English தமிழ்

Share the Article

மார்ச் 2017-ல் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலக  சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தபோது இளையராஜாவின்  ஒப்புதல் இல்லாமல் அவரின்  பாடல்களைப் பாடிய  காப்புரிமை  உரிமை மீறலுக்காக இளையராஜாவிடமிருந்து   நோட்டீஸ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.  இளையராஜா அவர்  இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் அறிவித்தார். இப்பெரும் ஆளுமைகளுக்கிடையேயான முரண்பாடு, மொத்த இசை உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  காரணம் அவர்கள் இருவரது நட்பும் நாற்பது ஆண்டுகளாக நீடித்திருந்ததால், அவர்களை நல்ல நண்பர்கள் என்று அனைவரும் நம்பியிருந்தனர். நமது இன்மதி.காம்-ல் இளையராஜா மற்றும் எஸ்பிபிக்கு ஆரம்பகாலத்தில் இருந்த நட்புகுறித்து எழுதியுள்ளோம். குறிப்பாக, ஆரம்ப காலத்தில் சென்னையில் வசிக்கும் பொது  பாவலர் சகோதரர்கள் பல நெருக்கடிகளை சந்தித்தநர். எஸ்பிபி தனது  இசைக்குழு கச்சேரிகளில் வாசிக்க வாய்ப்பளித்து பாவலர் சகோதரர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இளையராஜா இசை அமைப்பாளராக விஸ்வரூபம் எடுத்த பிறகு, பல பார்ட்டிகளில் இவ்விருவரும் சேர்ந்து குடிப்பார்கள் என அதில் கலந்துகொண்டவர்கள் கூறுவார்கள். அந்த நாட்களைப்பற்றி இளையராஜா பிற்காலத்தில் கூறுகிகையில் நாங்கள் ரெண்டு பெரும் சேர்ந்து நிறைய தப்புகள் (குடிப்பது) செய்தோம் என்று கூட கூறினார்.  எஸ்பிபி வளர்ந்து வரும் பாடகர் நிலையிலிருந்து நட்சத்திர பாடகராக மாறியது இளையராஜாவின்  இசையினால் தான் என அனைவரும் அறிவார்கள்.  அவர்கள் இருவருக்குமிடையில், ’வாடா போடா’ என ஒருமையில் அழைத்துக்கொள்ளுமளவுக்கு நட்பு இருந்தது. அவர்களின் குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில் ஒன்றாக இருந்தனர். அதுமட்டுமில்லாது சினிமா தயாரிப்பு, இசை ஆல்பங்கள் செய்வது போன்ற வேலைகளை இணைந்தே செய்தனர். எஸ்பிபியின் மகன் சரண் தான் தயாரித்த படங்களுக்கு  யுவன் சங்கர் ராஜாவை  இசையமைப்பாளராக அமர்த்தினார். கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபுவை இயக்குனராக்கினார்; அவரது இளைய மகன் பிரேம்ஜி எல்லா விஷயங்களிலும் உடன் இருந்தார். இளையராஜா மற்றும் எஸ்பிபியின் பொது நண்பர்களான  யேசுதாஸின் மகன் விஜய் ஏசுதாஸ்,  மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் ஆகியோர் விடுமுறை காலங்களில் இளையராஜா மற்றும் எஸ்பிபி வாரிசுகளுடன் தான் நேரத்தைச் செலவிட்டனர்.

அதாவது, அவர்களின் அடுத்த தலைமுறையும் நல்ல பிணைப்புடன் தான் இருந்தார்கள். எனவே தான் இளையாராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் கண்டு எஸ்பிபி மிகுந்த வேதனைக்குள்ளானார்.

இளையராஜாவை சட்டரீதியாக சந்திப்பதற்கு எஸ்பிபி தயாராக இல்லை. அதே நேரத்தில் இளையராஜாவிற்கு  ராயல்டி கொடுத்து அவரிடம் பாடல்களை பாட ஒப்புதல் பெற அவர் விரும்பவில்லை.. எனவே இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட தவிர்ப்பதுதான், தனது தன்மானம் கருதி, சரியான முடிவாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்து அதை எஸ்பிபி தன்னுடைய முகநூல் வழியே உலகிற்கு அறிவித்தார்.  இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடுவதில்லை,மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைப் மட்டும் பாடுவேன் என அறிவித்தார். அதிர்ஷ்டவசமாக இளையராஜா தவிர பல இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பாட இந்த சம்பவம் தனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி, மற்ற நிகழ்ச்சிகளை நடத்துவேன் என்று அறிவித்தார்.  எஸ்பிபி, முகநூலில் குறிப்பிடும்போது, இந்த நிகழ்வு ’’துரதிஷ்டவசமானது’’ என்றார். மேலும் இசை ரசிகர்களும் ஊடகத்தாரும் இளையராஜாவுக்கும் எஸ்பிபிக்கும் இடைப்படட் பிரச்சனையை மிகவும் பரபரப்பான செய்தியாக மாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அந்த நோட்டீஸில், எஸ்பிபி  அவரது மகன் சரண் மற்றும் சித்ரா ஆகியோர் தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களைப் பாடினால் அது காப்புரிமை சட்டத்தை மீறியதாகக் கருதப்பட்டு அதற்காக அக்குழுவினர் பெரும் நிதியை அபராதமாகக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

“ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். நான் இந்த சட்டநடவடிக்கைகளை அறியாதவன். என் மகன் சரண் இந்த உலக சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். எஸ்பிபி50 என்னும் பயணத்தை நாங்கள் ஆகஸ்டு மாதம் டொரண்டோவில் (கனடா)ஆரம்பித்து பிறகு ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் என தொடர்ந்தோம். இந்தியாவிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தினோம்’’ என்றார் எஸ்பிபி.

“எனக்கு இளையராஜா அலுவலகத்திலிருந்து எந்த முன்னறிவிப்பும் அப்போது வரவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க பயணத்தை ஆரம்பித்த பிறகு  ஏன் அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை’’ என்கிறார் எஸ்பிபி என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் பாலசுப்ரமணியம். ’’நான் முன்பே கூறியது போல இப்படியான சட்டம் இருக்கிறது என்றால் அதற்கு நான் பணிந்துதான் ஆக வேண்டும்’’ என்றார் அவர்.

அந்தச் சூழ்நிலையில், எஸ்பிபி அவரும் அவரது இசைக்குழுவினரும் இளையராஜாவின் பாடல்களை இன்றிலிருந்து பாட மாட்டோம் என அறிவித்தார்கள். ‘’ஆனால் இசை நிகழ்ச்சி நடந்தாக வேண்டும். நல்லவேளையாக நான் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நிறைய  பாடியுள்ளேன். அவற்றை பாடுவேன். நீங்கள் எப்போதும் போல் எங்கள் நிகழ்ச்சியை ஆசீர்வதிப்பீர்கள்’’ என்றார். மேலும், இதுகுறித்து, அவரது ரசிகர்களும் பார்வையாளர்களும் முகநூலில் கடினமான கருத்துக்களையும் விவாதங்களையும் செய்யக் கூடாது என வேண்டிக்கொண்டார். ‘’இதுதான் கடவுளின் வடிவம்   என்றால் நானதற்கு பயபக்தியுடன் அடிபணிகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

இளையராஜா காப்புரிமை விஷயத்தில் போராடுவது இது முதல்முறையல்ல. கடந்த 2015ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம்  இளையாராஜாவின் பாடல்களை வைத்து பணமாக்குவது குறித்து  நான்கு இசை நிறுவனங்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.  அதில், அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லும், பிறகு அவை காலாவதியாகிவிடும் என இளையராஜா கூறினார். ‘’நான் மட்டுமே எனது அனைத்து பாடல்களுக்கும் உரிமை பெற்றுள்ளேன். இதனை விற்கும்போது கிடைக்கும் பணத்தை எனது படத் தயாரிப்பாளர், பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடன் பங்கிடுக்கொள்வேன்’’ என தீர்ப்புக்குப் பிறகு இளையராஜா கூறினார். இசையமைப்பாளரிடம் முழு காப்புரிமையும் இருக்கும் காரணத்தால், அவருடைய அனுமதியின்றி தொலைக்காட்சிகளோ பண்பலைகளோ பாடல்களை ஒலிபரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுகக்ப்படும் என எச்சரித்தார்.

இளையாராஜாவுக்கும் எஸ்பிபிக்கும் இடையேயான இந்த  சர்ச்சை சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. எஸ்பிபி ரசிகர்கள் இதற்கான காரணத்தைக் கேட்டர்கள். இசையமைப்பாளரின் ரசிகர்களோ, அவர் காப்புரிமை சட்டத்தை பின்பற்றுகிறார் என்றும் எஸ்பிபி உலக சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் இந்த பயணத்தால் பெரும் லாபத்தை அடையும்போது, அதில் சிறு தொகையை இளையராஜாவுக்குத் தரவேண்டுமென வாதிட்டார்க்ள்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றை இந்தியாவில்  பாடுவது என எஸ்பிபி முடிவெடுத்தார். அதற்கான ராயல்டி தொகையை இளையராஜாவுக்கு அப்பாடல்களின் இசையமைப்பாளர் என்ற வகையில் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் கொடுத்ததாக  சினிமா வட்டாரத்தில் சிலர் கூறினர்.

இது இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதியைக் கொடுத்தது. காரணம், எஸ்பிபியின் நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்கள் தான் மையம். எஸ்பிபியே இதுபற்றிக் கூறும்போது,’’இளையராஜா எனக்காகப் பிறந்தார்; நான் இளையராஜாவுக்காகப் பிறந்தேன்’’ என்றார்.

இந்த   சம்பவத்திற்கு பிறகு எஸ்பிபி யும் இளையராஜாவும் சந்தித்தாக தெரியவில்லை.  இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பே, தன்னுடைய இசையமைப்பில் எஸ்பிபி பாடுவதை  நிறுத்தி கொண்டார்.  மிக நீண்ட காலத்துக்கு முன்பு,  இளையராஜாவுக்காகப் பாடிய எஸ்பிபி,    மீண்டும் இளையராஜா இசையில் பாடுவாரா என்பது கேள்விக்குறிதான். பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தில் ஏற்படுத் தபட்ட பலமான கூட்டணி, கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துள்ளதா?

அடுத்த கட்டுரையான இளையராஜா75-ல் எஸ்பிபிக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு அதுகுறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்  என்ன கூறினார் என்பது குறித்து உரையாடுவோம்.

இந்த தொடரில் முந்தைய கட்டுரைகளுக்கான இணைப்புகள்:

வெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி!

ரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடை

அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்!

சுனாமியாக மாறிய இசைத் தென்றல் இளையராஜா: அந்த நாளில் சுசீலாவுடன் நடந்த வாக்குவாதம்

புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜாShare the Article