அண்மைக் காலத்தில் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் பொது வெளியில் வெளிவருவது ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம், மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இங்கு ’காப்பிரைட்’ என்பது எல்லா பக்கங்களிலும் காப்பியடிக்க உரிமை உள்ளது என்று பலர் நினைப்பதே! பல ஆண்டுகளுக்கு முன்பே கதை அல்லது பாட்டு, டயூனுக்குக்கூட அது யாருடையது என்கிற பிரச்சினையை தயாரிப்பாளர்கள் சந்தித்து வந்துள்ளனர். ஆனால், மிக தாமதமாகத்தான் எழுத்தாளர்கள் தங்களது எழுத்துக்கான உரிமைக் குரலை எழுப்ப முடிந்திருக்கிறது. அந்த வகையில், சர்க்கார் படத்தின் கதைத் திருட்டு விவகாரம் ஒரு முக்கிய திருப்புமுனை.
“சர்க்கார் திரைப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், தன்னுடைய செங்கோல் கதைதான் சர்க்கார் திரைப்படக் கதை என்று குற்றம்சாட்டிய வருண் ராஜேந்திரனுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். அதற்கு முக்கிய காரணம், தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படத்த்தை முடக்கும் வகையில் வருண் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததுதான்’’ என்கிறார் சினிமா தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன். இல்லாவிட்டால், இந்தக் கதைத்திருட்டு விவகாரம், இயக்குநர் தரப்புக்குச் சாதகமாக மாறி இருக்கும்.
சர்க்கார் திரைப்படத்தின் கதாநாயகனான விஜய், அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில், கதையின் நாயகன் தன்னுடைய ஓட்டை இன்னொருவர் போட்டுவிட அதை எதிர்த்து போராடி வெற்றி பெறுவதாக அமைக்கப்பட்டதுதான் சர்க்கார் என கூறினார். படத்தின் விளம்பரத்தில் கூட ‘நண்பர்களே இதுதான் நம்ம சர்க்கார்’ என்று விஜய் கூறுவது போல் இருக்கிறது. ஆனால், நிஜக் கதை வேறு. 2007ஆம் ஆண்டே தன்னுடைய ’செங்கோல்’ கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்ததாகக் கூறிய வருண் ராஜேந்திரனின் பக்கம் நின்று குரல்கொடுத்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த இயக்குநர் – எழுத்தாளர் கே. பாக்யராஜ் தன்னுடைய வாக்கை பதிவு செய்த பின்பு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார், காரணம், அவர் பாதிக்கப்பட்ட எழுத்தாளருக்கு ஆதரவாக நின்றார் என்பதே.
ஓர் எழுத்தாளர் தனித்து நின்று பெரும் பலம் பொருந்திய நிறுவனத்தை எதிர்த்து பெரும் சக்தியுடன் போராடி தாக்கத்தை ஏற்படுத்தி தன்னுடைய எழுத்துக்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால் அவர் மிக தைரியமாக தனக்காகப் பேச வேண்டும் என்பதையே இந்த சர்க்கார் பட விவகாரம் காட்டுகிறது. இதில் விநோதம் என்னவென்றால், இயக்குநர் முருகதாஸ் பல முறை கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். சர்க்கார் படத்துக்கு முன்பு அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் பலவீனமான குரலில் ஒலித்துக்கொண்டிருந்ததால் அதனால் பெரிய அளவிலான விமர்சனஙகள் வெளிவரவில்லை. ’சர்க்கார்’ பட விவகாரத்தையடுத்து, இனியாவது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவருக்கு உரிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்குமா என்பதுதான்.
இதற்கு முன்பாக, முருகதாஸ் தமிழிலும் இந்தியிலும் இயக்கிய ‘கஜினி’திரைப்படம் ஹாலிவுட் திரில்லர் திரைப்படமான ‘மொமண்ட்டோ’வை போல இருக்கிறது என்ற புகார் எழுந்த போது, கதை எழுதுவதற்கு முன்பு அந்தப் படத்தை தான் பார்க்கவில்லை என்று பதில் அளித்தார். மொமண்ட்டோ திரைப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், தன்னுடைய திரைப்படத்தின் தாக்கத்தால் இந்தியில் திரைப்படம் வெளியாகியுள்ளது என்று கூறினார். அங்கீகாரமோ பணமோ எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இந்திய நீதிமன்றங்களில் அவர் வழக்குத் தொடரவில்லை. ஆனால், முருகதாஸ் தன்னுடைய அனுமதியில்லாமலேயே இந்தி ’கஜினி’யை உருவாக்கிவிட்டார் என்று தமிழ் ‘கஜினி’ தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்தார். அதையடுத்து, முருகதாஸ் கைது செய்யப்பட்டார்; அதன்பிறகு அந்தத் தயாரிப்பாளருடன் உடன்படிக்கை ஏற்பட்டது. கதைத் திருட்டுகளுக்காக வழக்குகள் வந்தாலும் உடன்படிக்கைகளுக்குப் பின்னால் அதற்கான பலன்களும் இருக்கக்கூடும்!
சினிமா உருவாகிய காலத்திலிதே கதைத் திருட்டு விவகாரமும் இருந்து வருகிறது. எம்ஜிஆரின் முதல்படமான ‘சதி லீலாவதி’(1936) காப்பிரைட் பிரச்சினையை சந்தித்தது. தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலரால் நாடகமாக எழுதப்பட்டு, அதே பெயரில் ‘பதி பக்தி’(1936) என்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டது. அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர், ‘சதி லீலாவதி’ திரைப்படத் தயாரிப்பாளருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். சதி லீலாவதி திரைப்படம் எஸ்.எஸ்.வாசனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. ‘பதி பக்தி’ திரைப்படத்துக்கும் வாசனின் நாவலுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன; அப்படம், அந்நாவலிலிருந்து எடுக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பதி பக்தி படம், எல்லன் வுட்ஸின் ‘டேன்ஸ்பரி ஹௌஸ்’லிருந்து எடுக்கப்பட்டது என்று‘ சதி லீலாவதி’ தயாரிப்பாளர்கள் கூறினார்கள். ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட்டது. காரணம், முழுக்க முழுக்க ’பதி பக்தி’ ஒரிஜினல் கதைதான்!
சுதந்திரத்துக்கு முந்திய காலங்களில் புராணக் கதைகளை திரைப்படமாக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் கதை உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அப்போது தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இணைத்து பல பாரம்பரியமான கதைகளைக் கண்டுபிடித்தனர். அதனால், Êஒரே கதை என்று மோதல்களும் அடிக்கடி ஏற்பட்டன. அதற்கு அடுத்த தசாப்தங்களில், வங்கம், மராத்தி, இந்தி திரைப்படங்களில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற படங்களான புதிய பார்வை (Sesh Anka ) உயர்ந்த மனிதன் உத்தர் புருஷ்) சட்டப்பூர்வமாக அனுமதி பெற்று தயாரிக்கப்பட்டன. அக்காலக்கட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மாநிலங்களுக்குகிடையில் இதுபோல கொடுத்து வாங்கும் பழக்கம் இருந்தது. அவை கோடம்பாக்கத்தில் பல தசாப்தங்களாக இந்தப் பழக்கத்தின் அடிப்படையாக இருந்தது.
சில தயாரிப்பாளர்கள் அடிக்கடி ஹாலிவுட் படங்களிலிருந்து தமிழில் திரைப்படமாக்கியுள்ளனர். உதாரணமாக, Come September’ மற்றும் ‘Captain Blood’ போன்ற படங்கள் எம்ஜிஆரின் வெற்றிப்படங்களான ‘அன்பே வா’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று மாற்றப்பட்டு வெளிவந்தன சோ ராமசாமி, ‘My Fair Lady’ படத்தை ‘மனம் ஒரு குரங்கு’ என்ற பெயரில் உருவாக்கினார். ‘Sound of Music’ என்ற திரைப்படம், ‘சாந்தி நிலையம்’ என்று மாறியது. ‘‘The Parent Trap’ திரைப்படத்தை மாற்றி ‘குழந்தையும் தெய்வமும்’ படமாக்கியதாக ஏவிஎம் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. வீனஸ் நிறுவனமும் இந்தக் கதைத் தழுவல் குற்றச்சாட்டில் சிக்கியது. The Brass Bottle’ என்ற ஹாலிவுட் நகைச்சுவைத் திரைப்படத்திலிருந்து பட்டணத்தில் பூதம் திரைப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்படி, தமிழ் சினிமாவின் வரலாறு என்பது பல திரைப்படங்களிலிருந்து வாங்குவது, தகவமைத்துக் கொள்வது, கதைத் திருட்டு என பல வழிகளில் இயங்குகிறது. கேமிரா வல்லுநர் கே.ராம்நாத், சுத்தானந்த பாரதியின் மொழிபெயர்ப்பில் ஏழை படும் பாடு (Les Miserables) என்ற நாவல் வெளியானது. அதேபெயரில் காமிரா வல்லுநர் கே.ராம்நாத் படமாக்கினார். அதை அங்கீகரிக்கும் வகையில் டைட்டில் கார்டில் அதுகுறித்து வெளியிடவும் சம்மதித்தார். அந்தக் கதையை வியட்நாம் வீடு சுந்தரம் தனது மேடை நாடகமாக்கி அதைச் சீரமைத்து ’ஞான ஒளி’ என்ற திரைப்படமாக்கினார்.
ஹாலிவுட் திரைப்படங்களிலிருந்தும் அயல்மொழித் திரைப்படங்களிலிருந்தும் கதைகளை எடுப்பவர்கள் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது வடிவேலுவின் வசனத்துடன் ஒத்துப்போகின்றனர். ’பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு’! கேமரா மூலம் ஜாலங்களைச் செய்யும் பாலு மகேந்திரா இந்தக் காரணங்களால் தான் ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்தார். கமல்ஹாசன் ‘Planes, Trains and Automobiles’ படத்தின் அடிப்படையில் தன்னுடைய கருத்துருவாக்கங்களைச் சேர்ந்து ‘அன்பே சிவம்’ பட்ததை உருவாக்கினார்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை, கதைத் திருட்டு குற்றச்சாட்டுகள் எழுவதற்குக் காரணம், திரைப்படத்தை உருவாக்குபவர்கள் குறுக்கு வழியில் சுவாரஸியமான திரைக்கதைகளை உருவாக்க, சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற போராடிக்கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர்கள் அல்லது உதவி இயக்குநர்களின் சிந்தனைகளை களவாடுகிறார்கள். ஒரு நல்ல திரைக்கதையை உருவாக்க ஆற்றலும் அதற்குரிய காலமும் தேவை. உயர்வான இடத்திலிருக்கும் இயக்குநர்கள் தங்களின் வணிக வெற்றியால் தங்கள் திறமைக்கும் அப்பாற்பட்ட ஓரிடத்தில் இருக்கின்றனர். சில சமயம் அவர்களால் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் எதையும் படைக்க முடிவதில்லை. சில சமயங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதைத் தடுக்கவும் கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதைத் தடுக்க ‘ஹாலிவுட் ரைட்டர்ஸ் கில்டி’ல் இருப்பது போல் திரைப்படக் கதை எழுதுவதை வெளிப்படத் தன்மை உடையதாக மாற்ற வேண்டும். இது தமிழ் சினிமாவில் ‘பேஸ்மண்டு வீக்கு’ பிரச்சினையை சரி செய்ய உதவும். ஹிட்ச்காக் கூறியது போல, மிக்சசிறந்த சினிமாவுக்கு மூன்று விஷயங்கள் தேவை. அது கதை, கதை, கதை!
(கட்டுரை ஆசிரியர், தமிழ் சினிமா வரலாற்று ஆய்வாளர்)
Forums › சர்க்கார் விவகாரம்: தமிழ் சினிமாவில் அம்பலத்துக்கு வந்த கதைத் திருட்டுகள்