Share the Article

`சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் பீகாரில் பாலும் தேனும் ஓடுகிறது’ என்கிற கடந்த ஜூன் மாத `டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் வெளியான தலைப்புச் செய்தி என் பார்வையை ஈர்த்தது. சாராயத் தடைக்குப் பிறகு தேன் விற்பனை 380 சதவீதம் அதிகரிப்பு. மற்றொறு பாலாடைக்கட்டி  விற்பனை  200 சதவீதம் அதிகரிப்பு என்று ஆய்வு முடிவுகளை மேற்கோள்காட்டி மேலும் ஒரு செய்தி வெளியானது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாட்டுச் சாராயம் உள்பட சாராய விற்பனையை தடை செய்துள்ளார். இது ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களிடம் நேர்முகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பால், லஸ்ஸி, பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பால் விற்பனை  2016-17 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 17.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பாட்னாவில் உள்ள ’டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட்’ ஆய்வின்படி சேலை விற்பனை கூட 1,715 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆடை விற்பனை 96 சதவீதமும் பதப்படுத்தப்பட்ட உணவு விற்பனை 46 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும், இந்த ஆய்வு முக்கியமான ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, ஏழை மக்களிடம் கொஞ்சம் உபரி வருமானம் சேர்ந்தால் அதனைக்கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்கின்றனர் (அதாவது, சாராயத்துக்காக செலவிடப்பட்ட தொகை இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது). ஒரு சிறு கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் ஏழையின் வாழ்வில் சாராயத்துக்காக செலவிடப்படும் தொகை மிச்சப்படுத்தப்படும்போது வாழ்வா சாவா என்று அவர்களின் வாழ்வைப் பிரிக்கும் கோடாக அது இருக்கிறது.

நாடு முழுவதும் நான் பயணம் செய்தபோதெல்லாம், அரசின் ஆய தீர்வை வரி (எக்ஸ்சைஸ்) கொள்கை காரணமாக கிராமங்களில் சாராயக் கடை திறப்பதை எதிர்த்து பெண்கள் போராடுவதைப் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் இந்த  உண்மைகளை நான் சொல்ல முனையும்போது, படித்த நகரவாசிகளால் என் குரல் மூழ்கடிக்கப்படும். மதுவிலக்கினால் அரசு வருமானம் பாதிக்கப்படும், திருட்டுத்தனமாக சாராயம் விற்கப்படும். பெரிய அளவில் ஊழல் நடைபெறும் என்று வாதிட்டு தாராள மதுக் கொள்கையை ஆதரிப்பார்கள். ஏராளமான குடும்பங்களை மது எப்படி சீரழித்துள்ளது என்பதையும் சமூக வாழ்க்கையை எப்படி கிழித்துப் போட்டுள்ளது என்பதைக் கண்டறிய பலர் கிராமங்களில் காலடி வைத்தது கூட கிடையாது.

என் இளம் வயதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தியாளராக இருந்தபோது, எனக்கு ஹிமாச்சலபிரதேச அரசு 1980களின் மத்தியில் விருது கொடுத்து கௌரவித்தது.  நான் சோலன் மாவட்டத்தில் உள்ள கிராமப் பெண்கள் எப்படி தங்கள் போராட்டங்கள் மூலம் மதுக்கடைகளை மூடவைத்தார்கள் என்பது குறித்து எழுதியதற்காக அந்த விருது கிடைத்து. எனக்கு அந்த விருதை வழங்கிப் பேசிய அந்த மாநில முதல்வர், மதுவிலக்கை அமல்படுத்துவதன் அவசியத்தைக் குறிப்பிட்டார். இதற்கு அடுத்த நாள், மாநிலத்தில் மேலும் சில நூறு மதுக் கடைகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. நமது கொள்கை வகுப்பாளர்கள், அடித்தட்டு நிலையில் உள்ள யதார்த்த நிலைமைகளை எந்த அளவுக்கு உணராதவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசத்தில் பயணம் செய்தேன். சமூகத்தால் நிர்வகிக்கப்படும் வளங்குன்றா விவசாயத் திட்டத்தின் (கம்யூனிட்டி மேனேஜ்ட் சஸ்டெயினபிள் அக்ரிகல்சர்) கீழ் செயல்பட்டு வரும் சில கிராமங்களைப் பார்வையிட்டேன். அங்கு 35 லட்சம் ஏக்கர் நிலத்தில் பூச்சி மருந்துகளை உபயோகபடுத்தாமல் விவசாயம் செய்து வந்தார்கள். அதாவது, அந்தப் பகுதிகளில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருந்தார்கள். ஒரு நாள் பிற்பகலில் அங்கு ஒரு மரத்தின் கீழ்  சுய உதவிக்குழு பெண்களுடன் சேர்ந்து  அமர்ந்தேன். அவர்களது வெற்றிக் கதைகளைக் கேட்டறிந்த பிறகு, `அவர்களது வாழ்க்கை மேம்பட அரசு என்ன செய்ய வேண்டும்?’ என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சாலை வேண்டும், தொடக்கப் பள்ளிக்கூடம் வேண்டும் என கேட்பார்கள் என்று நினைத்தேன். அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். பின்பு அக்குழுவின் தலைவி சொன்னார், “நாங்கள் அரசிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என அவர்களிடம் சொல்லுங்கள்.’’

உண்மையில், விவசாயிகள் பூச்சி மருந்துக்கு செலவிடப்படாத தொகை வீட்டின் சேமிப்பில் இருக்கிறது என்று இந்த அரசு நினைக்கிறது. அதற்காக கிராமங்களில் மேலும் மதுக்கடைகளைத் திறக்கிறார்கள். அதிகம் வாங்கு, குடி என மக்களைக் கட்டாயப்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. மது அதிகம் விற்பனையாவதன் மூலம், பொருளாதார வளர்ச்சி அதிகரித்து விடுமா?

சில மாதங்களுக்கு முன்பு அந்த மாவட்டத்தில் உள்ள அதே சுய உதவிக்குழுவை  மீண்டும் சந்திக்கச் சென்றேன். நான் ஆச்சர்யத்தில் மூழ்கினேன். ஆமாம், முன்பு பெண்கள் மட்டும் நடத்திக்கொண்டிருந்த சுய உதவிக்குழுவைப் போல் ஆண்களும் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கியுள்ளனர். 1995ஆம் ஆண்டில் ஆந்திரபிரதேசம் கர்னால் மாவட்டம் உய்யலவாடா என்ற கிராமத்தில் ஒரு குழுவுக்கு 20 பெண்கள் என்ற வீதத்தில் மூன்று சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்திருந்தனர். ‘மண்டல் சமக்யா’ என்றழைக்கப்படும் அக்குழுவின் எண்ணிக்கை இப்போது 96 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் ஆண்டு வரவு செலவு ரூ.28 கோடி. இது உண்மையிலேயே மிகவும் வியப்பூட்டும் செயல்.

அப்போது நான் அவர்களிடம் இவ்வளவு பெரிய தொகையை விற்று முதலீடாக பெறுவதற்கு எப்படி நிர்வாகம் செய்தீர்கள்  எனக் கேட்டேன். அதற்கு அப்பெண்களில் ஒருவர், “இப்போது இங்கு மதுக்கடைகள் இல்லை” என்று மென்மையாகக் கூறினார். அவர்களிடம் நான் இதுகுறித்து மேலும் விசாரித்தபோது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கிராமத்திலிருந்த மதுக்கடையை மூட வைத்ததாகக் கூறினார்கள். அப்போது புஷ்பவல்லி என்கிற பெண்மணி, சுய உதவிக்குழு மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தை எவ்வாறு வாங்க முடிந்தது என்று விளக்கினார். முன்பு குடித்து விட்டு அடித்து சித்ரவதை செய்த கணவர், தற்போது நான் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புக்குத் தலைவியாகி பொருளாதாரரீதியாக சுயமாக நிற்கும் தன்னை அடிப்பதை நிறுத்திவிட்டார் என்கிறார் விஜயபாரதி. இதன் மூலம் பெண்களுடைய வாழ்க்கை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதைக் காணலாம். இப்போது அவருடைய கணவர் வேதிப்பொருட்கள் இல்லாத இயற்கை வேளாண் பொருட்கள் விற்கும் கடையை நிர்வகித்து வருகிறார். அதன் மூலம் அப்பெண்மணியால் தன் குழந்தைகளுக்குகு நல்ல கல்வியைக் கொடுக்க முடிகிறது. என் குழந்தை ’இங்கிலிஷ்’ பேசுகிறது என பெருமையாகக் கூறினார்.

எந்த அழுத்தங்களுக்கும் உட்பட்டு நிதீஷ்குமார் அறிமுகப்படுத்திய மதுவிலக்கு  கொள்கையை அவர் வாபஸ் பெறக் கூடாது. இந்தக் கொள்கையை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம். குஜராத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்பட்ட போது, சட்டத்துக்கு புறம்பான வகையில் மது கிடைக்கலாம் என்று கூறினேன். ஆனால், கடந்த வாரம் அகமதாபாத்திலிருந்து மதுவா செல்லும்போது வழியில் வழியில் குடித்து கீழே விழுந்து கிடக்கும் ‘குடிமகன்களைப்’ பார்க்க முடியாதது ஆறுதலாக இருந்தது. அதேபோல் குடியால் நிகழும் எந்த தெருச்சண்டையையும் பார்க்கவில்லை என்பது மகிழ்ச்சி.

கிராமங்களில் மதுக்கடைகளை தடை செய்வதன் மூலம், அங்குள்ள குடும்பங்களின் உணவுக்கு உத்தரவாதம் கிடைக்கும். அத்துடன், கிராமப் பெண்கள் சொந்தக் காலில் நிற்கும் வகையில் பொருளாதாரத்தில் சுயசார்புள்ளவர்களாக மாறுவார்கள். நாடு முழுவதும் கிராமங்களில் மதுவிலக்கு கொண்டு வருவதற்கான கொள்கையை உருவாக்க வேண்டிய தேவை இருககிறது என்று நினைக்கிறேன். நாடு முழுவதும் உள்ள கிராமப் பெண்கள் என கோருகிறார்கள் என்பதை தேசம் கவனிக்க வேண்டிய நேரம் இது.

இக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்


Share the Article