English தமிழ்

Share the Article

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த `சர்க்கார்’ திரைப்படம் ஆளும் அதிமுகவிடமிருந்து  எதிர்கொண்ட எதிர்ப்பைப் போன்றே 1952ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான நேஷனல் பிக்சர்கஸ் தயாரிப்பான `பராசக்தி’ திரைப்படமும் அந்தக் கால காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது.

விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்துக்கு அதிமுக அமைச்சர்களின் கடும் எதிர்ப்பையும் சர்க்கார் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் அதிமுகவினர் நடத்தியப் போராட்டங்களையும் தொடர்ந்து, அந்தத் திரைப்படம் உடனடியாக மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு அதிமுகவினர் குறிப்பிட்ட சில சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

சர்க்கார் திரைப்படத்தில் மிக்சி, கிரைண்டரை தீயில் போட்டு எரிக்கும் 5 வினாடி காட்சி நீக்கப்பட்டுள்ளது. கோமளவல்லி என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு உற்பத்திக்கு காரணமான பொதுப்பணித் துறை என்ற வசனத்தில் பொதுப் பணித்துறை என்ற வார்த்தையும் 56 வருஷமாக அரசியல் செய்கிறேன் என்ற வசனத்தில் 56 வருஷம் என்ற வார்த்தையும் மியூட் செய்ப்பட்டுள்ளது. சில காட்சிகள் நீக்கத்துக்குப் பிறகு , சர்க்கார் படம் குறித்து அதிமுக அமைதியாகி விட்டது. எனினும்,  அவர்களது போராட்டம் சர்க்கார் பட்த்துக்கு இலவசமாக விளம்பரம்தான் என்பதை அந்தப் படத்தின் வசூல் சாதனை காட்டுகிறது.

பராசக்தி திரைப்பட விமர்சனம் வெளிவந்த தினமணி கதிர் அட்டைப் படம்

பாவலர் பாலசுந்தரத்தின் பிரபல நாடகத்தைத் தழுவி கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1952 இல் வெளியான பராசக்தி திரைப்படமும் அந்தக் காலத்தில் சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிட்டது. இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்வு என்பது போல கதையில் காட்டப்பட்டாலும்கூட மதத்தின் பெயரால் நடைபெறும் மோசடிகளையும் அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

இந்தப்படம் வெளிவந்தபோது அதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவாளர்களின்  கண்டனக் கடிதங்கள் குவிந்தன. காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தினமணி கதிரில் கந்தர்வமண்டலம் பகுதியில் பராசக்தி திரைப்படம் குறித்து கடும் விமர்சனம் வெளிவந்தது. என்.ஆர். என்ற பெயரில் வந்த அந்த விமர்சனத்தை எழுதியவர்  தினமணி ஆசிரியர் குழுவில் பணிபுரிந்த என். ராமரத்தினம். இப்படத்தைப் பகடி செய்யும் வகையில் பராசக்தி திரைப்பட விமர்சனம் வெளிவந்த தினமணி கதிரின் அட்டைப் படமும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆடை குலைந்த நிலையில் ஒரு பெண்ணின் கேலிச் சித்திரத்துடன் `பரப்பிரம்மம்’ என்ற தலைப்பு. அதன் கீழே கதை, வசவு: தயாநிதி என்று போட்டப்பட்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருணாநிதி பரப்பிரம்மம் என்ற நாடகத்தை எழுதினார்.

கருணாநிதி எழுதிய பரப்பிரம்மம் நாடகப் புத்தகம்

“பராசக்தி படம் வெளிவந்தவுடன் அதை எரிச்சலுடன் விமர்சித்து கண்டனம் செய்து எழுதிய தினமணி கதிர் ஏட்டில் பரப்பிரம்மம் என்ற தலைப்பில் அந்தப் படத்தை ஏகடியம் செயது கார்ட்டூனும் வெளியிட்டார்கள். உடனே நான் பரப்பிரம்மம் என்ற தலைப்பிலேயே ஒரு நாடகம் எழுதி நாடு முழுவதும் நடத்த ஏற்பாடு செய்தேன். அதில் நானும் நடிகர் திலகம் சிவாஜியும் கழக நண்பர்களும் நடித்தோம். அந்த நாடகத்தில் சேரன் செங்குட்டுவன் வேடத்தில் சிவாஜி நடித்தது இன்னும் என் கண்முன்னால் நிற்கும் காட்சியாகும்” என்று கருணாநிதி தனது சுயசரிதையான `நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்துக்கு வந்த எதிர்ப்பு குறித்து 1990களின் தொடக்கத்தில் வரலாற்று ஆய்வாளர் மறைந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழில் முக்கியத்துவம் வாய்ந்த  ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பேராசிரியர் பாண்டியனின் மறைவுக்குப் பிறகு, `காட்சிப் பிழை’ திரைப்பட ஆய்விதழிலும் அந்தக்  கட்டுரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. .

“பணத்தைப் பறிகொடுத்த இளைஞன் தாய்நாடான தமிழ்நாட்டையே நிந்திக்கிறான்… தமிழர்கள் எல்லோரும் திருடர்களாம்…தெருவில் ஒரு குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கார்ப்பரேஷன் ஒரு தூங்குமூஞ்சி. மேயர் ஒரு உதவாக்கரை. கலெக்டர் ஒரு மடையன்…நான் விபச்சாரியாக மாறி இருந்தால் மந்திரிகளும் போலீஸ் அதிகாரிகளும் இப்போது என் மடி மீது இருப்பார்கள். ஆனால், நான் அதற்கு விரும்பவில்லை…” இப்படி படத்தில் உள்ள வசனங்களைச் சுட்டிக்காட்டி இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு பிரமுகர்களால் எழுதப்பட்ட பல கடிதங்கள் குறித்தும் எம்.எஸ்.எஸ். பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படம் தணிக்கைத் துறையிடமிருந்து தப்பியது எப்படி என்பது குறித்தும் அவர் விளக்குகிறார். “கோயிலிலே குழப்பம் விளைவித்தேன்.  கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில்  கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக…” இவ்வாறாக குணசேகரன் கோயிலை ஏற்று கொண்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கிறான். பராசக்தி தணிக்கைக் குழுவிடமிருந்து தப்பியதற்கான காரணம் அதன் உறுப்பினர்கள் அப்படத்தில் மத நம்பிக்கை மறைபொருளாக இருப்பதாகக்  கருதியதே. அவர்களுக்கு அப்படியான எண்ணத்தைக் கொடுத்தது, பின்வரும் காட்சியமைப்புதான். கோவிலுக்கு இருந்து வரும் கல்யாணியின் அலறல் கேட்டு குப்பன், கோயில் மணியை அடிக்கிறான். கல்யாணியின் அழுகுரலுக்குப் பதிலளிப்பது போல, சரியான நேரத்தில் சிலைக்குப் பின்னிருந்தும் கோவில் கர்ப்பக் கிரகத்திலிருந்திலிருந்தும் உதவி வருகின்றது. திரையில், பராசக்தியின் உருவம் அடிக்கும் மணியின் மீது பிரதிபலிக்கிறது” என்கிறார் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அந்தக் கட்டுரையில்.

“கோவிலுக்குள் நுழைந்து பராசக்தியின் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பூசாரியுடன் பேசுகிறான். குணசேகரன் பேசுவதை பராசக்தி பேசுவதாக பூசாரி புரிந்து கொள்கிறான். அவனுடைய தவறைத் திருத்தும் குணசேகரன், முட்டாளே! எப்போதடா பராசக்தி பேசினாள்? அது பேசாது. கல் பேசுவதாக இருந்தால், என் தங்கையின் கற்பை நீ சூறையாடத் துணிந்தபோதே , அட பூசாரி! அறிவு கெட்ட அற்பனே! நில் என்று தடுத்திருக்காதா என்கிறான். கல் என்னும் வார்த்தை தணிக்கையாளர்களால் வசன ஓட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால் சிவாஜிக் கணேசனின் தெளிவான உதட்டசைவில பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டனர்”  என்பதையும் அவர் சுட்டிகாட்டுகிறார்.

இந்தத் திரைப்படத்தைத் தடை செய்வதற்காக சென்னை மாகாண அரசு முயற்சிகளை மேற்கொண்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு மத்தியத் தணிக்கைக் குழுவின் பரிந்துரைப்படி சில காட்சிகள் நீக்கப்பட்டன. குணசேகரன் சுவற்றின் மீது தான் வைத்த கல்லைத் தட்டி விட்டு, இதற்கு தெய்வ சக்தியெல்லாம் கிடையாது என்று சொல்லும் காட்சி, கோவிலின் கருவறையில் கல்யாணியை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்ய முயலும் காட்சி ஆகியவை நீக்கப்பட்டன.

இதற்கிடையே, பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்வதற்காக அன்றைய ஆளும் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து முயற்சிகள் நடந்து வந்தன. பாரசக்தி திரைப்படத்துக்கு தடை எப்போது வேண்டுமானலும் இருக்கலாம் என்ற காரணத்தால்  அந்தப் படத்தைப் பார்க்க அந்தத் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் கூட்டம் அலை மோதியது. பல திரையரங்குகளில் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது கடந்த கால வரலாறு.

படத்துக்கு எதிர்ப்பு, தடை செய்ய முயற்சி போன்றவை இந்தப் படத்தை பிரபலமாக்கியதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆக்கி விட்டது. பராசக்தி என்ற தனது முதல் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த வி.சி. கணேசன் என்கிற சிவாஜி கணேசன் நடிகர் திலகமாக உருவாகத் தொடங்கினார். ஏற்கெனவே வசனகர்த்தாவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கருணைநிதி, இந்தப் படத்தின் மூலம் மேலும் பிரபலமான வசனகர்த்தாவானார்.

பராசக்தி படத்திலிருந்து ஓரு காணொளிக் காட்சி:


Share the Article