவர்கள் குறித்தும் பேசுவது அவசியம் தானே. இப்போதும் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வாழும் விவசாயிகளின் பணிகளையும் சாதனைகளையும் பற்றி ஊடகங்கள் பேச வேண்டும்.

நமது விவசாய நண்பர்கள் பலர் அந்தந்தப் பகுதிகளில் இதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் உங்கள் அருகமையில் உள்ள வேளாண் பல்கலை கழகத்தையோ அல்லது கிருஷி விஞ்ஞான் கேந்திராவையோ நேரில் சென்று பார்த்திருக்கிறீர்களா? சிவப்பு வண்ணத்தில் உயரமாக எழுப்பப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களும் வேலிகளும் அங்கு செல்வதற்கு நம்மிடம் மனத்தடையை ஏற்படுத்துகின்றன.

நமது வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை உவகையுடன் வரவேற்க எண்ணுகிறவர்கள் நாம். `அதிதி தேவோ பவ’ என்றால் விருந்தாளிகளை கடவுளாக நினைக்கிறோம்  என்று அர்த்தம். ஆனால், உள்ளூர் வேளாண் அலுவலகத்துக்கோ அல்லது அரசு அலுவலகங்களுக்கோ செல்லும் போது ஒரு சிநேகிதப் புன்னகையை பார்த்திருக்கிறோமா?

பஞ்சம், புயல், வெள்ளம், நிலநடுக்கம்  போன்ற பேரிடர்கள் ஒரு தொழில் அதிபரையோ அல்லது அதிகாரியையோ அல்லது அரசியல்வாதியையோ பாதித்துள்ளதா? இவற்றுக்கு எப்போதும் நாம் மட்டுமே பலிகடா ஆகிறோம். வேறு ஏதேனும் தொழில் பாதிக்கப்பட்டு அதனால் தற்கொலை செய்துகொண்டவர்கள் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோமா?

அடிப்படைத் தொழிலான விவசாயத்துக்கு பணம் அவசியத்தேவை. விதைகளும், பூச்சி மருந்துகளும் இலவசமாகக் கிடைக்காது. விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, விவசாய இடுபொருட்கள் அதிக  விளைச்சல் தரும் என்ற நம்பிக்கையில் வாங்கிகிறார்கள் விவசாயிகள். ஆனால், அவை பொய்த்துப்போகும்போது, அதனை விற்ற கம்பெனிகள் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறதா? அச்சமயங்களில் வட்டித்தொகையை அரசு குறைக்கிறது. அதன்மூலம் மீண்டும் கடன்  வாங்கவைத்து நம்மை காலம் முழுவதும் கடன்காரர்களாகவே வைத்துள்ளது.  முடிவில், ஒரு நல்ல மகசூலை பெறும் நம் கனவு நிறைவேறாமலேயே இருக்கிறது.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

Pin It on Pinterest

Share This